Published:Updated:

"பாட்டியின் வடிவில் பாண்டிச்சேரி அன்னையைப் பார்த்தேன்!" - நெகிழும் கிரேசிமோகன் #WhatSpiritualityMeansToMe

"பாட்டியின் வடிவில் பாண்டிச்சேரி அன்னையைப் பார்த்தேன்!" - நெகிழும் கிரேசிமோகன் #WhatSpiritualityMeansToMe
"பாட்டியின் வடிவில் பாண்டிச்சேரி அன்னையைப் பார்த்தேன்!" - நெகிழும் கிரேசிமோகன் #WhatSpiritualityMeansToMe

 "பூக்களுடன் பக்தியை நாம கலக்கும்போது அவை நமக்காகக் கடவுளுடன் பேசுகின்றன" என்று அன்னை சொல்லுவார். விதவிதமான பூக்களை வைத்து நானும் வழிபடுவேன். பூவரசம் பூ , மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட  சுப்ரீம் சக்தியைத் தரக்கூடியது.

கிரேசிமோகன், உலகமெங்கும் சுற்றி நாடகங்கள் நிகழ்த்தி, 'நாடகமே தன் உலகம்'  என்று வாழ்பவர். நகைச்சுவை மட்டுமல்ல, வெண்பா பாடுவதிலும் வல்லவர். அவரிடம், அவருடைய இஷ்ட தெய்வம் எது, அவருடைய வழிபாட்டு முறைகள் எப்படி என்பது பற்றிக் கேட்டோம்.
''என் இஷ்டதெய்வம் பாண்டிச்சேரி அன்னைதான். பாண்டிச்சேரிக்குள் நுழையும்போதே நம்ம மனசுக்குள்ள ஓர் உற்சாகமும் உத்வேகமும் பிறக்கும். அழகான வீதிகள், கட்டடங்களென்று அதன் அமைப்பே ரொம்பவும் சிறப்பா இருக்கும் 


இப்போ ஆசிரமத்துக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் தங்கி இருக்காங்க. அதுல குறிப்பா ஸ்ரீஅரவிந்தரும் அன்னையும் வாழ்ந்து அமரத்துவம் பெற்ற இல்லத்துக்குத்தான் பலரும் வர்றாங்க. அவங்க வாழ்ந்த இல்லமே ஆசிரமத்தின் பிரதான கட்டடம். இந்தக் கட்டடத்துலயே மரங்கள் அடர்ந்த நிழல் முற்றத்துல, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  வெள்ளைப் பளிங்குக் கல்லினாலான அந்த மண்டபத்துலதான் ஸ்ரீஅரவிந்தர் மற்றும் அன்னையின் உடல்களை அடக்கம் செஞ்சிருக்காங்க.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சமாதியில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பேன். அங்கு அமர்ந்திருந்தாலே போதும், வாழ்க்கையின் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் நம்மைவிட்டு விலகிப்போயிடும். மனமற்ற மனம் கிடைக்கும். எந்தக் குழப்பமும் இல்லாமல், மனசு தெளிவா இருக்கும். வாழ்க்கையில் ஏற்படுகிற பணச்சிக்கல்கள், நேர நிர்வாகக் குழப்பங்கள், தீர்க்கமுடியாத பல பிரச்னைகள் பலவற்றுக்கும் அங்க போயிட்டு வந்தா, தீர்வு கிடைச்சிடும். இதனாலதான், ஆன்மிகத் தேடல்களுக்காவும் தன்னை உணர்வதற்காகவும், பக்தர்கள் தினமும் ஏராளமான பேர் வர்றாங்க. அவங்களை `ஸ்ரீஅன்னை’னு அழைக்கிறாங்க. 


'அவ்வைசண்முகி' படம் தமிழில் நல்ல வெற்றிபெற்ற படமா அமைஞ்சதால, அதை இந்தியில் எடுக்க கமல் சார் முடிவு பண்ணினார். இந்திப் படத்துக்கு குல்சார்தான் டயலாக் ரைட்டர்னு முடிவாச்சு. நான் ரொம்பவும் விரும்புகிற, மதிக்கக்கூடிய ரைட்டர் குல்சார். அவருடன் 'சாச்சி - 420' (அவ்வை சண்முகி இந்திப் பதிப்பின் பெயர்)  டிஸ்கஷனுக்காக, சென்னை தாஜ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். வசனங்களை நான் சொல்லச் சொல்ல அவர் உருதுல எழுதிக்கிட்டு வந்தார். அப்போ அவர் 'நீ ஒரு மதராஸி, நல்ல ஹ்யூமரா டயலாக் எழுதுறே' என்றார். உடனே நான், எல்லாம் 'பாண்டிச்சேரி மதர் ஆசி' சார்னு சொன்னேன். அந்தளவுக்கு அன்னையின் மீது பக்தி உண்டு.   
என் வீட்டு மாடியில் 'மதர் ரூம்' என்றே ஒரு தியான அறை வச்சிருக்கேன் அதன் அருகில் யாரும் செருப்புக் காலோடு வருவதை அனுமதிக்க மாட்டேன். ஓய்வு கிடைக்கும்போது அந்த அறையில் போய் தியானம் செய்வேன். அது எனக்குப் பெரும் உற்சாகத்தையும் தெம்பையும் தரும்.


 மதரிடம் பிடிச்ச இன்னொரு விஷயம்... அன்னைதான் இந்தப் பூமிக்கு மலர்களுடைய மகத்துவத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினாங்க. அன்னை வலியுறுத்துற வழிபாடுகளில் ரொம்ப முக்கியமானது மலர் வழிபாடு. அன்னை, மலர்களின் மீது அளவற்ற பிரியமுள்ளவர். அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். 
ஆசிரமத்துல தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி, அதில் அழகான பல மலர்களை நட்டுவைத்துத் தன் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார். 'மலர்கள், இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்' என்பதுதான் அன்னையின் கருத்து.


நாம சாதாரணமாக நினைச்சுக்கிட்டிருக்கிற சுடுகாட்டு மல்லிங்கிற நித்யகல்யாணி பூவுக்குக்கூட, அதற்குரிய மகத்துவத்தைச் சொல்லியிருக்காங்க. அன்னை, கிட்டத்தட்ட 800-க்கும் அதிகமான பூக்களைப் பற்றியும் அவற்றின் மகத்துவத்தையும் தொகுத்து சொல்லியிருக்காங்க. மலர்களைப் பற்றியும் அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படுகிற பலன்கள் பற்றியும் நிறையவே சொல்லியிருக்காங்க.


ரோஜா மலர், நமக்கு முன்னாடி இருக்கிற தடைகளை விலக்கி வெற்றியைத் தரும். மல்லிகைப் பூ, சோதனைகள் மற்றும் மனக்குழப்பங்களை விலக்கி மகிழ்ச்சியைத் தரும். துளசி, பக்திப் பெருக்கையும் தூய்மையையும் தரும். சாமந்தி, உடல் மற்றும் மனவலிமையைத் தரும். செம்பருத்தி, தெய்விக அன்பைத் தரும். நித்யகல்யாணி, வாழ்வில் முன்னேற்றம் தரும். செந்தாமரை, புத்துணர்ச்சியையும் வலிமையையும் தரும்னு ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு விதமான மகிமை இருக்கிறதைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்காங்க.  

``பூக்களுடன் பக்தியை நாம கலக்கும்போது அவை நமக்காகக் கடவுளுடன் பேசுகின்றன’’ என்று அன்னை சொல்லுவார். விதவிதமான பூக்களை வைத்து நானும் வழிபடுவேன். பூவரசம் பூ மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட  சுப்ரீம் சக்தியைத் தரக்கூடியது. 

ஒரு முறை, பூவரசம் பூவைத் தேடி கடற்கரைக்குப் போயிருந்தேன். ஆனா, அந்தப் பூவை என்னால பறிக்க முடியலை. மரத்தையே சுத்தி சுத்தி வந்தேன். திடீர்னு பார்த்தா, ஒரு வயசான பாட்டி, இலைகளை ஒடிக்கிற தொரட்டுக் குச்சியோட வந்து அந்தப் பூவைப் பறிச்சிக் கொடுத்தாங்க. அந்தப் பாட்டியைப் பார்த்தப்போ என் கண்களுக்கு அரவிந்த அன்னையாகத்தான் தெரிஞ்சாங்க'' என நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாகக் கூறினார். 

அடுத்த கட்டுரைக்கு