Published:Updated:

ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்... மாறியது என்ன?!

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது, ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்.

ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்... மாறியது என்ன?!
ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்... மாறியது என்ன?!

டந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது ஆஸ்பயர் காம்பேக்ட் செடானின் பேஸ்லிஃப்ட் மாடலை மேம்படுத்தப்பட்ட டிசைன் - கூடுதல் வசதிகள் - புதிய பெட்ரோல் இன்ஜின்/கியர்பாக்ஸ் கூட்டணியுடன் அறிமுகப்படுத்தியது ஃபோர்டு. அப்போதே ஹேட்ச்பேக் காரான ஃபிகோவின் பேஸ்லிஃப்ட் மாடல் குறித்த கேள்விகள் எழத்தொடங்கிவிட்டன. சில கால மெளனத்துக்குப் பிறகு, எதிர்பார்த்தபடியே காரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்த நிறுவனம். முந்தைய மாடலைவிடக் குறைவான விலையில், அதாவது 5.97 - 9.31 லட்சம் ரூபாய்க்கு (சென்னை ஆன்ரோடு விலை) வந்திருக்கும் ஃபிகோ பேஸ்லிஃப்ட்டில் என்ன ஸ்பெஷல்? 

டிசைன்: புதிய ஆஸ்பயரில் இடம்பெற்றிருந்த டிசைன் மாற்றங்கள், அப்படியே புதிய ஃபீகோவுக்கும் இடம்பெயர்ந்திருக்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட Honeycomb கிரில் மற்றும் ஹெட்லைட்ஸ், புதிய பம்ப்பர்கள், 15 இன்ச் அலாய் வீல்கள் எனக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தெரிகின்றன. டாப் வேரியன்ட்டில் அலாய் வீல்கள் - ரியர் வியூ மிரர்கள் - கிரில் - ரூஃப் ஆகியவை கறுப்பு நிறத்தில் ஈர்க்கின்றன. தவிர, கதவுகள் மற்றும் டெயில்கேட்டின் கீழ்ப்பகுதியில் Black Decals உள்ளன. கறுப்பு நிற கேபினில் டச் ஸ்க்ரீன் உடனான சென்டர் கன்சோல் புதிது.  

வசதிகள்: முந்தைய மாடலைப்போலவே, தற்போதும் அனைத்து வேரியன்ட்களிலும் இரண்டு காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டு என்பதுடன், டாப் வேரியன்ட்டில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெட்ஸ் மற்றும் ஆறு காற்றுப்பைகள் இருப்பது ப்ளஸ். மேலும், புதிய விதிகளை மனதில்வைத்து ABS - EBD ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் - சீட் பெல்ட் ரிமைண்டர் - ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவையும் ஸ்டாண்டர்டு ஆக்கப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் மாடலில் கூடுதலாக ESP, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

தவிர, புதிய ஆஸ்பயர்போலவே இங்கும் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், ரிவர்ஸ் கேமரா, டச் ஸ்க்ரீன் சிஸ்டம் (ப்ளூடுத் மற்றும் சாட்டிலைட் நேவிகேஷன் உண்டு) ஆகியவை கேபினில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ஆஸ்பயரின் டச் ஸ்க்ரினில் இருந்த SYNC 3 கனெக்ட்டிவிட்டி வசதி, புதிய ஃபிகோவில் மிஸ்ஸிங். 

இன்ஜின் - கியர்பாக்ஸ்: புதிய ஆஸ்பயரில் இருக்கும் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் (3 சிலிண்டர்) பெட்ரோல் இன்ஜின்கள், புதிய ஃபீகோவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1.2 லிட்டர் இன்ஜின் 96bhp பவர் மற்றும் 12kgm டார்க்கை வெளிப்படுத்தினால், 1.5 லிட்டர் இன்ஜின் 123bhp பவர் மற்றும் 15kgm டார்க்கைத் தருகிறது. சிறிய இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருந்தால், பெரிய இன்ஜினில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT உள்ளது. ஆனால் 100bhp பவர் மற்றும் 21.5kgm டார்க்கை வெளியிடும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

வேரியன்ட்கள்: முந்தைய மாடல் 5 வேரியன்ட்களில் கிடைத்த நிலையில், ஃபிகோ பேஸ்லிஃப்ட்டை மூன்று வேரியன்ட்களில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஃபோர்டு. ஆம்பியன்ட் மற்றும் டைட்டானியம் ஆகியவை தொடர்கின்றன என்றாலும், முந்தைய காரில் இருந்த ஸ்போர்ட்ஸ் எடிஷனுக்குப் பதிலாக இதில் டைட்டானியம் Blu வேரியன்ட் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை அனைத்து வேரியன்ட்டிலும் வாங்க முடியும் என்றாலும், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - AT உடனான மாடலை டைட்டானியம் வேரியன்ட்டில் மட்டுமே வாங்க இயலும். 

போட்டியாளர்கள்: மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது, ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட். இதனுடன் ஒப்பிடக்கூடிய அளவிலான விலை மற்றும் வசதிகளுடன் கார் கவர்கிறது என்றாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட மாடலின் விலை கொஞ்சம் அதிகம். இருப்பினும் முந்தைய மாடலைவிட சுமார் 75,000 ரூபாய் குறைவான விலையில் களமிறங்கியிருக்கும் ஃபிகோ பேஸ்லிஃப்ட், ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் ஃபோர்டு எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். ஏனெனில், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராக இது மாறியிருப்பதுடன், தனது வகையிலே அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அசரடிக்கிறது.