Published:Updated:

'ஒலிம்பிக் பதக்கத்தை விட உன்னதமானது ஓர் உயிர்' - நெகிழவைக்கும் உண்மைக்கதை! #FeelGoodStory

`இந்த உலகம் அன்பால் இயங்குகிறது' என்று சொல்பவர்களை பார்த்து ஒரு பெருங்கூட்டம் சிரித்துக்கொண்டிருக்கிறது. `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெருமை பொங்கச் சொல்லமுடிந்தது

'ஒலிம்பிக் பதக்கத்தை விட உன்னதமானது ஓர் உயிர்' - நெகிழவைக்கும் உண்மைக்கதை! #FeelGoodStory
'ஒலிம்பிக் பதக்கத்தை விட உன்னதமானது ஓர் உயிர்' - நெகிழவைக்கும் உண்மைக்கதை! #FeelGoodStory

`ந்த உலகம் அன்பால் இயங்குகிறது' என்று சொல்பவர்களைப் பார்த்து ஒரு பெருங்கூட்டம் சிரித்துக்கொண்டிருக்கிறது. `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெருமை பொங்கச் சொல்லமுடிந்தது. ஆனால், இன்று உலகமயமாக்கல் அதைப் புரட்டிப் போட்டுவிட்டது. அது, மனிதக் கூட்டத்தைத் தனிமனிதர்களாகச் சிதறடிக்கிறது. மனிதம் சார்ந்த விழுமியங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி `உலகம் ஒரு வேட்டைக்காடு', `வலுத்தது பிழைக்கும்' போன்ற கருத்துகளைத் தொடர்ந்து முன்வைக்கிறது. ஒருவரை ஒருவர் வீழ்த்தியே தன் வெற்றியைப் பதிவு செய்தாக வேண்டிய கட்டாயமும் செயற்கையாக உருவாக்கப்பட்டுவிட்டது. 

`மனிதம்' என்கிற பண்புதான் `மனிதன்' என்னும் சமூக விலங்கை வேறுபடுத்துகிறது. மனிதம், சுயமற்ற பேரன்பினால் ஆனது. இந்த உலகில் அதற்கு இணையானது எதுவுமே இல்லை.  உலகின் தலைசிறந்தது என மதிக்கப்படுவனகூட அதற்கு இணை ஆகா. மனிதத்தை இழந்து எதைப் பெற்றாலும் அது பெருமையில்லை. இவற்றையெல்லாம் அவ்வப்போது யாராவது இந்த உலகத்துக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் அதற்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். எளிய வாழ்க்கைச் சலுகைகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் பெரும் கொடூரத்தை நிகழ்த்தக் காத்திருக்கும் மனிதக் கூட்டத்திற்குள்தான், உலகில் பெரிய மகத்துவங்களைக் கூட அடிப்படையான மனித அன்பிற்காகத் துறக்கவும் தயாராய் இருக்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான், லாரன்ஸ் லெமியூ.

1955 -ம் ஆண்டு கனடாவில் பிறந்த லாரன்ஸ் லெமியூ, சிறுவயது முதலே படகுச் சவாரியில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது 15-வது வயதில் முதன்முதலாகப் படகுப் போட்டியில் கலந்துகொண்ட லாரன்ஸ், தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறத் தொடங்கினார். அவர் கனவு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது. அதற்காக அவர் கடினமாக உழைத்தார். 

1988-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக அவர் சியோல் வந்தார். சியோல் கடல்பகுதி விசித்திரமானது. அது எப்போது சீற்றமுடன் காணப்படும், எப்போது சாதாரணமாக இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாது. ஏற்கெனவே இத்தகைய கடற்பகுதிகளில் படகைச் செலுத்திப் பயிற்சி செய்திருந்த லாரன்ஸுக்கு அவரின் நீண்டநாள் கனவான ஒலிம்பிக் பதக்கம் அந்த ஆண்டு பெரும்பாலும் உறுதியாகிவிட்டது புரிந்தது. 

போட்டி நாள் வந்தது. எதிர்பார்த்ததை விட கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. தொடக்கம் முதலே லாரன்ஸ் மிகத் திறமையாகப் படகைச் செலுத்தி முன்னேறிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய இரண்டாம் இடத்தில் இருந்தார். அதேவேகத்தில் தொடர்ந்தால் முதல் இடத்தையும் பெற வாய்ப்பு இருந்தது. இல்லை என்றாலும் வெள்ளி உறுதியாகிவிட்ட நிலை. 

எதிர்பாராதவை எப்போது வாழ்வைத் தாக்கும் என்று யார் அறிவார், கரைக்கு இன்னும் தூரம் இருக்கும் நிலையில் வானிலை மிகவும் மோசமடைந்தது. கடல் சீற்றம் அதிகரித்தது. லாரன்ஸ் கலக்கமின்றி முன்னேறிக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் வீரர்கள் இருவர் அந்த சீற்றமிகு அலைகளில் சமாளிக்க முடியாமல் திண்டாடினர். ஒரு பிரமாண்டமான அலை அவர்களின் படகைப் புரட்டிப் போட்டது. 

படகு கவிழ்ந்தது. அதில் இருந்த ஒருவர் படகிலிருந்து வெகு தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டார். அந்த வீரர் தண்ணீரில் வீழ்ந்த வேகத்தில் சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூழ்க ஆரம்பித்தார். லாரன்ஸ் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மனம் பதறியது. எங்கே அந்த வீரர் மூழ்கிவிடுவாரோ என்று அஞ்சினார். வீரர்களைக் காப்பாற்ற பின்னால் வரும் ஆரஞ்சு நிற மீட்புப் படகு வெகுதொலைவில் இருந்தது. அது வருவதற்குள் எதுவும் நிகழலாம். லாரன்ஸ் ஒரு நொடியும் சிந்திக்காது தன் படகிலிருந்து கடலுக்குள் குதித்தார்.

தன் வாழ்க்கையின் கனவு கைகூடும் நேரத்தில் ஏன் லாரன்ஸ் இப்படிச் செய்தார், எது அவரைப் போட்டியிலிருந்து விலகி இப்படி அடுத்தவருக்கு உதவ ஓடச்செய்தது, அடுத்த போட்டிக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். அப்போது இன்னும் வயது கூடியிருக்கும். இதைப்போலச் சிறப்பாக அப்போது செயல்படமுடியுமா, முடியாதென்றால் வாழ்க்கை முழுவதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது வெறும் கனவாகவே அவரைப் பொறுத்தவரை முடிந்துபோய்விடும். 

ஆனால், இவற்றையெல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை. லாரன்ஸ் பார்த்தது மனிதன் ஒருவன் நீரில் மூழ்கும் காட்சி. அனிச்சை செயலைப்போல அடுத்த கணம் குதித்துவிட்டார். நீந்திச் சென்று அந்த வீரர்களை மீட்டார். மீட்புப் படை வரும் வரை அவர்களை மூழ்காது மிதக்க உதவினார். ஆரஞ்சு படகு வந்ததும் அவர்களிடம் வீரர்களை ஒப்படைத்துவிட்டு அவர் தன் படகுக்கு வந்தபோது நிறைய பேர் போட்டியில் முந்தியிருந்தார்கள். லாரன்ஸ் தன் படகில் ஏறி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்து 32 போட்டியாளர்களில் 21 நபராகப் போட்டியை முடித்தார்.

அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வெள்ளிப் பதக்கம் இப்போது அடுத்தவர் வசம். ஆனால் அதுகுறித்து லாரன்ஸுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் மனம் தங்கம் வென்றதைவிடப் பெரிய மகிழ்ச்சியில் இருந்தது. இரு உயிர்களைக் காப்பாற்றிய ஒப்பற்ற ஆனந்தம். ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களும் அவரிடம் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஒலிம்பிக் சங்கம் இந்தத் தன்னலமற்ற துணிகரச் செயலைப் பாராட்டி அவருக்கு ஒரு கௌரவ விருதினை வழங்கியது. அதன் பின் பல்வேறு அமைப்புகளும் அவருடைய இந்த வீரச் செயலுக்கு விருது அளித்துக் கௌரவப்படுத்தின.

இந்த உலகத்தில் போட்டி அவசியம்தான். ஆனால் அவற்றை எல்லாம் விட உயிர்கள் மீதான அடிப்படை அன்பு மிகப் பெரியது. புத்தனிலிருந்து வள்ளலார் வரை தொடர்ந்து வலியுறுத்தியது இந்த மானுட அன்பைத்தான். 

சாலையில் விபத்து நடக்கிறது. ரத்தம் வழியும் மனிதனை வேடிக்கை பார்த்தபடியே சிலர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். பார்த்துக்கொண்டே பயந்து அநேகர் கடந்துபோகிறார்கள். எப்போதும் அவசர கதியில் ஓடிக்கொண்டே இருக்கும் நபர்கள் யாரைத் திட்டுகிறோம் என்று அறியாமல் திட்டிக்கொண்டே வேகவேகமாய் அந்த இடத்தைக் கடக்கின்றனர். யாரோ ஒரு நல்ல உள்ளம் ஓடிப்போய் உதவுகிறது. ஒருவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்கிறார். 

நம்மில் எத்தனை பேர் அந்த முதல் மனிதன், அந்த முதல் மனிதர்களுக்குத் தலை வணங்குவோம். காரணம் `நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டே எல்லோர்க்கும் பெய்கிறது மழை.'