Published:Updated:

21 வயதே நிரம்பாத 13,127 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வெழுதிய ஆச்சர்யம்!

21 வயதே நிரம்பாத 13,127 பேர்  டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வெழுதிய ஆச்சர்யம்!
21 வயதே நிரம்பாத 13,127 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வெழுதிய ஆச்சர்யம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வுக்கான விளம்பரம் ஒருநாள் தள்ளி வெளியிட்டதால், குறைந்தபட்ச வயது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 20 வயது மட்டும் பூர்த்தியான 13,127 பேர் விண்ணப்பித்துத் தேர்வெழுதி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு என்று நிர்ணயிக்கப்படுவது வழக்கம். குரூப் 1 தேர்வுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பாக 21 வயது முதல் 37 வயது என நிர்ணயித்திருந்தது. இதில், பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில், 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியில் 21 வயது பூர்த்தியாகியும், 37 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

இதனால், 20 வயது பூர்த்தியானவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், 36 வயது பூர்த்தியாகி, 37 வயது பூர்த்தியாகாமல் இருந்த பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கிறது.  பாதிக்கப்பட்ட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்றத்தில், `ஏற்கெனவே தேதி அறிவிக்கப்பட்டு, தேர்வு நடத்த அனைத்துப் பணிகளும் நடந்து முடிந்துவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க இயலாது' எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து விட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

வழக்கு விசாரணையில், தேர்வுத் தேதியை ஒரு நாள் தள்ளி வெளியிடப்பட்டதால், 21 வயதே நிரம்பாத 13127 பேர் தேர்வெழுத வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்ற விவரத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தேர்வு எழுத வாய்ப்பை இழந்தவர்கள், ``2012, 2013, 2015, 2016 இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தேர்வுகளிலும் 21 வயது நிரம்பியவர்களே தேர்வு எழுதியுள்ளனர். 2017 மற்றும் 2018-ம் ஆண்டு தேர்வு நடத்தி இருந்தால் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். 2018-ம் ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி விளம்பரத்தை வெளியிட்டிருந்தால் கூட பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரு நாள்  தேர்வுக்கான விளம்பரத்தைக் கால தாமதத்தோடு அறிவிப்பை வெளியிட்டதால் கடைசியான தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்னும் பட்டப்படிப்பே முடிக்காத பலரும் தேர்வு எழுத வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்றனர் கண்ணீரோடு.

இதுகுறித்து,  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ், ``ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் 21 வயதே நிரம்பாத பலருக்கும் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது நல்ல விஷயமே. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. விரைவில் குரூப் 1 தேர்வை வெளியிட  உள்ளோம்" என்றார்.