Published:Updated:

``இந்தத் தேர்தலில் நான் ஏன் போட்டியிடலைன்னா....'' திருநங்கை பாரதி கண்ணம்மா

``இந்தத் தேர்தலில் நான் ஏன் போட்டியிடலைன்னா....'' திருநங்கை பாரதி கண்ணம்மா
``இந்தத் தேர்தலில் நான் ஏன் போட்டியிடலைன்னா....'' திருநங்கை பாரதி கண்ணம்மா

``திருநங்கைகளுடைய ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும்... ஆனா நாங்க ஓட்டு கேட்டு தேர்தலில் நிற்கக் கூடாதா?" என்றொரு கணீர் குரல் 2011-ம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தை நோக்கி ஒலித்தது. அதன் விளைவாகத் திருநங்கைகளும் மாற்றுப்பாலினச் சிறுபான்மையினரும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை வந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் சென்னையில் ஒரு திருநங்கை போட்டியிடுகிறார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த நிலைமையை உருவாக்கி நீதியைப் பெற்றுத்தந்திருக்கிறார், மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர்தான், இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர். மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்.

``கடந்த 2000-ம் ஆண்டு வரைக்கும் நான் என்னை ஆண்பிள்ளையாக் காட்டிக்கிற மாதிரியான சூழலிலும் சமூகக் கட்டமைப்புலேயும்தான் இருந்தேன். ஒரு தனியார் வங்கியில சேல்ஸ் மேனேஜராக வேலை பார்த்துட்டு இருந்தேன். நானும் ஊருக்காக நடிச்சு, கல்யாணம் காட்சின்னு போயிருக்கலாம். பலரும் இன்னிக்கு மத்தவங்களோட கேலி, கிண்டலுக்கு பயந்து அந்த நிலைமைலதான் இருக்காங்க. ஆனா, 2004- வருஷம், எங்க அம்மா இறந்ததுக்குப் பிறகு, நான் என்னை ஒரு திருநங்கையாவே அடையாளப்படுத்திக்கொள்ள முடிவு பண்ணினேன். சென்னையில இருக்குற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்துல என்னையும் இணைச்சுகிட்டு, நிறைய பயணிச்சேன். அதுவரைக்கும் ஊரு பேசுற வசைகளுக்கு பயந்து `அழகுராஜா'வா இருந்தவன்தான், இப்போ உங்க முன்னாடி தன்னம்பிக்கை நிறைஞ்ச, `பாரதி கண்ணம்மா'வாக நிற்கிறேன்", என்று கண்களில் நம்பிக்கை விரியப் பேசுகிறார்.

ஒரு திருநங்கையாக நீங்கள் பெருமைப்பட்ட தருணம்?

``தொடர்ந்து எய்ட்ஸ் நோய் பற்றி, பரவலாக மக்களிடையே பேசப்பட்ட காலம் அது. அப்போ பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்திருந்தார். தமிழ்நாட்டுலேருந்து பில்கேட்ஸை மீட் பண்றதுக்காக என்னை அரசாங்கம் அனுப்பி வெச்சுது. அன்னிக்கு பில்கேட்ஸ் கூட பேசுறதுக்கு எனக்கு வெறும் நான்கே நிமிடம்தான் அனுமதி கொடுத்திருந்தாங்க. பொதுவா எய்ட்ஸ் நோய் என்பது, பாலியல் தொழில் செய்றவங்களுக்கும், தகாத உறவுல ஈடுபடுறவங்களுக்கும்தான் வரும்ன்னு எல்லாருக்கும் கருத்து உண்டு. ஆனா, உண்மையாகவே திருநங்கைகளுக்கும் எல்லா வகையிலேயும் எய்ட்ஸ் வர்றதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு. அதைப்பத்தி நான் பில்கேட்ஸ்கிட்ட நிறைய எடுத்துச் சொன்னேன். நாலு நிமிஷம் பேச இருந்த மீட்டிங், அவரோட பிஸி நேரத்திலேயும் கிட்டத்தட்ட 25 நிமிஷம் பேசுனோம். அதன் விளைவாக, 55 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி உதவியா கிடைக்க அதுவும் ஒரு காரணமாயிருந்தது. அன்னிக்குதான் `நான் யார்?' என்பதற்கான கேள்விக்குப் பதிலும் புரிஞ்சது".

நீங்கள் தேர்தலில் முதன்முறையாக மனுத்தாக்கல் செய்தபோது சமூகம் ஏற்றுக்கொண்டதா?

``எங்களை இன்னிக்கு நேத்துன்னு யாரும் ஒதுக்கல. அது எங்க வாழ்க்கையோடவே கலந்திருக்கு. எனக்குத் தெரிஞ்சு ஒரு திருநங்கை பொண்ணு படிக்கிற ஸ்கூலுல, `உலோகம்-அலோகம்' பத்தி அவுங்க டீச்சர் பாடம் நடத்துறப்போ, `அலோகம்ன்னா உலோகம் மாதிரியே இருக்கும். ஆனா, உள்ள ஒண்ணும் இருக்காது. அதாவது, (திருநங்கை சுட்டிக்காட்டி) இவள மாதிரி... பொண்ணு போலவே இருக்கும். ஆனா பொண்ணு கிடையாது'ன்னு சிரிச்சிருக்காங்க. அந்த அசிங்கத்துல அந்தப் பொண்ணு உடனே வீட்டை விட்டு பாம்பேக்கு ஓடிப்போக பார்த்துச்சு. அது எனக்குப் பெரிய வலியைத் தந்துச்சு. நாம ஏன் ஓடணும்? நமக்குப் பிடிச்ச துறையிலயே நம்ம சாதிக்கலாமேன்னு முடிவெடுத்தேன். ஒன்பதாவது படிக்கிற அந்தப் பொண்ணுக்கே இந்த நிலைமைன்னா தேர்தலில் ஒரு திருநங்கை போட்டிபோட வந்தா.... சும்மாவா விடுவாங்க? 2011-ம் வருஷம் மனுத்தாக்கல் செஞ்சப்போ, திருநங்கைங்கிற ஒரே காரணத்தினால், மனுவை ஒதிக்கிட்டாங்க. தொடர்ந்து போராடி 2014-ம் வருஷம் நாடாளுமன்றத் தேர்தலில் நின்னேன். அப்போவும் ரொம்பவே கம்மியான ஆயிரத்துச் சொச்ச வாக்குகள்தான் கிடைச்சது. சிலர் போன் பண்ணி நக்கலா சிரிச்சாங்க. ஆனா, 2011-ம் வருஷம் நிராகரிக்கப்பட்ட நானேதான், 2014-ம் வருஷம் தேர்தலில் எல்லாத் தகுதிகளோடும் சுயேச்சையாக நின்னேன். அதுவே எங்களுக்கான சரித்திர வெற்றிதானே?"

நீங்கள் 'ஒரு நாள் சி.எம்' என்று வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?

``18 வயது வரைக்கும் அனைவருக்கும் இலவசக் கல்வி. நில உச்சவரம்பு திட்டம் போல, பண உச்சவரம்பு திட்டத்தை அமல்படுத்துவேன். தேவைக்கு மீறி அதிகப்படியாகச் சேர்த்து வைக்கும் பணம் யாருடையதாக இருந்தாலும் அரசாங்கத்தோட கஜானாவுக்குப் போயிடும். மக்களுடைய தேவைக்கு ஏற்ப உதவிகளை அரசாங்கமே செய்யற மாதிரியான சூழலுக்கு வழிவகுப்பேன். ஒரு திருநங்கையோட உணர்வுகளை, திருநங்கையை விடச் சிறப்பா எப்படி மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க முடியும்? எனக்கான வாய்ப்பு ஒரு நாளாக இருந்தாலும், திருநங்கைகளுக்காக ஒரு 10 நிமிட நேரமாச்சும் ஒதுக்கி மக்களை நேரடியாகச் சந்திச்சுப் பேசுவேன். பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கிடுச்சு. நாலு பொண்ணுங்க ஃப்ரெண்டஸா இருக்குற இடத்துல ஒரு திருநங்கையும் தோழியா இருந்தா, எந்தப் பையனாச்சும் தப்பான நோக்கத்தோட நெருங்க விட்டுடுவோமா? திருநங்கைகளையும் சக மனுஷியாக பார்க்குற சூழல் வரணும். எத்தனையோ கல்லூரிகளில் மாற்றுப்பாலினத்தவருக்கு இலவசக் கல்வி எனச் சலுகை கொடுக்கிறாங்க. ஆனா எத்தனை பெற்றோர்கள் முன்வந்து தங்களோட பிள்ளைகளைத் திருநங்கையாகவோ திருநம்பியாகவோ அடையாளப்படுத்துறாங்க? அதை ஒரு இழிவான விஷயமா இன்னும் பாக்குறதுனாலதான் யாரும் அந்தக் கல்லூரிகளில் வந்து பிள்ளைகளைச் சேர்ப்பது இல்ல. இந்த நிலை மாறணும். அதற்கான ஒரு சின்ன விதையாவது விதைச்சிட்டுதான் போவேன்."

2019 பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

``நான் பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதற்காக மதுரை கலெக்டரேட்ல மனு கொடுத்தேன். ஆனால், அண்ணா திராவிடர் கழகம் திவாகரன், அவரின் கட்சி சார்பாக, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு தருகிறேன் எனச் சொன்னார். அதனால மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டேன்."

பின் செல்ல