Published:Updated:

``நான் தோத்துப் போன ஒரு வாழ்க்கையை வாழந்துட்டு இருக்கேன்'' - கலங்கும் திருநங்கை நீலாம்மா

"நாற்பது வயசு வரைக்கும் உடலும் மனசும் மத்தவங்ககிட்ட கையேந்தியே கிடக்குற நிலைமையாகிடுச்சு. ஒரு தோத்துப் போன வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருகேன்மா!"

``நான் தோத்துப் போன ஒரு வாழ்க்கையை வாழந்துட்டு இருக்கேன்'' - கலங்கும் திருநங்கை நீலாம்மா
``நான் தோத்துப் போன ஒரு வாழ்க்கையை வாழந்துட்டு இருக்கேன்'' - கலங்கும் திருநங்கை நீலாம்மா

2014ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பளித்தது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். பெரிதும் கவனிக்கப்படாமல் இருக்கும் இவர்களில் சாதித்த, சாதிக்கக் காத்திருக்கும் சாதனை திருநங்கைகளைப் பற்றி இந்த மாதம் முழுவதும் விரிவாகப் பார்க்கலாம்.

திருநங்கையாகப் பிறந்த காரணத்தினால் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு திருநங்கைகளுக்கென முதன் முதலாக ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்தவர் திருநங்கை நீலா. தற்போது அறுபது வயதிலிருக்கும் மூத்த திருநங்கை. அவரிடம் பேசினோம்.

"நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே வியாசர்பாடியில். சின்ன வயசுல இருந்தே எனக்கு பொண்ணு மாதிரி நடந்துக்கதான் பிடிச்சிருந்தது. என் சொந்தக்கார பொண்ணு எங்க வீட்டுக்கு லீவுக்கு வரும்போதெல்லாம் அந்தப் புள்ளையோட பாவாடை, சட்டையை நான் போட்டுப்பேன். ஆம்பளை டிரெஸை விட பொம்பளை டிரெஸ் போடத்தான் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. என் கூடப் பொறந்தவங்க மொத்தம் எட்டுப் பேர். எனக்கு மூணு அக்கா.. ஆறு அண்ணன்கள் இருக்காங்க. நான் பொண்ணு மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சதும் எங்க வீட்டுல திட்டுனாங்க. அடிச்சாங்க. என்னால மாத்திக்கவே முடியலை. என் பத்தொன்பது வயசுல வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன் என்றவர் சில நொடி மெளனத்திற்குப் பின்னர் தொடர்ந்தார்.

வீட்டை விட்டு வந்த ஆறு மாசத்துல ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். அந்தக் காலத்துல டாக்டர்கிட்டலாம் போய் ஆபரேஷன் பண்ணிக்க மாட்டோம். எங்க திருநங்கை சமூகத்துல மூத்த திருநங்கை இருப்பாங்க. அவங்கதான் எங்களுக்கு ஆபரேஷன் பண்ணுவாங்க. ஆபரேஷன் பண்ணதுக்கு அப்புறம் பாலியல் தொழில், கடை ஏறுதல்னு பண்ண ஆரம்பிச்சேன்" என்றவரிடம் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தது குறித்துக் கேட்டோம்.

முன்னாடி காலத்திலெல்லாம் திருநங்கைகள் குறித்த தெளிவு யாரிடமும் கிடையாது. ரோட்டில் நடந்து போனாலே `அலி, ஒன்பது'ன்னு கேலி பண்ணுவாங்க. கல், தக்காளினு கையில கிடைக்குறதை எடுத்து அடிப்பாங்க. எங்களுக்குன்னு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. எங்களுக்காக எந்தச் சட்டமும் இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில் சமூக சேவை பண்ணிட்டு இருந்த ஒரு பொண்ணோட அறிமுகம் கிடைச்சது. அவங்க நீங்க ஏன் சோசியல் ஒர்க் பண்ணக்கூடாதுன்னு கேட்டாங்க. அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு கூடச் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பிச்சோம். முதன் முதலாக திருநங்கைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தை ரிஜிஸ்டர் பண்ணி நடத்த ஆரம்பிச்சோம். அதுக்கு அப்புறம் போதுமான அளவு பணம் கிடைக்கலை. திருநங்கைகளுக்குள்ளேயே சண்டைகள் வர ஆரம்பிச்சது. என்னுடைய இருபத்து மூன்று வயசுல அந்த நிறுவனத்தை ஆரம்பிச்சேன். இருபத்து ஆறு வயசுல அதிலிருந்து வெளியேறிட்டேன். அப்புறம் கவுன்சலிங்கிற்குப் படிச்சேன். படிச்சும் எந்தப் பயனும் இல்லை. படிச்சதுக்கு ஏற்ற வேலையும் கிடைக்கலை. மறுபடி கடை ஏறுதல் மாதிரி பழைய தொழில்களைப் பண்ண ஆரம்பிச்சேன். நாற்பது வயசு வரைக்கும் உடலும் மனசும் மத்தவங்ககிட்ட கையேந்தியே கிடக்குற நிலைமையாகிடுச்சு. ஒரு தோத்துப் போன வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருகேன்மா. எல்லோருடைய வாழ்க்கையிலேயும் ஜெயிச்ச கதைகள் மட்டும்தான் இருக்கணுமா என்ன... என்னோட வாழ்க்கை மத்தவங்களுக்குப் பாடமா இருக்கட்டுமே...

இப்போ நான் தத்தெடுத்து வளர்க்கிற புள்ளைங்க எல்லாம் என்னை மாதிரி வீட்லேருந்து வெளியேத்தப்பட்டவங்கதான். அவங்கதான் என்னை இப்ப கவனிச்சுகுறாங்க. அதுங்க கொடுக்கிற பணத்தில் என் பொழப்பு ஓடிட்டு இருக்கும்மா" எனக் கண் கலங்குகிறார், நீலாம்மா!