Published:Updated:

``அரசு வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்கணா” - மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண் கதறல்

தேர்தல் வர்ற நேரத்துல நல்ல பேரு எடுக்கணும்ங்கிறதுக்காக இப்படி கவர்மென்ட் வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. உண்மைய சொல்லணும்னா எனக்கு இந்த வேலை பிரயோஜனமாவே இல்ல.

``அரசு வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்கணா” - மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண் கதறல்
``அரசு வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்கணா” - மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண் கதறல்

டந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியது தொடர்பான விவகாரம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. பரபரப்பாக அந்தச் செய்தி பேசப்பட்டுக்கொண்டிருந்த அதே சமயத்தில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக வந்த புகார்கள் மேற்கொண்டு அனைவரையும் திடுக்கிட வைத்தது. பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையோடு போராட்டக் களம் புகுந்த அந்தத் தாயின் துயர் கண்டு தமிழகமே கண்ணீர்விட்டு வெதும்பியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தமிழக அரசு அவருக்கு அரசு வேலை வழங்கியிருப்பதாக வந்திருந்த தகவல் குறித்து அறிந்துகொள்ள மாங்காட்டிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றோம். 

காலை 7 மணிக்கெல்லாம் பரபரப்பாக இருக்கிறார் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும்கூட நம்மிடம் நிதானமாகவே பேசுகிறார். 

``போன வெள்ளிக்கிழமையிலிருந்து வேலைக்குப் போறேண்ணே. தாம்பரத்துல இருக்கிற ஒரு ஆஸ்பத்திரியில்தான் வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க. இந்த அரசாங்கம், தான் பண்ணின தவற்றை எல்லாம் மறைக்கிறதுக்காகவும் என்னைச் சமாதானம் பண்றதுக்காகவும்தான் இந்த வேலையைக் கொடுத்திருக்காங்கன்னு எனக்கு வெளிப்படையாவே தெரியுது. நானும் என் வீட்டுக்காரரும் கஷ்டப்படும்போதுகூட காய்கறி வித்து சந்தோஷமா குடும்பத்தை நடத்திக்கிட்டு இருந்தோம். அதுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு இப்போ ஊர் வாய அடைக்கிறதுக்காக எனக்கு அரசாங்க உத்யோகம் கொடுத்திருக்கிறதா சொல்லுறாங்க. ஆனா, உண்மையிலேயே எனக்குக் கொடுத்திருக்கிற வேலை அரசாங்க வேலை கிடையாதாம். எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்துல சமூக நல ஒருங்கிணைப்பாளர்னு சொல்லியிருந்தாங்க. சம்பளம் 7,200 ரூபா தர்றாங்க. ஆனா, இது அரசாங்க வேலை கிடையாது. கான்ட்ராக்ட் மாதிரிதான் வேலை பார்க்கணும். ஒவ்வொரு வருஷமும் கான்ட்ராக்ட்டை புதுப்பிச்சிக்கிட்டே இருக்கணும்னு சொல்லுறாங்க. 

நான் என் குழந்தையைப் பாத்துக்கிறதுக்காக மூவாயிரம் கொடுத்து ஒரு ஆயாவை வேலைக்கு வெச்சிருக்கிறேன். அதுபோக தினமும் வேலைக்குப் போய் வர பஸ்சுக்குச் செலவாகுது. சாப்பாடு நானே பாத்துக்கணும். காலையில 8 மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில இருக்கணும். மாங்காடுல இருந்து 7 மணிக்கு பஸ் ஏறினாதான் சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்குள்ள போக முடியும். தேர்தல் வர்ற நேரத்துல நல்ல பேரு எடுக்கணும்ங்கிறதுக்காக இப்படி கவர்மென்ட் வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. உண்மையச் சொல்லணும்னா எனக்கு இந்த வேலை பிரயோஜனமாவே இல்ல. நான் இந்த அரசாங்கத்துக்கிட்ட எனக்கான நியாயத்தைக் கேட்குறேன். ஆனா, அவங்க என்னைய இப்படித் திசை திருப்பி விட்டுட்டாங்க. எனக்கு கே.எம்.சி ஆஸ்பத்திரியில பண்ணின கொடுமைக்கு நியாயம் கிடைக்கவே இல்ல. அதுமட்டுமல்லாம, எனக்கு வேலை கிடைச்சதும் வக்கீல்கூட கேஸை நிறுத்திடலாமான்னு கேட்குறாரு. ஆஸ்பத்திரியில என்னடான்னா அங்க வர்ற பாசிட்டிவ் பெண்கள் எல்லாரும் என்னைப் புதுசா பாத்துட்டு, `நீங்க கவலைப்படாதீங்க. நாம எல்லாரும் ஒண்ணுதான்' னு சொல்லுறாங்க. ஆனா, நானும் அவங்களும் எப்படி ஒண்ணாவோம். அவங்களுக்கு கணவர் மூலமா ஹெச்.ஐ.வி பரவியிருக்கு. எனக்கு அப்படி இல்லையே. அதை எப்படி அவங்ககிட்ட சொல்லிப் புரிய வைப்பேன். இப்போ என் குழந்தைக்கும் ஒன்றரை வயசுலதான் எய்ட்ஸ் பரவியிருக்கான்னு கண்டுபுடிக்க முடியுமான்னு சொல்லிட்டாங்க. அவனோட ஒன்றரை வயசு வரைக்கும் நான் நெருப்புலதானே நிக்கணும். கஷ்டப்பட்டாலும் குருவிக்கூடு மாதிரி வாழ்ந்தோம். இன்னிக்கு எங்க வாழ்க்கையவே இந்த அதிகாரிங்க சிதைச்சுட்டாங்களே” என்றவர் இறுதியாக,

``எனக்கும் என் பிள்ளைக்கும் நீதி கேட்டு நான் எந்த சபை ஏறி இறங்குறதுன்னு தெரியாம தவிக்கிறேன்ணா. இனிக் காலத்துக்கும் இந்த நோயைச் சுமந்துக்கிட்டு எப்படி வாழுறது” என்று கண்ணீர் வடிக்க, குழந்தை அழுவதைக் கேட்டதும், பதறியபடியே வீட்டிற்குள் ஓடுகிறார்.  

இதுகுறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 

“மாங்காட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டதால் வேலை வழங்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவர் ஏழ்மை நிலையில் இருப்பதாலேயே இந்தப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சமுதாய நல ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் இருப்பவர்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர்களாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மாதம் 7 ஆயிரம் சம்பளம் ஊக்கமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் வேலை பார்ப்பவர்களின் நல்லெண்ண அடிப்படையில் அவர்களின் வேலையானது நீட்டிக்கப்படும். மாங்காடு பெண் சொல்வதுபோல இது அரசுப்பணி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒப்பந்த அடிப்படையிலேயே அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்றார்கள்.