Published:Updated:

சிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா?! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

சிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா?! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
சிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா?! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

சிங்கப்பூரில் திருமணத்தையே 18 வயதுக்குக் கீழ், 18 - 21 வயதுக்குள், 21 வயதுக்கு மேல் என மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். முதலிரண்டு வகைமைக்கும் பெற்றோர் சம்மதம் தேவை.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணி சார்பில் ஏராளமான படைப்பாளிகள் வேட்பாளர்களாகக் களமிறங்குகிறார்கள். தூத்துக்குடியில் கனிமொழி (தி.மு.க), தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க), விழுப்புரத்தில் ரவிக்குமார் (வி.சி.க), மதுரையில் சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) என நால்வரும் நேரடியாகவே எழுத்தாளர்கள். காங்கிரஸ் சார்பில் கரூரில் எழுத்தாளர் ஜோதிமணி களமிறக்கப்படலாம் என்கிறார்கள். `அமைப்பாய்த் திரள்வோம்’ மூலம் திருமாவளவனையும் `2ஜி: அவிழும் உண்மைகள்’ எழுதிய‌ ஆ.ராசாவையும் ஏராளமான நூல்கள் வடித்துள்ள வைகோவையும் (ம.தி.மு.க) - ராஜ்ஜிய சபா - கணக்கில்கொண்டால் கூடுதலாக மூவ‌ர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு, வெற்றி வாய்ப்பு மிகுதியாக உள்ளது. அதனால் தமிழகத்திலிருந்து இந்தமுறை ஓர் எழுத்தாளர் படையே டெல்லிக்குப் போக இருக்கிறது. ஆனால், இன்று இந்தியாவில் எழுத்தாளர்களின் பாதுகாப்பு?

நடப்பு மத்திய அரசின் ஐந்து ஆண்டு சாதனைகளுள் ஒன்று, முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது. பல மரணங்கள் ஒரே மாதிரி இந்த வகையில் நடத்தப்பட்டாலும், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை.

நாடாளுமன்றம் போகும் நம் எழுத்தாளர்கள், இதையொட்டி ஒரு விஷயம் செய்தால் நல்லது. கோரிக்கை இதுதான்: அமையவிருக்கும் நடுவண் அரசு, எழுத்தாளர்கள் / சிந்தனையாளர் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். எழுத்து, திரைப்படம், ஓவியம், பிற கலைகள் என எல்லா வடிவங்களிலும், அச்சு, ஒலி, ஒளி, இணையம் என அனைத்து ஊடகங்களிலும் குழப்பமின்றிக் கருத்துரிமையை நிலைநாட்டவும், கருத்தாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அதைக் குலைக்கும்வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளின் குற்றங்களைத் துரிதமாக விசாரிக்கவும் கடுமையாகத் தண்டிக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்ய வேண்டும்.

***

`இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்கள் திருமணத்துக்கு, இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழிசெய்வோம்` என்று தன் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது பா.ம.க. அத்துடன் `சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்கு, பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர் நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ளது’ என்றும் சொல்கிறது. இது நிஜமா?

சிங்கப்பூரில் திருமணத்தையே 18 வயதுக்குக்கீழ், 18 - 21 வயதுக்குள், 21 வயதுக்குமேல் என மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். முதல் இரண்டு வகைமைக்கும் பெற்றோர் சம்மதம் தேவை. பிரேசிலில் 16 - 18 வயது வரை, 18-க்குமேல் என இரு பிரிவுகள் உள்ளன. முதலாவதில் பெற்றோர் சம்மதம் தேவை. பிலிப்பைன்ஸில் இதே வயது வரம்பு 18 - 21 வரை. இன்று ஜப்பானில் ஆண்களின் திருமண வயது 18; பெண்களுக்கு 16. 20-க்குக் கீழ் இருப்பவர்கள் பெற்றோர் சம்மதம் பெற வேண்டும். ஆனால், இதைத் திருத்தி இருபாலருக்கும் திருமண வயது 18 என்றும், அதற்கு பெற்றோர் சம்மதம் தேவையில்லை என்றும் சட்டம் கொண்டுவரவிருக்கிறார்கள். ஆக, பொதுவாய் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்யும் இடங்களில் பெற்றோர் சம்மதம் என்ற விஷயம் இருப்பதை உணரலாம். அதனால் இந்தியாவில் இத்தகைய சட்டமானது பெண்களின் உரிமைக்கு எதிரானதாகவே அமையும். குறிப்பாக, காதல் திருமணங்களைத் தடுக்கவே பயன்படும். காதல் திருமண எதிர்ப்பு என்பது, சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு ஒப்பு.

பதிலாக ஆண், பெண் இருவரின் திருமண வயதையே 21 ஆக்கக் கோரலாமே! செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் வாயாலேயே சொல்வதுபோல் 18 என்பது பெண் விவரம் அறியாத வயது என்பதால், அந்நிலையிலேயே தம் சாதிக்குள் அவளுக்கு மணம் செய்துவைத்துவிட வேண்டும். அதற்குத்தான் இந்தக் காதல் குறுக்கே நிற்கிறது!

`நாடகக் காதலா, நாடகக் காதலென நாடகமா?’ எனப் பெண்கள் தெளிவுற வேண்டும்!

***

`காமத்துப்பால்’ என இன்றைய பயன்பாட்டில் பெயர் சற்று பயங்கரவாதம் என்றாலும் பெரும்பாலும் காதல் பற்றிய பாக்கள் அடங்கியதே திருக்குறளின் இந்தப் பகுதி. குறளுக்கு பலர் உரை எழுதியிருந்தாலும் காமத்துப்பாலுக்கு எனத் தனியே உரை கண்டோர் வீ.முனுசாமி, கண்ணதாசன், போ.மணிவண்ணன் மற்றும் பலர். ஐந்தாண்டுகள் முன் தமிழ் பேப்பர் இணைய இதழில் நானுமே காமத்துப்பால் குறள்களுக்குக் குறுங்கவிதை உரை ஒன்றை வாரத்தொடராக எழுதினேன். இன்றைய நவீன கவிஞர்களையும் அது வசீகரிக்கத் தவறவில்லை. கவிஞர் இசை, உயிர்மை இதழில் காமத்துப்பால் குறள்களை மாதம் ஒவ்வோர் அதிகாரமென எடுத்து எழுதத் தொடங்கியிருக்கிறார்.

வள்ளுவரின் காதல் முகத்தை, தமிழ்ச் சமூகம் சரியாகக் கொண்டாடவில்லை என்ற ஆதங்கம் இசைக்கு இருக்கிறது. `அவரது துவராடை களைந்து அவரை கபிலரோடும் வெள்ளிவீதியாரோடும் சரியாசனத்தில் இருத்தும் முயற்சி இது’ எனக் குறிப்பிடுகிறார்.

`தகையணங்குறுத்தல்’ என்ற முதல் அதிகாரத்தை `அணங்காகி வருத்துதல்’ என்ற தலைப்பில் பெயர்த்திருக்கிறார். உதாரணமாக, ஒரு சோற்றைப் பதம்பார்ப்போம்.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று 

உண்டால் அல்லது களிப்பூட்ட மாட்டாது மது. கண்டாலே களிப்பூட்டவல்லது காமம்.
ஆம் அய்யனே... ஆண்ட்ராய்டுகளின் வழியே வேறென்ன நாங்கள் புத்துலகா சமைத்துக்கொண்டிருக்கிறோம்?

***

அபூர்வ ஜெயராஜன், பூனாவைச் சேர்ந்தவர். பேர‌ழகான புன்னகைகொண்ட இளம் பெண். Mat Pilate Instructor. `யோகா டீச்சர்’ என்று நம் வசதிக்காக அடையாளப்படுத்திக்கொண்டாலும் அவர் முன்வைப்பது யோகா மற்றும் நடனத்தின் ஒரு கலவையை. அதை `Yogaance’ என்று அழைக்கிறார். சமநிலைகொண்ட உடல் மற்றும் மனதை உருவாக்க இந்த வித்தை உதவும் என்கிறார். பிடித்த இசையைப் போட்டுவிட்டு, உங்கள் மூச்சின் ரிதத்துக்கேற்ப உடலை வளைத்து, அமைதி தேடச் சொல்கிறார்.

இவரது சிறப்பு, தபால்வழிக் கல்வியில் நீச்சல் கற்பிப்ப‌துபோல் யோகாசனங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராமில் சொல்லித்தருவது. உதாரணமாக, சமீபத்தில் நல்ல ஜீரண சக்தியைப் பெற Malasana, Cat / Cow Stretch, Thread the Needle, Supine Twist, Happy Baby மற்றும் Apanasana என்று ஆசனங்களைச் செய்து, வீடியோ வெளியிட்டார்.

சில போஸ்கள் மூச்சுமுட்டவைக்கின்றன. அதுவே ஒரு சுவாசப்பயிற்சியோ எனக் குழப்பமாகிறது. `அருணாசல’த்தில் ரம்பாவை ரஜினி பாடியதுபோல் `எலும்பே இல்லாத படைப்பு’ என முணுமுணுக்கலாம். 

பெண்கள் இவரின் யோகா ஆசனங்களை முயற்சி செய்யலாம். ஆண்கள் யோகா கற்பது சந்தேகம்தான்.

***

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க, ஆர்வமாய் இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

முந்தைய பாகங்கள்

அடுத்த கட்டுரைக்கு