Published:Updated:

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

Published:Updated:

மேடை நாடகங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தில் கோலோச்சியவர் நாடக இயக்குநர் பருவாச்சி துரை சண்முகம். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த இவர்தான் முதன்முறையாக நாடகங்களில் வட்டாரச் சொற்களை வசனமாக்கியவராம். நாடகத் துறையில் இவர் செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்!

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லாக் கலைகளைவிடவும் நாடகம்கிறது தனித்துவ மான வரவேற்பைப் பெற்ற கலை. இதில் மட்டும்தான் மனிதனோட வாழ்வியலையும் அது சார்ந்த இன்ப - துன்பங்களையும் வெளிக்காட்ட முடியும். அந்தக் காலத்துல ஊர்ல திருவிழா வந்துட்டாலே கூத்து விடிய விடிய நடக்கும். அந்த அளவுக்கு மக்கள் ரசிக்கிற கலையாக இருந்தாலும், அதுலேயும் சில சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. அன்னைக்கு வந்த நாடகங்களில் எல்லாம், 'அத்தான் என்னை மன்னித்து விடுங்கள்’ என்ற ரீதியில் உரைநடைத் தமிழில்தான் வசனம் இருக்கும். அது இயல்பாக இருக்காது. தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் மண் சார்ந்த ஒரு வட்டார மொழி இருக்கிறது. அதை நாடகத்தில் கொண்டுவந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக் கும் என்று தோன்றியது.

1968-ம் ஆண்டு அந்தியூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரா இருந்தேன். அப்போ 'வேளிர் குல வேந்தன்’ங்கிற தலைப்புல நாடகம் நடத்தினேன். அதுலதான் முதல்முறையா முழுக்க முழுக்க கொங்கு தமிழில் வசனம் எழுதினேன். முதல் நாள் நாடகத்துக்கு வழக்கமான கூட்டம்தான். ஆனா, மறுநாள்ல இருந்து அரங்குல உட்கார இடம் இல்ல. அதுநாள் வரைக்கும் நாடகம் பார்க்க வராத அடித்தட்டு மக்கள், குடியானவங்க எல்லாம் நாடகம் பார்க்கக் குவிஞ்சாங்க. அதுக்கு அப்புறம் கொங்குப் பகுதியில் யதார்த்த நடையில் இருக்கும் வட்டார மொழி வழக்குல நாடகங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

நான் நாடகம் இயக்க ஆரம்பிச்சதுல இருந்து சினிமாவே பார்க்க மாட்டேன். ஏன்னா, என் நாடகங்களில் சினிமா வாசனை வந்துடக் கூடாதுங்கிறதுதான் காரணம். நாடகம்கிறது சாதாரணமான விஷயம் இல்ல. அந்த மேடைக்குள்ள நாம குடிசை வீட்டையும் காட்டணும்; மாடி வீட்டையும் காட்டணும். வயல் வரப்புகளையும் ஆறுகளையும் காட்டணும். அந்தக் காலகட்ட நாடகங்களில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகர ரெண்டொரு நிமிடங்கள் ஆகும். பார்வையாளர்கள் பொறுமை இழந்துடு வாங்க.

அதனால என் நாடகங்கள்ல சில மாற்றங்கள் செஞ்சேன். ஒரு காட்சி முடிஞ்சு அடுத்த காட்சி ஆரம்பிக்கிறதுக்கான இடைப்பட்ட நேரத்துக் காகவே சில காட்சிகளை உருவாக்கினேன். உதாரணத்துக்கு ஒரு மாடி வீட்டு செட்டை குடிசை வீட்டு செட்டா மாத்தணும்னா... திடீர்னு அந்த மாடியையே ஒருத்தர் வந்து தள்ளிட்டுப் போற மாதிரி நகைச்சுவைக் காட்சிகளைக் கதையோட தன்மைக்குத் தகுந்தபடி அமைச்சேன். அடுத்த காட்சியில ஒருத்தர் குடிசையைக் கட்டுற காட்சியை வெச்சேன். அப்ப சினிமாவுலகூட ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையில ரீல் ஒன்... ரீல் டூனு போடுவாங்க. ஆனா, என் நாடகத்துல இடைவெளிங்கிறதே கிடையாது!

"நாடகம்னா டி.வி. சீரியல் இல்லை!"

அதே மாதிரி அந்தக் காலத்து நாடகங்களில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி சினிமா பாடல்களைப் போடுவாங்க. அதனால நாடகம் ரொம்ப செயற் கையா இருக்கும். ஆனா, என் நாடகங்கள்ல சினிமா பாடல்கள்ங்கிற விஷயமே கிடையாது. நானே சொந்தமாப் பாட்டு எழுதி,  பாடல்களை  இசையோட பாட வைப்பேன். எனக்கு எந்தக் காட்சின்னாலும் தத்ரூபம்தான் முக்கியம். இப்படி என் வாழ்நாளில் நான் அரங்கேற்றிய நாடகங்கள் ஆயிரத்துக்கும் மேல. நல்லா சம்பாதிச்சேன்.

'விண்ணுக்கும் மண்ணுக்கும்’ இயக்குநர் ராஜகுமாரனுக்கு என்னை ஞாபகம் இருக்குமானு தெரியலை. அவர் ஒருமுறை என்கிட்ட நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்தார். நடிச்சுக் காட்டச் சொன்னேன். சிவாஜி, எம்.ஆர்.ராதா மாதிரி எல்லாம் நடிச்சிக் காட்டினார். 'நீரலைகள்’ என்கிற நாடகத்துல அவருக்கு வாய்ப்புக் கொடுத் தேன்.

எனக்கு மிகப் பெரிய கவலை, இந்த சந்ததி யினர் நாடகம்னா, டி.வி-யில வர்ற மெகா சீரியல்தான்னு நினைச்சுட்டு இருக்காங்க. நாடகம், கூத்து எல்லாம் அழிஞ்சுபோயிடுச்சு. உண்மையான நாடக வடிவம் ரொம்ப அற்புத மானது. தலைமுறைக்கு ஏற்பக் கலைகளைப் பயன்படுத்தும் உத்தி பலருக்கும் தெரியலை. போனது போகட்டும்... இனியாச்சும் கலைகளைப் போற்றக் கத்துக்குவோம்'' என்கிறார்.

கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism