Published:Updated:

'இப்படி பண்ணிட்டீங்களே இந்தியா!' விண்வெளிக் குப்பைகளைக் கண்டு நாசா ஏன் பயப்படுகிறது?

விண்வெளியில் லட்சக்கணக்கில் இருக்கும் விண்வெளிக் குப்பைகளைப் பற்றி எதற்காகக் கவலைப்படுகிறது நாசா?

'இப்படி பண்ணிட்டீங்களே இந்தியா!' விண்வெளிக் குப்பைகளைக் கண்டு நாசா ஏன் பயப்படுகிறது?
'இப்படி பண்ணிட்டீங்களே இந்தியா!' விண்வெளிக் குப்பைகளைக் கண்டு நாசா ஏன் பயப்படுகிறது?

ந்து நாள்களுக்கு முன், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்தியா. பூமியின் கீழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த Microsat-R என்ற செயற்கைக்கோள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட ஏவுகணை, செயற்கைக்கோளைத் தாக்கியதில், அது பல துண்டுகளாகச் சிதறியது. விண்வெளியைக் குப்பைகளால் நிரப்புவது சரியானதாக இருக்காது என இந்தச் சோதனை தொடர்பாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்திருந்தது. மிஷன் சக்தியால் உருவான துண்டுகள் மட்டுமின்றி, இன்னும் பல விண்வெளிக் குப்பைகள் பூமியை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை எவ்வளவு காலம் அங்கேயே இருக்கும்... இதுபோன்ற விண்வெளிக் குப்பைகளால் பாதிப்பு ஏற்படுமா?

விண்வெளியைக் குப்பைக் கூளமாக மாற்றிய நாடுகள்

விண்வெளியில், மனிதர்களின் நடவடிக்கைகளால் உருவான தேவையில்லாத பொருள்கள்தான் இந்த விண்வெளிக் குப்பைகள். இவை, எந்தப் பயனும் இல்லாமல் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கும். செயல்படாத செயற்கைக்கோள்கள், அவற்றின் பாகங்கள், ராக்கெட்டின் பாகங்கள் என இதன் பட்டியலில் இருக்கும் பொருள்கள் அதிகம். ஒரு ராக்கெட், செயற்கைக்கோளைப் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக விண்ணில் ஏவப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ராக்கெட்டில் இருக்கும் அனைத்துப் பாகங்களும் அதன் இறுதிச் செயல்பாடு வரை தேவைப்படுவதில்லை. சில பாகங்கள் பூமிக்கு மேலே குறிப்பிட்ட உயரம் தாண்டிய பிறகு தேவைப்படாது. குறிப்பாக, ராக்கெட்டில் கூடுதலாகப் பொருத்தப்பட்டிருக்கும் பூஸ்டர்கள் பூமிக்கு மேலே குறிப்பிட்ட உயரத்தை எட்டியவுடன் தனியாகப் பிரிந்துவிடும். அவற்றில் பெரும்பாலானவை, பூமிக்குத் திரும்பிவந்துவிடும். ஆனால் ,ஒரு சில நேரங்களில் இவை விண்வெளியிலேயே மிதந்துகொண்டிருக்கும். இவை தவிர, செயற்கைக்கோள்களைச் சரியான இடத்தில் நிலைநிறுத்திவிட்டுப் பிரிந்துசெல்லும் பகுதிகளும் விண்வெளிக் குப்பைகளாக மாறுகின்றன.

சில சமயங்களில், செயற்கைக்கோள்களே விண்வெளிக் குப்பைகளாக மாறிவிடும் சம்பவமும் நிகழும். ஒரு செயற்கைக்கோளின் பயன்பாட்டுக் காலம் என ஒன்று உண்டு. சில மாதங்கள் தொடங்கிப் பல வருடங்கள் வரை இது இருக்கலாம். அந்தக் காலம் முடிவடைந்த பிறகு, அதுவும் விண்வெளிக் குப்பையாக மாறும். அதைத் தொடர்புகொள்ள முடியாது என்பதால், அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே, அது எந்தக் கட்டுப்பாடும் இன்றி விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும். இதைப் போன்ற பொருள்களால்தான் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இப்படி மனிதர்கள் எப்போது விண்வெளிக்குச் செல்லத் தொடங்கினார்களோ, அப்போதே விண்வெளி குப்பைக்கிடங்காக மாறத்தொடங்கிவிட்டது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, பூமியைச் சுற்றி 1 செ.மீ குறைவான 128 மில்லியன் துண்டுகள், 1 செ.மீ முதல் 10 செ.மீ வரை இருக்கும் 9,00,000 துண்டுகள் மற்றும் 10 செ.மீ -க்கும் அதிக அளவில் காணப்படும் 34,000 துண்டுகள் எனப் பல மில்லியன் கணக்கிலான விண்வெளிக் குப்பைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.    

'ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்' - கண்டனம் தெரிவிக்கும் நாசா

இந்தியா கடந்த வாரம் நடத்திய மிஷன் சக்தி சோதனையின்போதும் இதேபோல விண்வெளிக் குப்பைகள் உருவாகியிருக்கின்றன. செயற்கைக்கோள் தாக்கி அழித்ததில், செயற்கைக்கோள் பல துண்டுகளாக உடைந்து சிதறியது. இந்தக் குப்பைகளால் மற்ற செயற்கைக்கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் மிஷன் சக்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருக்கிறார், நாசாவின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடென்ஸ்டெயின் (Jim Bridenstine).  "இது, நிச்சயமாகப் பயங்கரமான ஒரு செயல். இந்தச் சோதனையால் உருவான விண்வெளிக் குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்கும் மேலே சென்றிருக்கின்றன." குப்பைகளின் எண்ணிக்கையைப் பற்றி குறிப்பிட்ட அவர், "இந்தச் சோதனை மூலமாக 400-க்கும் மேற்பட்ட துண்டுகள் உருவானதைக் கண்டறிந்துள்ளோம். அவை, விண்வெளிக் குப்பைகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. அதில், 60-க்கும் மேற்பட்டவற்றை தற்போது கண்காணித்துவருகிறோம். அவையனைத்தும் 10 சென்டி மீட்டருக்கும் பெரிதானவை. அந்த  60 துண்டுகளில்  24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன" எனத் தெரிவித்தார். மேலும், ஏதாவது ஒரு நாடு இதுபோன்ற சோதனையை மேற்கொள்ளும்போது, மற்ற நாடுகளும் அதேபோல ஒன்றைச் செய்ய வேண்டும் என விரும்பக்கூடும். எனவே, இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாதது என்கிறார் ஜிம். அதேநேரம், 2007-ல் சீனா நடத்திய செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனையில் உருவான சில விண்வெளிக் குப்பைத் துண்டுகள், இன்னும் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்திருக்கிறார் ஜிம் பிரைடென்ஸ்டெயின். கடந்த பத்தே நாள்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தின்மீது விண்வெளிக் குப்பைகள் மோதும் ஆபத்து 44% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.   

விண்வெளிக் குப்பைகளால் ஏதாவது பாதிப்பு இருக்குமா...நாசா எதற்காகப் பயப்படுகிறது?

கட்டுப்பாடின்றி விண்வெளியில் சுற்றிவரும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது ஆபத்தானதுதான். இதுபோன்ற துண்டுகள், ஒரு நொடிக்கு 7.8 கி.மீ என்ற அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும். இந்த அதிவேகத்தில் 1 செ.மீ அளவுள்ள பொருள்கூட ஒரு செயற்கைக்கோளின்மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். செயற்கைக்கோள் என்றால் பரவாயில்லை. ஒருவேளை சர்வதேச விண்வெளி நிலையத்தின்மீது இவை மோதிவிட்டால், அதில் இருக்கும் விண்வெளி வீரர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல்போகும். எனவே, விண்வெளிக் குப்பைகளைப் பார்த்து நாசா பயப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அதே நேரம், மோதலைத் தவிர்க்க மாற்று ஏற்பாடுகளும் விண்வெளி அமைப்புகளின் கைவசம் இருக்கின்றன. சில வகை பாதுகாப்புக் கவசங்கள் விண்கலங்களின்மீது மோதலைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அதிவேகத்தில் வரும் பொருளின் வேகத்தைக் குறைத்து, பாதிப்பைத் தவிர்த்துவிடும்.

இந்த பாதுகாப்புக் கவசம், சிறிய துண்டுகளுக்குத்தான் பயன்படும்; பெரிய அளவிலான துண்டுகள் என்றால் சிக்கல்தான். அதன் காரணமாகவே, பெரிய அளவுள்ள துண்டுகளை நாசா போன்ற விண்வெளி அமைப்புகள் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒருவேளை செயற்கைக்கோளின்மீது மோதும் நிலை ஏற்பட்டால், அதற்கு முன்பாக செயற்கைக்கோளின் சுற்றுப் பாதையைச் சற்று மாற்றி அமைப்பார்கள். இதன் மூலம் மோதலைத் தவிர்த்துவிடுவார்கள். அதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் ஜிம். "சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், இப்போது மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். தேவைப்பட்டால் மோதலைத் தவிர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.  

விண்வெளிக் குப்பைகளுக்கு என்னதான் தீர்வு ?

தொடர்ந்து அதிகரித்துவரும்  விண்வெளிக் குப்பைகளைக் குறைக்க, பல்வேறு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.  ஒரு செயற்கைக்கோள் செயலிழக்கும்போது, பூமியின் குறிப்பிட்ட பகுதியில் நுழையும்படிச் செய்யப்படும். அதன்மூலம் பசிபிக் பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வந்து விழும். செயற்கைக்கோள், அதன் இறுதி நேரம் வரை தொடர்பிலிருந்தால் மட்டுமே இதைச் செய்யமுடியும். கட்டுப்பாட்டில் இல்லாத செயற்கைக்கோள்கள் விண்வெளியில் தாறுமாறான பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். அவையும் சில நேரங்களில் மோதுவதுண்டு. 2009-ம் ஆண்டில் அப்படி ஒரு மோதல் சம்பவம் நிகழ்ந்தது,  இரிடியம் 33 என்ற செயற்கைக்கோளும், ரஷ்யாவின் Kosmos 2251 செயற்கைக்கோளும் நேருக்கு நேர் மோதின. அதன் காரணமாகவும் விண்வெளிக் குப்பைகள் உருவாகின. இதுபோன்ற மிகப் பெரிய அளவுள்ள விண்வெளிக் குப்பைகளைக் கைப்பற்றி, மீண்டும் பூமிக்கு அனுப்பிவைக்கும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு, சில நாடுகளின் விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டுவருகின்றன