Published:Updated:

"நடராஜர்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹீரோ!"- நெகிழ்கிறார்  சுதா சேஷய்யன் #WhatSpiritualityMeansToMe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நடராஜர்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹீரோ!"- நெகிழ்கிறார்  சுதா சேஷய்யன் #WhatSpiritualityMeansToMe
"நடராஜர்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹீரோ!"- நெகிழ்கிறார்  சுதா சேஷய்யன் #WhatSpiritualityMeansToMe

அறிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என இரண்டு முகங்கள் கொண்டவர். இரண்டுமே அவருக்குப் பெருமிதம் தருபவை. சிதம்பரம் நடராஜர் மீது தீரா பக்தி கொண்டவர், சுதா சேஷய்யன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

றிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என இரண்டு முகங்கள் கொண்டவர். இரண்டுமே அவருக்குப் பெருமிதம் தருபவை. சிதம்பரம் நடராஜர் மீது தீரா பக்தி கொண்டவர், சுதா சேஷய்யன். நடராஜர்  பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.   

``எனக்குச் சிறிய வயதிலிருந்தே பக்தி அதிகம். காரணம் நான் வளர்ந்த சூழல். என் அம்மாவும் சரி, பெரியம்மாவும் சரி எப்போதும் தேவாரம், திருவாசகப் பாடல்களை மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருப்பார்கள். தோட்டத்திலுள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போதும், சமையலறையில் சமைத்துக்கொண்டிருக்கும் போதும், வேறு எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடியபடியே இருப்பார்கள். அவர்கள் பாடியதைக் கேட்டே வளர்ந்ததால், என் மனதிலும் தேவாரமும் திருவாசகமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டன. அவர்கள் அடிக்கடி பாடுவது, 'தை மாதத்தில் குரு பூசத்தில்' என்ற பாடலைத்தான். 
சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் நாயன்மார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், அவர்களுக்குச் சிவபெருமான் அருள் கிடைத்ததையும் என் தந்தை சுவைபட எனக்குச் சொல்லுவார். அவர் சொன்ன சிவபுராணக் கதைகள் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. 

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒருமுறை சிதம்பரம் சென்றிருந்தோம். தில்லை நடராஜரைப் பார்த்த உடனே என் மனதில் இனம் தெரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போதிருந்து பள்ளிக்கூட பாடங்களை எழுதுவதற்கும், படங்கள் வரைவதற்கும் `நடராஜ் கம்பெனி'யின் ஹெச்.பி பென்சிலைத்தான்  கையில் வைத்திருப்பேன். வீட்டில் வேறு நிறுவனங்களின் பென்சில்கள் இருந்தாலும் சரி, பென்சில் வாங்க கடைகளுக்குப் போகும்போதும் சரி வேறு பென்சில்கள் கொடுத்தால் அவற்றை வாங்கவும் மாட்டேன். பயன்படுத்தவும் மாட்டேன். நடராஜர் ஹெச்.பி. பென்சில் என்னுடன் இருந்தால், நடராஜரே என்னுடன்  பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு நம்பிக்கை. 

காலப்போக்கில் சிலைகள் பற்றிய புத்தகங்கள், பக்தி இலக்கியங்கள், தெய்வ வழிபாடு குறித்த நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். நடராஜரின் திருவுருவத் தத்துவம் பற்றி அறிந்துகொள்ள முடிந்ததுடன், நடராஜர்மேல் இருந்த பக்தியும் அதிகரித்துவிட்டது. அவ்வளவு ஏன், நடராஜர் என்னுடைய ஹீரோவாகவே ஆகிவிட்டார்'' என்று கூறியவர் தொடர்ந்து, அவரைக் கவர்ந்த நடராஜரைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியிருந்த கருத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`` `பிரபஞ்சத்தின் அசைவுகளையெல்லாம் ஓர் உருவமாகக் கொண்டு வரமுடியுமா என்று நான் பலமுறை யோசித்தது உண்டு. ஆனால், நடராஜரின் திருமேனியைப் பார்த்தபோது, பிரபஞ்சத்தின் அசைவுகளுக்கு இதைவிடப் பொருத்தமான உருவத்தைக் கொடுக்க முடியாதென்றே தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் அசைவுகளை நடராஜரின் திருவுருவத்துடன் ஒப்பிடலாம்' என்று கூறியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நடராஜர் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய இந்தக் கருத்துதான் நடராஜரிடம் எனக்கு இருந்த பக்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மெல்லிய புன்னகை தவழும் நடராஜரின் திருமுகத்தின் எல்லையற்ற அழகு தலைமைப் பண்பையும், பனித்த சடை, சிவநெறிகளுக்கு உரிய தவ ஒழுக்கச் சிறப்பையும், கங்கை இறைவனின் பேராற்றலையும் உணர்த்துகிறது. பிறைநிலா, சரணடைந்தவர்களுக்கு அபயம் அளித்துக் காக்கும் வள்ளல் தன்மையையும் குறிப்பன.

மேலும், அவனின் குனித்த புருவம், அடியார்களின் பிரார்த்தனைகளை கருணையுடன் கேட்டு நிறைவேற்றுவதையும், பவளத் திருமேனி நெருப்பைப் போல் மன மாசுகளை நீக்கிப் புனிதமாக்குவதையும், பால் வெண்ணீறு எப்பொருளும் இறுதியில் எய்தக்கூடிய நிலையையும், நெற்றிக்கண் சிவனாரின் தனித்துவத்தையும் பறைசாற்றுவன. பெருமானின் நீலகண்டமோ, எவராலும் உண்ணமுடியாத ஆலகால விஷத்தைத் தான் உண்ட பெருங்கருணைத் திறத்தைக் காட்டுவது.

உடுக்கை இறைவனின் சிருஷ்டியையும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள அக்னி, உயிர்களின் பிறவித் தளைகளை அகற்றும் சம்ஹாரத் தொழிலையும் குறிப்புணர்த்துவன. அபயம் காட்டும் இறைவனின் திருக்கரமோ உலக உயிர்களைக் காப்பாற்றும் தொழிலையும், வீசிய கரம் தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டி, என்னை நம்பிச் சரணடைந்தால் நீ கடைத்தேறுவாய் என்பதையும் குறிப்பால் உணர்த்துவது நமக்குப் பெரும் ஆச்சர்யம் அளிப்பதாகும்.

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று தொழில்களை மட்டுமே செய்வதாக பலர் நினைக்கின்றனர். உண்மையில் அவர் ஐந்து தொழில்களைச் செய்கின்றார். 

நடராஜரின் வலது திருவடி முயலகனை மிதித்தபடி இருக்கும். அதை ஊன்றிய திருவடி என்பார்கள். 
நடராஜர் தூக்கியிருக்கும் காலை, எடுத்த திருவடி, குஞ்சிதபாதம் என்றழைப்பார்கள். சிதம்பரத்தில் இந்தத் திருவடிக்கு தனியாக மாலை அணிவித்து பூஜை செய்வார்கள். 

இந்தத் திருவடியின் வாயிலாகத்  துன்பக்கடலில் தவிக்கும் மனிதனுக்குத் தோணியாக இருந்து கரை சேர்க்கிறார் என்பதே, நடராஜரின் தத்துவம். இதைத்தான் 'ஆனந்த தாண்டவம்' என்று அழைக்கின்றோம். 


'அத்தி மரத்தில் செய்யப்படும் சிலைகள் மிகவும் விசேஷமானவை' என்று நான் படித்திருக்கின்றேன். அதனால் என்னுடைய வீட்டில் அத்தி மரத்திலான நடராஜர் சிலையை வைத்து வணங்கிவருகின்றேன்'' என்றவர், நடராஜப் பெருமானின் திருவுருவ அழகில் லயித்து அப்பர் பெருமான் பாடிய,

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றாலும்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே"

என்ற பாடலை சிலாகித்துப்பாட, அந்த வெளியெங்கும் சிவமயமானது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு