Published:Updated:

இசையரசு - வெளியேற்றப்படும் மக்களுக்கான கலகக்குரல்! வீழ்வேனென நினைத்தாயோ - 7

இசையரசு - வெளியேற்றப்படும் மக்களுக்கான கலகக்குரல்! வீழ்வேனென நினைத்தாயோ - 7
இசையரசு - வெளியேற்றப்படும் மக்களுக்கான கலகக்குரல்! வீழ்வேனென நினைத்தாயோ - 7

`சேரி பாஷை’ `சேரி பிஹேவியர்’னு பொதுப்புத்தியில இருக்கும் மக்கள் பேசுறத கேட்டிருப்பீங்க. ஸ்மார்ட் சிட்டிய ஸ்மார்ட்டா மாத்துறதுக்கு தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்குறவங்க இந்தச் சேரி பிஹேவியர் மக்கள்தான். ஆனா, எங்களுக்குக் கொஞ்சம் நிலம்கூட சொந்தமா இல்லங்குறதுதான், நான் தொடர்ந்து பேசுறதுக்கான காரணம்’

முந்தைய பாகங்கள்

``உங்களை புகைப்படம் எடுக்கவேண்டும். எந்த நேரத்தில் அங்கு வந்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும்?” என்று நான் கேட்டபோது, மகள் எழிலின் 12-வது கீமோதெரபி புற்றுநோய் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் இசையரசு. சென்னை மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த நகரத்திலும், இருப்பிடங்களிலிருந்து எளிய மக்கள் வெளியேற்றப்படும்போதும் அதற்கெதிராக எழும் முதல் கலகக்குரல் அவருடையதுதான். நகரங்களை வடிவமைக்கிறோம் என்ற காரணத்தைச் சொல்லி, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என கான்க்ரீட் காடுகளில் கொண்டு சேர்க்கப்படும் மக்களைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதுவதையும், கூட்டங்களில் பேசுவதையும், மனுக்கள் தாக்கல் செய்வதையும் வேலையாகவே வைத்திருக்கிறார் இசையரசு. அகற்றப்படும் மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்.

``அப்பா பொறந்தது மதுராந்தகம். அம்மா, கூவம் ஓரமிருக்கிற சேரியில வளர்ந்தவங்க. மாநகராட்சி துப்புரவுப் பணியாளரான அப்பா, அந்த வேலை போக மீதி நேரத்துல ரிக்‌ஷா ஓட்டிக்கிட்டு இருந்தாரு. என்கூட பொறந்தவங்க மூணு பேரு. எல்லோரும் சேரியிலதான் வளர்ந்திருக்கோம். `சேரி பாஷை’ `சேரி பிஹேவியர்’னு பொதுப்புத்தியில இருக்கும் மக்கள் பேசுறத கேட்டிருப்பீங்க. ஸ்மார்ட் சிட்டிய ஸ்மார்ட்டா மாத்துறதுக்கு தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்குறவங்க இந்த சேரி பிஹேவியர் மக்கள்தான். ஆனா, எங்களுக்கு கொஞ்சம் நிலம்கூட சொந்தமா இல்லங்குறதுதான், நான் தொடர்ந்து பேசுறதுக்கான காரணம்” என்கிறார் இசையரசு.

``பொதுவா பிரைவசிங்கிற வார்த்தையைச் சொன்னதும் உங்களுக்கு என்னவெல்லாம் தோணும்” என்று கேள்வியை பொதுமனசாட்சியின் முன் வைக்கிறார் இசையரசு. `பொதுவா, எல்லாருக்கும் தோணாத பல விஷயங்களை உங்களுக்குச் சொல்றேன்’ என்று அவரே தொடர்கிறார். ``குப்பையாகுது, நிலத்தை ஆக்கிரமிச்சிருங்காங்கன்னு பல குடும்பங்களை ஊருக்கு ஒதுக்குபுறமா, அட்டைப்பெட்டி சைசுல குட்டிகுட்டியான கான்க்ரீட் கட்டடங்கள்ல கொண்டுபோய்விடுறாங்க. எல்லாருமே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்கதானே. இவங்களுக்கு என்ன பிரைவசி இருக்கும்னு நினைக்கிறீங்க” என்று சொன்னவர், அடுத்து கேட்பதெல்லாம் நிச்சயம் எல்லோருக்குமான கேள்வி... எல்லோரின் மீதான குற்றச்சாட்டும் கூட.

 ``500 குடும்பங்கள் வாழ வேண்டிய இடத்துல 800 குடும்பங்கள் வாழுறாங்க. மிச்சம் மீதி விட்டுவெச்சிருக்கிற சேரிகள்ல போய் பாருங்க. ஆஸ்பெஸ்டாஸ் பலகைகளை அடுக்கிவெச்ச வீடுகளுக்குள்ளேயே திரையைப் போட்டு ரெண்டு குடும்பம் வாழும். அடுத்த வீட்டில் நடக்கும் சண்டை, அந்தரங்கம்னு எல்லாத்தையும் குழந்தைகள் பாக்கும். மன உளைச்சல், பிரைவசி, இதெல்லாம் பணம் இருக்குறவங்களுக்கு மட்டும்தான் இருக்கும்னு நினைக்கிறீங்களா?” என்கிறார்.

`எதுக்காக இடங்களையெல்லாம் ஆக்கிரமிச்சிட்டு, இப்போ வெளியே அனுப்பும்போது கேள்வி கேட்கிறீங்க’னு கேட்கிறீங்களா? என்றவர், ``ரேஷன் கார்டு, ஆதார் கார்டுன்னு எல்லாத்தையும் கொடுத்திட்டு, இப்போ இந்த இடம் எங்களுடையது இல்லன்னு அரசாங்கம் சொல்லுது. நகரங்களை ஸ்மார்ட்டா மாத்தினா, எங்க வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசமா இருக்கணும். நகரத்துக்கு நடுவிலிருந்து வெளியேற்றின மக்கள் முதல்ல வாங்குன அடி படிப்புலதான். அத்தனை கிலோ மீட்டர் தள்ளி வனவாசம் போன அந்த மக்களுடைய வாழ்வாதாரம், தினக்கூலிதான். தினக்கூலி வாங்குறவங்களும், அவங்க குழந்தைகளும் பஸ்ஸுக்கும், ட்ரெயினுக்கும் செலவு பண்ணியே மாளாதே” என்கிறார்.

ஆட்டோ ஓட்டுகிறார் இசையரசு. இந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான உந்துதலைக் கேட்டேன். ``ரோட்டிலும், குடிசையிலும் வாழ்ந்திருக்கேன். எப்போதும் உழைச்சிக்கிட்டே இருந்துருக்கோம். ஆனாலும், எங்களுக்கு துளி நிலமும் ஏன் சொந்தமில்லங்கிற சாதாரண கேள்விதான் உந்துதல்” என்று முடித்துக்கொள்கிறார் இசையரசு, மகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு தாமதமாகிறது என்று சொல்லிக்கொண்டே...

இசையரசின் கேள்விகள் எல்லோருக்குமானது!

அடுத்த கட்டுரைக்கு