Published:Updated:

இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை!

கான மயில்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய பறவை. இந்தியாவின் தேசியப் பறவையாக இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார் பறவையியலாளர் சாலிம் அலி.

இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை!
இது மட்டும் நடந்திருந்தால், இப்போது கான மயில்தான் நம் தேசியப் பறவை!

காலை ஒன்பது மணியிருக்குமென்று நினைக்கிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்சல்மரில் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் பாலைவன தேசியப் பூங்காவின் மத்தியப் பகுதியிலிருந்த ஒரு பாறைமீது அமர்ந்திருந்தோம். அந்தப் பகுதியில் எண்ணிக்கையில் பெருகிய நாய்களால் கான மயில்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பற்றி தேவ் சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்திர பாண்டே, கான மயில்களை அங்கு ஆய்வு செய்துவரும் பறவைகள் ஆய்வாளர்களில் ஒருவர். இருவருமே எங்கள் தொலைநோக்கிகளில் கண்களை நுழைத்து துழாவிக் கொண்டிருந்தோம். 

அதிகாலையிலேயே பார்த்த அந்த ஒற்றை ஆண் கான மயில் கண்கணுக்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கான மயில்களைப் பார்த்த அந்த நிமிடம், உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. எத்தனையோ பறவையாளர்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து ரசிக்கத் துடிக்கும் பறவை என் கண்முன்னே இருநூறு மீட்டர் தூரத்தில் ராஜ நடைபோட்டுச் சென்றுகொண்டிருந்தது. மீண்டும் பார்த்துவிட மாட்டேனா என்ற பேராசை மனதை வியாபித்திருந்தது. பேராசை என்றுதான் தேவ் சொன்னார். ஒன்றிரண்டு கான மயில்களைப் பார்ப்பதே அரிது. அதிலும், ஆண் கான மயில்களைப் பார்ப்பது அதைவிட அரிது. காலையில் இருநூறு மீட்டர் தூரத்திலேயே ஓர் ஆண் கான மயில் காட்சியளித்தது. அதற்குப் பின்னர், தலைக்கு மேலே பறந்துசென்ற இரண்டு ஆண் கான மயில்கள். அவ்வளவு பெரிய உருவத்தைத் தூக்கிக் கொண்டு அவற்றால் எப்படித்தான் பறக்க முடிகிறதோ என்ற பிரமிப்பு அகலாத நிலையில்தான் அங்கு அமர்ந்து தொலைநோக்கியில் அடுத்த தரிசனத்திற்காகத் துழாவிக் கொண்டிருந்தேன். அவற்றின் உருவ அமைப்பைப் பார்த்தால் இவற்றால் பறக்க முடியாதென்றே நினைக்கத் தோன்றும். அவ்வளவு உயரமான, தடித்த உருவம். மூன்றடி உயரம் இருக்கும். சில பறவைகள் அதற்கு மேலேகூட இருக்கலாம். 

Photo Courtesy: Subagunam Kannan

பிரமிப்பு அகலாமல் தேடிக்கொண்டிருந்த கண்களின் வேட்டைக்குக் கிடைத்தன மீண்டும் இரண்டு கான மயில்கள். தேவுக்கும் பார்த்த திசையைக் குறிப்பிட இருவருமே பார்க்கத் தொடங்கினோம். இந்தமுறை இரண்டு பெண் கான மயில்கள். அழகான நடையில் ஆரவாரமில்லாமல் சாவகாசமாக நடந்துசென்ற அவற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்த எங்களுக்கு ஒருமணிநேரம் கடந்ததுகூடத் தெரியவில்லை. புற்களுக்குள்ளும் புதர்ச் செடிகளுக்குள்ளும் பூச்சிகளைத் தேடித் தேடி காலை உணவை ருசித்துக்கொண்டிருந்த அவற்றை நாங்கள் ரசித்துக்கொண்டிருந்தோம். 

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சென்றிருந்தேன். பனிக்காலத்தின் இறுதியென்பதால் வெயிலின் கடுமையும் அதிகமாகவே இருந்தது. தோல் கிட்டத்தட்ட கருகியே விட்டது. தாகமோ, வெயிலின் தாக்கமோ எதுவுமே தெரியவில்லை. அகப்புறக் கண்கள் அனைத்துமே கான மயிலைப் பார்ப்பதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தன. அழிவின் விளிம்பில் பிழைத்திருக்கப் போராடிக் கொண்டிருக்கும் அவற்றின் இருப்பைக் கண்டாக வேண்டுமென்ற வேட்கை. அந்த வேட்கைக்குக் கிடைத்த பலன் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாதது.

இந்தியக் கான மயில்தான் (The Great Indian Bustard) இந்தியாவின் மிகப்பெரிய பறவை. இந்தியாவின் தேசியப் பறவையாக இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார் பறவையியலாளர் சாலிம் அலி. இவற்றை அப்படித்தான் பாதுகாக்க முடியுமென்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்ததோ என்னவோ? அவர் கூறியதுபோல் இவற்றைத் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை அவற்றின் நிலை இவ்வளவு ஆபத்தாகும்வரை இந்திய அரசு விட்டிருக்காது. அப்போது மயிலோடு சேர்ந்து, கான மயிலும் தேசியப் பறவைக்கான பரிந்துரையில் இருந்தது. ஆனால், இதன் ஆங்கிலப் பெயரின் இறுதி வார்த்தை கொஞ்சம் பிசகினாலும் கெட்ட வார்த்தையாகிப் போய்விடுமோ என்ற சிக்கலால் கான மயில் அறிவிக்கப்படாமல் போனது. இல்லையெனில், இதுதான் இப்போது நம்முடைய தேசியப் பறவை.

Photo Courtesy: Subagunam Kannan

மேற்பகுதி திறந்துவிடப்பட்டிருந்த ஜீப்பின் பின்புறத்தில் தொலைநோக்கியோடு நின்றுகொண்டேன். பாலைவன தேசியப் பூங்கா முழுவதும் சுற்றினோம். தேவும் என்னோடு நின்றுகொண்டார். பசியோ தாகமோ எதுவுமே தெரியவில்லை. மனம் முழுக்க நிறைந்திருந்ததும் கான மயில்கள் மட்டுமே. பாலைவனம், ஓர் அற்புதமான நிலவியல் அமைப்பு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்த சமவெளி முழுக்க நிறைந்திருந்த புற்களும் புதர்களும் வெற்றுக் காகிதத்தில் வரைந்த புள்ளிக் கோலங்களாய் மனதை ஈர்த்தன. பாலைகளை எப்போதும் சோகத்திற்குச் சான்றாக, வறட்சிக்குச் சான்றாகக் கூறுகிறார்கள். அதுவோர் அற்புதமான நிலவியல் அமைப்பு. மனிதர்களின் உடையிலிருந்து வீடுகள்வரை அனைத்துமே அந்நிலத்தின் தன்மைக்குத் தகுந்த வகையிலிருந்ததுதான் அதன் தனிச்சிறப்பு. அந்நிலத்தில் வாழும் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.

பாலைவன நரி (desert fox), அதிகமாகத் தென்பட்ட விலங்கு. ஒன்றரை அடி உயரமே உடைய அவை திரும்பிய திசையெல்லாம் ஓடிக் கொண்டிருந்தன. சிங்காராக்களின் துள்ளும் குளம்புகளைக் காணவும் வாய்த்திருந்தது. சுருண்ட கொம்புகளுக்கு மத்தியிலிருந்து பார்வையைக் கீழிறிக்கினால் தெரியும் அடர்ந்த நிறம் அவற்றின் அழகைத் தூக்கி நிறுத்துகின்றன. சிறிது தூரம் ஓடிச் செல்வதும், நின்று திரும்பிப் பார்ப்பதுமாக அனைத்துச் சிங்காராக்களும் செய்த ஓடிப்பிடி விளையாட்டின் சுவாரஸ்யம் ஒளிப்படக்கருவிகளில் அவற்றைப் பிடிப்பதற்காக என்னையும் அவற்றோடு ஓடிப்பிடித்து விளையாட வைத்தது. 

Photo Courtesy: Subagunam Kannan

ஒவ்வொரு கான மயிலைப் பார்க்கையிலும் அந்த இடத்திலேயே அமர்ந்துவிடுவோம். இவ்வளவு நேரம்தான் இருக்கவேண்டுமென்ற கணக்கெல்லாம் இல்லை. அது கண்களிலிருந்து தொலையும்வரை, அது இரண்டு மணிநேரங்களானாலும் அப்படியேதான் அமர்ந்திருந்தோம். அவற்றின் அன்றாடப் பணிகளை ரசித்துக்கொண்டே நின்றிருந்த எனக்குக் கண்களை வேறு பக்கமாகத் திருப்புவதே கடினமாக இருந்தது. ஜொலிக்கும் இறகுகளுக்கு மத்தியில் தெரிந்த உடலசைவுகளை அங்குலம் அங்குலமாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கான மயில்களை நேரில் பார்த்தால், அவை உங்களை மயக்கிவிடும் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தே கிடையாது. அவை வானில் பறப்பது எத்தனை அழகானதோ, அதைவிட அழகானது அவற்றின் நடை. மென்மையாக அடியெடுத்து வைக்கும், அலட்டலற்ற பொறுமையான நடை. கம்பீரமான ராணி பவனி வருவதைப் போன்ற நடை நம் கண்களுக்குச் சிறையிட்டுப் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனுடையது.

அதிகாலை 7 மணிக்குச் சென்றோம். மாலை 5 மணிவரை தேடித் தேடி ஏழு கான மயில்களைப் பார்த்தோம். இந்தப் பறவைகளைப் பார்ப்பதில் ஈடுபட்ட மனம் நேரம் பார்ப்பதை ஏனோ மறந்துபோனது. இரண்டு பறவைகளை மட்டுமே பறக்கும்போது பார்க்கமுடிந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை அவை பறப்பதை ரசித்தோம். கண்களைத் துளியும் அகற்றவில்லை. மீண்டும் இந்த வாய்ப்பைப் பெறுவோமோ என்ற ஐயம் கண்களை அகற்ற விடவில்லை. இவ்வளவு அழகான பறவையைப் பற்றித் தெரிந்திருப்பவர்கள் வெகுசிலரே. இதன் அழகும் தனித்தன்மையும் மிகச் சிறப்பானது. நிலத்தில் கூடுகட்டி வாழும் சிறு பறவைகளின் முட்டைகளை, புதர்களில் வாழும் பூச்சிகளைச் சாப்பிடும் இவை புதர்க்காடுகள் மற்றும் புல்வெளிக் காடுகளின் உயிரினங்களுடைய உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முன்பு தமிழகத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த இவை இன்று இல்லாமல் போனதே புல்வெளிகளைத் தரிசு நிலங்களாகக் கணக்கு காட்டி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம். நேரில் பார்த்த பின்னர்தான் இந்தப் பறவையின் அருமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்த சாலிம் அலியில் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நமக்கிருக்கும் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இவற்றைத் திரும்பிப் பார்க்கச் சில நிமிடங்கள் இருந்திருந்தால் இன்று அவை நிலை அழிவுக்கு வித்திடும் நிலைக்குச் சென்றிருக்காது. இன்றைய தலைமுறைகளுக்குக் கான மயில் என்றால் என்னவென்றே தெரியாத நிலை நிலவுவதற்குக் காரணமும் தன்னைச் சுற்றியிருப்பனவற்றைத் திரும்பிப் பார்க்க தவறிய முந்தைய தலைமுறைகள்தாம். 

Photo Courtesy: Mohib Uddin

கான மயில் கடைசியாகக் கண்களில் படும்போது மதியம் இரண்டு மணியிருக்கும். முந்நூறு கிலோமீட்டர் தொலைவிருக்கும், அப்படியே அமர்ந்துவிட்டோம். அதன் ராஜ நடையை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவர்கள், சுமார் எண்ணூறு மீட்டர் தொலைவுவரை மிகப் பொறுமையாக தேடித் தேடிச் சாப்பிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அதன்பின் அங்கிருந்து பறக்கத்தொடங்கி, மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த பக்கமே வந்தது. தலைக்கு மேலே பறந்துசென்ற அதுதான் கடைசியாகக் கண்களுக்கு விருந்தளித்த கான மயில். அதன்பிறகு, மூன்று மணிநேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு பெண், நான்கு ஆண் கான மயில்களும், ஆணா பெண்ணா என்று கண்டுகொள்ள முடியாதளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒன்றையும் பார்த்தோம். 

இறுதியாகக் கிளம்பி வருகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சூரிய அஸ்தமனம் பாலை மணல் பிரதேசத்தைப் பொன் நிலமாகக் காட்டியது. அத்தகைய பிரதேசத்தில் வாழும் பறவையின் நிலை இன்று அழியும் நிலையிருப்பது கிளம்பிய பிறகும் மனதை நெருடிக் கொண்டேயிருந்தது. இன அழிவு என்பதன் அர்த்தம் நமக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. அதனால்தான், எத்தனையோ உயிரினங்களின் இன அழிப்பைச் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக அழிய  காத்திருக்கின்றன கான மயில்கள். அதை நாம் அழிய விடப்போகிறோமா இல்லை அழிவிலிருந்து காப்பாற்றப் போகிறோமா!