Published:Updated:

காலத்தில் நிலைத்து நிற்கும் தனிக்குரல்... நூற்றாண்டு காணும் தமிழ் இசை அரசி டி.கே.பட்டம்மாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலத்தில் நிலைத்து நிற்கும் தனிக்குரல்... நூற்றாண்டு காணும் தமிழ் இசை அரசி டி.கே.பட்டம்மாள்!
காலத்தில் நிலைத்து நிற்கும் தனிக்குரல்... நூற்றாண்டு காணும் தமிழ் இசை அரசி டி.கே.பட்டம்மாள்!

இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரைக்கும் கூட சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களுக்கும் எல்லாக் கலைகளையும் பயிலும் வாய்ப்புகள் வாய்க்கவில்லை. ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பெண்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரைக்கும் கூட சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களுக்கும் எல்லாக் கலைகளையும் பயிலும் வாய்ப்புகள் வாய்க்கவில்லை. ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பெண்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக இசை, நடனம் போன்ற நுண்கலைகள் பொதுச்சமூகப் பெண்களிடமிருந்து விலக்கியே வைக்கப்பட்டது. ஆண்கள், இசையையும் நடனத்தையும் பயிலவும் நிகழ்த்தவும் முடிந்தபோதும் அவை பெண்களுக்கு மறுக்கப்பட்டன. பெரும்பாலும் இசையும், நடனமும் தேவதாசி குலப்பெண்கள் மட்டுமே பயிலும் நிகழ்த்து கலைவடிவங்களாக இருந்துவந்தன. குடும்பப் பெண்கள் பொதுவில் பாடக்கூடாது என்கிற கட்டுப்பெட்டித்தனம் மிகுந்திருந்த காலத்தில்தான் பழைமையின் அத்தனை தழைகளையும் அறுத்துக்கொண்டு தன் குரலால் புதிய வழிகளைச் சாத்தியப்படுத்திக்கொண்டார் டி.கே.பட்டம்மாள் என்னும் டி.கே.பி. 

கர்னாடக இசை மேதை டி.கே பட்டம்மாள், சிறுவயதில் தன் தாயான ராஜம்மாளிடம் இசை பயின்றவர். ராஜம்மாள் நல்ல இசைஞானம் உடையவர். ஆனால், குடும்ப நிர்பந்தம் காரணமாக அவர் பாடகியாக மாறமுடியவில்லை. அன்னை சொல்லித் தந்த பாடல்களைக் கேட்டு வளர்ந்த டி.கே.பி, தனது பத்தாவது வயதில் அகில இந்திய வானொலியில் பாடினார்.

அவரது குரல் பெரும்பாலானோரைக் கவர்ந்தது. இருக்காதா என்ன, மூன்று மாதக் குழந்தையாக டி.கே.பி இருந்தபோதே அவரது தந்தை அவரை ரமண மகரிஷியிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். ரமண மகரிஷியே தேன் எடுத்துக் குழந்தையின் நாவில் தடவியிருக்கிறார். காலமெல்லாம் அந்த நா இசைத்த தேனிசையின் ரகசியம் அதுவாகக்கூட இருக்கலாம். இசை உலகிற்கான அவரது வாசல் திறந்தது. காஞ்சிபுரத்தில் இருந்த இசை மேதை `நாயனா பிள்ளை'யிடம் இசை கற்றுக்கொண்டார்.

அது இசைத் தட்டுகள் பிரபலமாக இருந்த காலம். புகழ்பெற்ற நிறுவனமான ஹெச்.எம்.வி புதிய புதிய குரல்களைத் தேடிப்பிடித்துப் பதிவு செய்து விற்பனை செய்தது. அப்படி அவர்கள் டி.கே.பி- யின் குரலைப் பதிவு செய்து வெளியிட விரும்பி அவரது தந்தை தீட்சிதரை அணுகினர்.

தீட்சிதருக்கு இரண்டு சிக்கல்கள். அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது ஆயுளைக் குறைக்கும் என்று சொல்வதுபோல, இசையைப் பதிவு செய்வதும் குரல் வளத்தைக் கெடுக்கும் என்கிற மூட நம்பிக்கை மிகுந்திருந்தது. மேலும் குறிப்பிட்ட குலத்தார் மட்டுமே இசை பாடுவதும் இசைத் தட்டுகள் வெளியிடுவதுமாக இருக்கும் சூழலில் குடும்பப் பெண்கள் இசைத் தட்டில் பாடினால், அந்தப் பெண்ணுக்கு எப்படித் திருமணம் ஆகும் என்கிற பயம். `இசைத் தட்டுக்காகப் பாட வைக்கமுடியாது' என்று உறுதியாக இருந்தார் தீட்சிதர். ஆனால் டி.கே.பி-க்கான ஆதரவுக் குரல்கள் வரத்தொடங்கின. 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஶ்ரீசீனிவாசன், காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர். தீட்சிதரின் குடும்ப நண்பர். (காஞ்சிபுரத்தில் இவரை எதிர்த்துத்தான் அறிஞர் அண்ணா தனது முதல் தேர்தலில் வெற்றிபெற்றார்) சீனிவாசன், டி.கே.பியின் குரல்வளத்தைக் கண்டு வியந்து, நிச்சயம் அவரது குரல், இசைத்தட்டுகளில் பதிவாகத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மேலும், தனது உறவுக்காரப் பையனான ஈஸ்வரனை டி.கே.பி க்குத் திருமணம் செய்து தருவதாகச் சொல்லி தீட்சிதரின் சம்மதத்தையும் பெற்றார். நாவலாசிரியரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வை.மு.கோதைநாயகியம்மாளும் பட்டம்மாளைச் சந்தித்து இசைத் தட்டுகளில் பாடுமாறு உற்சாகமூட்டினார். அதன்பின், டி.கே.பி தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். சுதந்திரப் போராட்ட மேடைகளிலும், இசைத் தட்டுகளிலும் அவரது இசை ஒலிக்கத் தொடங்கியது.

டி.கே.பியின் சிறப்பு, `ராகம்- தானம் - பல்லவி' பாடுவது. அந்தக் காலத்தில் ஆண் பாடகர்கள் மட்டுமே `ராகம்- தானம் - பல்லவி' பாடும் வழக்கம் இருந்தது. ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு விஸ்தீரணமாகப் பாடி, பின் ஒரு சில கீர்த்தனைகளை மட்டுமே பாடும்முறை. இதற்கு ராகம் சார்ந்த ஆழ்ந்த ஞானமும் தாளக்கணக்கில் திறமையும் வேண்டும். பெண்களுக்கு அது கைவராது என்பது பொதுத் தீர்மானம். அதற்கேற்றார்போல பெண்கள் அதைப் பாடுவதும் இல்லை. அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பெண் பாடகரான பிருந்தா மேத்தாகூட `ராகம்- தானம் - பல்லவி' பாடுவதில்லை. ஆனால் டி.கே.பி அதில் தன் நிபுணத்துவத்தைப் பதிவுசெய்தார். அவரது `ராகம்- தானம் - பல்லவி' இசைத் தட்டுகளாக வெளிவந்து இசைரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் `துக்கடா'க்களாக கச்சேரிகளின் பின்பகுதியில் பாடப்பட்டுவந்த நிலையில் கச்சேரிகளின் முன்பகுதியிலேயே தமிழ்ப் பாடல்களைப் பாடும் மரபை இளம் வயதிலேயே டி.கே.பி பின்பற்றினார். பாபநாசம் சிவனிடம் நேரடியாக இசை கற்றுக்கொண்டதன் தாக்கமாகவே அதைக் கருதமுடியும். கச்சேரிகளில், பாரதியார் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், அருணாசலக் கவிராயர், நாமக்கல் கவிஞர் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் தமிழிசை ஓர் இயக்கமாக மறுமலர்ச்சி பெறும் காலகட்டத்துக்கு முன்பாகவே இதைக் கடைபிடித்துவந்தார். ஆனால், பிற்காலத்தில் தோன்றிய தமிழிசை இயக்கம் டி.கே.பியை ஒரு முறைகூட தமது நிகழ்ச்சிகளில் பாட அழைக்கவில்லை. இதுகுறித்து எழுத்தாளர் கல்கி குறிப்பிடும்போதுகூட, ”பட்டம்மாள் தமிழிசை இயக்கக் கச்சேரிகளில் பாடவைக்கப்படாதது அவருக்கு அவமானமல்ல. அதைச் செய்யாத நமக்குத்தான் அவமானம்” என்று வருத்தம் தெரிவித்தார்.

கல்கி எழுதிய தியாகபூமி கதை திரைப்படமானபோது அதில் டி.கே.பி , ’தேச சேவை செய்ய வாரீர்' என்ற பாடலைப் பாடினார். 1947 -ம் ஆண்டு வெளியான, `நாம் இருவர்' படத்தில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. `ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்ற பாடலும், `வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே' என்ற பாடலும் டி.கே.பியின் இசையில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து மக்களிடையே புகழ்பெற்றன.

தொடர்ந்து அவர் நிறைய பாடல்களைப்பாடும் வாய்ப்புகள் வந்தபோதும் அவை தேசபக்திப் பாடலாகவோ அல்லது பக்திப் பாடலாகவோ இருந்தால் அன்றிப் பாடுவதில்லை என்று முடிவு செய்தார். `வேதாள உலகம்' படத்தில் இவர் பாடிய `சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா' பாடல் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது.

தனது வாழ்க்கை முழுமையையும் இசைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர் டி.கே.பி. `கான சரஸ்வதி', `சங்கீத சாகர ரத்னா', `சங்கீத கலாநிதி', `பத்ம பூஷண்', `பத்ம விபூஷண்' ஆகிய பட்டங்கள் அவரைத் தேடி வந்து அலங்கரித்தன.

டி.கே.பி என்றால் நினைவுக்கு வருவது `எப்படிப் பாடினரோ' என்னும் சுத்தானந்த பாரதியின் பாடல். இன்றும் அந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒருகணம் அந்த காந்தக் குரலிலும் உச்சரிப்பு முறையிலும் தன்னிலை மறப்பதென்பது இயல்பு. காலத்தில் கலந்து நிற்கும் இசை அரசிக்கு இன்று நூறாவது பிறந்தநாள் விழா. ஏராளமான இசை ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் டி.கே.பியின் கணீர் குரலைக் கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு