Published:Updated:

"மத்திய அரசின் அவசரச் சட்டங்கள் அவசியமற்றது!" - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

மூத்த வழக்கறிஞரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடியவருமான இந்திரா ஜெய்சிங் அவர்கள் மின்னஞ்சல் மூலம் நமக்கு அளித்த பேட்டி...

"மத்திய அரசின் அவசரச் சட்டங்கள் அவசியமற்றது!" - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்
"மத்திய அரசின் அவசரச் சட்டங்கள் அவசியமற்றது!" - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

``என்னைத் தனி மனிதராகப் பாருங்கள். இன்னொருவருடைய மனைவியாக அடையாளப்படுத்த நாங்கள் இங்கு இருக்கவில்லை” உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் ஆணாதிக்கக் கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆற்றிய எதிர்வினை இது. அதைத் தொடர்ந்து மகளிர் தினத்தன்று அவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதம் நீதித்துறையில்  நிலவும் ஆணாதிக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடியவருமான இந்திரா ஜெய்சிங், நமக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டி:

``உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வர்ணிக்கப்பட்டது. தற்போது ஓர் ஆண்டு கடந்துவிட்ட நிலையில் அந்தச் சந்திப்பு நீதித்துறையில் ஏதாவது பலன் அளித்துள்ளதாக நினைக்கிறீர்களா?’’

``வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒப்படைக்கப்படுவதாக, நீதிபதிகள் எழுப்பிய குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய தகவல்களை அவர்கள் தருவார்கள் என எதிர்பார்த்தேன். அதைப் பற்றிய தகவல்களையும் தெரிவித்திருக்க வேண்டும். பத்திரிகையாளர்களை நீதிபதிகள் சந்தித்ததை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அவர்கள் போதுமான அளவு தகவல்களைச் சொல்லவில்லை என்பதே என்னுடைய விமர்சனம்.’’

``முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். தற்போதைய தலைமை நீதிபதியின் செயல்பாடுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’

``நான் அதுபற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. தற்போது நீதிமன்றத்தின் செயல்பாடுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.’’

``அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சி.பி.ஐ, ரஃபேல் ஒப்பந்த ஊழல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் சரியாகக் கையாண்டதாக நினைக்கிறீர்களா?’’

``என்னுடைய பார்வையில், இத்தகைய சிக்கலின் ஆணிவேர் என்பது `சீல் வைத்த கவர்’ நடைமுறைதான். ஆவணங்களைச் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தால் யார், யாரைத் தவறாக வழிநடத்தினார்கள் என்பது தெரியாது. தற்போது மறுஆய்வில் தெரியவரும். இதே பிரச்னை பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் எழுந்தது. அட்டர்னி ஜெனரல் அவருடைய பதிலை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். நமக்கு அவர் என்ன தாக்கல் செய்தார் என்பது தெரிய வராது. அலோக் வர்மா (சி.பி.ஐ இயக்குநர்) வழக்கைப் பொறுத்தவரைப் பலரும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முதல்நாளே அளித்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர்.’’

``இளைய நீதிபதிகள் நியமனத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் எழுந்த சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’

``இதுபோன்ற நடைமுறைகளை, நான் முதல்முறையாகப் பார்க்கிறேன். பணி மூப்பைப் புறந்தள்ளுவது என்பது ஆபத்தானது. இதனால் தன்னிச்சையாக அன்றைய அரசாங்கத்துக்குச் சாதகமானவர்களைத் தேர்வு செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.’’

``உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாகத் தலித் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. நாட்டின் பன்மைத்துவம் உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கொண்டுவருவது இதற்குத் தீர்வாக இருக்குமா?’’

``இடஒதுக்கீடுதான் தீர்வு எனச் சொல்லிவிட முடியாது, ஆனால் நிச்சயம் நாட்டின் பன்மைத்துவம் உச்ச நீதிமன்றத்திலும் பிரதிபலிக்க வேண்டும். இது பாலினத்துக்கும் பொருந்தும்.’’

``மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத முத்தலாக், ஆதார் சட்டத் திருத்தம் உள்ளிட்ட சட்டங்களை எல்லாம் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கும் நடைமுறையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’

`` `அவசரச் சட்டம் என்பது உண்மையில் அவசரமான தேவைகளுக்கு மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. அப்படியொரு அவசரம் இந்தச் சட்டங்கள் எதற்குமே இல்லை. பதவிக்காலம் முடியப்போகிற ஒரு அரசு, ஏன் இப்படி அவசரச் சட்டங்களாக இயற்ற வேண்டும் எனத் தெரியவில்லை. மிகவும் அடிப்படையான விஷயங்களுக்கெல்லாம் ஒரு அரசு, தீவிரமான எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்த சூழலில் அவசரச் சட்டங்களாக இயற்றுவது தவறான நடைமுறையாகும். இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.’’

``கிரிமினல் அவதூறு மற்றும் தேசத்துரோகம் ஆகிய பிரிவுகளையும், அவை சமீபமாக கையாளப்பட்ட விதத்தையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இந்தச் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்கிற செயற்பாட்டாளர்களின் கோரிக்கை சரியானதா?’’

``ஆம், அவை நிச்சயம் நீக்கப்பட வேண்டும். இவை தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. மேலும், இவை ஜனநாயகத்துக்கு எதிரானது. இரண்டு சட்டப்பிரிவுகளுமே நீக்கப்பட்டாக வேண்டும்.’’

``முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், அப்போதைய தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் `அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்படுகிற இணக்கம் ஜனநாயகத்துக்கு ஒலிக்கப்படுகிற சாவுமணி’ எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போதைய சூழலில் இந்தக் கூற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’

``அப்போது சொல்லப்பட்டதைப்போல பொருத்தமானதாகவே இருக்கிறது.’’

``தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதித்து, உச்ச நீதிமன்ற நிர்வாகமே மேல்முறையீடு செய்துள்ளதே? நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறதா?’’

``அந்தத் தீர்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.’’

``சபரிமலைக்குள் நுழைந்த பெண்களின் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடியுள்ளீர்கள், சபரிமலை தீர்ப்பு, மறு ஆய்வு மனு என அதற்குப் பிறகான சம்பவங்களைப் பற்றிய உங்களின் பொதுவான கருத்து?’’

``அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்புகளுக்கு இடையிலும் நிறைவேற்றியுள்ள தைரியமான பெண்கள். அதற்கான விலையை கனக துர்கா தரவே செய்தார், அவருடைய குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டார். தலித் பெண்ணான பிந்து, அந்த விதத்தில் ஒரு அதிர்ஷ்டசாலி. அரசியல் கட்சிகள் தேர்தல் லாபத்துக்காக, நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன. ஆனால், இது பாலின நீதி சார்ந்தது.’’

``பாபர் மசூதி - அயோத்தியா நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தம் மூலம் தீர்வை எட்ட உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’

``இது ஒரு விதத்தில் வரவேற்கத்தக்க முடிவு. போபால் விஷவாயு வழக்கில் உச்ச நீதிமன்றம் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுள்ளது. அந்த வழக்கின் மத்தியஸ்தம், மக்களை ஒரு தரப்பாகச் சேர்க்காமலே நடைபெற்றது. யூனியன் கார்பைட் நிறுவனம் மீது கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாமல் வெறும் இழப்பீடு மட்டுமே என மத்தியஸ்தம் மூலம் எட்டப்பட்ட தீர்வு மேல்முறையீடு செய்யப்பட்டு இன்றுவரை விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தச் சம்பவம் நடந்தது 1984-ல். அந்த வகையில் இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்தியஸ்தம் செய்வதற்குத் தேர்ந்தெடுத்த நபர்களின் மீதுதான் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழுவின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவரான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், கடந்த காலங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது. மத்தியஸ்தத்தில் சார்புத் தன்மைக்கான சாயல்கூட ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே உச்ச நீதிமன்றம் குழு உறுப்பினர்களைத் தாமதம் ஆவதற்குள்ளாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.’’