Published:Updated:

"சரியான காரணம் இருந்தாதான் அமைச்சரை நீக்குவோம்!"

குழந்தைகள் நாடாளுமன்றம்

கூச்சல், குழப்பம், வெளிநடப்பு... இவை எதுவும் இன்றி ஒரு நாடாளுமன்றத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 'குழந்தைகள் நாடாளுமன்றம்’ மூலம் முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகள். 'அது என்ன குழந்தைகள் நாடாளுமன்றம்?’ பதில் சொல்கிறார் குழந்தைகள் நாடாளுமன்றத்தின் 'முன்னாள் பிரதமர்’ முத்து செல்வகணேஷ். இவர் படிப்பது ப்ளஸ் டூ.

"சரியான காரணம் இருந்தாதான் அமைச்சரை நீக்குவோம்!"
##~##

''1995-ல் ஃபாதர் எட்வின் என்பவர் நாகர்கோவிலில் 'பாலர் நாடாளுமன்றம்’ இயக்கத்தை ஆரம்பிச்சார். அக்கம் பக்கத்துல உள்ள தெருக் குழந்தைகளை ஒண்ணு சேர்த்து அவங்களின் பிரச்னைகளை தீர்த்துவெச்சாங்க. அதாவது, எங்களை மாதிரி இருக்கிற குழந்தைகளே எங்க பிரச்னைகளைத் தீர்த்துக்குவாங்க. உதாரணத்துக்கு ஒரு தெருவுல உள்ள குழந்தைகளுக்கு விளையாட மைதானம் இல்லைன்னா, நாங்களே எங்களுக்குத் தெரிஞ்ச விதத்தில் லெட்டர் எழுதி பஞ்சாயத்துத் தலைவர், கலெக்டர்னு கொண்டுபோய்க் கொடுப்போம். அவங்க எங்களை மதிச்சு கோரிக்கைகளை நிறைவேத்துவாங்க.

'இப்படி ஒரு இயக்கம் ஏன் தெரு அளவுல மட்டும் இருக்கணும்? மாநிலம் முழுக்கக் கொண்டு போகலாமே’னு ஃபாதரோடு சேர்ந்து பலரும் யோசிச்சாங்க. படிப்படியா மாவட்ட, மாநில அளவில் விரிவடைஞ்சுது. இப்ப தமிழ்நாட்டில் மட்டும் 54,000 குழந்தைகள் நாடாளுமன்றங்கள் இருக்கு. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாடாளுமன்றம் இருக்கு. ப்ளஸ் டூ படிக்கிற வரை இந்த குழந்தைகள் நாடாளுமன்றத்தில் இருக்கலாம். ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு காலேஜ் போயிட்டாங்கன்னா, 'இளைஞர் நாடாளுமன்ற’த்தில் அவங்க சேர்ந்துக்கலாம்!'' என்று அறிமுகம் தந்தவர் தொடர்கிறார். ''இந்த நாடாளுமன்றங்கள் உண்மையான நாடாளுமன்றம் போலவே நடக்கும். எங்க அமைச்சர்களின் பதவிக் காலம் ஒரே ஒரு வருஷம்தான். இப்ப உள்ள அமைச்சர்களுக்கு அடுத்த வருஷம் வேற பதவிகள் கொடுப்போம்!'' என்கிற முத்து செல்வகணேஷ் கடந்த ஆண்டு குழந்தைகள் நாடாளுமன்ற பிரதமர். இந்த வருடம் இவர் சபாநாயகர்.

அடுத்துப் பேசியவர் 'நிதி அமைச்சர்’ சொர்ணலட்சுமி, ''இந்த நாடாளுமன்றத்தில் 30 அமைச்சர்கள் இருக்காங்க. அவங்களை எலெக்ஷன் மூலமாத் தேர்ந்தெடுப்பாங்க. விரல்ல மை வெச்சு வோட்டுப் போடுற எலெக்ஷன் கிடையாது. 'சோஸியோகிரஸி’ முறை மூலமா அவங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. அதாவது இங்க 30 பேர்னா, அத்தனை பேரும் வேட்பாளர்கள்தான், வாக்காளர்கள்தான். கல்வி அமைச்சரைத் தேர்வு செய்யணும்னா அந்த 30 பேரும் தங்களுக்குப் பிடிச்ச ஒருத்தர் பேரை ஒரு பேப்பர்ல எழுதுவாங்க. யார் பெயர் அதிகமாப் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கோ அவரை மேடைக்குக் கூப்பிட்டு, அவரைப் பற்றி மீதி உள்ள 29 பேர்ட்டயும் கருத்துக் கேட்பாங்க. அந்த 29 பேரும் சம்மதிச்சாதான் அவர் அமைச்சர். இல்லைனா அவர் அமைச்சராக முடியாது.

"சரியான காரணம் இருந்தாதான் அமைச்சரை நீக்குவோம்!"

சிலர் பொறாமையினால 'அவர் அமைச்சராகக் கூடாது’னு சொல்வாங்க. அதுக்காக அவரை நீக்க மாட்டோம். சரியான காரணம் இருந்தா மட்டுமே அவரை நீக்குவோம். ஒரு அமைச்சர் தன் வேலையை சரியா செய்யலைன்னு தெரிஞ்சா அவரைத் திரும்ப கூப்பிட்டுக்கிட்டு அவருக்குப் பதிலா வேற ஒருத்தரை அமைச்சராக்குவது எங்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அம்சம்!'' என்று ஆச்சர்யப்படவைக்கும் சொர்ணலட்சுமி, ஒரு மாற்றுத்திறனாளி.

''மாநில அளவில் ஒவ்வொரு வருஷமும் அனைவரும் சந்திப்போம். மூணு நாள் ஒரே கேம்பஸ்ல இருப்போம். அப்போ மாவட்ட அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 30 பேரும் நன்கு பழகி ஒருவரைப் பற்றி மற்றவர்கள் புரிஞ்சுக்குவோம். அப்ப யாருக்கு எதில் ஆர்வம் இருக்குனு தெரிஞ்சுடும். எலெக்ஷன் நடக்குறப்ப சரியா அவங்க திறமைக்குத் தகுந்தபடி பெயரை எழுதி அமைச்சர்களைத் தேர்வு செய்வோம். பிறகு, ஏதாவது ஒரு பெரிய அதிகாரியின் தலைமையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்குவோம். குழந்தைகள் நாடாளுமன்ற பிரதமரிடம் எல்லா அமைச்சர்களின் செல்போன் நம்பரும் இருக்கும். அதேபோல் அமைச்சர்களிடமும் பிரதமரின் நம்பர் இருக்கும். எல்லாரும் தொடர்புலயே இருப்பாங்க. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு பரீட்சை லீவுலயும் சந்திச்சுப்போம். இதுக்கு 'குழந்தைகள் நாடாளுமன்ற’ இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதவி பண்ணுவாங்க!'' என்கிறார் முன்னாள் பிரதமர் முத்து.

"சரியான காரணம் இருந்தாதான் அமைச்சரை நீக்குவோம்!"

- ந.வினோத்குமார்
படங்கள்: என்.விவேக், வீ.நாகமணி

அடுத்த கட்டுரைக்கு