Published:Updated:

``ராத்திரி 11.30 மணி... வீடு போய்ச் சேர்றதுக்குள்ள...’’ - லட்சுமி ராமகிருஷ்ணனின் அனுபவம் #WhatSpiritualityMeansToMe

``அப்போ செல்போனெல்லாம் கிடையாது... லேண்ட்லைன் மட்டும்தான். அந்த நேரத்தில் எங்க போய் போன் பண்றது? இன்னிக்கு நினைச்சாலும் பயமாக இருக்கிறது. ஆனா, நெருக்கடியான அந்த நேரத்தைக் கடக்க எனக்கு உதவினது ஆஞ்சநேயர்மேல் நான் வச்சிருந்த நம்பிக்கைதான்."

``ராத்திரி 11.30 மணி...  வீடு போய்ச் சேர்றதுக்குள்ள...’’ - லட்சுமி ராமகிருஷ்ணனின் அனுபவம்  #WhatSpiritualityMeansToMe
``ராத்திரி 11.30 மணி... வீடு போய்ச் சேர்றதுக்குள்ள...’’ - லட்சுமி ராமகிருஷ்ணனின் அனுபவம் #WhatSpiritualityMeansToMe

``டவுள்  நம்பிக்கைங்கிறது அவங்கவங்க நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த நம்பிக்கைதான் பலம். என்னுடைய பலம் ஆஞ்சநேயர். ஜெய் ஹனுமான்!'' என்கிறார் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் அவரது ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

``என்னுடைய இஷ்டதெய்வம்னா ஆஞ்சநேயர்தான். ஆஞ்சநேயர்னா நம்பிக்கை, பக்தி, விசுவாசம், வலிமைதான் ஞாபகத்துக்கு வரும். பக்தியின் அதிகபட்ச உயரம்னா அது நம்பிக்கைதான். நாம கும்பிடுறது ராமரா இருக்கலாம், ஜீசஸா இருக்கலாம், அல்லாவா இருக்கலாம். பக்திக்கு அடித்தளம் நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருந்தா நாம எதையும் சாதிக்கலாம். 

ராமகாரியமா ஆஞ்சநேயர் செய்த எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள் என எல்லாமே அதீத பக்தியின் வெளிப்பாடுதான். ஆஞ்சநேயரை நினைக்கும்போதே நம் மனத்தில் வைராக்கியமும் பலமும் தானே வந்துடும். இதுக்குக் காரணம் சின்ன வயசிலயே எங்க தாத்தா, அப்பா இவங்ககிட்டயெல்லாம் ராமாயணம், மகாபாரதம்னு ஆன்மிகக் கதைகள் கேட்டு வளர்ந்ததுதான். 

எங்க தாத்தாவும், என் கணவரோட தாத்தாவும் நல்ல நண்பர்கள். என் கணவர் அப்போ ஐ.ஐ.டியில படிச்சிக்கிட்டிருந்தார். எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சுப் போகவும், கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இத்தனைக்கும் எங்க தாத்தா ஜோதிடத்தில் புலி. ஆனாலும், `மனப்பொருத்தம் இருந்தா போதும், மத்த பொருத்தம் தேவையில்லை' னு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க.  ­
கொஞ்சம் கட்டுப்பெட்டியா இருக்கிற குடும்பங்கிறதால என்னை காலேஜ்லாம் அனுப்ப மாட்டேனுட்டாங்க. பொம்பளைப் புள்ளைங்க வெளியில போய்ப் படிக்கக் கூடாதுனு நினைச்சாங்க.

அப்புறம் நான் கோத்தாரீஸ்ல ஃபேஷன் டிசைனிங்கும், தபால் மூலமா மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பி.காமும் படிச்சேன். மனசுக்குள்ள `நாமும் ஏதாவது செய்யணும் சாதிக்கணும்'ங்கிற எண்ணம் மட்டும் ஓடிக்கிட்டே இருக்கும். சின்னதா ஒரு பொட்டிக் (நவீன ஆடைகளுக்கான கடை) ஒண்ணு வெச்சேன். 

87-ல ஆடைகளுக்கான கண்காட்சி உட்லண்ட்ஸ் டிரைவ் இன்ல நடந்துச்சு. நானும் ஒரு ஸ்டால் போட்டிருந்தேன். ஓரளவு நல்ல வியாபாரம். ஸ்டாலை க்ளோஸ் பண்ணிட்டு, சாரீஸ் எல்லாம் எடுத்து கார்ல வெச்சிக்கிட்டுப் புறப்பட்டேன். நேரம் சரியா ராத்திரி 11.30 மணி. இப்போ மாதிரியெல்லாம் திருவான்மியூர் அப்போ கிடையாது. பஸ் டிப்போ தாண்டினாலே காடு மாதிரி புதர்களும் மரங்களும் இருக்கும். டிப்போவைத் தாண்டி போகவே பயமா இருக்கும். 

எங்க அக்கா எனக்கு ஆஞ்சநேயர் சிலை ஒண்ணு கொடுத்திருந்தாள். அது எப்பவும் கார்லயே இருக்கும். வழக்கம்போல ஆஞ்சநேயர் மேல பாரத்தைப் போட்டுட்டுப் புறப்பட்டேன். வழில ஒரு சின்ன பயம்கூட மனசுல இல்லை. பத்திரமா வீடு வந்து சேர்ந்தேன். 

மறுநாள் காலையில் என் கணவர் காரை எடுக்கப்போனார். காரில் ஒரு சொட்டுக்கூட பெட்ரோல் இல்லை. ட்ரையாகி இருந்துச்சு. எப்படி இவ்வளவு தூரம் கார் வந்ததுங்கிறதே பெரிய ஆச்சர்யம். ஒருவேளை பாதி வழியில் வண்டி நின்றிருந்தால்... அப்போ செல்போனெல்லாம் கிடையாது... லேண்ட்லைன் மட்டும்தான். அந்த நேரத்தில் எங்க போய் போன் பண்றது? இன்னிக்கு நினைச்சாலும் பயமாக இருக்கிறது. ஆனா, நெருக்கடியான அந்த நேரத்தைக் கடக்க எனக்கு உதவினது ஆஞ்சநேயர்மேல் நான் வச்சிருந்த நம்பிக்கைதான். இதுமாதிரி நிறைய  சம்பவங்கள் என் வாழ்க்கையில நடந்திருக்கு.

கணவருக்கு மஸ்கட்ல வேலை கிடைக்கவும், நாங்க 90கள்ல அங்க போயிட்டோம். 1999 -ம் வருஷம் லண்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி ஒண்ணு நடந்துச்சு. கண்காட்சி முடிஞ்சதும், எல்லோரும் ஒரு பார்ட்டியில கலந்துக்கிட்டாங்க. அங்க நடந்த விஷயங்கள் எதுவும் எனக்குப் பிடிக்கலை. அதனால முதல் வேலையா அங்கிருந்து புறப்பட்டு மஸ்கட்டுக்கு வந்து சேர்ந்திடணும்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில் ஒரே மிஸ்ட். மங்கலான வெளிச்சம். மிட் நைட்.  நமக்கு வேற வழி, மறுபடியும் ஆஞ்நேயரைத்தான் நினைச்சேன். வழியெல்லாம் `ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான்...' ஜெபம்தான்.

நான் தனியாதான் போயிருந்தேன். அதுவும் போயிருக்கிறதும் முதல் முறை. லண்டன்ல யாரையும் தெரியாது. தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கு எப்படியோ டாக்ஸியைப் பிடிச்சு வந்து, என்னோட லக்கேஜையெல்லாம் எடுத்துக்கிட்டு ஏர்போர்ட்க்கு வந்து சேர்ந்தேன். லண்டன் ஏர்போர்ட் ரொம்ப பிஸியான ஏர்போர்ட். ஒரு நிமிஷத்துக்கொரு ஃப்ளைட் லேண்ட் ஆகும். இன்னொண்ணு புறப்பட்டுக் கிளம்பும். அதுல நம் ஃப்ளைட்டை கரெக்டா கண்டு பிடிச்சி ஏறணும். நானோ அதிகபட்ச பதற்றத்துல இருந்தேன். ஆனா, ஆஞ்சநேயர் என்னைச் சரியா வழிநடத்தினார். என்னோட ஃப்ளைட்டைக் கண்டுபிடிச்சு ஏறிட்டேன்.

மருட்சியும் பயமும் உறைஞ்சிக் கிடக்கிற என் முகத்தைப் பார்த்ததுமே அந்த விமானப் பணிப்பெண், என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ரொம்ப அன்பா எங்கிட்ட பேசினாங்க. பொதுவா ஃப்ளைட்ல விமானிகள் இருக்கும் `காக் பிட்'ங்கிற இடத்துக்கு யாரையும் அழைச்சிக்கிட்டுப் போகமாட்டாங்க. என்னை அழைச்சிக்கிட்டுப் போய் அவங்க கூடவே ட்ராவல் பண்ண அனுமதிச்சாங்க. பத்திரமா மஸ்கட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

இப்படி என் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பிரச்னை அதிகமாகும்போது, நான் ஆஞ்சநேயரைத்தான் சரணடைவேன். அவர் என்னைச் சரியா வழிநடத்துவார்ங்கிறது என் நம்பிக்கை"  என்று கூறி சிரிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.