Published:Updated:

`அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - `ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை

`அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - `ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை

"கார் அரிசி, கறுப்புப் புட்டரசி, மூங்கில் அரிசி, நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறினு கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டுதான் ஒடம்ப ஏத்தினேன். காலையில பெரும்பாலும் பழைய கஞ்சி, மீன் குழம்புதான். இந்த பீட்ஸா, பர்கர், புரோட்டின் டப்பால்லாம் எடுத்துக்கிட்டதே கிடையாது."

`அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - `ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை

"கார் அரிசி, கறுப்புப் புட்டரசி, மூங்கில் அரிசி, நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறினு கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டுதான் ஒடம்ப ஏத்தினேன். காலையில பெரும்பாலும் பழைய கஞ்சி, மீன் குழம்புதான். இந்த பீட்ஸா, பர்கர், புரோட்டின் டப்பால்லாம் எடுத்துக்கிட்டதே கிடையாது."

Published:Updated:
`அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - `ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை

`பிடிச்ச பொண்ண பார்த்தவுடனே, மனசுல பட்டாம்பூச்சி பறக்குமில்ல... அப்படித்தான் இருந்துச்சு. நான் சும்மாதான் இருந்தேன், கூட்டாளிங்கதான் ஏத்திவிட்டு அந்தப் பொண்ணுகிட்ட, காதலைச் சொல்ல வெச்சாங்க. ஆனா, அவங்க ஓ.கே சொல்லல. அப்ப நான் ரொம்ப ஒல்லியா சின்னப்பையன் மாதிரி இருப்பேன். அதனாலதான் அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டுப் போய்டுச்சுன்னு பசங்க கேலி பண்ணினாங்க. அந்த வெறியில ஏத்தின உடம்புதான் இது' தன் பிட்டான உடலுக்குப் பின்னால் இருக்கும் கதையை கெத்தாகச் சொன்னார் `ஸ்டன்ட்' தீனா. ஓர் ஏமாற்றமே அவரின் இன்றைய வெற்றிக்கு வழிவகுத்து இருக்கிறது.

நடிகர் சாய் தீனா... `ஸ்டன்ட் தீனா' என்றும் நண்பர்கள் அழைப்பார்கள். `விருமாண்டி' திரைப்படத்தில் முகம் காட்டத் தொடங்கி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னையில், மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். `ஆரண்ய காண்டம்', `வாலு', `தெறி', `திமிரு புடிச்சவன்' ஆகிய திரைப்படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளினார். சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல், தன் கெத்தான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர்.

`தளபதி -63’ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவரிடம், அவரின் பிட்னெஸ் ரகசியங்கள் குறித்து கேட்டோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பிட்னெஸ்ஸா... தாராளமாப் பேசலாம் பாஸ்’ எனப் பேசத் தொடங்கினார்.

``எங்க குடும்பத்துல, பெரியம்மா பசங்க , மாமா பசங்கன்னு நிறைய பேரு பாக்ஸரா இருந்தாங்க. அவங்களைப் பார்த்து வளர்ந்ததால எனக்கும் சின்ன வயசுலேயே பாக்ஸிங்ல இன்ட்ரஸ்ட். அது மட்டுமல்ல கபடி, கேரம் எல்லாம் எங்க ஏரியாவுல ரொம்ப ஃபேமஸ். பசங்க எல்லோரும், காலையில அஞ்சு மணிக்கே, கையில பூட் எடுத்துட்டு ரன்னிங் கிளம்பிடுவோம். நாங்க தூங்கிட்டு இருந்தாலும், எங்க அம்மா, அப்பா அடிச்சு உசுப்பி போகச் சொல்வாங்க. படிச்சாதான் வளர்ச்சினு பொதுவாச் சொல்வாங்க. ஆனா எங்க வீட்டுல `ஒடம்ப பலமா வச்சுக்கிறதுதான் வளர்ச்சி'னு சொல்லி வளர்த்தாங்க. தூங்கி எழுந்ததுமே எங்கம்மா நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய் ரெண்டையும் குடிக்கக் குடுப்பாங்க, தினமும் நாலஞ்சு முட்டை குடிப்பேன்.  

ரன்னிங், கபடி, பாக்ஸிங்னு லைப் ஒரு திசையில போய்க்கிட்டு இருந்துச்சு. அந்த டைம்லதான் ஒரு லவ் கிராஸ் ஆச்சு. அப்ப நான் 45 கிலோ எடையோட ரொம்ப ஒல்லியா இருப்பேன். அதனால என்னைப் பிடிக்கலைனு சொல்லிட்டு அந்தப் பொண்ணு போயிடுச்சு. அப்ப எனக்குள்ள ஒரு வெறி உண்டாகி, வெயிட்ட ஏத்தணும்னு முடிவு பண்ணினேன். நல்லா சாப்பிடுறது, ஜிம்முக்குப் போறதுனு கொஞ்ச நாள்லயே 110  கிலோ எடை ஏத்துனேன். அதுக்காக ஸ்பெஷலா எதுவும் எடுத்துக்கல, அம்மா கையால வீட்டுல சமைச்ச சாப்பாடுதான். 

கார் அரிசி, கறுப்புப் புட்டரசி, மூங்கில் அரிசி, நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறினு கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டுதான் ஒடம்ப ஏத்தினேன். காலையில பெரும்பாலும் பழைய கஞ்சி, மீன் குழம்புதான். இந்த பீட்ஸா, பர்கர், புரோட்டின் டப்பால்லாம் எடுத்துக்கிட்டதே கிடையாது.

உடம்பை ரொம்ப பிட்டா வச்சுருந்தேன். `பாடி பில்டிங் டிரைனிங்' எடுத்துக்கிட்டு, போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். நிறைய மெடல்கள் வாங்கினேன். அதுமட்டுமல்லாம, `பார்க்கிறதுக்கே ரொம்ப அழகா மாறிட்டே'ன்னு ஏரியால எல்லோரும் சொன்னாங்க. அப்போல்லாம், என்னை நினைச்சு எனக்கே ரொம்பப் பெருமையா இருக்கும்.

பாடி பில்டிங்கை வெச்சு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணினேன். ஒண்ணும் செட்டாகல. அப்படியே சினிமாவுக்கு ஜிம் பாயா வந்தவன்தான். சின்ன வயசுலயே டைவிங், பல்டி, சம்மர்ஷாட்னு ஸ்டன்ட் பத்தி கொஞ்சம் கத்து வெச்சுருந்ததால புதிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சது. படிப்படியா அடுத்த லெவலுக்குப் போனேன். எங்க ரவி மாமா ஸ்டன்ட் மாஸ்டரா இருந்தவர். அவர்கிட்ட, இருந்துதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். என்னோட குரு மட்டுமல்ல, என்னோட ஹீரோவும் அவர்தான்.

சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம் பழைய மாதிரி ரன்னிங், 'வொர்க் அவுட்'லாம் பண்ண முடியுறது இல்ல. `ஷீட்டிங் ஸ்பாட்'ல என்ன கிடைக்குதோ அதுதான் சாப்பாடு. சினிமாவுக்காகத்தான் பல வருஷம் காத்துட்டு இருந்தேன். வாய்ப்புக் கிடைக்கும்போது அது பின்னாடிதான் நாம ஓடணும். ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல வீட்டுல எனக்குப் புடிச்சதை சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவேன். பழைய கஞ்சியை ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவேன்.

இப்பல்லாம் யாரும் உடம்ப ஃபிட்டா வெச்சுக்கறதுல அக்கறை காட்டுறதே இல்ல. இன்னிக்கி காத்துல இருந்து தண்ணி வரைக்கும், பால்ல இருந்து பருப்பு வரைக்கும் எல்லாமே பாழ்பட்டுப் போய் இருக்கு.நோயும் ஈசியாத் தாக்கிடுது. அதைத் தவிர்க்கணும்னா, நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேடிப்பிடிச்சு சாப்பிடணும். டெய்லி வாக்கிங் போகணும். சீஷனுக்காக மட்டுமல்லாம தொடர்ச்சியா ஜிம்முக்குப் போய் `வொர்க் அவுட்' பண்ணணும். நம்ம உடம்புக்கு ஆரோக்கியமான அடித்தளத்தைக் கொடுக்கணும்.

ஜிம்முக்குப் போக முடியலையா...  வீட்டுல துணி துவைக்கிறது, வீடு பெருக்குறது, தோட்டம் சுத்தம் பண்றது மாதிரியான வேலைகளைக்கூட செய்யலாம். அதுவும் ஒருவகையான எக்சர்சைஸ்தான். அதேபோல, கண்டதையும் சாப்பிடாம, நல்ல இயற்கை உணவுகளையே சாப்பிடுங்க. அதையும், கண்ட எண்ணெய்யில சமைக்காம, செக்குல ஆட்டுன எண்ணெய்ல சமைச்சு சாப்பிடுங்க. ராகிக் கஞ்சி, சத்துமாவுக் கஞ்சி, பழைய கஞ்சி நிறைய சாப்பிடுங்க. நான் நாட்டு மாடாதான் இருக்கணும்னு ஆசைப்படுறேன். நீங்களும் அப்படி நினைச்சு உடம்பை ஃபிட்டா வெச்சுக்கிட்டீங்கன்னா நூறு இல்ல நூத்திப்பத்து வருஷம்கூட ஆரோக்கியமா வாழலாம்‘’ என்கிறார் சாய் தீனா.