Published:Updated:

பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா... இந்தியாவுக்கு வருமா மஹிந்திரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா... இந்தியாவுக்கு வருமா மஹிந்திரா?
பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா... இந்தியாவுக்கு வருமா மஹிந்திரா?

Rimac நிறுவனத்தின் C-Two ஹைப்பர்காரில் இருக்கும் அதே 120kWh லித்தியம் பேட்டரி அமைப்பே, பட்டிஸ்ட்டா காரில் இடம்பெற்றுள்ளது. எனவே, இரு கார்களிலும் வீல்பேஸும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சர்யமில்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டீஸர்களே ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது எலெக்ட்ரிக் ஹைப்பர் காரான பட்டிஸ்ட்டாவை, ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது ஆட்டோமொபைலி பினின்ஃபரினா நிறுவனம். மிகக் குறைவான எண்ணிக்கையில் (150 கார்கள்) தயாரிக்கப்படவுள்ள இது, மஹிந்திராவுக்குச் சொந்தமான இந்த இத்தாலிய நிறுவனத்தின் வேகமான மற்றும் விலை அதிகமான தயாரிப்பாக இருக்கும். பின்னாளில் பர்பாமன்ஸ் எஸ்யூவி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது பினின்ஃபரினா.

லுகா போர்கோக்னோ தலைமையிலான ஆட்டோமொபைலி பினின்ஃபரினா நிறுவனத்தின் டிசைனர்களுடன், பினின்ஃபரினா ஸ்பா டிசைன் ஸ்டுடியோவின் கூட்டுமுயற்சியால், இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபெராரி மற்றும் பினின்ஃபரினா கார்களில் பின்பற்றப்பட்டிருந்த டிசைன் கோட்பாடுகள் இங்கே எதிரொலிப்பது ப்ளஸ். இதனால் சிம்பிளான டிசைனாக இருந்தாலும், தேவையான வளைவு நெளிவுகளுடன் அட்டகாசமாக உள்ளது பட்டிஸ்ட்டா. பெரிய பானெட் ஸ்கூப், முன்பக்க கார்பன் ஸ்ப்ளிட்டர், அகலமான ஆக்டிவ் பின்பக்க டிஃப்யூஸர் என காரின் ஏரோடைனமிக்ஸுக்குத் துணைநிற்கும் அம்சங்கள் ஏராளம்.

காரின் முன்பக்கத்தில் இருக்கும் ஹெட்லைட்களுக்கு இடையே உள்ள எல்.இ.டி பட்டை செம. கான்ட்ராஸ்ட் பினிஷைக்கொண்டிருக்கும் ரூஃப், காரின் Cab Forward டிசைனுக்குக் கைகொடுக்கிறது. வீல்பேஸ் பெரிது என்பது, பேட்டரிகளை வைப்பதற்கு துணைநிற்கிறது. பட்டிஸ்ட்டாவின் டெயில் பகுதி ஸ்ப்ளிட் டிசைனில் இருந்தாலும், சிறிய கார்பன் பைபர் பேனல் அவற்றை ஒன்றிணைக்கிறது. இதனால் Pop-Up ஸ்பாய்லர் மற்றும் ஏர் பிரேக் (Downforce) ஆகிய இரண்டு அம்சங்களை இது கொண்டிருப்பது நைஸ். இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் சார்ஜிங் பாயின்ட், பின்பகுதியில் அழகாக வைக்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜ் ஏறுவதைத் தெரிவிக்கும் லைட் பார், செம ஹைடெக் ரகம். 

முழுக்க ஓட்டுதல் அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, கேபின் க்ளாசிக் மற்றும் மாடர்ன் தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலின் இருபுறமும் ஸ்க்ரீன்கள் இருந்தாலும், அது டிரைவரை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும், நடுவே இருக்கும் சிறிய ஸ்க்ரீனில் தெளிவாகத் தெரிகின்றன. இடதுபுறத்தில் உள்ள ஸ்க்ரீன் காரின் பர்ஃபாமன்ஸ் மற்றும் ஹேண்ட்லிங் குறித்த விவரங்களைச் சொல்கிறது என்றால், வலதுபுறம் உள்ள ஸ்க்ரீன் காரின் மீடியா மற்றும் நேவிகேஷன் குறித்த விவரங்களை முன்வைக்கிறது.

டிரைவிங் மோடுகளுக்கான கன்ட்ரோலர் ஸ்டீயரிங்குக்குக் கீழே இடதுபுறத்தில் இருப்பதுடன், டிரான்ஸ்மிஷனுக்கான கன்ட்ரோலர் ஸ்டீயரிங்குக்குக் கீழே வலதுபுறத்தில் உள்ளது. இந்த காரை வாங்குபவர், கேபினின் மெட்டீரியல் மற்றும் கலர் ஆப்ஷனை தனக்குப் பிடித்தபடி கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும். பட்டிஸ்ட்டாவின் எடையை 2,000 கிலோவுக்குள் கட்டுப்படுத்த ஏதுவாக, காரின் கட்டுமானத்தில் கார்பன் பைபர் பிரதானமாக இருக்கிறது. இதில் தயாரிக்கப்பட்ட மோனோகாக் சேஸி, ரூஃப், பின்பக்க சப் ஃப்ரேம் ஆகியவை இதற்கான உதாரணங்கள். 

21 இன்ச் அலாய் வீல்களில், ரேஸ் கார்களில் இருக்கும் பைரலியின் P Zero டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 6 பிஸ்டன்களைக்கொண்ட கார்பன் செராமிக் பிரேக்குகளை (முன்: 390மிமீ, பின்: 380மிமீ) இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கெனப் பிரத்யேகமாகத் தயாரித்திருக்கிறது பிரெம்போ. பார்முலா-E கார்களுக்கு இந்த நிறுவனத்தின் பிரேக்குகளே பயன்படுத்தப்படுவதால், தனது ரேஸிங் அனுபவத்தை பட்டிஸ்ட்டாவின் பிரேக்குகளில் காட்டியிருக்கிறது பிரெம்போ. 350கிமீ வேகம் செல்லக்கூடிய காராக இருப்பினும், டிரைவிங் மோடுகள் வாயிலாக இருக்கின்ற பவரைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். பர்ஃபாமன்ஸ் பேக்கேஜ் எடுத்துக்கொண்டால், டயர் மற்றும் சில விஷயங்களில் வித்தியாசம் இருக்கும். எனவே, வழக்கத்தைவிட அதிக வேகத்தை பட்டிஸ்ட்டா எட்டும். ஆனால், இது ரேஸ் டிராக் போன்ற இடங்களில் மட்டுமே கச்சிதமாக இருக்கும். 

Rimac நிறுவனத்தின் C-Two ஹைப்பர் காரில் இருக்கும் அதே 120kWh லித்தியம் பேட்டரி அமைப்பே, பட்டிஸ்ட்டா காரில் இடம்பெற்றுள்ளது. எனவே, இரு கார்களிலும் வீல்பேஸும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சர்யமில்லை (2,745மிமீ). காரின் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் அதிக அனுபவம் இருப்பதால், மஹிந்திரா ரேஸிங் துறையின் பார்முலா-E அணி இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரில் தனது தொழில்நுட்பத் திறனைக் காட்டியிருக்கிறது.

4 வீல்களுக்கும் தனியாக மோட்டார் இருப்பதுடன், 4 வீல் டிரைவ் அமைப்பையும் இதுகொண்டிருக்கிறது. முன்னே சொன்னவை எல்லாம் சேர்ந்து 1900bhp பவர் மற்றும் 230kgm டார்க்கை வெளிப்படுத்தினாலும், டார்க் வெக்டரிங் தொழில்நுட்பத்தினால் அவை சீராக டயர்களுக்குக் கிடைக்கும். எனவே, 0 – 100 kmph வேகத்தை 2 விநாடிக்குள்ளாகவே எட்டும் பட்டிஸ்ட்டா, 300 kmph வேகத்தை வெறும் 12 விநாடியிலேயே தொட்டுவிடுகிறது. பர்ஃபாமன்ஸ் பேக்கேஜ்கொண்ட மாடல், அதிகபட்சமாக 350 kmph வேகம் செல்லும் எனத் தெரிகிறது. சிங்கிள் சார்ஜில் 450  கிமீ வரை செல்ல முடியும்.

எலெக்ட்ரிக் ஹைப்பர் காராக இருப்பினும், செயற்கையான இன்ஜின் சத்தத்தைப் பயன்படுத்தாமல் இயற்கையான சத்தத்தைக்கொண்டிருக்கவே பினின்ஃபரினா விரும்பியது. எனவே, காரின் பாடி, Wind Noise மற்றும் Air Flow ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர, எலெக்ட்ரிக் மோட்டார், ஏசி சிஸ்டம், மோனோகாக் சேஸி ஆகியவற்றின் டிசைனும் Sound Generation—க்கேற்ப அமைந்திருக்கிறது. ஆனால், டிரைவர் தனக்குப் பிடித்தமான சத்தத்தையும் தேர்ந்தெடுக்க முடியும்.

2 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான விலையைக்கொண்டிருக்கும் பட்டிஸ்ட்டா, 2020-ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. அது பினின்ஃபரினா டிசைன் ஸ்டுடியோவுக்கு 90-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நிறுவனரான பட்டிஸ்ட்டா ஃபரினாவை நினைவுகூரும்விதமாகவே, இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கு `பட்டிஸ்ட்டா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 150 கார்களும் ஐரோப்பா – அமெரிக்கா – ஆசியா – Middle East கார் சந்தைக்கு சரிபங்கில் பிரித்தளிக்கப்படும். இதைத் தொடர்ந்து, லம்போர்கினி Urus எஸ்யூவி-க்குப் போட்டியாக ஒரு எஸ்யூவி-யைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது பினின்ஃபரினா. இது பட்டிஸ்ட்டாபோல் இல்லாமல், வலதுபுற ஸ்டீயரிங் அமைப்பையும்கொண்டிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு