Published:Updated:

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?

போரின்போது மரத்தில் வாழும் பாம்புகளை ஏற்றிவந்த சரக்குக் கப்பல் ஒரு விபத்தின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டது. அப்போதிருந்து அங்கு ஊடுருவத் தொடங்கிய அந்த இனத்தின் தற்போதைய எண்ணிக்கை இருபது லட்சம். இதனால், அந்தத் தீவுக்குச் சொந்தமான பன்னிரண்டு பறவையினங்களில் பத்து வகைகள் அழிந்துவிட்டன. சுமார் 90 சதவிகிதம் புதிய மரங்களின் வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது.

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?

லகில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் தனித்துவமானவை பாம்புகள். பூமியில் அவற்றின் நூற்றைம்பது மில்லியன் ஆண்டுகால வாழ்வில் கிட்டத்தட்ட எல்லா மூலைகளுக்கும் ஊர்ந்துசென்று குடியேறிவிட்டன. ஆனால், இப்போதும் உலகில் பாம்புகளே இல்லாத நிலப்பகுதிகளும் இருக்கின்றன. அதேபோல், பாம்புகள் மட்டுமே வாழும் தீவுகள் பலவும் இருக்கத்தான் செய்கின்றன. 

புறவெப்பத்துக்குத் தகுந்தவாறு பாம்புகள் தம் உடல் வெப்பத்தை அனுசரித்துக் கொள்ளும் திறன்கொண்டவை. அதனாலேயே ஒரு சில வகைப் பாம்புகளால் துருவப் பகுதிகளுக்கு வெகு அருகில்கூட வாழமுடிகிறது. வட அமெரிக்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே வாழ்ந்தாலும் அதைத்தாண்டி துருவம் வரை பாம்புகளால் செல்லமுடியவில்லை. சில பகுதிகள் பாம்புகளால் வாழவே முடியாத தட்பவெப்பநிலையைக் கொண்டவை. ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பிரதேசங்கள் இரண்டிலுமே அவற்றால் வாழமுடியவில்லை. அதேபோல் ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றையே தாய்நாடாகக் கொண்ட பாம்பு இனங்கள் எதுவும் இல்லை. இந்த நாடுகள் ஆதியில் பாம்புகளே இல்லாமல் தானிருந்தது. அதேபோல், தென்னமெரிக்காவின் தென்கோடிப் பகுதியிலும் பாம்புகள் இருந்திருக்கவில்லை. காலப்போக்கில் அங்கெல்லாம் பாம்புகள் ஏதோ ஒருவகையில் வாழிடத்தை உருவாக்கிக் கொள்ளத் தொடங்க, அங்கும் வாழத் தொடங்கின. இருந்தாலும் இப்போதுவரை, அமெரிக்காவின் இரண்டே பகுதிகள் மட்டும் இன்னமும் பாம்புகளற்ற பகுதியாகவே இருக்கின்றன. ஹவாய் மற்றும் அலாஸ்கா இரண்டிலும் பாம்புகளே இல்லை.

நிலவியல் ரீதியாகப் பார்க்கையில் ஹவாய் தனித்துவிடப்பட்ட தீவாகவே உள்ளது. அதனால், அந்த இடத்திற்கு நிலத்தில் வாழும் பாம்புகளை யாராவது கொண்டுவந்தாலொழியத் தானாக வந்துசேர வாய்ப்பில்லை. அதற்காகத் தனித்துவிடப்பட்டிருக்கும் தீவுகள் எல்லாமே ஹவாய் போல் பாம்புகளற்றதாக இருக்குமென்று சொல்லமுடியாது. பாம்புகள் மட்டுமே வாழ்வதாகக்கூட இருக்கலாம். உதாரணத்திற்குப் பிரேசிலுக்கு உட்பட்ட மிகச்சிறிய தீவு நிலமான இலாடா குவெய்மாடா கிராண்டே (Ilha da Queimada Grande) என்ற பகுதியில் ஒரு சதுர மீட்டருக்குக் குறைந்தபட்சம் ஒரு பாம்பாவது இருக்கும். மிகக்கொடிய நச்சுப் பாம்புகளில் ஒன்றான கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் (Golden Lancehead viper) என்ற வகைப் பாம்பு அங்கு அதிகமாகவே இருக்கின்றன. பிரேசில் அரசு நில வழியாக அங்கு மனிதர்கள் செல்வதற்கே தடை விதித்துள்ளது. அந்த அளவுக்கு அங்குப் பாம்புகளின் எண்ணிக்கை அடர்த்தியாக இருக்கிறது. இதுவும் மற்ற நிலங்களோடு தொடர்பற்றுத் தனித்துவிடப்பட்ட தீவுதான். இதேபோல் மடகாஸ்கர், கரீபியன் போன்ற தீவுகளில் பாம்புகள் அதிகளவில் உள்ளன. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் பாலினேசியா என்ற தீவுக்கூட்டமும் அதிகமான நீர்ப்பாம்புகளும், நிலப்பாம்புகளும் வாழும் பகுதி.

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் வெப்பநிலை அதிகமான கடல்வாழ் பாம்புகளுக்குத் தகுந்த வகையில் இருக்கின்றது. இந்தப் பெருங்கடல்களில் வாழும் பாம்புகளில் பாதிக்கும்மேல் நச்சுப்பாம்புகள். இவற்றிலிருக்கும் அதிகமான தீவுகள் மக்கள் வாழும் பகுதிகளாக மாறிவிட்டன. அதனால், அங்கெல்லாம் நிலவாழ் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. ஆனால், அந்தத்  தீவுகளைச் சுற்றிக் கடல்வாழ் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்துவருகின்றன. உதாரணமாக, பசிபிக் பெருங்கடலில் துவாலு, நௌரு, கிரிபாட்டி போன்ற தீவுகளில் நிலவாழ் பாம்புகளே இல்லை. ஆனால், அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடல்வாழ் பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் நியூசிலாந்து, கிரீன்லாந்து, கேப் வெர்டே, ஐஸ்லாந்து போன்றவற்றில் அவை சுத்தமாக இல்லவே இல்லை. 

அயர்லாந்து இவற்றைப் போன்றில்லை. அயர்லாந்து நாட்டைத் தாய்நாடாகக் கொண்ட பாம்புகள் எதுவுமில்லை என்றாலும், அங்குக் குடியேறிய பாம்புகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளன. அது தீவாகவே இருந்தாலும் நிலப்பகுதிகளுக்கு அருகிலேயே இருக்கிறது. அதோடு இயற்கையான நிலப்பாலமும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே அதை ஐக்கிய ராஜ்ஜியத்தோடு (UK) இணைத்துவிட்டது. அதுவும், அடுத்த 1500 ஆண்டுகளில் கடல்மட்ட உயர்வால் காணாமல் போகவே அடுத்த 2000 ஆண்டுகளுக்கு வேறொரு நிலப்பாலம் ஐரோப்பாவோடு இங்கிலாந்தைத் தொடர்புகொள்ள வைத்தது. இந்தப் பாலங்களின் வழியாகவே ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்திற்குப் பாம்புகள் வந்திருக்கவேண்டும். ஆனால், அது உருவாவதற்கு முன்னமே ஐரிஷ் நிலப்பாலம் மறைந்துவிட்டதால், ஐயர்லாந்திற்குப் பாம்புகள் படையெடுப்பது தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. இப்போது அங்கு வாழும் பாம்பு வகைகள் எதிர்காலத்தில் மனிதர்களால் அங்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆனால், இதுவரை ஐயர்லாந்தில் யாருமே பாம்புத் தொல்லெச்சங்களைக் கண்டுபிடிக்கவில்லை. இது, அப்பகுதியைப் பூர்விகமாகக் கொண்ட பாம்புகள் எதுவுமில்லை என்ற கூற்றை உறுதி செய்கிறது. இப்போது வடக்கு கனடாவில் பாம்புகளே இல்லையென்றாலும், அதிக வெப்பமான யுகத்தில் அவை அங்கு வாழ்ந்ததற்கான தொல்லெச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஐயர்லாந்தில் அதுகூடக் கிடைக்கவில்லை. 

இங்கெல்லாம் பாம்புகளே இல்லை என்று கூறுவதால் இனி எப்போதும் அப்படியே இருக்குமென்று உறுதியாகவும் கூறமுடியாது. அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் என்ற தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அந்நிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட எந்த பாம்பு இனமும் இல்லை. அதேசமயம், இரண்டாம் உலகப்போர் வரையிலுமே அங்குப் பாம்புகள் ஊடுருவவில்லை. போரின்போது மரத்தில் வாழும் பாம்புகளை ஏற்றிவந்த சரக்குக் கப்பல் ஒரு விபத்தின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டது. அப்போதிருந்து அங்கு ஊடுருவத் தொடங்கிய அந்த இனத்தின் தற்போதைய எண்ணிக்கை இருபது லட்சம். இதனால், அந்தத் தீவுக்குச் சொந்தமான பன்னிரண்டு பறவையினங்களில் பத்து வகைகள் அழிந்துவிட்டன. சுமார் 90 சதவிகிதம் புதிய மரங்களின் வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது. பறவை இனங்கள் அழிந்ததால் அவற்றால் விதைபரவல் நடந்து வளரவேண்டிய மரங்கள் வளராமலே போய்விட்டன. இப்படியாகப் புதியதோர் உயிரினத்தின் ஊடுருவல் அந்த நிலத்தையே மாற்றியமைத்துவிட்டது.

இப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே ஹவாய் தீவில் பாம்புகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒருவேளை கொண்டு வருபவரிடமிருந்து தப்பித்துக் காட்டுக்குள் வாழத்தொடங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டால் அப்பகுதியின் சூழலியல் சமநிலையே சீர்குலைந்துவிடும். அதனாலேயே அங்கு இதற்குக் கடுமையான சட்டங்கள் உள்ளன. யாராவது பாம்புகளை வைத்திருந்தால் அவர்களுக்கு இரண்டு லட்சம் டாலர்கள் அபராதமும் மூன்றாண்டு சிறையும் தண்டனை வழங்கப்படும். இந்தத் தடைச்சட்டம் நியூசிலாந்திலும் உண்டு. ஹவாய்கூடப் பரவாயில்லை, நியூசிலாந்தில் அருங்காட்சியகங்கள்கூடப் பாம்புகளை வைத்திருப்பதில்லை. அவர்கள் பாம்பை நன்றாகக் கையாளத் தெரிந்த மிகச் சிறந்த இருபது பேரை நாடு முழுவதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கப் பணியமர்த்தியுள்ளனர். நாடு முழுவதும் அவர்களைப் போன்ற பிடாரன்கள் (Snake handlers) கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாட்டுக்குள் பாம்புகளே நுழையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். சரக்குக் கப்பல்கள், கடத்தல்காரர்கள், நீச்சல்வீரர்கள் போன்றோரால் நிலவாழ், கடல்வாழ் என்று இரண்டு வகைகளும் ஊருவ இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறது நியூசிலாந்து. அப்படியிருந்தும் சில கடல்வாழ் பாம்புகள் ஆஸ்திரேலியாவிலிருந்து கோடைக்காலங்களில் நீந்திவந்துவிடும். நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளில் அவை ஊடுருவ முயல்வதால் அந்தச் சமயங்களில் அதிகமாகவே கண்காணிக்கிறார்கள்.

இவை மட்டுமில்லை. பூமியில் பாம்புகளே வாழாத பகுதிகளும், பாம்புகள் மட்டுமே வாழ்கின்ற பகுதிகளும் இன்னும் நிறைய இருக்கின்றன. வேடிகன் சிட்டியைக்கூடச் சொல்லலாம். காட்டுயிர்கள் எதுவுமே அங்கு வாழ்வதில்லை. அதனால், அங்குப் பாம்புகளும் வாழ்வதில்லை. ஜான்ஸ்டன் அடால், பிட்கார்ன் போன்ற மேலும் சில தீவுகளிலும் பாம்புகளே இல்லை. அதேசமயம் அந்தத் தீவுகள் மனிதர்களும் அதிகம் வாழாத நிலப்பகுதிகள். மிரளவைக்கும் பிரேசிலுக்குச் சொந்தமான தீவைப் போல் முழுக்க முழுக்கப் பாம்புகள் மட்டுமே வாழும் தீவுகள் நிறைய இருக்கின்றன. நாம், பார்த்து மிரள்கிற, நம்மைக் கொலைநடுங்க வைக்கின்ற பாம்புகள் அந்த நிலங்களின் சூழலியல் சமநிலைக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம். பாம்புகள் எப்போதுமே தனித்துவமானவை. அவை இயற்கைச் சமநிலையில் வகிக்கும் பங்கும் அந்தப் பங்கு சீர்குலையும்போதும், அமெரிக்காவின் குவான் தீவில் தொந்தரவு செய்யப்படும்போதும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்ற உயிரினங்களை அழித்ததும் பாம்புகளின் தனித்துவத்தை நமக்குப் புரியவைத்திருக்கும். அவற்றின் தனித்துவம் எல்லைமீறினால் அழிவையும் சரியான இயற்கையான முறையிலேயே இருந்தால் ஆக்கத்தையும் அவை வாழும் நிலத்தின் செழிப்பையும் அதிகப்படுத்துகின்றன.