Published:Updated:

அரசியல் படங்கள், வெப் சீரிஸ்கள் - தேர்தல் விதிமுறைகள் பாலிவுட்டுக்கு பொருந்தாதா?

அரசியல் படங்கள், வெப் சீரிஸ்கள் - தேர்தல் விதிமுறைகள் பாலிவுட்டுக்கு பொருந்தாதா?
அரசியல் படங்கள், வெப் சீரிஸ்கள் - தேர்தல் விதிமுறைகள் பாலிவுட்டுக்கு பொருந்தாதா?

”தேசத்தை விரும்புபவர்கள், வேறெதையும் விரும்புவதில்லை” என்கிறார் அவர். எதற்காக பதில் சொல்லாமல், தொடர்பில்லாமல் ஏதோ ஒரு டயலாக் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டால், படக்குழுவினரால் உங்களுக்கு தேசத் துரோகி பட்டம் வழங்கப்படலாம்.

PM Narendra Modi, The Journey of a Common Man - பிரதமர் மோடியின் வாழ்க்கையை, அரசியல் வளர்ச்சியைப் பற்றிப் பேசும் திரைப்படமும், வெப் சீரிஸும் ஏப்ரலில் வெளியாகிறது. ராகுல் காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட My Name is RaGaவும் இதே நேரத்தில் வெளியாகிறது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒழுங்கு விதிமுறைகள் சில வாரங்களாக அமலில் இருக்கும் நிலையில், இந்தத் திரைப்படங்கள் மீதான கண்டும் காணாத போக்கு சரிதானா என விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றன ஃபேஸ்புக், ட்விட்டர் சமூகங்கள். தேர்தல் முடியும் வரை, PM Narendra Modi படத்தை நிறுத்திவைப்பதற்கான மனுவை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.   

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 126(1)-இன் படி, தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் 48 மணிநேரத்துக்கு முன்பாக, பொதுக்கூட்டங்கள் நடத்துவதோ, தேர்தல் குறித்த விஷயங்களைத் தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது எந்தக் காட்சி ஊடகங்கள் வாயிலாகவோ, தெரு நாடகங்கள் வழியாகவோ செய்யக்கூடாது. பாலிவுட்டின் இந்த பிரசார வகைத் திரைப்படங்களை விமர்சித்தால், அரசியல் தலைவர்களைப் பற்றிய எல்லா படங்களும் ஜால்ரா டைப் திரைப்படங்கள் இல்லை எனத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறார்கள் சார்ந்தோர்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸையும் விமர்சித்த The Accidental Prime Minister திரைப்பட டிரெயிலரை முதல் ஆளாகத் தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிந்தது பாஜக. PM Narendra Modi திரைப்படத்தின் ஒட்டுமொத்த டிரெய்லர் வசனங்களில் நான்கு முறை ஹிந்துஸ்தான், ஒரு ஹிந்துஸ்தானி, ஒரு பாரத் மாதா கி ஜெய், கருணையே வடிவாக நான்கைந்து முறை கண்ணீர் வடிக்கும் பிரதமர், ”என் குஜராத் எரிகிறது”, “எனது எல்லா மக்களும் பாதுகாப்பாக இருக்கும்வரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்”, போன்றவையெல்லாம் நிஜமாகவே நடக்கவிருக்கும் தேர்தலில், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதா பாஸ்?

Mid-Day நாளிதழுக்கு முன்னாள் தேர்தல் ஆணையர் அளித்திருக்கும் பேட்டியில், “பாஜக தலைவர்களின் ஆசியோடு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல். பாஜக நேரடியாகப் படத்தயாரிப்பில் ஈடுபடாவிட்டாலும், மும்பை பாஜக தலைவரும், மஹாராஷ்ட்ர முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் இப்படத்தை துவக்கி வைத்திருக்கிறார். படத்தின் புதுப் போஸ்டரை அமித்ஷா ரிலீஸ் செய்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார். “தற்போது பிரதமராக இருக்கும் ஒருவரைப் பற்றிய படம் என்பதால், அவரை நேசிக்கும் எல்லோரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். வேறு ஒன்றும் இல்லை” என ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’ பதிலை அளித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரில் ஒருவரான சந்தீப் சிங். 

’பிரதமர் மோடி டீ விற்றதற்கான ஆதாரம் இதுவரை இல்லை’ என்று தகவலறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில்  கிடைத்திருந்தது. உண்மைச் சம்பவங்களின் எடுக்கப்பட்ட திரைப்படம் என்னும் டிஸ்க்ளய்மரைப் போட்டுவிட்டு, பிரதமர் டீ விற்ற கதைக்குள் நகர்வதில் என்ன லாஜிக் எனப் புரியவில்லை. ட்ரெயிலரின் இறுதியில் ஒரு பாலத்தின் மீது நடக்கும்போது, ராணுவ வீரர்கள் தாக்குதல்களுக்கு நடுவில் நின்று தேசியக் கொடியை கையில் ஏந்தி பாரத் மாதா கி ஜெய் என உறுமுகிறார். இது உண்மைச் சம்பவ சந்தேகம் நம்பர் 2. பிரதமர் கதாபாத்திரத்திடம் ஏதோ கேள்வி கேட்கிறார்கள். உடனே, ”தேசத்தை விரும்புபவர்கள், வேறெதையும் விரும்புவதில்லை” என்கிறார் அவர். எதற்காகப் பதில் சொல்லாமல், தொடர்பில்லாமல் ஏதோ ஒரு டயலாக் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டால், படக்குழுவினரால் உங்களுக்கு தேசத் துரோகி பட்டம் வழங்கப்படலாம். 

சுமார் 2000 மக்களின் உயிர் பறிக்கப்பட்ட 2002 குஜராத் கலவர காட்சிகள் காட்டப்படும்போது, ”என் குஜராத் எரிகிறது” என ரோட்டுக்கு நடுவே நின்று சொல்கிறார் அந்த அப்பாவி குஜராத் முதல்வர் கதாபாத்திரம். வேலை வாய்ப்புச் சரிவைப் பற்றியும், பசுவின் பெயரால் கொல்லப்பட்ட உயிர்களைப் பற்றியும், ஏ.டி.எம் வரிசைகளில் நெடுநெடுவென நின்ற மக்களைப் பற்றியும் இந்தத் திரைப்படம் பேசும் என நம்புவோம். ஏனென்றால், இந்த படத்தின் டேக்லைன், ““PM Narendra Modi: Story of a Billion People”.

அடுத்த கட்டுரைக்கு