Published:Updated:

``முஸ்லிம் பொண்ணு பூ விற்கக் கூடாதுனு மிரட்டினாங்க. ஆனா..?’’ ரவுலா பர்வீன்

"இஸ்லாம் சமூகத்துல பிறந்தாலும் கோயில் பூஜைக்கு என்னென்ன தேவைன்னு தெரியும். அவற்றையெல்லாம் வாங்கி வந்து விற்பனை செய்றோம்."

``முஸ்லிம் பொண்ணு பூ விற்கக் கூடாதுனு மிரட்டினாங்க. ஆனா..?’’ ரவுலா பர்வீன்
``முஸ்லிம் பொண்ணு பூ விற்கக் கூடாதுனு மிரட்டினாங்க. ஆனா..?’’ ரவுலா பர்வீன்

``பூ வாங்கிட்டுப் போங்க!’’ 

எந்தக் கோயிலுக்குள் நுழையும்போதும் பூ விற்பவர்கள் இப்படி அழைப்பதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால், ரவுலா பர்வீனின் குரல் இன்னும் ஸ்பெஷல். வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பூ விற்கும் அவரின் இயல்பால், பலரும் தொடர் வாடிக்கையாளராகி விட்டனர். சாரங்கபாணி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் அருகே பூக்கடை வைத்திருக்கும் ரவுலா பர்வீனைச் சந்திக்காமல் செல்வதில்லை. 

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசித்திபெற்றவை புனுகீஸ்வரர் சிவாலயம் மற்றும் சாரங்கபாணி பெருமாள் கோயில். இரண்டு கோயில்களும் அருகருகே இருப்பதால் இரண்டுக்கும் பொதுவாக வாசலில் உள்ளது சாதிக் பாட்சா புஷ்ப வியாபாரக் கடை. புர்கா போட்டுக்கொண்டு பூ விற்கும் ரவுலா பர்வீனிடம் விரும்பிப் பூ வாங்கிச் செல்வோர் ஏராளம். 

சிரித்த முகத்தோடு வரவேற்கும் சாதிக் பாட்சாவிடம் பேசினேன். ``மயிலாடுதுறையில இருக்கும் ஆறுமுகம் சேர்வை பூக்கடையில் 15 வருடம் வேலைபார்த்தேன். என் முதலாளி உதவியோடு இந்தக் கடையை ஆரம்பிச்சேன். முதல்ல, இரண்டு கோயிலுக்கும் பொதுவா உள்ள பாதையில சின்ன தட்டியில பூ வித்துட்டு இருந்தேன். எங்க அம்மா, 35 வருஷமா வீட்டிலேருந்தே பூ கட்டி வித்துதான் என்னை வளர்த்தாங்க. அதனால, நானும் பள்ளிக்கூடத்துல படிக்கும்போதிலிருந்தே பூ விற்க ஆரம்பிச்சிட்டேன்.

2000-மாவது வருஷத்துல பூக்கடை வச்சேன். அப்பதான் ரவுலா பர்வீனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். முன்னாடி மர தட்டியிலதான் கடை வச்சிருந்தோம். இப்ப ரெண்டு வருஷமாத்தான் பில்டிங் இடம் பிடிச்சு கடை வச்சிருக்கோம். கல்யாணத்துக்கு அப்புறம் வியாபாரத்துக்கு ஒத்தாசையாக இருக்கேன்னு ரவுலாவும் கடைக்கு வர ஆரம்பிச்சா. ஆனா, இன்னிக்கு பூக்கடையே பாய் அம்மா கடைன்னு ஆயிடுச்சு.

நான் கடையில இருந்தாக்கூட பூ வாங்க வர்றவங்க கொஞ்சம் தயங்குவாங்க. ஆனா, என் மனைவி இருந்தா எந்தத் தயக்கமுமில்லாமல் வருவாங்க. அவ முகராசி அப்படி. பூவை அள்ளி அள்ளிக் கொடுப்பா. அதனால, கஸ்டமர்ஸ் ஜாஸ்தி’’ என்று சாதிக்பாட்சா சொல்லும்போது, பூக்கட்டிக்கொண்டிருந்த ரவுலா பர்வீன் மெள்ள சிரிக்கிறார். 

அப்போது பூ வாங்க வந்தவரிடம், முழம் போட்டு பூ விற்பனை செய்த ரவுலா பர்வீனிடம் பேச்சுக் கொடுத்தேன்.  

``என் மகன் முகமது ஜாவித்தையும் மகள் சப்ரினையும் மாமியார் பாத்துக்கிறதால, என்னால கடையைப் பார்த்துக்க முடியுது. என் கணவரோட வேலையில, என்னால முடிஞ்ச அளவு பங்கு எடுத்துக்கலாம்னுதான் கடைக்கு வந்தேன். இதனால, குடும்ப கஷ்டமும் கொஞ்சம் குறையும்னு நினைச்சேன். ஆனா, நான் கடைக்கு வந்ததுக்கு அப்புறம்தான் நிறைய எதிர்ப்பும் கஷ்டமும் வந்துச்சு. இந்துக் கோயில் வாசல்ல, முஸ்லிம் பொண்ணு பூ விக்கக் கூடாதுன்னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. சில இந்து அமைப்பெல்லாம்கூட வந்து மிரட்டினாங்க. ஆனா, கோயிலுக்கு வர்ற பக்தர்கள் எந்தத் தயக்கமும் இல்லாம என்கிட்ட பூ வாங்குறாங்க. அவங்க ஆதரவாலதான் எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கும். 

ஐயர் வீட்டு அம்மாக்கள் பல பேர் எங்களுக்கு ரெகுலர் கஸ்டமரா இருக்காங்க. அதனால, மார்கழி மாசத்துக்கு காலையில 5 மணிக்கெல்லாம் கடையைத் திறந்துடுவோம். இஸ்லாம் சமூகத்துல பிறந்தாலும் கோயில் பூஜைக்கு என்னென்ன தேவைன்னு தெரியும். அவற்றையெல்லாம் வாங்கி வந்து விற்பனை செய்றோம். 

எனக்கு அப்பா இல்லை. இவரைக் கல்யாணம் செஞ்சிகிட்டதால, இன்னிக்குவரைக்கும் வாழ்க்கை நல்லபடியா போகுது. ரெண்டு பேரும் சேர்ந்து பாடுபடுறோம். அதனாலதான் அதிகம் கஷ்டமில்லாமல் வாழ்க்கையை ஓட்டுறோம்’’ எனச் சிரித்தபடி கூறுகிறார் ரவுலா பர்வீன்.

எந்த மதமும் சக மனிதர் மீது அன்பு பாராட்டவே சொல்கிறது. எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் சிறப்பான மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும். 

படங்கள்: பா.பிரசன்னா