Published:Updated:

`60 நாள் சும்மா இருங்க... ₹ 13 லட்சம் தர்றோம்!’ சொல்வது நாசா

நாசாவா இப்படிச் சொன்னது என யோசிக்கிறீர்களா? ஏன் சொன்னது எனத் தெரிந்துகொள்ள கட்டுரையை முழுதாகப் படியுங்கள்.

`60 நாள் சும்மா இருங்க... ₹ 13 லட்சம் தர்றோம்!’ சொல்வது நாசா
`60 நாள் சும்மா இருங்க... ₹ 13 லட்சம் தர்றோம்!’ சொல்வது நாசா

ப்பொழுதும் சோம்பலாக உணர்பவரா நீங்கள், வேலை செய்யும்போதும் ஓய்வை எதிர்பார்ப்பவரா நீங்கள், படுக்கையில் தூங்குவதையே விரும்புபவரா நீங்கள்? வாழ்த்துகள்! நாசாவின் புதிய திட்டத்தில் வேலை செய்ய நீங்கள் தகுதியானவர்தான். இதற்காக நாசாவில் நீங்கள் ராக்கெட்டுகளை எல்லாம் செய்யத் தேவையில்லை. படுக்கையில் எதுவும் செய்யாமல் தூங்கினாலே போதும்; அதற்கும் நாசா சம்பளம் வழங்கும். 

அமெரிக்க விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர். விண்வெளியில் செயற்கை புவியீர்ப்பு விசை, விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவும் என அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. 24 முதல் 55 வயது உள்ள 12 ஆண்கள் மற்றும் 12 பெண்களை இந்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபடுத்த உள்ளது. அவர்கள் 60 நாள்களுக்குப் படுக்கையிலேயே எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். நாசா இதற்காக 18,500 அமெரிக்க டாலர்களைச் சம்பளமாக வழங்க உள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 12.81 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளது. 

நாசா மேற்கொள்ளவுள்ள இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தூங்குவது மட்டுமல்லாமல் உணவு, ஓய்வு, குளியல், ஆராய்ச்சிகள் என அனைத்துமே படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும் என நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நடைபெறும்போது ஆய்வில் ஈடுபடுபவர்களின் அறிவாற்றல், தசை பலம், உடல் சமநிலை, இதயச் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். பங்கேற்பாளர்களில் பாதிபேர் எந்தவிதமான புவியீர்ப்பு விசையும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள். 

இந்த இரண்டு குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வைத்து செயற்கை புவியீர்ப்பு விசை எந்த அளவுக்கு உபயோகமாக உள்ளது என்பதை உறுதி செய்வார்கள். “விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்று தோன்றக்கூடிய உணர்வு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதற்காகப் பூமியில் இருப்பது போன்று ஈர்ப்புவிசையை செயற்கையாக உருவாக்குவது நிச்சயம் உபயோகமாக இருக்கும்” என நாசாவின் தலைமை மனித ஆராய்ச்சி திட்டத்தின் உதவித் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் லெடிசியா வெகா தெரிவித்துள்ளார்.

ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் நீண்ட காலத்துக்கு இருக்கும்போது விண்வெளி வீரர்களுக்கு உடல் ரீதியாகப் பல பிரச்னைகள் வருகின்றன. உடலில் எடை இழப்பது போன்று தோன்றுவதால் தசை மண்டலம் வலுவிழக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாகப் பூமியில் இருப்பதைவிட அதிக சிரமப்பட்டு வேலையை விண்வெளியில் அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விண்வெளியில் எலும்பின் அடர்த்தி குறைவதால் அவை உடைந்துபோகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பல நாள்களுக்கு ஒரு அறையில் ஒரே நபர்களுடன் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம், தனிமை உணர்வு மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

இந்தப் பாதிப்புகளை எல்லாம் முடிந்தளவு குறைப்பதற்காகத்தான் நாசா இந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவு வெற்றிகரமாக எட்டப்படும்போது செயற்கை புவியீர்ப்பு விசையை உருவாக்கக்கூடிய வசதியைச் செவ்வாய் போன்ற கிரகங்களுக்குச் செல்லும் விண்கலங்களில் நாசா வடிவமைக்கும். இந்த வசதியானது விண்வெளி வீரர்களை உடலளவில் மேலும் வலுவாக்கும் என நாசா நம்புகிறது.