Published:Updated:

காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்... சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்?

காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்... சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்?

1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ (Four Pest Campaign) என்ற முன்னெடுப்பைக் கையிலெடுத்தார். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க உத்தரவிட்டார். அதில் சிட்டுக்குருவியும் ஒன்று.

காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்... சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்?

1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ (Four Pest Campaign) என்ற முன்னெடுப்பைக் கையிலெடுத்தார். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க உத்தரவிட்டார். அதில் சிட்டுக்குருவியும் ஒன்று.

Published:Updated:
காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்... சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்?

“சிட்டுக்குருவி ஒன்று ஸ்நேகப் பார்வைகொண்டு, வட்டப் பாறையின் மேல் என்னை வா வா என்றது, கீச்சு கீச்... என்றது, கிட்ட வா என்றது’’ என்ற வைரமுத்து வரிகளை எப்படி மக்கள் நேசிக்கிறார்களோ அதேபோலத்தான் அந்தச் சின்னஞ்சிறு இனத்தைப் பார்த்தும் ரசிக்கிறார்கள். ஆம், இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். காக்கைக் குருவி எங்கள் சாதி என்றான் பாரதி. இன்று காக்கைகள் இருக்கின்றன, குருவிகள்..? இருக்கின்றன. ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையில்.

சிட்டுக்குருவிகள் நெல் வயல்களில் பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு நன்மை செய்யும். சிட்டுக்குருவி, பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய உடலமைப்புடன் காணப்படும் பறவை இனம். முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. தற்போது நகரங்களில் காணப்படுவது அரிதாகிவிட்டது. வளர்ந்து வரும் தொழில்மயமாக்கல் உலகில் பெரிய கட்டடங்கள், இடப்பற்றாக்குறை, மாசுபாடு என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வினம் அழிந்துவரும் நிலை ஏற்பட்டுவிட்டாலும் அதைக் காக்கப் பல தன்னார்வலர்கள் இன்றும் முயற்சி செய்துகொண்டேதானிருக்கிறார்கள். சமீப காலமாகக் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாகி வருகிறது.

சிட்டுக்குருவிகள், பொதுவாக மக்கள் வசிக்கும் இடங்களில்தான் வாழ விரும்புகின்றன. உதாரணமாக நமது வீட்டு மாடங்கள், கதவின் முன்புறம் எனச் சிறிய இடங்களில் கூடுகட்டி வாழ்ந்து வந்த இந்தச் சின்ன பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் நகரத்தை விட்டு விடைபெறத் தொடங்கிவிட்டன. நகரத்தில் சிட்டுக்குருவிகள் குறைந்துவருகின்றது என்றால், அதனருகிலேயே இருக்கும் கிராமப்புறங்களில் அதன் எண்ணிக்கை அதிகமாகியிருக்க வாய்ப்புகள் உண்டு. நகரங்களில் வாழ்வதற்குத் தகுந்த போதுமான சூழல் அமையாமல் போவதால் அவற்றுக்குத் தகுந்த வாழ்க்கைச்சூழல் அமையும் கிராமங்களைத் தேடிச்செல்கின்றன. அந்த மாற்றங்களைத் தாக்குப்பிடித்து இடம்பெயரும் திறன் அனைத்து சிட்டுக்குருவிகளுக்கும் வாய்ப்பதில்லை. அந்த இடப்பெயர்வில் சில பறவை இறந்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிட்டுக்குருவி தினம் உருவாகக் காரணம் என்ன?

1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ `Four Pest Campaign’ என்ற முன்னெடுப்பைக் கையிலெடுத்தார். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க உத்தரவிட்டார். அந்தப் பட்டியலில் சிட்டுக்குருவியும் இருந்தது. பார்த்த இடமெல்லாம் சிட்டுக்குருவிகளை சுட்டு வீழ்த்தினர். அவை என்ன செய்தன? விலை நிலங்களில் இருக்கும் தானியங்களைச் சாப்பிட்டதால்தான் இவ்வளவு பெரிய தண்டனையா! ஆம். ஆனால், சீனாவுக்கு அவை செய்த நன்மைகள் அப்போது தெரியவில்லை. அவற்றை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். சிட்டுக்குருவி இனத்தின் முக்கால் பங்கு அழிந்துபோனது. அவற்றின் கூடுகளை அழிப்பது, முட்டைகளை உடைப்பது என மனிதன் செய்யக் கூடாத காரியங்கள் எல்லாம் அந்தச் சின்னப் பறவைகளுக்குச் செய்தனர். இரு வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல், பூச்சித் தாக்குதல் என விவசாயம் பாதிக்கப்பட்டுப் பெரும் இழப்பை சந்தித்தது. ஏன் இவ்வளவு பெரிய அழிவு என்று ஆராய்ந்து பார்க்கையில்தான் உண்மை புரியவந்தது. சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை மட்டுமின்றிப் புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சியினங்களையும்தான் சாப்பிடுகின்றன என்பதை அப்போதுதான் சீன அரசு புரிந்துகொண்டது. சிட்டுக்குருவிகள் அழிந்துபோனதால் வெட்டுக்கிளிகள் அதிகரித்தன. அவை பயிர்களில் பெரும் சேதத்தை விளைவித்தன. விளைச்சல் பாதிக்க மக்களும் பசியால் வாடத்தொடங்கினர். பருவ மழையும் பெய்யாததால் சீனா பெரும் உயிர் இழப்பைச் சந்தித்தது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் இறந்தார்கள். 

யூ டிஹாங் என்ற அரசு அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்த ஓர் ஊருக்கு, பஞ்சம், பசி மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தைக் கணக்கிடச் சென்றிருந்தபோது பார்த்ததை இப்படிக் குறிப்பிடுகிறார்,

``அந்த ஊரில் நூற்றுக்கணக்கான பிரேதங்கள் புதைக்கப்படாமலே சாலைகளில் போடப்பட்டிருந்தன. அந்த மக்களிடம் ஏனென்று கேட்டபோது அவற்றை நாய்கள் சாப்பிட்டுக்கொள்ளும், அவையாவது எங்களைப்போல் பசியால் சாகாமல் எங்கள் உடல்களைச் சாப்பிட்டுப் பசியாறிக்கொள்ளட்டும். அப்போதுதான் அதை நாங்கள் சாப்பிட முடியும் என்றனர். ஆனால், அந்த ஊரிலிருந்து நாய்களை மக்கள் எப்போதோ சாப்பிட்டுவிட்டனர்.’’

சிட்டுக்குருவிக்குக் கூடுகளை அமைத்துக்கொடுக்கும் தன்னார்வலர்

இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தியது ஒரு பறவையின் அழிவு என்பதைப் பின்னர் தெளிவாகப் புரிந்துகொண்ட சீன அரசு கொல்லக்கூடிய பறவை, பூச்சியினங்கள் பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியின் பெயரை எடுத்தது. அதிலிருந்து சிட்டுக்குருவிகளைக் காப்பதில் சீனா முன்னோடியாக இருந்துவருகிறது. எந்த நாடு அழிக்க ஆணையிட்டுதோ அதே நாடு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை மீட்டெடுக்கப் பல்வேறு வகையில் முயன்றுவருகிறார்கள். சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் தேவை என்பதை இந்த சம்பவம்தான் உலகுக்கு உணர்த்தியது.

சிட்டுக்குருவி தினத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் நேச்சுர் ஃபார் எவர் சொஸைட்டி எனும் அமைப்பின் நிறுவனர் முகமது திலாவர். இவருடைய முயற்சியால் இன்றைக்கு டெல்லியின் மாநிலப் பறவையாக இருக்கிறது. சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகள் கைபேசி கோபுரங்களால் அழிந்து வருகின்றன என்று இவர் பரப்பிய பொய்த்தகவல் இன்றும் பெருவாரியான மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகப் புகழ்பெற்ற சாலிம் அலி உருவாகக் காரணமாக இருந்த சிட்டுகள் பாதுகாக்கப்பட வேண்டியது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அவற்றைப் பற்றிய அறிவியல்பூர்வ ஆதாரங்களற்ற பொய்ச்செய்திகள் பரவுவதைத் தடுப்பது. அதேசமயம் சிட்டுக்குருவி பாதுகாப்பைத் தொடக்கமாகக் கொண்டு இவற்றைவிட ஆபத்தான நிலையிலிருக்கும் பறவைகளையும் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பில் நடைமுறைச் சாத்தியமான முறைகளில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிட்டுக்குருவிகளுக்காகக் கூடுகள் செய்துவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த உள்நாட்டுப் பல்லுயிரி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர்கள் ராம் மற்றும் கிஷோர் அவர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், ``எங்களுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் அடித்தளத்தில் இருக்கும் பறவைகளைக் காப்பாற்றுவது மற்றும் அடிப்பட்ட பறவைகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதுதான். சிட்டுக்குருவிகள் அழிவதற்குப் பலபேர் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் கூரை வீடுகள், ஓட்டுவீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற அவற்றின் வாழ்வாதாரமும் மாறிவிடுகிறது. அதைச் சீரமைக்கவே சிட்டுக்குருவி தினத்துக்கு முன்னதாகவே நாங்கள் 200 கூடுகள் செய்து புதுவையில் கடற்கரைச் சாலை, மிஷன் தெரு மற்றும் அதையொட்டியுள்ள மூன்று தெருக்களைத் தேர்வு செய்து கூடுகளை வைத்துள்ளோம்.

மேலும், அந்தக் கூடுகளில் பறவைகளுக்குத் தேவையான கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்கள் வைத்து வடிவமைத்துச் செய்துள்ளோம். இந்தக் கூடுகள் பொதுவாகத் தேவையற்ற பொருள்கள் எனத் தூக்கிப் போடும் அட்டைகள், பாட்டில்கள், குச்சிகளால் செய்யப்படுகிறது. முதலில் காகித அட்டைகளால் செய்தோம். ஆனால், மழைக்காலங்களில் அது சீரழிந்துவிடுகிறது. அதனால் புது முயற்சியாக மரத்தால் செய்யப்பட்ட கூடுகளை வைத்துள்ளோம். நான்கு வாரத்துக்கு ஒரு முறை அதைப் பார்வையிட்டுக் கணக்கெடுப்பு செய்கிறோம். வருங்காலத்தில் புதுவை நகரத்தைச் சிட்டுக்குருவிகள் நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். எப்படியாவது அடுத்த வருடத்தில் 10,000 கூடுகளைச் செய்து புதுவை முழுவதும் வைத்து கின்னஸ் சாதனை செய்வதே எங்களின் அடுத்த இலக்கு. சிட்டுக்குருவியைப் போல் பச்சைக்கிளிக்கும் இந்த முயற்சி செய்யலாம் என்ற ஆய்வில் உள்ளோம்’’ என்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நம்முடைய வாழ்த்துகள்..!

சிட்டுக்குருவி கூடுகள் தொடர்பான தகவல்களுக்கு...
ராம், கிஷோர்: 9626806534, புதுவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism