Published:Updated:

பணம், வாடிக்கையாளர்கள் நிறைய இருந்தும் கூகுள் ப்ளஸ் தோற்றது ஏன்?

இவ்வளவு பெரிய கூகுளாலேயே ஏன் தன்னுடைய சோஷியல் மீடியாவை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை?

பணம், வாடிக்கையாளர்கள் நிறைய இருந்தும் கூகுள் ப்ளஸ் தோற்றது ஏன்?
பணம், வாடிக்கையாளர்கள் நிறைய இருந்தும் கூகுள் ப்ளஸ் தோற்றது ஏன்?

ணையம் விசித்திரமானது. இங்கே வெற்றிக்குப் பணமோ பின்புலமோ உதவுவதில்லை. நிரந்தர சூத்திரமும் இல்லை. இதற்கு சமீபத்திய மற்றும் சரியான உதாரணம் கூகுள் ப்ளஸ்.

கூகுள் தொடங்கிய நாளிலிருந்தே ஏற்றத்தை மட்டுமே கண்ட ஒரு நிறுவனம். அவர்களது சர்ச் இன்ஜினும் மெயில் சேவையான ஜிமெயிலும் அதிரிபுதிரி ஹிட். உலகில் நான்கில் ஒருவர் ஜிமெயிலில் இருக்கிறார். உலகில் தயாரிக்கப்படும் 10 மொபைல்களில் 9 மொபைல்கள் ஆண்ட்ராய்டு மொபைல்கள்தான். அதுவும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புதான். தினமும் பல கோடிக்கணக்கான மக்களில் பொழுதுபோக்கான யூடியூபும் கூகுள் வசம்தான் உள்ளது. ``ஆல் ஏரியாலையும் ஐயா கில்லிடா” என கூகுளால் சொல்ல முடிந்திருக்கக்கூடும். ஆனால், இப்போது முடியாது. காரணம், கூகுள் ப்ளஸ். ஃபேஸ்புக்குக்குப் போட்டியாகக் கூகுளால் களமிறக்கப்பட்ட இந்தச் சமூகவலைதளம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதற்கு மூடுவிழாவே நடத்திவிட்டது கூகுள். 

நிறைய வாடிக்கையாளர், போதிய அளவு பணம், டெக் ஜாம்பவான்கள் என எல்லாம் இருந்தும், ஏன் இது தோற்றது? “எங்களின் கனவு புராஜெக்ட்” எனச் சொன்ன கூகுள் இதில் செய்த தவறுதான் என்ன?

1. மொபைல் ஆப்:

 பெரும்பாலான சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் மொபைல் மூலமே அதிகம் பயன்படுத்துகின்றனர். அது எந்த அளவுக்கு எளிமையாக, வசதியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நேரமும் அதிகரிக்கும் என்பதுதான் அடிப்படை. கூகுள் ப்ளஸ்ஸின் டிசைனே பிரவுசருக்கு ஏற்றதுபோல செய்யப்பட்டது. பிரவுசரில் அது அழகாக இருந்தாலும் மொபைல் வெர்ஷன் எடுபடவில்லை. குழப்பமாகவும் இருந்தது. அதனாலே, பெரும்பாலான பயனர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் அதிக நேரம் இருந்ததில்லை. அந்த நேரத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை எடுத்துக்கொண்டன.

2. உருவாக்கியவர் இல்லாமல் எப்படி?

கூகுள் ப்ளஸ்ஸை வடிவமைத்தவர் Vic Gandotra. இவர் கூகுள் ப்ளஸ் வெளியான சில மாதங்களிலே கூகுளிலிருந்து வெளியேறினார். காரோ, ஆப்போ... வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி அவர்கள் கருத்துகளைச் சொன்னால்தான் எதுவுமே முடிவுக்கு வரும். அவர்கள் விருப்பப்படி மாற்றங்களைச் செய்தேயாக வேண்டும். ஆனால், விக் கூகுளிலிருந்து வெளியேறியதால் அந்தப் பொறுப்பை எடுத்து நடத்த சரியான ஆள் வரவில்லை. இந்தக் குழப்பம்தான் முக்கிய காரணம் எனச் சொல்லியிருக்கிறார் கூகுளில் பணிபுரியும் ஓர் ஊழியர்.

3. போட்டி வேறு மாற்று வேறு:

உலகம் முழுவதையும் இணைக்கும் பாலமாக இருப்பவை சமூக வலைதளங்கள். கூகுளில் ஆரம்பக்கால தயாரிப்புகளான சர்ச் இன்ஜின், மின்னஞ்சல் சேவைகள் அதற்கானவை அல்ல. ஆர்குட் அப்படியொரு முயற்சிதான். ஆனால், முதலில் ஹிட் அடித்த ஆர்குட் பின்னர் படுத்துவிட்டது. அப்போதுதான் ஃபேஸ்புக் கலக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அந்த இடத்தைப் பெற கூகுள் விரும்பினால் அது ஃபேஸ்புக்குக்கு மாற்றாக ஒன்றை முன் வைத்திருக்கலாம். மாறாக, ஃபேஸ்புக் போலவே இன்னொரு தயாரிப்பைத் தந்ததால் பெரும்பாலான ஆட்கள் ஃபேஸ்புக்கே போதுமென நினைத்துவிட்டார்கள்.

4. சர்க்கிள்ஸ்:

 கூகுள் ப்ளஸின் முக்கியமான, வித்தியாசமான விஷயமாகக் கூகுள் நினைத்தது சர்க்கிளைத்தான். ஆனால், எளிமையாக இல்லாததாலும் ஒரு சர்க்கிளில் யார் யார் இருக்கிறார்கள் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாமல் போனதாலும் அதைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 

மொத்தத்தில் ஃபேஸ்புக்குக்குச் சரியான போட்டியாக இல்லாமலும், மாற்று ஐடியாவாக இல்லாமலும் குழப்பத்திலேதான் தன் வாழ்நாள் முழுக்க பயணித்தது கூகுள் ப்ளஸ். அதன் வடிவம் புரிந்துகொண்ட சிலர் அதைக் கொண்டாடவும் செய்தார்கள். ஆனால், அந்த நபர்களின் எண்ணிக்கை கூகுளுக்குப் போதவில்லை. வேறு வழியில்லாமல் ஆர்குட், கூகுள் பஸ் வரிசையில் ப்ளஸ்ஸும் சேர்ந்துகொண்டது.