Published:Updated:

ஜமீன்கோட்டை, ஜுமான்ஜி, ஜுராசிக் பார்க்... ஜஜுஜூ..! 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

ஜமீன்கோட்டை, ஜுமான்ஜி, ஜுராசிக் பார்க்... ஜஜுஜூ..! 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

90`ஸ் கிட்ஸ்களின் உலகத்தில் திரைப்படங்களின் பங்கு மிகப்பெரியது. இன்றும், நினைத்துப் பார்க்க முடியாத டெம்ப்ளேட்களில் விதவிதமான மீம்களை கேப்ஷனே இல்லாமல் அவர்களால் போட முடிவதற்கும், அதைப் புரிந்துகொள்ள முடிவதற்கும் இதுதான் காரணம்.

ஜமீன்கோட்டை, ஜுமான்ஜி, ஜுராசிக் பார்க்... ஜஜுஜூ..! 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

90`ஸ் கிட்ஸ்களின் உலகத்தில் திரைப்படங்களின் பங்கு மிகப்பெரியது. இன்றும், நினைத்துப் பார்க்க முடியாத டெம்ப்ளேட்களில் விதவிதமான மீம்களை கேப்ஷனே இல்லாமல் அவர்களால் போட முடிவதற்கும், அதைப் புரிந்துகொள்ள முடிவதற்கும் இதுதான் காரணம்.

Published:Updated:
ஜமீன்கோட்டை, ஜுமான்ஜி, ஜுராசிக் பார்க்... ஜஜுஜூ..! 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

கேபிள் டிவிதான் `கே’ டி.வி-யாக மாறியது என யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கே டிவிதான் 90`ஸ் கிட்ஸின் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் எல்லாமே. மார்னிங் ஷோ, ஸ்பெஷல் ஷோவில் தொடங்கி சூப்பர்ஹிட் இரவுக்காட்சி, மிட்நைட் ஷோ வரை `பே' என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்போம். அதற்குள் ஈக்கள் நம் வாயை சுற்றுலாத்தலமாக மாற்றியிருக்கும். ச்சை..!

கே டிவி-க்கு முன்பும் கே டிவி இருந்தபோதும் டெக், விசிடி, டிவிடி வகையறாக்கள் நமக்குள் பற்றி எரிந்துகொண்டிருந்த உலக சினிமா தீயை வளர்க்க, டன் டன்னாய் கரியை அள்ளிப்போட்டிருக்கின்றன. அப்போது வீட்டில் வி.சி.ஆர் (எ) டெக் வாடகைக்கு எடுத்து வருவார்கள். கேசட்டைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், வாங்கி வந்தது `ஈவில் டெட்'டோ அல்லது `இண்டியானா ஜோன்ஸா'கவோதான் இருக்கும். `ஈவில் டெட்' படுபயங்கரமான பேய்ப்படம் என்பதைத்தாண்டி, அதில் சிலபல கில்பான்சி காட்சிகளும் இருக்கும் என்பதால், சிறுவர்கள் பார்க்க அனுமதியில்லை. ஆக, `இண்டியானா ஜோன்ஸ்' மட்டும்தான். `இண்டியானா ஜோன்ஸ்' கேசட்டை இருபதாவது முறையாக வாடகைக்கு எடுத்து, அறுபதாவது முறை பார்த்து முடித்திருந்த சமயம், ஊருக்குள் விசிடி-யின் வெளிச்சம் மின்ன ஆரம்பித்தது. 

``கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேரம்போர்டைக் கண்டுபிடிச்சது, கே.எஸ்.ரவிகுமார்னு சொல்லுவியே!"

- தோழர் பார்த்தா

முதல்முறையாக எங்கள் வீட்டுக்கு விசிடி பிளேயர் வந்த தருணம், இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த பிளேயரில் ஒரே நேரத்தில் மூன்று விசிடிக்களையும் வைத்துவிடலாம். ஒன்று ஓடி முடிந்த பிறகு, அதுவே அடுத்த விசிடி-யை ஓட்ட ஆரம்பித்துவிடும். திரைக்கு வந்து சில நாள்களே ஆன புத்தம் புதிய திரைப்படமான `சிட்டிசன்'தான் நான் பார்த்த முதல் திரைப்படம். அப்போதும் என் சித்தப்பா, `சிக்கி முக்கி கல்லு...' பாடல் வந்தபோது என் கண்கள் இரண்டையும் மூடிவிட்டார். பல ஆண்டுகள் கழித்து, சென்ற ஆண்டுதான் அந்தப் பாடலை யூ டியூபில் பார்த்தேன். பாடலைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, என் சித்தப்பாவுக்கு நன்றி சொன்னேன். 

``அவிய்ங்க அவிய்ங்க எடுக்குற முடிவு நமக்குச் சாதகமாத்தான்யா இருக்கு!"

- தோழர் வடிவேலு

அன்று விசிடி பிளேயர் மட்டும் வீட்டுக்கு வரவில்லை. அதன் மேல் அழகுக்கு வைக்க, இரண்டு பிளாஸ்டிக் பூந்தொட்டிகளும் வந்திருந்தன. `சிட்டிசன்' பார்த்து முடித்துவிட்டு, பூந்தொட்டிகளை ரசித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் எழுந்து கண்களைக் கசக்கிக்கொண்டே டிவி டேபிளைப் பார்த்தால் விசிடி-யும் இல்லை, பூந்தொட்டியும் இல்லை. குப்பென வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சித்தப்பாவிடம் போய், ``எங்க விசிடி பிளேயர்?'' எனக் கேட்டதற்கு, ``என் ஃப்ரெண்ட் எடுத்துட்டுப் போயிட்டான்" என்றார்.

``எப்போ திருப்பித் தருவார்?" எனக் கேட்டேன்.

``அவனுடையதை அவன் எதுக்குடா திருப்பித் தரணும்!" என வெடிகுண்டைக் கிள்ளி எறிந்தார். எனக்கு விசிடி நம்முடையதில்லை என்கிற வருத்தத்தைவிட, `பூந்தொட்டியையுமா வாடகைக்கு வாங்கி வந்தார்!' நம் சித்தப்பா என்ற யோசனைதான் தொண்டையைக் கவ்வியது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அப்பா சொந்தமாகவே விசிடி பிளேயர் வாங்கிவிட்டார். இந்த பிளேயரில் ஒரு நேரத்தில் ஒரு கேசட்தான் போட முடியும். ஓடி முடிந்ததும், நாம்தான் அடுத்த கேசட்டை மாற்றவேண்டும். விசிடி வாங்கி வந்த முதல் நாள்... இந்த முறை பூந்தொட்டி எல்லாம் கிடையாது. விசிடி வாங்கி வந்த முதல் நாளே, `சாமி', `புதிய கீதை', `புன்னகைப் பூவே' மற்றும் `பந்தா பரமசிவம்' என நான்கு படங்களை, குடும்பமாக உட்கார்ந்து பார்த்து முடித்தோம். அதன் பிறகு அரங்கேறியது எல்லாம் கொடூரத்தின் உச்சம். மதுரைக்குச் சென்று வரும்போதெல்லாம், விசிடி கேசட்களோடு வருவார் அப்பா. ஏதாவது புதுப்படமாக இருக்கும் என ஆசையாய் பையைத் திறந்துப் பார்த்தால் `பலே பாண்டியா', `ஆயிரத்தில் ஒருவன்', `அடிமைப்பெண்' என இருக்கும். அழுகை முட்டிக்கொண்டு வரும், போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துவிடுவேன். 

``உங்கள் இனிய நண்பன் ஸ்பைடர்மேன்."

இப்படியே ஐந்தாறு மாதம் வெறும் பழைய படங்களின் கேசட்களாய் வாங்கிக் குவித்தார். இடையிடையே `பாபி', `ஷோலே' எனச் சில 150 கர்னாடக இசை துணுக்குகள் நிறைந்த ஒரு கேசட்டை வாங்கிவந்தார். அன்றிலிருந்து அந்த விசிடி, என்னை அழிக்கவந்த ஏலியன் டெக்னாலஜி ஆயுதம்போல கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. எல்லாத் துன்பமும் ஏதோ ஒரு நாள் கடந்துபோகும் அல்லவா, அந்த ஒருநாளும் வந்து சேர்ந்தது. ஊரிலிருந்து வந்திருந்த மாமா, ஒரு ஸ்கூல் பேக் நிறைய அவர் பார்த்து முடித்திருந்த புதுப்பட சிடிக்களைத் தந்துவிட்டுப் போனார். சுபம்! ஒருமுறை `ஸ்பைடர்மேன்' பார்த்துக்கொண்டிருக்கும்போது விசிடி-யில் இருந்து புகை வந்தது. அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு டிவிடி-க்கு மாறினோம்.

``என்ன கொடுமை சரவணன் இது!"

- தோழர் செந்தில்நாதன்

`திருட்டு `விசிடி' வாங்கிப்பார்த்தால்தானே தவறு. நாம புதுப்பட `டிவிடி'தானே வாங்குறோம். விசிடி வேற, டிவிடி வேற. அப்போ எப்படித் தவறாகும்?' இதில் மிக நம்பிக்கையாய் இருப்பேன். வீட்டுக்கு டிவிடி வந்தபோது, அப்பாவின் பழைய படங்கள் மீதான வெறி, கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்திருந்தது. காசு சேர்த்துவைத்து, நானே டிவிடி வாங்க ஆரம்பித்தேன். `முனி' மற்றும் `அற்புதத்தீவு' ஒரே கேசட்டில், `போக்கிரி' மற்றும் `ஆழ்வார்' ஒரே கேசட்டில், `திருவிளையாடல் ஆரம்பம்' மற்றும் `வெயில்' ஒரே கேசட்டில் இருக்கும். இதில் `முனி' `அற்புதத்தீவு' கேசட்டை, தேயத்தேயப் பார்த்திருக்கிறேன். பிறகு, `சென்னை 28' கேசட். அந்த கேசட்டைத் திருப்பிப் பார்த்தால் சிலந்திவலை போன்று அத்தனை கோடுகள் / ஸ்க்ராட்சஸ் இருக்கும்.

ஒருமுறை, வீட்டில் யாரும் இல்லை. வாழ்க்கைக்குத் தேவையான பல தகவல்கள் நிரம்பிய ஒரு படத்தை பதற்றத்தோடு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென கரன்ட் கட். பதற்றம் இன்னும் அதிகமாகி, விரல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. என்ன செய்வதென்றே புரியவில்லை. ஸ்க்ரூ டிரைவரை எடுத்து டிவிடி பிளேயரைக் கழட்டி, அந்த விலைமதிப்பற்ற கேசட்டைக் காப்பாற்றி, குப்பையில் எறிந்துவிட்டேன். இந்த சர்ஜரியில் டிவிடி-யின் லென்ஸ் மண்டலம் பாதிக்கப்பட்டு, என் டிவிடி பிளேயர் `மர்கயா' ஆகிப்போனது! அடுத்து வாங்கிய டிவிடி-யின் டிரேயில் டிவிடி-க்குப் பதிலாக தீபாவளிக்குச் சுட்ட முறுக்கு, அதிரசத்தை வைத்து அனுப்பியிருக்கிறான் என் மாமா பையன். ஆக, அதுவும் க்ளோஸ்!

``எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா!" 

- தோழர் சின்னக்கவுண்டர்

90'ஸ் கிட்ஸ்களின் உலகத்தில் திரைப்படங்களின் பங்கு மிகப்பெரியது. இன்றும், நினைத்துப் பார்க்க முடியாத டெம்ப்ளேட்களில் விதவிதமான மீம்களை கேப்ஷனே இல்லாமல் அவர்களால் போட முடிவதற்கும், அதைப் புரிந்துகொள்ள முடிவதற்கும் இதுதான் காரணம். `அம்மன்', `அன்னை காளிகாம்பாள்', `ஜமீன் கோட்டை', `கொல்லிமலை சிங்கம்', `ஜெய்ஹிந்த்', `ரட்சகன்', `லிட்டில் ஜான்', `லக்கிமேன்', `மை டியர் குட்டிச்சாத்தான்', `கறுப்பு ரோஜா', `மாயா பஜார்' எல்லாம் 90`ஸ் கிட்ஸின் ஆல்டைம் ஃபேவரைட் படங்கள்.

`ஜமீன் கோட்டை' படத்தில் வரும் கிழவி, கனவில் எல்லாம் வந்து பயமுறுத்தியிருக்கிறது. என் அப்பத்தாவே ஒரு ஜமீன்கோட்டை கிழவியோ என நினைத்தெல்லாம் பயந்திருக்கிறேன். `செப்புஹ செப்புஹ சைத்தான் நமஹ' மந்திரத்தை நடுராத்திரியில் சொல்லி மற்றவர்களையும் பயமுறுத்தியிருக்கிறேன். இன்றும் யாராவது சொப்பு சாமான்கள் வைத்து விளையாடுவதைப் பார்க்கும்போது, `லிட்டில் ஜான்' ஞாபகம் வருகிறது. `பூவுக்குப் பிறந்த நாளு... ஒண்ணா கன்னி மறந்த நாளு...', `லிட்டில் ஜான்' என்றதும் இந்தப் பாடலை உதடுகள் முணுமுணுக்க ஆரம்பித்துவிடுகின்றன. `ஜெய்ஹிந்த்' படம் பார்க்கும்போதெல்லாம் நாட்டுப்பற்று பீறிட்டுக் கிளம்பும். ரோமன் ரெய்ன்ஸைப் பார்க்கும்போது `ரட்சகன்' படத்தில் வரும் அடியாள் ஒருவன் நினைவுக்கு வருகிறான். நன்றி கோலிவுட் சினிமா!

கோலிவுட் இப்படியென்றால், `ஜுமான்ஜி' `ஜுராஸிக் பார்க்', `அனகோண்டா', `ஈ.டி', `டைட்டானிக்', `பிரிடேட்டர்', `டெர்மினேட்டர்', `மம்மி' என ஹாலிவுட் வேற லெவலில் மிரட்டும். இன்னொரு புறம், `அரவுண்ட் தி வேர்ல்டு இன் 80 டேஸ்', `ஷாங்காய் நைட்ஸ்', `மிரட்டல் அடி1, 2', `ருத்ரநாகம்', `பாயும் புலி பதுங்கும் நாகம்' என நூடுல்ஸ்வாலாக்களும் அலறவிடுவார்கள். விஜய் டிவி-யில் இரவு ஒளிபரப்பப்படும் டப்பிங் படங்களை இப்போது நினைத்துப்பார்த்தாலும் சிலிர்க்கிறது. ஒரு நிமிடம், நாமளே இவ்ளோ பீல் பண்ணும்போது, அப்பா `ஆயிரத்தில் ஒருவன்', `அடிமைப்பெண்' படத்துக்காக பீல் பண்ணது தப்பில்லைதானே... ஸாரி டாடி!

அந்தக் காலம், அது அது அது வசந்த் & கோ காலமா எனத் தெரியாது. ஆனால், வசந்தகாலம் என்று தெரியும். சண்டா மாத்ரே!