Published:Updated:

பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

Published:Updated:
பறவைகளைக் காண தினமும் 30 கி.மீ பயணிக்கும் சிட்டுக்குருவி காதலன் அஜிஸ்! #WorldSparrowDay

``கடைசியா நீங்க சிட்டுக்குருவியை எங்கே பார்த்தீங்க?''

`` `2.0' திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில்!" என்பதுதான், நகரத்தில் வாழும் பெரும்பாலானோரின் பதில். 

செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பறவை இனங்கள் பாதிக்கப்படுவது குறித்து `2.0' அலசியது. `பக்‌ஷிராஜன்’ கதாபாத்திரத்தில் தோன்றும் அக்‌ஷய்குமார், `Save birds' என்ற பதாகைகளை ஏந்தியபடி, மக்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்று கூறினார். இந்தியாவின் காஸ்ட்லியான திரைப்படத்தில், செல்போன் பயன்பாடு, செல்போன் டவர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிப் பேசுவதன் அவசியம் என்ன? பதில் சொல்கிறது சிட்டுக்குருவி.

படம்: நந்தகுமார்

சிட்டுக்குருவி... மனிதன் வாழும் வீடுகளில் கூடு கட்டி வாழ்ந்த பறவை இனத்தை இப்போது கிராபிக்ஸாக மட்டுமே பார்க்க முடிவதற்கான காரணங்களில் ஒன்று, மனிதனின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சரி, திரைப்படத்தில் பேசப்பட்டதுபோல சுற்றுச்சூழலைக் காக்க என்னதான் வழி?

செல்போன்கள் இல்லாமல் வாழ முடியுமா? தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தாமல் ஒதுங்கிக்கொள்ள முடியுமா? இவை நூறு சதவிகிதம் சாத்தியமில்லை என்றாலும், மற்ற உயிரினங்களுக்கும் இந்த உலகில் இடம் உண்டு என்பதை மனிதர்கள் நிரூபிக்க முடியும். அப்படி வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் அஜீஸ்! சிட்டுக்குருவி காத(வ)லன்!

கடலுக்கும் மீனுக்கும் பிரபலமான சென்னை பட்டினப்பாக்கத்துக்குப் போனால், சிட்டுக்குருவியைப் பார்க்கலாம். ஆனால், கண்டிஷன்ஸ் அப்ளை! ``இந்தச் சிட்டுக்குருவிங்க எல்லாம் அஜீஸ் வீட்டுக்கு மட்டும்தாங்க வரும். அதுவும், நேரத்துல வந்து பார்த்துடணும். 6 மணிக்கு மேல ஜனம் வந்துடுச்சுன்னா, பறவைங்க இங்க இருக்காது” என்று நம்மை அலர்ட் செய்தனர் ஏரியா மக்கள்.

சிட்டுக்குருவிகளைப் பார்த்தாக வேண்டும் என்ற முடிவில், அடுத்த நாள் காலை 4.30 மணிக்குப் பட்டினப்பாக்கத்தில் ஆஜரானோம். அஜீஸ் வீட்டைத் தேடிச் சென்ற எங்களுக்கு, சிட்டுக்குருவிகளின் `கீச் கீச்' சத்தம் வழிகாட்டின.

படம்: நந்தகுமார்

பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜீஸ். பத்து ஆண்டுகளுக்கு முன், பொழுதுபோக்குக்காக வீட்டுவாசலில் பறவைகளுக்கு உணவு வைக்கத் தொடங்கியவர், நாளடைவில் சிட்டுக்குருவிகளின் காதலனாகிவிட்டார். அவரது அன்பு பறவைகளுக்குப் பிடித்துப்போக, சரியாக காலை 5 மணிக்கு நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் அஜீஸ் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கின. 20-க்கும் மேற்பட்ட பெட்டிகள், குளிப்பதற்கான தண்ணீர்ப் பாத்திரம், கூண்டு என வீட்டைச் சுற்றிலும் குருவிகள் குதூகலமாக இருப்பதற்கான செட்-அப் ஏற்படுத்தி, அதைப் பராமரித்துவருகிறார் அஜீஸ். உணவுக்காக வந்த குருவிகள், சில மாதத்திலேயே கூடு கட்ட ஆரம்பித்தன.

``அவங்க தினமும் காலையில வந்துடுவாங்க. சென்னா, அரிசி, பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களை சரியா காலையில 4 மணிக்கு எடுத்து வெச்சுடுவேன். வந்து வரிசையா உட்கார்ந்துப்பாங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். தினமும் வருவாங்க. ஒவ்வொரு நாளும் குருவிங்களோட எண்ணிக்கை அதிகமாச்சு. உணவு வெக்கிறதை நானும் வழக்கமாக்கிட்டேன்” என்றார் அஜீஸ். அவர்  யாரை `அவங்க... இவங்க...' என அழைக்கிறார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 

ஆட்டோ ஓட்டும் நேரம் போக காலை, மதியம் என இரு வேளைகளிலும் குருவிகளுடன் நேரத்தைச் செலவிடும் அவர், ``ஒரு தடவை பழக்கமாகிடுச்சுன்னா, தொடர்ந்து நம்மகிட்ட வருவாங்க. அவங்களுக்கு நம்பிக்கைதான் முக்கியம். இந்த வீடு, கூண்டோட அமைப்பு பாதுகாப்பானதா தோணுச்சுன்னா, கண்டிப்பா வருவாங்க” என்று சொல்லிக்கொண்டே, சென்னாவைத் தூவினார். ஒருசில நொடியில் படபடவென வந்த சிட்டுக்குருவிகள், சென்னாவை எடுத்துக்கொண்டு பறந்தன. காலை 4 மணி முதல் 6 மணிக்கும், மதியம் 2 முதல் 3 மணி வரையிலும், சிட்டுக்குருவிகள் அஜீஸ் வீட்டுக்கு விசிட் அடிக்கத் தவறுவதில்லை. மனிதர்கள் நடமாட்டம் அதிகமாகும் வரை, சிட்டுக்குருவிகள் வந்து வந்து செல்கின்றன.

அஜீஸ் குடியிருக்கும் ஹவுஸிங் போர்டு வீடு வலுவிழந்ததால், வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம். பட்டினப்பாக்கத்திலோ, சுற்றுவட்டாரத்திலோ வீடு கிடைக்காததால், குடும்பத்தினருடன் ஆவடிக்குக் குடிபெயர்ந்தார். 10 ஆண்டுகளாகப் பழகிய நண்பர்களை விட்டுச் செல்ல அஜீஸுக்கு மனமில்லாமல், குருவிகளைச் சந்திக்க தினமும் பட்டினப்பாக்கம் வருகிறார். ஆவடியில் இருந்து 30 கிலோமீட்டர் பயணம் செய்து பட்டினப்பாக்கம் வந்து சிட்டுக்குருவிகளைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். அதே அரிசி, பிஸ்கட், சென்னா... அதே அன்பு... அதே மகிழ்ச்சி...

``அவங்களுக்கு உணவு வெக்கிறதை மட்டும் என் கடமையா செய்யலை... அதையும் தாண்டி அவங்கள பார்க்கிறப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும். இந்தச் சின்ன பறவையோட எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருதாம். அவங்களால நமக்கு என்ன பாதிப்புக்கு இருக்கு? நம்மளால அவங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாம பார்த்துக்கிறது அவசியம்தானே!” என்ற கேள்வியில் மனிதம் மேலோங்கியிருந்தது. 

அஜீஸை சந்தித்து விட்டு திரும்புகையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன’ என்ற சிறுகதை நினைவுக்கு வந்தது. பிறந்ததில் இருந்து யாருடனும் பேச மறுக்கும் தன் மகள், அரிதினும் அரிதாக, பறவைகளின் ஒலி கேட்டு, ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதை, அப்பனின் குரலில் விவரிக்கும், மனதை உலுக்கும் கதை அது. அந்தக் கதையில் வரும் தகப்பனைப் போலவே, அஜீஸைப் போலவே இப்பெருநகரிலும் பறவைகள் தேடி சில மனிதர்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். நாம் பறவைகளைத் தேடி அலைய வேண்டாம். இது கோடை காலம். மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தானியம் நிரப்பி வைப்போம். பறவைகள் நம்மைத் தேடி வரும்.