Published:Updated:

ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்... இது என்றென்றைக்குமான டிரெண்ட்!

அணிகலன்கள் மீது ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆடைகள் மீது ஆசை இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. இதைத் தெளிவாக புரிந்து வைத்திருப்பதால்தான்...

ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்... இது என்றென்றைக்குமான டிரெண்ட்!
ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்... இது என்றென்றைக்குமான டிரெண்ட்!

டை அணிவதில் அதிக கவனம் செலுத்துவது சுயவிருப்பம் என்பதையும் தாண்டி, பார்ப்பவர்கள் `வாவ்!'  சொல்கிற மாதிரி இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம். உங்களை மட்டுமே, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை மட்டுமே பார்த்து வியக்காமல், உங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டால்... சூப்பராக இருக்கும்தானே! அப்படி நினைப்பவர்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை.

அணிகலன்கள் மீது ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆடைகள் மீது ஆசை இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. இதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருப்பவர்கள்தான், ஆடை வடிவமைப்பாளர்கள். பருவங்களுக்கு ஏற்ப புதுப்புது டிரெண்டில், புதுமையான டிசைன்களில் ஆடைகளைத் தயாரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடையே இப்போது கான்செப்ட் ஆடைகள் தயாரிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.  அதில் `ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்' கான்செப்ட் மிகவும் பாப்புலர்.  

திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்களுக்குக் குடும்பமாகச் செல்லும்போது, அங்கு வந்திருக்கும் உறவினர்களிடமோ நண்பர்களிடமோ `இவன்தான் என் மகன், இவங்கதான் என் மனைவி' என அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் இனி இருக்காது. ஏனெனில், கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்கள் அணிந்திருந்தால், பார்ப்பவர்களே தெரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு `நாங்கள் ஹேப்பியாக இருக்கிறோம்' என்பதைச் சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை. நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளே அதைப் புரியவைத்துவிடும். அதுமட்டுமல்லாமல், விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்லும்போது, எல்லோரும் மேட்சிங்காய் ஆடை அணிவது, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள்.  

அயல்நாடுகளைப் பொறுத்தவரை, அனைத்து குடும்ப விழாக்களுக்கும் இந்த வகையான ஆடைகள் அணியும் பழக்கம் அதிகம். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், இப்போதுதான் இந்தப் பழக்கம் மெள்ள தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரே மாதிரியான ஆடைகள் அணியும்போது, மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்வதாலேயே இந்த மாற்றத்தை அவர்கள் ஏற்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எப்போதும் வித்தியாசத்தை விரும்புபவர்களுக்காக, தான் உடுத்தும் ஆடையாலேயே தன்னை அறிமுகப்படுத்துவேன் என்பவர்களே, இதுபோன்ற ஆடைகளை பெரிதும் விரும்புகிறார்கள். எல்லோரையும்விட தனித்துத் தெரிவோம் என்ற விஷயமும் இந்த வகை ஆடைகளின் மீது மக்களுக்கு ஈர்ப்பை அதிகரித்திருக்கிறது. அம்மா - மகளுக்கு ஒரே மாதிரியும், அப்பா - மகனுக்கு ஒரே மாதிரியும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியும் என ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. `ஒரிஜினல்; கார்பன் காப்பி', `காப்பி - பேஸ்ட்' என ஆண்களுக்கு ஏற்ற மாதிரியான வாசகங்கள் அல்லது ஐகான்கள் பதிவுசெய்வது, பெண்களுக்கான ஆடைகளில் அவர்களுக்கான டிசைன்களைக் கொடுப்பது என ஆடை வடிவமைப்பாளர்கள் புதுமை படைக்கிறார்கள். இந்த டிசைன்களை டீ-ஷர்ட் போன்ற கேஷுவல் ஆடைகளில்தான் செய்ய முடிகிறது என்பதால், வாசகங்கள் பதிவுசெய்யும் ஆடைகளைவிட, டிசைன்களால் வித்தியாசப்படுத்தும் ஆடைகளையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். 

பேன்ட்-ஷர்ட், மிடி ஸ்கட்ஸ், லாங் கவுன், பாக்ஸர்ஸ் மற்றும் டீ-ஷர்ட்கள் போன்ற ஸ்டைலான ஆடைகளே மேட்சிங் ஆடைகளுக்குச் சரியான தேர்வாக இருக்கின்றன. ட்ரெடிஷனல் ஆடைகள் அவ்வளவாக எடுபடுவதில்லை. பெண்களின் மேட்சிங் உடைகளில் ப்ளோரல் டிசைன் ஆடைகள் அதிகம்பேரால் விரும்பப்படுகின்றன. ப்ளோரல் டிசைன்களை பெண்கள் மட்டுமல்லாமல் இப்போது ஆண்களும் விரும்பி அணிவதால், அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகளைத் தயாரிக்கும்போது ஆடைவடிவமைப்பாளர்களுக்கு அது செளகர்யமாக இருக்கிறது. வார விடுமுறை நாளில் வீட்டுக்குள் இருக்கும்போது ஒரே மாதிரி அணிந்துகொள்ளும்படியான கேஷுவல் ஆடைகள்கூட ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.

இப்படி ஒரே மாதிரியான ஆடைகளை அணியும்போது, ரிச் லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆடைகளுக்கு ஏற்ப ஆக்ஸசரீஸ்கள் அணிய வேண்டும் என்பது ஆடை வடிவமைப்பாளர்களின் அட்வைஸ். லக்‌ஸூரியாக இல்லாவிட்டாலும், ஆடைகளின் நிறங்களுக்குப் பொருந்துகிற மாதிரியாவது ஆக்ஸசரீஸ்கள் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

டிசைன்களை விரும்புவதுபோலவே, வண்ணங்களில் மட்டுமே வித்தியாசம் காட்டும் ஆடைகளையும் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மஞ்சள், பிங்க், சிவப்பு, நீலம் மற்றும் ஆரஞ்சு என அடர்த்தியான நிறங்கள் மேட்சிங் ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான டிசைன்கள் இல்லாமல் மேட்சிங் காஸ்ட்யூம்களுக்கு என்றே பிரத்தியேகமான டிசைன்களை வடிவமைப்பாளர்கள் உருவாக்குகின்றனர். அதற்காக அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெடுகிறார்கள். ஆண்கள் அணியும் அதே மாதிரியான ஆடைகளை, அதே டிசைனில் குடும்பத்தில் இருக்கும் மனைவியோ அல்லது மகளோ அணிவது புதுமையாக இருக்கிறது. இதுபோன்ற ஆடைகள் அவர்களுக்கு நேர்த்தியான அழகை அளிக்கின்றன. 

பார்ட்டி, பாரின் டூர் போகும்போது ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்களைத் தவிர வேறு எந்த ஆடையும் பொருத்தமானதாக இருக்கவே முடியாது. அதேபோல, குடும்பப் புகைப்படங்களை எடுப்பதற்கும் இந்த காஸ்ட்யூம்களே பொருத்தமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு மட்டும் புதுத் துணியை எடுத்துக் கொடுப்பதும், பெற்றோருக்கு கை குலுக்கி வாழ்த்துகளைச் சொல்வது மட்டும்தான் வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாய் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நினைப்பவர்கள், ஃபேமிலி மேட்சிங் காஸ்ட்யூம்களை வாங்கிப் பரிசளிக்கலாம். பிறந்த குழந்தைக்குக்கூட இந்த வகை காஸ்ட்யூம்கள் கிடைக்கின்றன. தயாராக இருக்கும் ஆடைகள் பிடிக்கவில்லை என்றாலும், ஆடை வடிவமைப்பாளர்களிடம் சொல்லி புதிதாக வடிவமைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் இதில் இருக்கிறது.

ஒருவருடைய வாழ்நாளில் விசேஷ தினத்துக்கு பஞ்சமே இருக்காது. அந்த நாள்களையெல்லாம் மிகவும் அழகாக மாற்ற, சும்மா வெறுமனே ஆடைகளை அன்பளிப்பாய் வழங்குவதைவிட, இது மாதிரி ஃபேமிலி கான்செப்ட் ஆடைகளை வாங்கிக் கொடுக்கும்போது குடும்பத்துக்குள் நிச்சயமாக நீங்கள் ஒரு சூப்பர் மேன் ஆகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆக, மேட்சிங்காக ஆடைகளை அணிந்து, குடும்பமாய் ஒரு செல்பியை எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுதான் பாருங்களேன்... லைக்ஸ் அள்ளும்!