Published:Updated:

'சிட்டுக்குருவிகளின் இப்போதைய தேவை என்ன?' பதில் சொல்லும் ஸ்பாரோ ஆப்

'சிட்டுக்குருவிகளின் இப்போதைய தேவை என்ன?' பதில் சொல்லும் ஸ்பாரோ ஆப்
'சிட்டுக்குருவிகளின் இப்போதைய தேவை என்ன?' பதில் சொல்லும் ஸ்பாரோ ஆப்

"சிட்டுக்குருவிகள் அழிவதற்கு முக்கியக் காரணம் அவை முட்டையிடக் கூடுகள் கட்ட இடம் கிடைக்காததே. இதைச் சரிசெய்யும் விதமாகச் செயலியில் பதிவாகும் பகுதிகளுக்குக் கூடுகளை அமைப்பதோடு, தானாக முன்வரும் மக்களுக்குக் கூடுகளைக் கொடுத்து அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து மேற்கொண்டும் உதவ இருக்கிறோம்."

வ்வளவுதான் விதவிதமான பறவைகளை நாம் பார்த்திருந்தாலும், நம்மைச் சுற்றியே வாழும் சில பறவைகள்மீது தனியொரு பற்றுதல் இருப்பது இயல்புதான். அந்த இயல்புதான் நம்மோடு வீடுகளைப் பங்குபோட்டுக் குடியிருந்த சிட்டுகளின் பாதுகாப்பு கருதி அவற்றுக்காகத் தினம் கொண்டாட வைத்தது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 20-ம் தேதி சிட்டுக்குருவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தத் தினத்தன்று சிட்டுக்குருவிகள் மற்றும் அதைப் போன்ற மற்ற புள்ளினங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைப் பல்வேறு பறவை ஆர்வலர்கள் நாடு முழுக்கக் கொண்டு செல்கிறார்கள். புள்ளினங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம். சிட்டுக்குருவிகள் உட்பட நம்மைச் சுற்றி வாழும் புள்ளினங்களின் மதிப்பும் தேவையும் உணர்ந்து செயல்படச் சிட்டுக்குருவி தினம் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டுமென்பதே என்கிறார்கள் பறவையாளர்கள்.

கைப்பேசி கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன, எரிவாயுவிலிருந்து வெளியாகும் மீதைல் நைட்ரேட் என்ற வேதிமம் பூச்சிகளைக் கொன்றுவிடுவதால் சாப்பிடுவதற்கு உணவின்றிச் சிட்டுகள் அழிகின்றன என்று ஆதாரமற்ற வதந்திகள் சமுதாயத்தில் பரவி வருகின்றன. அறிவியல்பூர்வ ஆய்வுகளால் நிரூபிக்க முடியாத பல போலியான வதந்திகள் பரவி வந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டுச் சீரான அணுகுமுறையோடு அறிவியல் புரிதல்களோடு செயல்படுபவர்களும் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

Photos Courtesy: Thanigai Vel

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணம் எரிவாயுவோ கைப்பேசி கோபுரங்களோ கிடையாது. அவை குறைந்து வருவதற்கு முக்கியக் காரணம் வாழிடக் குறைபாடும் உணவுப் பற்றாக்குறையுமே. அவை கூடுகட்டுவதற்குத் தகுந்த இடவசதிகள் நம் இப்போதைய வீடுகளில் இல்லாததும் நகர்ப்புறங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்காததுமே காரணம். சிட்டுக்குருவிகளின் வாழ்விடம் அழிந்து வருவது அவற்றின் எண்ணிக்கைக் குறைவுக்கு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்துகொண்ட பல பறவை ஆர்வலர்கள் அவற்றுக்குச் செயற்கையாகக் கூடு தயாரித்து வீடுகளில் பொருத்தி வருகின்றனர். அந்த வரிசையில் சிட்டுக்குருவிகளை நாம் பார்த்தால் பதிவு செய்வதற்கும் அதன்மூலம் தெரிந்துகொண்டு அவற்றுக்குத் தேவைப்படும் கூடுகளைக் கொண்டுவந்து பொருத்துவதற்கும் கைப்பேசி செயலி ஒன்றைச் சில மாணவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். உலக சிட்டுக்குருவி தினத்தன்று இந்தச் செயலியை வெளியிட்டுள்ளார்கள்.

எண்ணிக்கையில் ஒரு பறவை குறைந்துவிட்டது என்பதைச் சொல்ல வேண்டுமென்றால் முன்பு அது எவ்வளவு இருந்ததென்ற தரவுகள் நம்மிடம் வேண்டும். ஒருவேளை அது இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அதைச் செய்வதற்குத் தகுந்தவகையில் நிகழ்காலத்திலாவது பதிவு செய்துவைக்க வேண்டும். சிட்டுக்குருவிகளும் குறைந்துவிட்டனவா அதிகரித்துள்ளனவா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டுமெனில் அதற்கும் நம்மிடம் அவற்றின் எண்ணிக்கை ஓரளவுக்காவது சரியாக இருக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சிட்டுக்குருவி தினத்தன்று e-bird என்ற இணையதளம் சிட்டுக்குருவி கணக்கெடுப்பு நடத்துகிறது. அதைப் போல, சிட்டுக்குருவிகள் எங்கெல்லாம் வாழ்கின்றன என்பதைப் பதிவுசெய்து அவற்றின் வாழிட வரைபடம் உருவாக்க சில கல்லூரி மாணவர்கள் முயல்கின்றனர்.

ஶ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் அவர்கள் நடத்திவரும் இக்கோ கிளப் சார்பில் கைப்பேசி ஆப் ஒன்றை வடிவமைத்தனர். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் சிட்டுக்குருவிகளைப் பார்த்த இடத்தையும் எண்ணிக்கையையும் இந்தச் செயலியில் பதிவு செய்யலாம். இதை வடிவமைத்த மாணவர் குழு அந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அங்கிருக்கும் நடைமுறைச் சூழலைக் கணக்கிட்டு அங்கு கூடுகளை அமைப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளுக்குப் பயன் கிடைக்குமா என்பதை உறுதி செய்வார்கள். அதன் பின்னரே அவர்கள் கூடுகளை அமைக்கிறார்கள். அதேபோல் யாருக்காவது தாம் வாழும் பகுதிகளில் சிட்டுக்குருவிகளுக்குக் கூடு அமைக்கச் செயற்கைக் கூடுகள் தேவைப்பட்டால் அதையும் அதன் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.

சேவ் ஸ்பாரோ செயலி (SOS - Save Sparrow App) தயாரித்த குழுவுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வரும் தனசேகரிடம் பேசுகையில் ``நாம் பார்க்கக்கூடிய சிட்டுக்குருவிகளை எங்கு பார்க்கிறோம், எத்தனை பார்க்கிறோம் என்பதை இந்தச் செயலியில் பதிவு செய்யலாம். சென்னை முழுக்கச் சிட்டுக்குருவிகளுக்காகக் கூடு அமைத்துக் கொடுத்து வருகிறோம். இதைச் சீரான முறையில் மக்களின் பங்களிப்போடு செய்ய வேண்டுமென்று சிந்தித்தோம். சிட்டுக்குருவிகளுக்கான இந்தச் செயலி எங்கள் நோக்கத்தைப் பூர்த்திசெய்யும். மக்கள் எங்கு சிட்டுக்குருவிகளைப் பார்த்தாலும் அதை இதில் பதிவேற்றினாலே போதும், எங்கள் குழுவினர் சென்று அந்தப் பகுதியின் சூழலைக் கண்காணித்து வருவோம். சிட்டுகள் வாழத்தகுந்த இடமாக இருந்தால் அங்கு கூடுகளை அமைப்போம். அதேபோல் ஆர்வமுள்ள மக்களையும் கூடுகள் அமைக்க ஊக்குவிப்போம்" என்றார்.

இதை வடிவமைப்பதில் இவர்களோடு இணைந்து செயல்பட்டவர் சஞ்சய். அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``சிட்டுக்குருவி அழிந்துவருவதைத் தெரிந்துகொள்ள அவற்றின் எண்ணிக்கையில் எந்தளவுக்கு மாற்றங்கள் நிகழ்கின்றன போன்ற விஷயங்களில் பதிவுகளே இல்லாமல் இருந்துவருகின்றது. சென்னையில் குருவிகள் குறைந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கெல்லாம் அவை இருக்கின்றன என்பது முதலில் தெரிந்தால்தான் அவை குறைகின்றனவா என்பதைப் பற்றி நாம் சிந்திக்க முடியும். இந்தத் தரவுகளையெல்லாம் சேகரிக்க இந்தச் செயலி மிக உதவியாக இருக்கும்.

சிட்டுக்குருவிகள் அழிவதற்கு முக்கியக் காரணம் அவை முட்டையிடக் கூடுகள் கட்ட இடம் கிடைக்காததே. இதைச் சரிசெய்யும் விதமாகச் செயலியில் பதிவாகும் பகுதிகளுக்குக் கூடுகளை அமைப்பதோடு, தானாக முன்வரும் மக்களுக்குக் கூடுகளைக் கொடுத்து அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து மேற்கொண்டும் உதவ இருக்கிறோம். இந்தச் செயலி, சிட்டுகளின் வாழிடத்தைக் கணிப்பதற்குத் தகுந்த வரைபடத்தை உருவாக்க உதவுமென்று நம்புகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு