Published:Updated:

மாருதி சுஸூகி - டொயோட்டா கூட்டணி... என்னென்ன கார்களை எதிர்பார்க்கலாம்?!

மாருதி சுஸூகியின் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியே, டொயோட்டாவின் மாடல்களிலும் பயன்படுத்தப்படும். SHVS தொழில்நுட்பமும் இருக்கலாம்.

மாருதி சுஸூகி - டொயோட்டா கூட்டணி... என்னென்ன கார்களை எதிர்பார்க்கலாம்?!
மாருதி சுஸூகி - டொயோட்டா கூட்டணி... என்னென்ன கார்களை எதிர்பார்க்கலாம்?!

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் சில கார்களை விற்பனை செய்யவும், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களை 2020-ல் களமிறக்கவும், மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது (நவம்பர் 2017) தெரிந்ததே! தற்போது, தங்களின் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமான அறிக்கையை, சமீபத்தில் இந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ளன. அதன்படி தனது சியாஸ் மிட்சைஸ் செடான் மற்றும் எர்டிகா எம்பிவி-யை, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் விற்பனை செய்ய ஏதுவாக, டொயோட்டாவுக்கு மாருதி சுஸூகி வழங்க உள்ளது. இவை, Badge Engineering பாணியில் சிற்சில மாற்றங்களுடன் விற்பனை செய்யப்படும் என்றாலும்... எது, எப்போது வரும் என்பதில் இன்னும் தெளிவில்லை.

ஆனால், இந்தக் கூட்டணியின் முதல் காராக, பெலினோவை அடிப்படையாகக்கொண்டு டொயோட்டா தயாரிக்க உள்ள ப்ரீமியம் ஹேட்ச்பேக், இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், விட்டாரா ப்ரெஸ்ஸாவை அடிப்படையாகக்கொண்டு டொயோட்டா வடிவமைக்கப்போகும் காம்பேக்ட் எஸ்யூவி, 2022-ம் ஆண்டில் வெளிவர உள்ளது. இது, கர்நாடகா மாநிலத்தில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள Bidadi தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். 

இதற்கு மாற்றாக, உலக அளவில் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றான டொயோட்டாவின் காரான கரோலா ஆல்ட்டீஸை அடிப்படையாகக்கொண்டு, ஒரு எக்ஸிக்யூட்டிவ் செடானைக் களமிறக்க மாருதி சுஸூகி முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த காரின் அடுத்த தலைமுறை மாடல் 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்பதால், அதற்குப் பிறகே மாருதி சுஸூகியின் வெர்ஷன் வெளிவரும். தவிர, இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் அனுபவத்தைப் பெறும்விதமாக, தான் தயாரிக்கப்போகும் புதிய C-செக்மென்ட் எம்பிவி-யை மாருதி சுஸூகியுடன் இணைந்து தயாரிக்க உள்ளது டொயோட்டா. இது, பின்னாளில் இரண்டு நிறுவனங்களின் பிராண்டிங்கிலும் தனித்தனியாக விற்பனை செய்யப்படும்.

ஆனால், மாருதி சுஸூகியிடம் ஏற்கெனவே எர்டிகா இருக்கும் நிலையில், இது எந்த அளவுக்கு அந்த நிறுவனத்துக்குப் பலனளிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். மேலும், சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும்விதமாக, ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களையும் இந்தக் கூட்டணி தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள். எனவே, அதற்குத் தேவையான ஹைபிரிட் சிஸ்டம் - பேட்டரி - Power Train ஆகியவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தால், கட்டுபடியாகக்கூடிய விலையில் அந்த கார்களைக் களமிறக்க முடியும். 

எனவே, இதை மனதில்வைத்து சுஸூகி (Suzuki Japan) - டோஷிபா (Toshiba) - டென்ஸோ (Denso) ஆகிய நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து, குஜராத்தில் பேட்டரி தொழிற்சாலை ஒன்றைக் கட்டமைக்க உள்ளார்கள். இந்திய கார் சந்தையில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய சந்தையிலும் இந்தக் கூட்டணி செயல்பட இருக்கிறது. அதன்படி, காம்பேக்ட் கார்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின்களை, சுஸூகி டொயோட்டாவுக்கு வழங்கும். அதற்கான மாற்றாக, RAV4 மற்றும் கரோலா எஸ்டேட் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை சுஸூகிக்கு டொயோட்டா வழங்கும். மற்றபடி, பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவை அடிப்படையாகக்கொண்டு டொயோட்டா தயாரிக்கப்போகும் கார்களில், கணிசமான வித்தியாசங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

எனவே, வெளிப்புறத்தில் கிரில், ஹெட்லைட் - டெயில் லைட், பம்பர்கள், வீல்கள் போன்றவை வித்தியாசமாக இருக்கும். உட்புறத்தில் மாருதி சுஸூகி லோகோ இருக்கக்கூடிய இடங்களான ஸ்டீயரிங் வீல், டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சீட்கள் ஆகியவற்றில் டொயோட்டாவின் பிராண்டிங் இருக்கும். மற்றபடி, மாருதி சுஸூகியின் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியே, டொயோட்டாவின் மாடல்களிலும் பயன்படுத்தப்படும். SHVS இருக்கலாம். 

காரின் Sheet Metal விஷயத்தில் கை வைத்தால் உற்பத்திச்செலவு அதிகரித்துவிடும் என்பதால், அதில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அறிமுகமான பிறகு, தனது டீலர்களில் இந்த கார்களை டொயோட்டா விற்பனை செய்யும். BS-6 விதிகளுக்குட்பட்ட புதிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை மாருதி சுஸூகி தயாரித்துவருவதால், கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் இதுவும் டொயோட்டாவின் Badge Engineered கார்களில் இடம்பெறும். இதே பாணிதான், கரோலா ஆல்ட்டீஸை அடிப்படையாகக்கொண்டு மாருதி சுஸூகி தயாரிக்கப்போகும் காரில் பின்பற்றப்படும். அது, இந்த நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வரும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மாருதி சுஸூகி - டொயோட்டா கூட்டணி அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது.

புதிய கார்களை இணைந்து தயாரிப்பதன் வாயிலாக, அதற்கான அதிகப்படியான முதலீட்டைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது ப்ளஸ். போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில், இரு நிறுவனங்களும் தொழில்முறைப் போட்டியாளர்களாகத் தொடர்வார்கள் எனலாம். ஆனால், ஆட்டோமொபைல் துறை அடையப்போகும் கால மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, இரு பெரிய ஜப்பானிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பது, நிச்சயம் ஆரோக்கியமான விஷயம்தான். அதற்கான திட்டங்களும் தெளிவாக இருப்பதால், புதுமையான தயாரிப்புகள் வெளிவரலாம்!