Published:Updated:

கண்ணகி கோயில் விவகாரம்: கேரளாவின் தீர்மானத்தைத் தமிழகம் புறக்கணிக்கிறதா?

கண்ணகி கோயில் விவகாரம்: கேரளாவின் தீர்மானத்தைத் தமிழகம் புறக்கணிக்கிறதா?
கண்ணகி கோயில் விவகாரம்: கேரளாவின் தீர்மானத்தைத் தமிழகம் புறக்கணிக்கிறதா?

அவர்கள் தீர்மானம் போட்டது போல, தமிழகம் சார்பில், இந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டு, அதைக் கேரள அதிகாரிகளிடம் கொடுத்து, கண்ணகி கோயிலுக்கு 24 நாள்கள் பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு செய்ய வேண்டும்.

மிழக - கேரள எல்லையில், தமிழகப் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு, சித்திரை முழுநிலவு நாளில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம், ஏப்ரல் 19-ம் தேதி முழு நிலவு நாள் வருகிறது. அன்றைய தினத்துக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18-ம் நாள், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதனால், தமிழக - கேரள அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் முதன்முறையாக நடக்கும் ஆலோசனைக் கூட்டம் :

பொதுவாக, இந்தக் கோயில் திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த தமிழக - கேரள அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம், கேரளாவின் தேக்கடியில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கம்பத்தில் நடைபெற்றது இதுவே முதல்முறை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வன அலுவலர் கெளதம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஷில்பா, இடுக்கி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வினோத் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை மற்றும் கேரளாவின் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒருமுறை பாஸ் எடுத்தால் போதும் :

இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே திருவிழா கொண்டாடப்படுவதால், தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு வருகை தருவர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பளியன்குடி வழியாக 6.6 கிலோமீட்டர் மலைப் பாதையில் நடந்து கோயிலுக்குச் செல்ல முடியும். அதேபோல, கேரளாவின் குமுளி பேருந்து நிலையத்திலிருந்து ஜீப் மூலமாக 12 கிலோமீட்டர் மலைகளில் பயணம் செய்து கோயிலுக்குச் செல்ல முடியும். பெரும்பாலான மக்கள் ஜீப்பில் பயணம் செய்வர். அதனால், ஜீப் ஏறும் இடமான குமுளி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க, கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை கேரள மாநில அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல், ஜீப் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதும், பல இடங்களில் மணல் இல்லாமல் பாறைகளாக பாதை இருப்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றைச் சரி செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோயில் அருகே அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குடிநீர்த் தொட்டி மற்றும் மொபைல் டாய்லெட்கள் இருப்பதற்கான அறிவிப்பு பலகைகள், தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைக்கப்படும் எனவும், பக்தர்களை ஏற்றிச்செல்லும் ஜீப்கள், ஒரு முறை மட்டும் பாஸ் எடுத்தால் போதுமானது, ஒவ்வொரு முறை கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச்செல்லும்போது பாஸ் எடுக்கத் தேவை இல்லை என்ற புதிய முறை பற்றிய அறிவிப்பும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். இரு மாநில அதிகாரிகள் இணைந்து, குடிநீர், கழிப்பிட வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதி, காட்டுத் தீயிலிருந்து பாதுகாத்தல், வன விலங்குகளிடமிருந்து பக்தர்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

கேரளாவின் தீர்மானத்தைத் தமிழகம் புறக்கணிக்கிறதா?

``வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே கண்ணகி கோயிலைப் பார்க்க அனுமதிக்கிறீர்கள், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கேரளாவின் திருவனந்தபுரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வருவாய்த் துறைச் செயலர், தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கண்ணகி கோயில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வருடத்துக்கு 24 நாள்கள் கண்ணகி கோயிலைத் திறந்து, பக்தர்களை அனுமதிக்கலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை” எனக் கேள்வி எழுப்பினார், கேரளாவின் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகி சுரேஷ்குமார். இதைக் கேட்ட தமிழகத்தின் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், தேனி மாவட்ட கலெக்டரிடம் அதே கேள்வியை முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், ``இந்த விஷயம் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. முதலில், திருவிழாவை முடிப்போம். அதைப் பின்னர் பார்த்துக்கொள்வோம்” என்றார் கூலாக. இதைக் கேட்ட அனைவரும் அதிருப்தியடைந்தனர். ``அவர்கள் தீர்மானம் போட்டதுபோல, தமிழகம் சார்பில் இந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டு, அதைக் கேரள அதிகாரிகளிடம் கொடுத்து, இந்தக் கோயிலுக்கு 24 நாள்கள் பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அனைவரும் கேட்க, ``அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்று சமாளித்து அனைவரையும் அமைதியாக்கினார் தேனி கலெக்டர்.

கேரள அரசே, கண்ணகி கோயிலை 24 நாள்கள் திறந்து, பக்தர்களை அனுமதிக்கலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சூழலில், அது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர், தமிழக அரசை அறிவுறுத்தி அனுமதி பெற்றுத் தருவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின் செல்ல