Published:Updated:

ஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் அரசியல் பதிவு எழுதத் தடையா? - ஓர் அலசல்

ஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் அரசியல் பதிவு எழுதத் தடையா? - ஓர் அலசல்
ஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் அரசியல் பதிவு எழுதத் தடையா? - ஓர் அலசல்

`ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது’ எனக் கல்வித் துறை சார்பாக, பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வந்தன. அந்த அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில், கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கிற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என்றும் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் ஓவியங்களையும் அரசின் நலத் திட்ட உதவிகள் பற்றிய விளக்கங்களையும் அழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 

கல்வித்துறையின் அறிவிப்புக்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடச் சொல்லும் அரசு, அரசியல் பதிவுகளைப் பதிய ஏன் தடைபோடுகிறது என்ற கேள்விகளை சமூக ஊடகங்களில் எழுப்பிய வண்ணமிருக்கின்றனர். இன்னும் சிலர், சமீபத்தில் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டம் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சுமுக முடிவு எட்டாமலே முடிவுக்கு வந்தது. இதனால், அரசின் மீதான கோபத்தைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதைத் தடுக்கவே இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். தனி மனித உரிமைக்கு எதிராகவும் இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். 

கல்வியாளர் சங்கமம் ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சதீஷ்குமார், ``இந்திய நாடு, ஜனநாயக நாடு. நம் தேசம் நமக்குக் கொடுத்துள்ள ஆகப்பெரிய உரிமை, கருத்துச் சுதந்திர உரிமை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறும்போது, அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியலில் ஒருசார்பாகச் செயலாற்றக் கூடாது எனச் சொல்லலாம் அதில் தவறில்லை. ஆனால், அரசியல் குறித்துப் பேசவே கூடாது என்பதுதான் தவறானதாக இருக்கிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த உரிமைகளைப் பயன்படுத்த தடை என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். எது அரசியல் என்பதைவிட, எது அரசியல் இல்லை என்பதுதான் பிரச்னை. ஏனென்றால் அரசு + இயல் என்பதே அரசியல் ஆகும். அதாவது, ஓர் அரசின் செயல்பாடுகளில் உள்ள சரி, தவறுகளைக் கற்றறிந்தவர்கள் பேசாமல் வேறு யார் பேசுவது? அரசு ஊழியர்கள் என்றால் அரசுக்கு எதிராகத்தான் பேசுவார்கள் என்ற கருத்து மாற்றம் பெற வேண்டும். ஒரு செயல் சரி என்றால் அதை வரவேற்பதும் தவறு என்றால் அதை எதிர்ப்பதும் மானிடத் தத்துவம். ஒரு சராசரி மனிதனுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் கூட, அரசுப்பணியில் இருக்கின்ற பணியாளருக்கு இல்லையெனில் அரசுப்பணி என்பது அடிமைகளின் பணியா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போதெல்லாம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாகவே கருத வேண்டியிருக்கிறது’’ என்கிறார். 

`சிந்தித்து வாக்களியுங்கள் என்று சொல்லலாம்தானே’ எனக் கேட்கிறார் ஆசிரியை பிரீத்தி, அவர் கூறும்போது, ``தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கக் கூடாது, எந்தக் கட்சியையும் முன்னிலைப்படுத்தக் கூடாது போன்ற விதிகள் யாவரும் அறிந்ததே. அரசுப்பணியில் இருக்கிறவர்களுக்குத்தானே அரசின் நிலைப்பாடுகளும் நகர்வுகளும் நேரடியாகத் தெரியும். அப்படியிருக்க, முந்தைய அரசின் நிறை குறைகளை அரசுப் பணியாளர்களால்தான் பிறரை விடவும் நன்றாக உணரவும் சொல்லவும் முடியும். குறைந்தபட்ச கருத்துச் சுதந்திர உரிமை யாவருக்கும் பொதுவானதே. இவருக்காக வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரிக்கவில்லை. இந்த இந்த நிறை, குறைகள் உள்ளன. சிந்தித்து வாக்களியுங்கள் என்று எழுதுகிற உரிமை யாவருக்கும் பொதுவானதே. எழுத்தில் கண்ணியம் கடைப்பிடித்தால், யாரும் சமூக அவலங்களைப் பேசலாம், எழுதலாம்’’ என்கிறார். 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் பேசுகையில், ``அரசு ஊழியர்களுக்கான விதிகள் எப்போதோ எழுதப்பட்டவை. அவை எழுதப்பட்ட காலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் ஏது? அதனால், அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை, காலத்துக்கேற்ப மாற்றியமைக்க வேண்டியது அவசியம். மேலும், இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்வதுதானே தவறு. தேர்தல் பற்றி பொதுவாக எழுதுவதெல்லாம் தனி மனித உரிமைகள் அதைத் தடுக்க முடியாது. நள்ளிரவில் போராட்டத்தில் அவதியுற்ற ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை எழுத உரிமை இல்லையா. எப்போதுமே அரசு ஊழியர்கள் 2 சதவிகிதம்தான் என்று சொல்வார்கள். அதிலும் ஆசிரியர்களின் சதவிகிதம் குறைவு. அதிலும் சோஷியல் மீடியாவில் எழுதும் ஆசிரியர்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. அப்புறம் ஏன் அவர்கள் எழுதுவதைத் தடுக்க இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும்’’ என்ற எதிர்க்கேள்வியை எழுப்புகிறார். 

அடுத்த கட்டுரைக்கு