Published:Updated:

இளைய தலைமுறையினர்களை அதிகம் பாதிக்கும் `டெக்னோபெரன்ஸ்!’

கடந்த 13 வருடங்களில் மொபைல் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பதாகவும், இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தாலும்கூட, அதே அளவில்...

இளைய தலைமுறையினர்களை அதிகம் பாதிக்கும் `டெக்னோபெரன்ஸ்!’
இளைய தலைமுறையினர்களை அதிகம் பாதிக்கும் `டெக்னோபெரன்ஸ்!’

18 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைய தலைமுறையினர்கள் `டெக்னோபெரன்ஸ்’ மூலம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற விவரம், ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. அதாவது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மொபைல் போன்களால், தூக்கமின்மை பிரச்னைகள், உடல்நலக் குறைபாடு,  வேலைத் திறன் பாதிப்பு மற்றும் வாகனம் ஓட்டுவதில் கவனக் குறைவு என இன்றைய இளையதலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள 18 முதல் 83 வயது வரையுள்ள மொபைல் பயனாளர்கள் 709 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் 18 - 24 வயது வரையுள்ளவர்கள்  40.9% பேர் 'டெக்னோபெரன்ஸ்' மூலம் பாதிக்கப்படுகிறார்கள் எனவும், 25 - 29 வயது வரையுள்ளவர்கள் 22.5% பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14% பெண்களும், 8.3% ஆண்களும் அதிகநேரம் மொபைல்போன் பயன்படுத்துவதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்கிறோம் என ஆய்வின்போது தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விகிதம் கடந்த 2005-ல் 3% மற்றும் 3.2%-ஆக இருந்தது. அதேபோல, மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தால் 19.5% பெண்களும், 11.8% ஆண்களும் தூக்கமின்மை பிரச்னைகளைச் சந்திப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விகிதமானது கடந்த 2005-ல் 2.3% மற்றும் 3.2%-ஆக இருந்தது. மொபைல் போன்களைப் பணியிடங்களில் பயன்படுத்துவதால், வேலைகளைக் குறைவாகத்தான் செய்ய முடிகிறது என  14% பெண்களும் 12.6% ஆண்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது கடந்த 2005-ம் ஆண்டில் 2.3% பெண்கள் மட்டுமே வேலைத்திறன் பாதிப்பு பிரச்னைகளைச் சந்தித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

2005-ல் இதே மாதிரியான ஆய்வை குவின்ஸ்லேண்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டதையும், அதனுடன் ஒப்பிட்டுத்தான் தற்போதைய ஆய்வானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதனடிப்படையில், கடந்த 13 வருடங்களில் மொபைல் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பதாகவும், இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தாலும்கூட, அதே அளவில் பிரச்னைகளும் அதிகரித்திருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.