Published:Updated:

`யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம்!’ அதிரவைக்கும் புதிய இந்தியக் காடுகள் சட்டத்திருத்தம்

`யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம்!’ அதிரவைக்கும் புதிய இந்தியக் காடுகள் சட்டத்திருத்தம்

இந்திய வன உரிமைச் சட்டம், பழங்குடிகளின் உரிமைகளை ஜனநாயகப்படுத்தியது. அந்த மக்களாட்சி முறையை ஒழித்து மீண்டும் காடுகளுக்குள் சர்வாதிகாரத்தையே கொண்டுவருகிறது இந்தியக் காடுகள் சட்டத்தின் 2019-ம் ஆண்டு சட்டத்திருத்தம்.

`யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம்!’ அதிரவைக்கும் புதிய இந்தியக் காடுகள் சட்டத்திருத்தம்

இந்திய வன உரிமைச் சட்டம், பழங்குடிகளின் உரிமைகளை ஜனநாயகப்படுத்தியது. அந்த மக்களாட்சி முறையை ஒழித்து மீண்டும் காடுகளுக்குள் சர்வாதிகாரத்தையே கொண்டுவருகிறது இந்தியக் காடுகள் சட்டத்தின் 2019-ம் ஆண்டு சட்டத்திருத்தம்.

Published:Updated:
`யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம்!’ அதிரவைக்கும் புதிய இந்தியக் காடுகள் சட்டத்திருத்தம்

ந்த உலகிலிருக்கும் அனைத்துமே மனிதனின் வாழ்வைச் செழுமைப்படுத்தவும், அவனது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்குக் கருவிகளாகப் பணிபுரியவுமே என்றெண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகில் மனித இனம் மட்டும் தோன்றாமலிருந்திருந்தால் எத்தனை காடுகள் காப்பாற்றப்பட்டிருக்கும். எத்தனை உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துபோவதைத் தடுத்திருக்க முடியும். அவ்வளவு அபாயமானவர்களாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்.

நாம் கையாள்வது சுற்றுச்சூழல் குறித்த பிரச்னைகளை. அது மனிதன் உருவாக்கியதல்ல. அதை அரைகுறையாகவோ, அறிவியலின்றியோ கையாள்வது விளைவுகளை விபரீதமாக்குமேயொழிய சரிசெய்யாது. கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு வளர்ச்சியின் மீது அதிகக் கவனம் செலுத்திவருகிறது. ஆனால், தரமான சுற்றுச்சூழலின்றி எந்த வளர்ச்சித் திட்டத்தின் பலனும் அனைத்து மக்களுக்கும் முழுமையாகச் சென்றடையாது. அதைத் தற்போதைய அரசு வசதியாக மறந்துவிட்டது அல்லது மறுத்துவிட்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் என்பது சூழலுக்குச் சீர்கேடுகள் விளையாமல் பாதுகாக்கவே. ஆனால், தொழிற்சாலைகளும் வளர்ச்சித் திட்டங்களும் தடையின்றி வருவதற்குத் தகுந்தவாறு வசதி செய்துகொடுக்க வேண்டுமென்பதையே தற்போதைய சுற்றுச்சுழல் அமைச்சகம் பிரமாணமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் காடுகள் சட்டத்தின் புதிய சட்டத்திருத்தம்.

இந்திய வனப்பகுதிகளிலிருந்து பட்டா மறுக்கப்பட்ட பழங்குடிகளையும் காடுசார் மக்களையும் வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய வன உரிமைச் சட்டத்துக்கு விரோதமான இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள், மத்திய அரசை அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து ரத்துசெய்யத் தூண்டியது. இந்தப் போராட்டங்களின் பெருமூச்சு இன்னும் அடங்காமலிருக்க, அதற்குள்ளாகவே மீண்டுமொரு தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது ஆளும் பா.ஜ.க அரசாங்கம். இந்தியக் காடுகள் சட்டத்தில் சில சட்டத்திருத்தங்களை முன்வைத்து அனைத்து மாநில அரசுகளிடமும் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சட்டத்திருத்தங்கள், காடுகளில் வாழும் மக்களைச் சுட்டுத்தள்ளக்கூட வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சிதைத்துக்கொண்டிருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு ஈடானது வனத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரம். மக்களை அவர்களின் அனுமதியின்றியே வனத்துறையால் கட்டாயமாக வெளியேற்ற முடியும். இதுமாதிரியான சில அபத்தமான அம்சங்களைக் கொண்ட இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதைப் பழங்குடிகளுக்கு எதிராக பா.ஜ.க தொடுத்துள்ள போரின் தொடக்கமென்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அழிவுகளைக் கொண்டுவரப்போகிறது இந்தியக் காடுகள் சட்டத்தின் சட்டத்திருத்தம் 2019.

இந்தச் சட்டத்திருத்தம் கூறும் சில முக்கிய அம்சங்களை அலசினாலே அது புரிந்துவிடும்.

* வனத்துறை காடுகளையும் காடுசார்ந்த பொருள்களையும், உதாரணத்துக்கு மரங்கள் மற்றும் காட்டுயிர்களைப் பாதுகாக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். இது ஏற்கெனவே உள்ள அம்சம்தான், இதில் செய்யவிருக்கும் திருத்தங்கள் ஆபத்தானவை. வனப்பாதுகாப்புக்கு ஆபத்து என்று வனத்துறை அதிகாரிகள் நினைத்தாலே போதும், அவர்கள் யார்மீது வேண்டுமானாலும் துப்பாக்கிச்சூடு நடத்தலாம். அது இந்தச் சட்டத்திருத்தத்தின்படி (66(2)) கேள்விக்கு உள்ளாக்கப்படாது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் இதே அதிகாரம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தால் வாடும் வடகிழக்கு மாநில மக்களின் கண்ணீர் கதைகளே இது ஏற்படுத்தும் விளைவுகளுக்கான சாட்சிகள். 

* பழங்குடி மக்களுக்கும் காடு சார்ந்து வாழும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சட்டப்படியான உரிமைகளை, நஷ்ட ஈடு கொடுத்து வெளியேற்றலாம். மாநில அரசு நினைத்தால் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு இதைச் செய்யலாம். அதற்கு அந்த மக்களின் ஒப்புதல் தேவையில்லை. மக்களின் அனுமதியின்றியே கட்டாயமாகக் குடியிருப்புகளை இடம் மாற்றலாம். அவர்களின் உரிமைகளை வனத்துறை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்வதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டத்திருத்தம் வழங்குகிறது.

* இந்திய வன உரிமைச் சட்டம், பழங்குடிகளின் உரிமைகளை ஜனநாயகப்படுத்தியது. அந்த மக்களாட்சி முறையை ஒழித்து மீண்டும் காடுகளுக்குள் சர்வாதிகாரத்தையே கொண்டுவருகிறது இந்தியக் காடுகள் சட்டத்தின் 2019-ம் ஆண்டு சட்டத்திருத்தம் (22A(2)).

* காட்டுக்குள் ஏதேனும் சட்டவிரோதமாக நடந்திருந்தால், அதைச் செய்தவர்கள் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களென்று வனத்துறை சந்தேகிக்கின்றதோ அந்த மொத்தக் கிராமத்தையுமே தண்டிக்கலாம். உதாரணமாக, அவர்களுக்கான உரிமைகளை மறுப்பது, அவர்கள் வனப்பொருள்களைச் சேகரிக்க அனுமதி மறுப்பது என்று மொத்தக் கிராமத்தையுமே தண்டிக்கலாம். இது ஆங்கிலேயேர்களின் காலனி ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறை. ஜனநாயக ஆட்சிக்குப் புறம்பாக காலனி ஆட்சிக்கால நடைமுறையைக் கொண்டுவருகிறது இந்தச் சட்டத்திருத்தம் (26(3)). நிலவுடைமைச் சமுதாயங்கள் செய்த அடக்குமுறைச் செயற்பாடுகளை மீண்டும் கொண்டுவருகிறது இந்தச் சட்டப்பிரிவு.

* காட்டின் எந்தப் பகுதியையாவது பாதுகாக்க வேண்டுமென்று வனத்துறை கருதினாலே போதும். அங்கு மக்களுக்கு இருக்கும் உரிமைகளை வனத்துறை ரத்து செய்யலாம். அதற்கு அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் மட்டுமே போதுமானது. இது மிகவும் ஆபத்தானது. காடுகளுக்குள் வாழும் பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டால் அந்த நிலப்பகுதியைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது எளிதாகிவிடும். அவற்றைக் காப்பதில் ஜனநாயகரீதியாகச் செயல்படும் இந்திய வன உரிமைச் சட்டம் காடுகள் தனியாருக்குச் செல்லாமல் பாதுகாக்க மக்களுக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், இந்தியக் காடுகள் சட்டம், 2019-ம் ஆண்டு சட்டத்திருத்தம் (30(b)) அந்த அதிகாரத்தைப் பிடுங்குகிறது. 

* ஒருவர் வனத்துறையின்கீழ் நடக்கும் வனப்பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பெற்றாலும் சரி, மறைமுகமாகப் பங்கு பெற்றாலும் சரி (வேட்டைத் தடுப்பு காவலர், சுற்றுலா வழிகாட்டி போன்ற அரசுப் பணிகளில் பங்குகொள்ளுதல்) சட்டத்திருத்தம் (29(3))-ன் படி அவர்களால் சட்டரீதியாகத் தம் சலுகைகளைக் கோரமுடியாது.

* காட்டுக்குள் விவசாயம் செய்பவர்கள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக விவசாயம் செய்யமாட்டார்கள். விவசாய நிலங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். இது சூழலியல் ரீதியாக ஆரோக்கியமானதுதான். சட்டத்திருத்தம் (34(C)) மண் வளத்தை அழிக்காமல் செய்யப்படும் இந்த வகை விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

இந்தச் சட்டத்திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வனத்துறை அதிகாரிகள் சட்டப்படியே சர்வாதிகாரிகளாக மாற்றப்படுவார்கள். மற்ற எந்த அரசுத் துறைக்குமே கொடுக்கப்படாத அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வனத்துறைக்கு வழங்கப்படும். ஏற்கெனவே, வனத்துறைக்கும் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கும் ஆரோக்கியமான உறவுமுறை இருப்பதில்லை. இந்திய வன உரிமைச் சட்டம் வனத்துறைக்கு வழங்குவதைப் போலவே தம் வனத்தைப் பாதுகாக்க, பழங்குடிகளுக்கும் உரிமை வழங்குகிறது. இதையே சுற்றுச்சூழல் அமைச்சகத்தாலும் வனத்துறையாலும் தாங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறது. அதன் விளைவுதான் அந்தச் சட்டத்தை இல்லாமலாக்க நடந்துகொண்டிருக்கும் முயற்சிகள். இந்நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்தவும் இவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மிக எளிமையாக நிகழ்த்தவும் வசதியான வகையில் ஏற்படுத்தப்படும் இந்தச் சட்டத்திருத்தம் பழங்குடிகளின் இருப்புக்கே ஆபத்தானாலும் ஆச்சர்யமில்லை. இன்னும் விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கியுள்ளதைவிட அதிகமான அதிகாரங்கள் வனத்துறைக்கு வழங்கப்படும். இது காடுசார்ந்து வாழும் பழங்குடியின மக்களுக்கு எதிரான போர். 

இந்த அடக்குமுறைகளின் மூலமாக அதிகாரவர்க்கம் காடுகளிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றும். அதன் பிறகு, அந்தக் காடுகளைத் தனியார்வசம் ஒப்படைப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. இத்தகைய அரசியல் உள்நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், வனப்பாதுகாப்பு, பழங்குடியின உரிமைகள் என்று அனைத்துமே சிதைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜனநாயக ஆட்சிமுறைப்படி அளவுக்கு அதிகமான அதிகாரங்களை யாருக்கும் வழங்கக் கூடாது. அது ஆபத்துக்கும் அழிவுகளுக்குமே வித்திடும்.

வனத்துறையும் தனியார் நிறுவனங்களும் மட்டுமே ஆட்சி செலுத்தும் வகையில் காடுகளை மாற்றுவதுதான் இந்தச் சட்டத்திருத்தங்களின் நோக்கமாகத் தெரிகிறது. பழங்குடிகள் மற்றும் காடு சார்ந்த மக்களுக்கு எதிராகக் காலனியாட்சிக் காலத்திலும், நிலவுடைமைச் சமுதாய காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளும் அநியாயங்களும் நடந்தேறின. இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் அதே அநியாயங்களையும் அக்கிரமங்களையும் முன்பைவிட இரண்டுமடங்கு அதிகமாக நடத்தி வைக்கும். இது காடுகளைச் சார்ந்து வாழும் 20 கோடி மக்களுக்கு எதிரான ஒட்டுமொத்த தாக்குதல். இந்தத் தாக்குதல் வெற்றிபெறாது. இந்திய வன உரிமைச் சட்டத்தை மழுங்கடிக்கச் செய்யப்பட்ட முயற்சிகள் எப்படி முறியடிக்கப்பட்டதோ அதேபோல் மக்கள் போராட்டங்களால் இந்த முயற்சிகளும் முறியடிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism