Published:Updated:

25,000 பேர் செய்த தியாகம்... தினமும் 50 கப்பல்கள் இயக்கம்... பனாமா கால்வாய் வரலாறு!

25,000 பேர் செய்த தியாகம்... தினமும் 50 கப்பல்கள் இயக்கம்... பனாமா கால்வாய் வரலாறு!
25,000 பேர் செய்த தியாகம்... தினமும் 50 கப்பல்கள் இயக்கம்... பனாமா கால்வாய் வரலாறு!

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப்போவதாக தி.மு.க மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தச் சமயத்தில், பனாமா கால்வாய் திட்டம் பற்றியும் அறிந்துகொள்வோம்.

ராமர் பாலம் வேண்டுமா... கடல் வர்த்தகம் செழிக்க வேண்டுமா? ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் `சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்' என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளிக்கும். இந்த முறையும் தி.மு.க அந்த வாக்குறுதியைத் தவறாமல் அளித்துள்ளது. கடல் பயணத்தைச் சுருக்குவதால், நாம் அடையும் நன்மைகள் அளப்பரியது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் மன்னர் ஒருவரின் சிந்தையில் உதித்த திட்டம்தான் பனாமா கால்வாய். இந்தக் கால்வாய், இன்று பனாமா நாட்டையே செல்வச்செழிப்பாக மாற்றியிருக்கிறது. 

கடந்த 1914-ம் ஆண்டு, உலகமே வியந்த பனாமா கால்வாய் கட்டப்பட்டுவிட்டது. பனாமா கால்வாய் ஏன் கட்டப்பட்டது? சிம்பிள்... கடல்வழியாகச் சென்னையில் இருந்து கொச்சி செல்ல இலங்கையைச் சுற்றிச் செல்கிறோம் அல்லவா? தலையைச் சுற்றி வாலைத் தொடுகிற கதைதானே இது.  எரிபொருள் செலவு... கால விரயம் ஏற்படுகிறது அல்லவா? அதுபோலவே, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மறுமுனையில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு கப்பலில் செல்ல வேண்டுமென்றால், தென் அமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டும்..

40 நாள்கள், கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். உலகிலேயே அபாயகரமான கடல் பகுதி தென் அமெரிக்கா ஹேப் ஹார்ன் முனை. இதைக் கடந்தால்தான் மறுபக்கத்தில் உள்ள பசிபிக் கடலை அடைய முடியும். ஹேப் ஹார்ன் முனையைக் கப்பல்கள் கடப்பது சவால் நிறைந்த விஷயம். ஆயிரக்கணக்கான கப்பல்கள் இங்கே மூழ்கிப்போயிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில், பிரிட்டனைப்போலவே ஸ்பெயினும் மெக்ஸிகோ, பெரு, பாரகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் சாம்ராஜ்யத்தை விரிவு செய்துகொண்டிருந்தது.

கி.பி 1530-ம் ஆண்டில் ஸ்பெயின் மன்னர் ஐந்தாம் சார்லஸ், ஸ்பெயினில் இருந்து பெரு நாட்டுக்குச் செல்வதற்காக, எளிதான கடல் வழி உருவாக்குவதுகுறித்து யோசித்தார்.  பனாமா நாட்டில்  கால்வாய் கட்டுவதுகுறித்து ஆராயப்பட்டது. கால்வாய் வெட்டுவது சாத்தியமில்லை என்று ஆய்வு முடிவில் தெரிய வர, திட்டத்தைக் கைவிட்டது ஸ்பெயின். 

பிறகு, 1881-ம் ஆண்டு பிரான்ஸ் நாடு பனாமா கால்வாயை வெட்ட முன்வந்தது. அப்போது, பனாமா நாடு கொலம்பியாவின் பிடியில் இருந்தது. திட்டத்துக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது. சுமார், 20 ஆண்டுகளாக பிரான்ஸ் வேலைபார்த்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 70 கோடி டன் மண்வெட்டி அகற்றப்பட்டது. திடீரென பிரான்ஸ் நாடு கட்டுமானப் பணியை நிறுத்திவிட்டு, `எங்களால் முடியாது' என்று ஒதுங்கியது. பிறகு,  அமெரிக்கா, `நாங்கள் கட்டுகிறோம்' என்று களம் இறங்கியது. 1904-ம் ஆண்டு அமெரிக்கா, பணிகளைத் தொடங்கியது.  பனாமா நாட்டில் கால்வாய் வெட்டுவதற்குப் பதிலாக, அருகில் உள்ள  நிகரகுவா நாட்டில் கால்வாய் வெட்டவே அமெரிக்கா தீர்மானித்தது. பிறகு மனம் மாறி, பிரான்ஸ் விட்டுச்சென்ற இடத்திலேயே அதாவது, பனாமா நாட்டிலேயே கால்வாய் வெட்ட அமெரிக்கா  முடிவெடுத்தது.  

சுமார் 10 ஆண்டுகள் கழித்து 1914-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. ஜான் வின்ட்லே வால்லஸ், ப்ராங்ன் ஸ்டீவன்ஸ், ஜார்ஜ் வாஷிங்டன் ஆகிய மூன்று இன்ஜினீயர்கள் தலைமையில் கட்டுமானப்பணி நடைபெற்றது. கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.  1914-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. கால்வாய்க்குள் தண்ணீர் விடுவதற்காக அணை ஒன்றும் கட்டப்பட்டது. இதன் பெயர், `மாடன் அணை'. இந்தக் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  25,000 பேர் உயிரிழந்தனர். விபத்துகள் தவிர மலேரியா, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற நோய்களும் தொழிலாளர்களின் உயிரைக் குடித்தன.

கால்வாய் கட்டிமுடிக்கப்பட்டபோது, 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. இப்போது, அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை 8 முதல் 10 மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். தினமும் 50 கப்பல்கள் இந்தக் கால்வாயைக் கடக்கின்றன. கப்பல்களின் சரக்குக் கொள்ளளவைக்கொண்டு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் பனாமா நாட்டுக்குக் கிடைக்கிறது. நார்வேயைச் சேர்ந்த பயணிகள் கப்பல் கிரவுன் பிரின்ஸ், அதிகபட்சமாக $144,344.91 சுங்கவரியாகச் செலுத்தியுள்ளது. நீச்சல் வீரர் ராபர்ட் ஹலிபர்ட்டன், குறைவான சுங்கவரி $0.36 செலுத்தியுள்ளார். 1928-ம் ஆண்டு, இந்தக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் நீச்சல் வீரர் இவர். 1999-ம் ஆண்டு வரை பனாமா கால்வாயின் கட்டுப்பாடு அமெரிக்காவிடம்தான் இருந்தது. பிறகுதான் பனாமா வசம் ஒப்படைக்கப்பட்டது. 

பனாமா சிட்டி அருகே, `பிரிட்ஜ் ஆஃப் அமெரிக்கா’ என்ற இடத்தில் பசிபிக் கடலில் பனாமா கால்வாய் தொடங்குகிறது. கொலம்பியா நாட்டுக்குள் புகுந்து `கோலன்' என்ற இடத்தில் அட்லாண்டிக் கடலில், மறுமுனையில் இணைகிறது. சுமார் 82 கிலோமீட்டர் தொலைவுக்கு 31 மீட்டர் அகலம்கொண்ட இந்தக் கால்வாயில், இப்போது ஆண்டுக்கு 15,000 கப்பல்கள் கடந்துசெல்கின்றன. 160 நாடுகளைச் சேர்ந்த 1,700 துறைமுக நகரங்களுக்குப் பனாமா கால்வாயுடன் தொடர்பு உண்டு. ஒரு பக்கத்தில் கப்பல் செல்லவும் மறுபக்கத்தில் கப்பல்கள் வரும்படியும் இந்தக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பனாமா கால்வாயில் கப்பலை இயக்க கேப்டன்களுக்கு தனித்திறமை வேண்டும். சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, நிகரகுவா நாட்டில் மற்றோரு கால்வாய் வெட்டலாம் என்று அந்த நாட்டுக்கு ஆசையைத் தூண்டியுள்ளது. அதனால், விரைவில் பனாமா கால்வாய்க்குப் போட்டி ஏற்படலாம்.

பனாமா கால்வாய் போலவேதான் சூயஸ் கால்வாயும். எகிப்தில் அமைந்துள்ளது. இந்தக் கால்வாய் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான கடல்வழிப் போக்குவரத்தை எளிதாக்குகிறது. 1878-ம் ஆண்டு, எகிப்து நாட்டைப் பிடித்த பிரான்ஸ் மன்னர் நெப்போலியன், முதலில் சூயஸ் கால்வாய் வெட்டுவதற்கான ஆய்வுப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டார். இந்தக் கால்வாய், 1869-ம் ஆண்டே கட்டப்பட்டுவிட்டது. சூயஸ் கால்வாயை வெட்டிய பிரான்ஸ்காரர்கள், பிறகு பனாமா கால்வாயை வெட்ட திட்டமிட்டு தோல்வியடைந்தனர். தோல்வியடைந்தாலும் விதை போட்டது பிரான்ஸ் நாட்டுக்காரர்களே!

அடுத்த கட்டுரைக்கு