Published:Updated:

கோடையில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க 5 வழிகள்!

கோடையில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க 5 வழிகள்!
கோடையில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க 5 வழிகள்!

கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல், `குளுகுளுவென்று’ இருக்க பல்வேறு கட்டுமான யுக்திகள் ஏராளமாக வந்துவிட்டன. வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இன்டீரியர் ஐடியாக்கள் நிறைய இருக்கின்றன. அப்படியிருக்கும் போது...

கோடை நெருங்கிவிட்டால் போதும், இதுவரை வீட்டில் ஏசி மாட்டாதவர்கள்கூட ஏசி-யை இ.எம்.ஐ-யிலாவது வாங்கி மாட்டிவிடுவார்கள். கோடையைச் சமாளிக்க வீட்டுக்குக் குளிர்சாதன வசதியைச் செய்வதுதான் ஒரே வழி என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுதான் அதற்கு மிக முக்கியக் காரணம்.

கொளுத்தும் வெப்பத்தால் வீடு பாதிக்கப்படாமல் `குளுகுளுவென’ இருக்க, பல்வேறு கட்டுமான உத்திகள் ஏராளமாக வந்துவிட்டன. வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இன்டீரியர் ஐடியாக்கள் நிறைய இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, சம்மர் சீஸனில் ஏசியை மட்டுமே நம்பி இருப்பது உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.

மெலிதான வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்!

கோடைக்காலத்தில் வீட்டுக்குள் காற்று வரட்டும் என, திரைச்சீலைகளை நீக்கிவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள். இதனால் வீட்டுக்குள் அனல்காற்று அதிகரித்து, உஷ்ணத்தை உண்டாக்கும். மாறாக, அனல்காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும்.

வெயில் காலங்களுக்கு ஏற்ற பெயின்ட்கள் இன்று கிடைக்கின்றன. வீட்டின் சூட்டை அதிகப்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றுபவை, வீட்டுக்கு அடிக்கும் வண்ணங்கள். கோடைக்காலத்தில் உள்ளே அடிக்கும் வெளிர் நிறங்கள் தரும் மகத்துவத்தைப்போல, வீட்டின் வெளிப்புறத்துக்கு அடர்த்தியான வண்ணத்தைவிட மெலிதான வண்ணங்களே சிறந்தவை. மெலிதான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் கிரகித்துக்கொள்ளாமல் பிரதிபலிக்கும்.

முக்கியமாக மேற்கூரை மற்றும் பக்கச்சுவர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ணங்கள் ஐவரி, பிங்க், வெளிர் பச்சையாக இருந்தால், அது வீட்டுக்குள் குளிர்ந்த தன்மையை உண்டாக்கும் என்பது இன்டீரியர் டிசைனர்களின் அட்வைஸாக இருக்கிறது.

இயற்கையால் ஆன தடுப்புத் திரைகள்!

தென்னை ஓலை, பனை ஓலை, வெட்டிவேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும். ஈவை வழக்கமான திரைச்சீலைகளைப்போல் அல்லாமல், பார்ப்பதற்கு ரிச் லுக் தருவதாக இருக்கும். அதனால் வீட்டின் இன்டீரியர் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருக்கும்.  

தனி வீடாக இருக்கும்பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பிவைக்கலாம். கோணிப்பைகள் தென்னை நார்களால் தயாரிக்கப்பட்டிருத்தல் நலம். இதன்மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும் வரை நிரந்தரமாக பந்தல்போட்டு வைக்கலாம். இப்படிச் செய்தால், மாடியின் தரையைக்கூட வெயிலால் தொட முடியாது. வீடு கட்டும்போதே, வெப்பம் இறங்காதபடி மேற்கூரைகளை அமைத்துக்கொள்வது வெயில் காலங்களில் மட்டுமல்ல, மற்ற சீஸன்களிலும் வெப்பம் வீட்டுக்குள் இறங்காமல் இருக்கும். வெப்பத்தைக் கடத்தாத வகையில் கற்களைப் பதிப்பது, கான்கிரீட் தளங்களை அமைத்த பிறகு, அதற்குமேல் செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையைப் பூசுவது என ஏராளமான கட்டுமான உத்திகள் வந்துவிட்டன.

பூச்செடிகளை பால்கனியில் படரவிடுங்கள்!

சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில், பால்கனிகள், துணிகளைக் காயப்போடுவதற்கும், குப்பைகளை நிறைத்து வைப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வெயில் காலங்களில் பால்கனிகள் தரும் பயன் மகத்தானது. வெயில் காலங்களின் இரவு நேரங்களில் பால்கனிகளில் அமர்ந்து பேசும் சுகம் அலாதியானது. ரசிக்கக்கூடிய வகையில் பால்கனிகளை வைத்துக்கொள்ளுங்கள். பால்கனிகளில் சின்னச் சின்ன பூச்செடிகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் ஆகியவற்றை அழகிய பானைகளில் வளர்க்கலாம்.

கொடி வகைகளை பால்கனியில் படரவிட்டால், அழகாகவும் `குளுகுளு’ என்றும் இருக்கும். மேலும், வீட்டுச் சுவரில் இயற்கைக் காட்சிகள்கொண்ட `வால் பேப்பர்களை’ ஒட்டிவைப்பது, கண்களுக்கு இதமான உணர்வை உண்டாக்கும். பெரும்பாலும் இன்றைய வீட்டுத் தரைகள் எல்லாமே டைல்ஸ்களால்தாம் அமைக்கப்படுகின்றன. இந்த வகையான தரைகள் வெயில் காலங்களில் உஷ்ணத்தை அதிகமாக  உணரச்செய்யும் என்பதால், தரையை தினமும் இரண்டு முறை தண்ணீர்கொண்டு துடைக்கும்போது, வீட்டின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்

குளுகுளு நீரூற்று!

அவரவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப சிறிய அளவில் `வாட்டர் பவுண்டெயின்’ எனப்படும் நீர் ஊற்றுகளை அமைக்கலாம். வீட்டின் முற்றம், வரவேற்பு அறை, போர்டிகோ போன்ற இடங்களில் நீரூற்று இருக்கும்போது வீடு முழுவதும் குளிர்ச்சியை அந்த நீரூற்று அகலப்படுத்தும். வீட்டுக்குள் ஒலிக்கும் தண்ணீரின் சத்தம் மனதில் புத்துணர்ச்சியை உண்டாகும்.

இந்த மாதிரியான நீரூற்றுகளை வீடு கட்டும்போதே அமைப்பதுதான் சிறப்பு. அப்படி அமைக்காமல்போனவர்கள் கவலைப்படத் தேவையில்லை. உள் அலங்காரப் பொருள்கள் அதிகம் கிடைக்கும் ஹோம் சென்டர்களில் செயற்கை நீரூற்றுகள் கிடைக்கின்றன. வீட்டில் இருக்கும் இடவசதிக்கு ஏற்ப இதை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இல்லமெல்லாம் இண்டோர் பிளான்ட்! 

வீட்டின் குளிர்ச்சிக்கு இண்டோர் பிளான்ட்களின் பங்கு மிகப்பெரியது. கோடைக்காலங்களில் வீட்டுக்குள் எது இருக்கிறதோ இல்லையோ, இண்டோர் பிளான்ட்கள் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். இன்று பெருநகரங்களில் மட்டும் இல்லாமல் இண்டோர் பிளான்ட்கள் வளர்க்கும் முறை பட்டித்தொட்டி எங்கும் வந்துவிட்டது. இதற்குக் காரணம், அதன் கவர்ச்சியான அழகும் ஆரோக்கியமும்தாம். இயற்கைச்சூழலை அப்படியே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றன. இண்டோர் பிளான்ட்கள் இருந்தால், இல்லம் எங்கும் தூய்மையான காற்றும் குளிர்ச்சியும் படர்ந்தே இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு