Published:Updated:

சூதாட்ட சர்ச்சை... கம் பேக்... தோனி... விசில் போடு... Roar of the Lion ஒரு பார்வை!

கார்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சூதாட்ட சர்ச்சை... கம் பேக்... தோனி... விசில் போடு... Roar of the Lion ஒரு பார்வை!
சூதாட்ட சர்ச்சை... கம் பேக்... தோனி... விசில் போடு... Roar of the Lion ஒரு பார்வை!

ஐபிஎல் என்பது சென்னை சூப்பர் கிங்ஸிடம் மோத, மற்ற அணிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் என்பதுதான் கடந்த கால வரலாறு, நிகழ்கால யதார்த்தம், எதிர்கால எதிர்பார்ப்பு. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸின் டாக்குடிராமாவுடன் களமிறங்கி இருக்கிறது ஹாட்ஸ்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இது ஐபிஎல் சீஸன்... இந்த முறை விளையாட்டு, சேப்பாக்கம் ஸ்டேடியம், ஃபேன்டசி லீக், ட்ரீம் 11 எல்லாவற்றையும் கடந்து ஐபிஎல் `டாக்குடிராமா’ சீஸனும் சேர்ந்து களைகட்டியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் `Cricket Fever: Mumbai Indians’ என்னும் பெயரில் நெட்ஃபிளிக்ஸில் செட்டிலாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் `Roar of The Lion’ என ஹாட்ஸ்டாரில் தஞ்சம் புகுந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் சீஸன் ஆரம்பமாகும்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தோனியும் ரெய்னாவும் ஏற்கெனவே வீடியோக்களாக வலம்வர ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் இருக்கும் மற்ற அணிகளைவிடவும் அதிக ரசிகர்கள்; அதுவும் ஒவ்வொரு சீஸனிலும் அதிகமாகிக்கொண்டே இருக்கும் ரசிகக்கூட்டம். எமோஷனல் இடியட்டுகள், சூதாட்டம், தோனி செய்வது PR Stunt என ஆயிரம் எதிர்கோஷ்டிக் கூச்சல்கள் இருந்தாலும், `நம்ம ஊரு சென்னைக்கு, பெரிய விசில் அடிங்க' என்ற குரல் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சத்தத்துடன் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. `Roar Of The Lion’ என்னும் டாக்குடிராமாவில் சென்னை சூப்பர் கிங்க்ஸின் சூதாட்ட சர்ச்சை, கம் பேக், தோனி, சென்னை சீனியர் கிங்ஸ், காவிரிப் பிரச்னை, விசில் போடு எக்ஸ்பிரஸ் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். 

இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, இந்தியா - ஆஸ்திரேலியா போன்ற போட்டிகளுக்குச் சற்றும் குறையாத ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ். அதிலும் சென்னைக்கு எதிராக விளையாடும் எல்லா அணிகளுமே ஒன்றிணைந்துவிடுவார்கள். அதையெல்லாம் கடந்துதான் சென்னை ஒவ்வொரு முறையும் சாதித்துவருகிறது. 2018-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பிராக்டிஸ் போட்டியிலேயே அடுத்து வர இருக்கும் கூட்டத்துக்கான ஒத்திகை நடந்தது.

முதலில் ஒரு ஸ்டாண்டை மட்டும் திறந்துவிட்ட ஆர்கனைஸர்ஸ், கூட்டம் அதிகமாக அதிகமாக அடுத்தடுத்த ஸ்டாண்டுகளைத் திறக்கிறார்கள். சுமார் 15,000 ரசிகர்கள் ஒன்றுகூடி அந்த பிராக்டிஸ் போட்டியைக் கண்டுகளித்தார்கள். ஒரு பயிற்சிப் போட்டிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ``CSK is not a team; Its an emotion'' என்பார்கள். அதுவும் 2018-ம் ஆண்டுக்கான முதல் மேட்ச் சென்னைக்கு மும்பையில் நடக்கிறது. இதைவிடவும் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், அந்தப் போட்டியிலும் சென்னை ரசிகர்கள்தாம் அதிகம்.

சூதாட்டப் புகாரில் இரண்டு ஆண்டுக்காலம் தடை வாங்கியதை மேலோட்டமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகான எமோஷனல் தருணங்களை, சரிவரப் பதிவுசெய்திருக்கிறார்கள். காவிரிப் பிரச்னையின்போது, `சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது’ என சர்ச்சைகள் வெடிக்கின்றன. ஒட்டுமொத்த மஞ்சள் கூட்டமும், `விசில் போடு' ரயிலில் புனேவுக்குப் பயணிக்க ஆரம்பிக்கிறது. 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் போட்டி, சென்னையில் நடைபெறும் போட்டி, இறுதிப்போட்டி ஆகியவற்றை பற்றிய நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. 

தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஆனால், தமிழ் டப்பிங் மிகவும் திராபையாக இருக்கிறது. ஹஸ்ஸி பேசி முடித்த அதே விஷயத்தை மீண்டும் சஹர் பேசுகிறார். அந்தச் சிறுமிகள் பேசும் வெர்ஷன், சென்னையின் சூப்பர் ஃபேன் சரவணன் ஹரி பேசும் வெர்ஷன் தவிர பலவற்றில் எந்தவொரு லிப் சிங்க்கும் இல்லை. அதற்கும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேக்கிரவுண்டில் ஓடும்போது, அப்படியே தமிழும் பிளே ஆகிறது. ஒருகட்டத்துக்குமேல் இது எரிச்சலூட்டுகிறது. இதில் மீண்டும் மீண்டும் வரும் ஒரே `பூட்டேஜ்’ பரிதாபங்கள் வேறு!

சென்னை அணி எப்படி ஆரம்பிக்கப்பட்டது. பிற அணிகளுக்கு ஸ்டார் பிளேயர்கள் இருந்தாலும், சென்னைக்கு அப்படி யாருமே இல்லை. எங்கிருந்தோ தோனி வந்தார். ஆனால், அதன் பிறகு நடந்த அத்தனையும் யாருமே எதிர்பாராத வரலாறு. ஆனால், இதெல்லாம் வசனமாகக்கூட எங்கும் இல்லை. `KGF' பட தமிழ் டப்பிங் பாணியிலாவது நான்கு வசனங்களை `சிங்கத்தின் கர்ஜனை' மாடுலேஷனில் சேர்த்திருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சென்னை அணியின் போட்டிகளைப்போலவே இதிலும் தோனிதான் ஆபத்பாந்தவனாய் ஆங்காங்கே வந்து காப்பாற்றுகிறார். அவர் வரும் காட்சிகள் எமோஷனலாக இருக்கின்றன. `The Biggest Crime that I can commit is not a murder... Its Actually Match Fixing’ என்ற வரியை தோனி சொல்லும்போது அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கிறது. சென்னை அணிக்கான அந்த இரண்டு ஆண்டுகள் தடையை அவர்  எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. தோனியே தயாரித்திருக்கும் இந்த டாக்குடிராமாவை அமிர் ரிஸ்வி இயக்கியிருக்கிறார். தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, வாட்சன், தீபக் சஹர், முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வீடியோவில் வருகிறார்கள்.
 

கிட்டத்தட்ட 150 நிமிடம் ஓடும் டாக்குடிராமா, அதிலிருக்கும் நெகட்டிவ் விஷயங்களைக் கடந்தும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் வரக் காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் என்னும் பிராண்டும் தோனியும்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு