Published:Updated:

`சௌக்கிதார்னா இப்படி இருக்கணும்!’ சிறுத்தை காவலர்களான ரபாரி பழங்குடிகள்

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் ட்விட்டரில் ஐடி இருப்பவர்களெல்லாம் 'சவுக்கிதார்' என அடைமொழி வைத்துக்கொண்டு சுற்றுகின்றனர். சவுக்கிதார் என்பதற்கு பாதுகாவலர் என்று பொருள். அதன் உண்மை அர்த்தத்தை நமக்கு நெகிழ்ச்சியுடன் உணர்த்துகின்றனர் இந்த ரபாரி பழங்குடிகள்.

`சௌக்கிதார்னா இப்படி இருக்கணும்!’ சிறுத்தை காவலர்களான ரபாரி பழங்குடிகள்
`சௌக்கிதார்னா இப்படி இருக்கணும்!’ சிறுத்தை காவலர்களான ரபாரி பழங்குடிகள்

ற்பனை செய்துபாருங்கள். நீங்கள் வாழும் கிராமம் காட்டையொட்டி இருக்கிறது. அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம். இரவுநேரங்களில் உங்கள் கால்நடைகளை வேட்டையாடிச் செல்கிறது. விவசாய நிலங்களில் கோயில்களில் என்று எங்கு பார்த்தாலும் சிறுத்தை. சிறுத்தையின் காலடித் தடங்களைப் பார்க்க முடியாதென்ற நிலமே கிடையாது. அதன் கால்படாத இடமே கிடையாது. எங்கும் சிறுத்தை. எப்போதும் சிறுத்தை. 

முதலில் அப்படியொரு நிலத்தைக் கிராமமென்று சொல்வீர்களா? ஆனால், அப்படியொரு கிராமத்தில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொதுவாக மக்கள் சிறுத்தைகளைப் பார்ப்பது அரிதுதான். ஆனால், அங்கு சென்றால் அது அரிதல்ல. இத்தனைக்கும் அதுவொன்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இல்லை. மக்கள் வாழும் கிராமப்பகுதிதான். அந்தக் கிராமம் காட்டை ஒட்டியுள்ள ஒரு சாதாரண பழங்குடியின கிராமம்.

ராஜஸ்தானில் உதய்பூருக்கு ஜோத்பூருக்கும் இடையில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் கிராமம்தான் பேரா. அந்தப் பகுதியில் வாழும் ரபாரி (Rabari) என்ற பழங்குடியின மக்களின் கிராமம். சுமார் 10 குக்கிராமங்கள் அடங்கிய இந்தப் பகுதி சிறுத்தைகளுக்குச் சிறப்பான வாழிடத்தைக் கொடுக்கின்றது. பாறைகளால் நிரம்பிய அந்த மலைக் கிராமத்தைச் சுற்றி ஐம்பதுக்கும் அதிகமான சிறுத்தைகள் வாழ்கின்றன. அவை அங்கிருக்கும் பாலைவனப் புதர்க் காடுகளிலும் விவசாய நிலங்களிலும் சுற்றிக்கொண்டிருக்கும். அங்குதான் மக்களும் வாழ்ந்துகொண்டும் விவசாயம் செய்துகொண்டுமிருப்பார்கள்.

ஆப்பிரிக்கா வரை பயணித்தும் ஒரு சிறுத்தையைக்கூடக் கண்களால் தரிசிக்க வாய்ப்பின்றி ஏமாற்றத்தோடு திரும்பி வருபவர்கள், இங்கு வந்தால் குறைந்தது இரண்டு சிறுத்தைகளையாவது கண்டிப்பாகப் பார்த்துவிடலாம். அங்கு இவ்வளவு அடர்த்தியான எண்ணிக்கையில் அவை வாழ்வதற்குக் கிராம மக்களோடு அவற்றுக்குள்ள உறவே காரணம். மக்களும் சிறுத்தைகளும் அங்கு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இதைத்தான் இயல்பான வாழ்வாகப் பார்க்கச் சொல்கின்றனர் காட்டுயிர் ஆய்வாளர்கள். அந்தப் பார்வையை நடைமுறையில் நூறாண்டுகளாகச் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கின்றனர் ரபாரி இன மக்கள். கால்நடை மேய்ப்பர்களான ரபாரி மக்கள், இரானிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகப் பயணித்து ராஜஸ்தானில் குடியேறிய நாடோடிப் பழங்குடிகள். காலப்போக்கில் இங்கேயே குடியிருந்துவிட்டனர்.

Photo Courtesy: Sheesh

ஊருக்குள் வந்துவிடும் சிறுத்தை கால்நடைகளை அடித்துச் சென்றால் என்ன நடக்கும்? அந்தச் சிறுத்தையைப் பிடிக்க கத்தி கம்புகளுடன் காட்டுக்குள் புகுந்துவிடுவார்கள். அது இழுத்துச் செல்லும் கால்நடைகளின் மாமிசத்தில் விஷம் தடவி, சிறுத்தையைக் கொன்றுவிடுவார்கள். இரண்டும் நடைபெறாமல் இருக்க நெருப்புப் பந்தங்களோடு சில குழுக்கள் இரவு முழுக்கக் காவலிருப்பார்கள். மின்சாரவேலிகளை அமைப்பார்கள். இதையெல்லாம் யார் செய்வார்கள்? காட்டைப் பற்றிய புரிதலே இல்லாமல் காடுகளையொட்டிய நிலப்பகுதிகளைக் கிராமங்களாக்கி வாழும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உந்துவதால் சராசரி மக்கள் செய்வார்கள். ஆனால், பேரா கிராமத்து மக்கள் இவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அந்த வேறுபாடுதான் இன்று அவர்களைப் பற்றி எழுதத்தூண்டியுள்ளது. சிறுத்தைகள் தம் கால்நடைகளை வேட்டையாடிச் சென்றால், அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அவற்றுக்குப் போடும் படையலாக நினைத்துக்கொண்டு கடந்துசெல்கிறார்கள். வன ஓரங்களில் வாழ்ந்தால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டவர்கள்.

இரவில் உலா வரும் சிறுத்தைகள் பட்டிகளுக்குள் புகுந்து ஆட்டையோ மாட்டையோ அடித்து இழுத்துச் சென்றால் அவர்களும் மற்ற சராசரி மனிதர்களைப் போலவே நஷ்டஈடு கேட்டு வனத்துறையை நாடுகிறார்கள். அதில் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ சந்தைத் தொகையில் பாதிக்கும் குறைவாகத்தான். அதிகபட்சமாக ஓர் ஆட்டுக்குச் சுமார் 1,900 ரூபாய் வரையும், மாட்டுக்கு 4,800 ரூபாயும் அதுவே ஒட்டகமாக இருந்தால் 19,000 ரூபாயும் கிடைக்கும். இது அவர்களுக்கு ஏற்படும் இழப்பை நிச்சயமாக ஈடுசெய்யாது. ஆனால், அதைப்பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. வேட்டையாடப்படும் மாட்டை இயற்கைக்குப் படைக்கும் பிரசாதமாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள்.

அங்கு வாழும் சிறுத்தைகளும் மனிதர்களை ஆபத்துக்குரியவர்களாகப் பார்ப்பதில்லை. ஆண்டுக்கு சுமார் நூறு சிறுத்தைகள் கொல்லப்படும், ஆயிரக்கணக்கான மக்கள் சிறுத்தைகளால் காயப்படும் நாட்டில் சிறுத்தைகளோடு சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பழங்குடியின மக்கள் நிச்சயம் ஆச்சர்யத்தின் உச்சம்தான். இந்தக் கிராமத்தில் சிறுத்தைகளால் தாக்கப்படும் சம்பவம் கடந்த நூறாண்டுகளில் ஒன்றே ஒன்றுதான் நடந்துள்ளது. அதையும் பாதிக்கப்பட்ட குடும்பம் தன் தவறாகவே கருதிக்கொண்டது. இருபது ஆண்டுகளுக்குமுன், வெள்ளார் என்ற குக்கிராமத்தில் ஒரு வயதுக் குழந்தை ஒன்றைச் சிறுத்தை அடித்துச் சென்றுள்ளது. அந்திசாயும் வேளையில் கால்நடைப் பட்டிக்கு அருகே அஜாக்கிரதையாகக் குழந்தையை விட்டதே அந்த அசம்பாவிதத்துக்குக் காரணமென்று குழந்தையின் பெற்றோர் தங்களைக் குற்றவாளிகளாக்கிக் கொண்டனர். இவர்களைப் பொறுத்தவரை பகல் மனிதர்களுக்கு, இரவு சிறுத்தைகளைப் போன்ற வேட்டையாடிகளுக்கு. அதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள் இந்தப் பழங்குடிகள்.

சிறுத்தைகளின் நடமாட்டத்தை ஒருவிதப் பாதுகாப்பாகவும் அவர்கள் உணருகிறார்கள். அவை அங்கிருப்பதால், நீல்காய், கடமான், காட்டுப்பன்றி, சிங்காரா போன்ற தாவர உண்ணிகளால் பயிர்ச்சேதங்கள் ஏற்படுவதில்லை. அவர்களின் விவசாய உற்பத்திகள் பாதுகாக்கப்படுகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கின்றன. மற்ற பகுதிகளில் இருப்பதைப்போல் அங்கு தெருநாய்களின் எண்ணிக்கை ஆபத்தானதாக இல்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றில் வாழ்வதையும்விட 10 குக்கிராமங்கள் அடங்கிய பேராவில் சிறுத்தைகள் அதிகமாகவே வாழ்கின்றன. பொதுவாக அவை தனித்தனியாகத்தான் உலவும். ஆனால், சற்றே வித்தியாசமாக பேராவில் ஐந்து சிறுத்தைகளைக்கூட ஒன்றாகப் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கு மிகவும் செல்லமான சிறுத்தையின் பெயர் சேத்ரி. அவளையும் அவளுடைய சகோதரியையும் அவர்களின் வழிபாட்டுக் கோயிலில் இருந்து முப்பது அடி தூரத்தில் அமைந்திருக்கும் குகை வாயிலில் அடிக்கடி பார்ப்பார்கள். அந்தக் குகைதான் அவற்றின் உறைவிடம்.

``பகல் மனிதர்களுக்கானது. இரவு சிறுத்தைகளுக்கானது" என்ற விதிமுறையைத் தவறாமல் பின்பற்றிவரும் அவர்களிடம் இயற்கைப் பாதுகாப்பு எந்தளவுக்கு உறைந்துள்ளது என்பதை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இவர்களுக்கும் ஆபத்து வரப்போகிறது. அதற்கான அறிகுறிகளும் தெரியத் தொடங்கிவிட்டன. 

காட்டுக்குள் அழைத்துச்செல்லும் ஜீப்களைப் பழங்குடியின ஆட்கள் பலரும் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களும் அங்கு வந்து புதிதாகக் கட்டடங்களைக் கட்டுவதும் ரிசார்ட்டுகளை நிர்மாணிப்பதுமாக அந்தப் பகுதியில் சுற்றுலா வளர்ந்துகொண்டிருக்கிறது. புதிதாக வரும் கட்டடங்கள் இங்கு மட்டும்தானென்ற வரையறை இல்லாமல் சிறுத்தைகள் வாழும் குகைகளுக்கு அருகில்கூடக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது அவற்றின் வாழிடத்தைச் சீரழித்துவிடும். 

இதைக் கட்டுப்படுத்த, சூழலியல் சுற்றுலா சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடாமலிருக்க அந்த மக்கள் ஒரு திட்டம் தீட்டினார்கள். பேராவைச் சமுதாயத்தால் பாதுகாக்கப்படும் வனப்பகுதியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதன்மூலம், அந்தப் பழங்குடியின மக்களால் அது பாதுகாக்கப்படும். அங்கு எத்தனை கட்டடங்கள் எங்கு வரலாம் என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டும். ஓர் ஆண்டுக்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாமென்பதில் தொடங்கி ஒரு தடவைக்கு எத்தனை ஜீப்கள் சுற்றுலாப் பயணிகளோடு காட்டுக்குள் செல்லலாம் என்பதுவரை அவர்களே தீர்மானிப்பார்கள். அந்த நிலத்தைப் பற்றி, காட்டைப்பற்றி முழுமையாகத் தெரிந்த அவர்களே வேட்டைத்தடுப்புக் காவலர்களாகவும், வனக்காவலர்களாகவும் பணிபுரிந்து தம் காட்டையும் அதன் சிறப்பான சிறுத்தைகளையும் பாதுகாப்பார்கள். இது அந்தச் சூழலின் இயல்பைக் கெடுக்காமல் சுற்றுலா மேலாண்மை செய்யப் பழங்குடிகளுக்கு உதவும். அதற்குத் தேவை அந்த அங்கீகாரம்.

பேரா கிராமத்தின் வனப்பகுதியைப் பழங்குடியினச் சமுதாயத்தால் பாதுகாக்கப்படும் வனப்பகுதியாக அங்கீகரிக்க வேண்டுமென்று கோரி 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் முதல்வருக்கு மனு கொடுத்தனர். இன்றுவரை அந்த மனு கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது. பேராவைச் சுற்றியிருக்கும் இருபத்தொரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இருந்தும் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்காமலே இருக்கிறது ராஜஸ்தான் மாநில அரசாங்கம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த அங்கீகாரத்தை வழங்கியாக வேண்டும். இல்லையேல், அந்த மக்களின் பாதுகாப்பிலிருக்கும் சிறுத்தைகள் சுற்றுலா வெறி பிடித்தலையும் ரிசார்ட்டுகளிடம் சிக்கி மனிதர்களை வெறுத்துவிடும். ரிசார்ட்டுகளால் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட மனித-விலங்கு எதிர்நோக்குதல் சிக்கல்களும் மனிதர்களைக் கண்டால் அஞ்சித் தாக்குவதும் வேட்டையாடுவதுமாக அத்தனையும் நிகழ்ந்தேறி பேராவின் சிறுத்தைகளும் பிரச்னையாகப் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும். 

இந்தியா சுமார் பதினான்காயிரம் சிறுத்தைகளுக்கு வாழிடமாக விளங்குகின்றது. 1995-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுக்குள் 4,373 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளன. வேட்டை மட்டுமின்றி ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்படுவது, விஷம் வைக்கப்படுவது, வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது என்று அனைத்துமே அடக்கம். இவை எல்லாவற்றுக்குமான தீர்வைச் செய்துகாட்டி, சூழலியல் பாதுகாப்பில் புதிய திட்டத்தை முன்வைக்கிறார்கள் சூழலியல் சௌக்கிதார்கள். அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

"சிறுத்தைகளின் காவலாளிகளாக எப்படியிருக்க வேண்டுமென்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுத்தருகிறோம். அதை அங்கீகரித்துச் செய்யவிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாய் வாழ முடியுமென்பதை உலகம் தெரிந்துகொள்ளுமென்று அஞ்சுகிறீர்களா? உங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று தயங்குகிறீர்களா!"- ரபாரி இன மனிதர்.