Published:Updated:

`அழகான கோப்பையை ஏந்தும் தருணத்திற்காக உழைக்கிறேன்!' - மனம் திறந்த குல்தீப் யாதவ்

`அழகான கோப்பையை ஏந்தும் தருணத்திற்காக உழைக்கிறேன்!' - மனம் திறந்த குல்தீப் யாதவ்
`அழகான கோப்பையை ஏந்தும் தருணத்திற்காக உழைக்கிறேன்!' - மனம் திறந்த குல்தீப் யாதவ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி, ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டது. கடைசி ஓவரில், டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்தீப் யாதவின் கைகளில் பந்தைக் கொடுத்தார் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக். அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறே சிறப்பாகப் பந்துவீசி, மேட்சை டிரா செய்தார். சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி வென்றது. இந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தாலும், மக்களின் மனங்களை வென்றார் குல்தீப் யாதவ். 


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் உலகக்கோப்பை குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு குல்தீப் அளித்துள்ள பேட்டியில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு குடும்பம்போன்றது. இங்கு, நான் கடந்த 6 ஆண்டுகளாக விளையாடிவருகிறேன். நான் இந்த அணியில் இணைந்தபோது, கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்தார். காலீஸ் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தனர். தற்போது அவர் பயிற்சியாளராக இருந்துவருகிறார். கம்பீர், என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். நான் இப்போது, அணியில் சற்று சீனியர் என்று சொல்லிக்கொள்ளலாம். நான் அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்கினைச் செய்தாக வேண்டும். அந்த அழகான கோப்பையைக் கையில் ஏந்தும் தருணத்திற்காக உழைக்க வேண்டும்.

நான் பந்துவீசுவதற்கு ஷேன் வார்னே தான் முக்கியக் காரணம். 2005-ம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில், அவரின் பந்துவீச்சைப் பார்த்த நான் ,பந்துவீச்சாளராக வேண்டும் என முடிவெடுத்தோம்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது தான், முதன் முறையாக ஷேன் வார்னேவைப் பார்த்தேன். இருவரும் நிறையப் பேசினோம். ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, அவர் எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி  மற்றும் பரத் அருண் ஆகிய இருவரும் அவர் கூறுவதை எனக்குப் புரியும்படி தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்த நாள்களில், தினமும் காலையில் வந்து என்னிடம் பேசுவார். புதுப்புது யுக்திகளைக் கற்றுத்தருவார். நான் மனத்தளவில் உறுதியாக இருப்பதற்கும் கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும், பெரிதும் உதவியாக இருந்தார். தற்போது, நாங்கள் இருவரும் நட்புடன் பழகிவருகிறோம். வாட்ஸ் ஆப்பில் தினமும் உரையாடுவோம். 

உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணிக்காகக் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறேன். உலகக்கோப்பையில் விளையாடுவதை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளேன். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாகப் பந்துவீசுவேன். நான் நேர்மறையான சிந்தனையுடன் செல்கிறேன்” என்றார்.