Published:Updated:

"இது திருநங்கைகளின் MeToo ஆவணக் கண்காட்சி!" கல்கி சுப்ரணியம்

"இது திருநங்கைகளின் MeToo ஆவணக் கண்காட்சி!" கல்கி சுப்ரணியம்
"இது திருநங்கைகளின் MeToo ஆவணக் கண்காட்சி!" கல்கி சுப்ரணியம்

"இது திருநங்கைகளின் MeToo ஆவணக் கண்காட்சி!" கல்கி சுப்ரணியம்

இங்கு பலரது குரல்கள் நம் செவிகளை எட்டுவதே இல்லை. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க, அவர்கள் வேண்டுவது நமது புரிந்துணர்வைத்தான். வழக்கமான நமது விளக்கங்களுள், ஸ்டாண்டர்டுகளுள் அடைபடாதவர்களின் கதைகள் சமூகத்தின் பார்வையிலிருந்து பல அடிகள் ஆழத்துக்குள் ஆழப் புதைந்துபோய் விடுகின்றன. அவ்வளவு ஆழத்திலிருந்து அந்தக் குரல்கள் மீண்டெழுந்து நம் காதுகளுக்கு அருகில் வந்து, இருக்கும் சக்தியையெல்லாம் திரட்டிப் பேசும்போதாகிலும் நாம் அவர்களின் குரல்களைக் கேட்க வேண்டும், நமது வழக்கமான விதிகளைத் தூரத் தூக்கிப்போட்டுவிட்டு, திறந்த மனதுடன் அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். இதோ அதற்கான வாய்பை நமக்கு வழங்கியிருக்கிறது, கவிஞர் திருநங்கை கல்கி சுப்ரமணியத்தின் சஹோதரி அமைப்பு! பல திருநங்கை ஓவியர்களின் ஓவியங்கள் சென்னையின் பிரிட்டிஷ் கவுன்சிலில் பெரும் வலிமையுடன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ‘ட்ரான்ஸ்ஹார்ட்ஸ்’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம், பல திருநங்கைகளின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ‘மீ டூ’ கோப்புகள். நாடெங்கிலும் வாழும் திருநர்கள், குயர் சமூக மக்களின் கதைகள் சேகரிக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் திருநங்கைகள் இணைந்து இப்படியான ஒரு கலைக் கண்காட்சியை நடத்துவது இதுவே முதல் முறை. கடந்த மார்ச் 29 அன்று இந்தக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. ஏப்ரல் 14 வரை ஓவியங்கள், மீ டூ கோப்புகள் பிரிட்டிஷ் கவுன்சிலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கண்காட்சி குறித்து கவிஞர் கல்கி சுப்ரமணியத்திடம் பேசினேன்.

"இப்படியான ஒரு கண்காட்சிக்கு எப்படித் திட்டமிட்டீர்கள்... எளிதில் சாத்தியமானதா?’’ 

திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்துவது என்பது முக்கியம்! கலை வடிவங்கள் எல்லாமே சமூகத்தில் மாற்றம் கொண்டு வர பேருதவியாக இருக்கும். ஓவியத்துக்கும் அந்தச் சக்தி இருக்கிறது. முதலாவதாக, ஓவியங்கள் எங்கள் திருநங்கை சமூகத்துக்கு உளவியல் ரீதியாகச் சிகிச்சை தரக்கூடியதாக இருக்கிறது. அதனாலேயே ஓவியக் கலை பயில்வது, ஓவியம் வரைவது எங்கள் திருநங்கை சமூகத்துக்கு ரொம்ப அவசியமானதாக இருக்கிறது. சிறுவயது முதல் பல இன்னல்களுக்கு ஆளாகி, அந்தக் காயங்கள் நிறையவே உண்டு. அதை ஆற்றுவதற்கு உளவியல் ரீதியாக இது ரொம்பப் பயன்படுகிறது. இது என் அனுபவத்திலும் உள்ளுணர்விலும் உணர்ந்துகொண்டது. இப்போது, எனக்கும் சரி, என் சகோதரிகளுக்கும் சரி இது நிஜமாகவே ஆற்றுப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. இரண்டாவதாக, எங்களுடைய வாழ்க்கைப் பதிவுகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வழி! நிறைய திருநங்கைகள் படிக்காதவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். ஒரு கவிதை எழுதுவதற்கோ, கதை எழுதுவதற்கோ, நாவல், சுயசரிதை எழுதுவதற்கோ மொழியறிவு வேண்டும். ஆனால், ஓவியம் வரைவதற்கு மொழியறிவு தேவையில்லை. குறிப்பிட்டக் கால பயிற்சி போதும். ஓவியம் என்பதே உலகளாவிய ஒரு மொழி! ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என்று உலக நாடுகள் எங்கிருந்து வந்து பார்த்தாலும் புரியும். அதுவும், வெவ்வேறு பரிமாணங்களில் உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த ஒரு சுதந்திரம் ஓவியத்துக்கு இருக்கிறது. அதனால்தான், ஓவியத்தை நான் தேர்ந்தெடுத்தேன். எங்கள் கலை, அழகியலை வெளிப்படுத்துகிறோம் என்பதைத் தாண்டி, எங்கள் உணர்வுகளை அருமையாக, வலிமையாக, ரொம்ப வலிமையாக வெளிப்படுத்த முடிகிறது. மேலும், இது திருநங்கைகளின் வாழ்வாதாரமாகவும் அமைகிறது. 

"எந்த விதத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது?"

"எங்களில் சிறந்த கலைஞர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு நன்கு பயிற்சியளித்து, வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவுவது என்கிற நோக்கத்தோடுதான் சஹோதரி அறக்கட்டளையினுடைய ‘ட்ரான்ஸ்ஹார்ட்ஸ்’ என்ற செயல்திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. தொடங்கின சில நாள்களிலேயே, எனது ஓவியங்களை 2 லட்சம் ரூபாய்க்கு விற்றேன். அந்தத் தொகையில் பாதியை எங்கள் திருநங்கை சமூகத்தில் படித்துக்கொண்டிருந்த ஐந்து பேருக்குப் பிரித்துக்கொடுத்தேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, வழக்கமாகப் பிறரிடம் நன்கொடை பெறாமல், நாமாகவே அந்த நன்கொடையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று. இது எனக்கு மிக உயர்ந்த, நல்ல விஷயமாகத் தெரிந்தது. என்னுடைய ஓவியங்கள் என் வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளிருந்து எல்லாம் வாங்கப்பட்டன. அதனால், நான் வெளிநாடுகளுக்குப் போகும்போது என்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தினேன். அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், எங்கள் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த நன்றாக வரையக்கூடியவர்களின் ஓவியங்களையும் சேர்த்துக் காட்சிப்படுத்தினேன். 

"நம்ம ஊர் திருநங்கைகளின் ஓவியங்களை ரசித்தார்களா?"

"நிச்சயமாக! எங்களின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நம் ஊர் திருநங்கைகளின் ஓவியங்களையும் அங்கிருப்பவர்கள் மிகவும் விரும்பினார்கள். அந்த ஓவியங்கள் அவர்களை ஆச்சர்யப்படவும் வைத்தன. ஓவியக்கலையை இதுமாதிரி எடுத்து, ஓர் இயக்கமாக நடத்திக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் இதுமாதிரியான முயற்சிகள் இல்லை. திருநங்கை ஓவியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்துவது உண்டு. ஆனால், இந்த மாதிரியான முயற்சிகள் அங்கு கிடையாது. அதுமட்டுமல்லாமல், ஓவியம் என்பது கலை, அழகு இதனுடைய வெளிப்பாடாக இல்லாமல், நமது வாழ்க்கை, உணர்வுகளைப் பேசுகிற பெரும் சக்தியாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இது காட்சி மொழி! அதனால், நாங்கள் பேசாத விஷயங்களை ஓவியம் மூலமாகப் பேச முடியும் என்று நம்புகிறேன். அப்படியாகத்தான், மீ டூ கோப்புகள் என்று தனிப்பிரிவை இங்கு வைத்திருக்கிறோம். 

" `மீ டூ கோப்புகள்' ஐடியா எப்படித் தோன்றியது?"

"நானும், திருநங்கை சௌந்தர்யாவும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான திருநங்கைகளைச் சந்தித்து, அவர்கள் வாழ்க்கையில் இதுவரை பேசாத, பேச விரும்பாத வலி மிகுந்த தருணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம். அவர்களுக்குப் பொதுவழி சமூகத்தில் அதைப் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம், கவலையாக இருக்கலாம். ஆனால், எங்களிடம் அவற்றைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றில் பெரும்பாலானவை பாலியல் துன்புறுத்தல்கள்தான். அதற்கான காரணம், மாற்றுப் பாலினத்தவராகத் தன்னை உணர்ந்ததுதான்! இந்த ஒரே காரணத்துக்காக நடந்த பாலியல் ரீதியிலான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் இவை எல்லாவற்றையுமே ஆவணப்படுத்தினோம். நாங்கள் சந்தித்த நிறைய திருநங்கைகளுக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை. அவர்களின் ஒப்புதலுடன், எங்கள் கைகளால் எழுதி அவற்றை இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறோம். ஏன் இந்த ஆவணங்கள் முக்கியம்? ஓவியம் என்பது வெறும் கலை உணர்வுக்காகவும் வருமானம் ஈட்டுவதற்காகவும் மட்டும் கிடையாது. அதையும் தாண்டி, ஒரு சமூகத்தை இந்தப் பெரும் சமூகம் எப்படியெல்லாம் நடத்திக்கொண்டிருக்கிறது, நடத்தியது என்பதைச் சொல்லும் வழி. 

"உங்களுடைய வாழ்க்கையில் நடந்ததும் இந்தக் கண்காட்சியில் உள்ளதா?"

"நான் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கையில் ராஜ்குமார் என்ற மாணவன் நான் குளித்துக்கொண்டிருக்கும்போது, கதவைத் திறந்துகொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்தான். இதை நான் எழுதி இங்கு ஒட்டியிருக்கிறேன், அவன் பெயரைப் போட நான் கூச்சப்படவே இல்லை! அவன் பெயர் ராஜ்குமார்! ஒரு இளைஞன் என்று நான் குறிப்பிடவில்லை. எனக்கு அநீதி இழைத்த ஒருவனின் பெயரை நான் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லை அல்லவா? இப்படியாக, இந்த மீ டூ ஆவணங்களின் மூலமாக இந்த உண்மைகளையெல்லாம் இந்தச் சமூகத்தின் முன்பு போட்டு உடைத்திருக்கிறோம்! பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்வதற்கான சூழல் இன்னும் உருவாகவே இல்லை. பொள்ளாச்சியில் முதல் பெண் வாயைத் திறந்து சொல்லும் வரை, அதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பெண்களுக்கு நடந்த அநீதி வெளியில் தெரியவே இல்லை. தனக்கு நேர்ந்த அநீதியைப் பெண்கள் வெளியில் சொல்வதற்கான சூழலை ஏன் இந்தச் சமூகம் ஏற்படுத்திக் கொடுக்காமல் இருக்கிறது. குடும்பங்கள் ஏன் ஏற்படுத்திக் கொடுக்காமல் இருக்கிறது... தனக்கு ஒரு வன்கொடுமை நடக்கும்போது அதை ஒருவர் வெளியில் சொல்ல வேண்டும், அதைப் பேச வேண்டும். அதைப் பேசுவது மிகவும் முக்கியம் அல்லவா... அந்தத் தளம்தான் இந்த மீ டூ ஆவணங்கள்! திருநங்கைகளுக்கு நேரும் வன்கொடுமைகளைக் கூறினால் அதற்கு இந்தப் பொதுவழி ஊடகங்கள், பொதுவழி சமூகம் செவிசாய்ப்பதில்லை. அதே வழக்கமான எண்ணங்கள், பார்வைகள்தான்! ‘நீங்கள் பாலியல் தொழில்தானே செய்கிறீர்கள், அதனால்தான் உங்களுக்குப் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கிறது, ‘நீங்கள் உழைப்பதில்லை, எல்லோரிடமும் கைதட்டி காசு கேட்கிறீர்கள், அதனால்தான் நடக்கிறது’, ‘நீங்கள் அசிங்கமாக உடை உடுத்துகிறீர்கள், நீங்கள் அதிகமாக உதட்டுச் சாயம் பூசுகிறீர்கள், அதனால்தான் நடக்கிறது’. இப்படியான புகார்கள்தான் இருக்கின்றன. அப்படிக் கிடையாது! நன்றாக உடை உடுத்தியிருந்தாலும், ‘மோசமாக’ உடுத்தியிருந்தாலும் திருநங்கைகளுக்கு இப்படியான கொடுமைகள் தான் நடக்கிறது! இந்தச் சமூகத்திலிருக்கும் ஒவ்வொரு திருநங்கைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், நிச்சயமாக நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு திருநங்கையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது ஏன் நடக்கிறது? நாங்கள் ஒரு மௌனியாக இருப்பதால்தான்! அதனால் நாங்கள் பேசுவது முக்கியம். 

"'திருநங்கைகளின் மீ டூ' அடுத்த கட்டப் பயணம் என்ன?"

"பெண்கள் எப்படி மீ டூ இயக்கத்தை முன்னெடுத்தார்களோ, இந்த அரசியல்வாதி, இந்தப் பிரபலம் என்று எப்படி உண்மைகளை உரக்கச் சொன்னார்களோ, அதைப் போன்றே நாங்களும் சொல்வது அவசியம்! எங்கள் கை விரல் பதிவுகளை அங்கே பதித்து, அதன் மேலே தான் எழுதியிருக்கிறோம். ஏனென்றால், இது நான் எழுதியது என்பதன் அத்தாட்சி அது! இந்த அத்தனை கதைகளுமே இந்த ஓவிய கண்காட்சிக்காக என்று இல்லாமல், தொடர்ந்து ஒரு செயல்திட்டமாக நானும், திருநங்கை சௌந்தர்யாவும் சேர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கேரளாவில் இருக்கும் திருநங்கைகளை சந்தித்து எழுதப் போகிறோம். ஐந்து ஆண்டுகள் எல்லா இடங்களுக்கும் பயணித்து, இந்தக் கதைகளைச் சேகரிக்க இருக்கிறோம். இன்று, ஒரு சுவரில்தான் இந்த மீ டூ ஆவணங்களைப் பார்க்கிறீர்கள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, இந்த மொத்த கட்டடத்தின் எல்லாச் சுவர்களிலும் இந்தக் கதைகள் இருந்தால், அதைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்! யோசித்துப் பாருங்கள். எவ்வளவு வலிமையாக இருக்கும்! அதைப் பார்த்து இந்தச் சமூகம் வெட்கப்படும், அல்லவா? இப்படி எழுதுவதற்கான அவசியத்தை இந்தச் சமூகம் ஏற்படுத்திக்கொடுக்கக் கூடாது என்பதுதான் என் ஆசை. இந்த மீ டூ தொகுப்புகளை எவ்வளவு நாள்கள்தான் நாங்கள் எழுதிக் கொண்டிருப்போம்? இன்னும் எவ்வளவு நாள்கள்தான் இந்தப் பாலியல் வன்புணர்வுகள் எங்களுக்கு நடந்துகொண்டிருக்கும்? இவற்றுக்கெல்லாம் எதிராக எங்கள் தூரிகைகள் மூலமாக நான் குரல் கொடுக்கிறோம், எங்கள் கதைகளை வெளிப்படுத்துகிறோம்! அதற்காகத்தான் இந்தக் கண்காட்சி. கலை என்பது எங்களுடைய அழகியல் மட்டுமல்ல. அதை எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆயுதமாகவும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதற்குத் தமிழகம் தான் நிச்சயமாக முன்னோடி! பெரியார், பாரதியார் தொடங்கி இங்கு நிறைய ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். பாலியல் மாற்றம், பாலியல் ரீதியிலான அடையாளங்கள் என்பவையெல்லாம் இயல்புகள், ரொம்ப இயல்பான விஷயங்கள்! எங்களை நாங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்மையாக இருக்கிறேன் என்பதற்காக என்னை வன்புணர்வு செய்வாய் எனில், நீதான் குற்றவாளி, நீதான் தண்டனைக்கு உரியவன்! திருநங்கை சமூகம் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளைப் பேசுவதற்குக் கூட நேரமில்லை, கேட்பதற்குக் காதுகளும் இல்லை, விருப்பமும் இல்லை. இப்படியான சூழலில், இந்த மீ டூ ஆவணங்கள் மிகவும் முக்கியம். அதனால்தான், இந்த ஓவியக் கண்காட்சியில் அவை முக்கியப் பங்கை எடுத்துக்கொண்டிருக்கின்றன.

"இந்தக் கண்காட்சியை மற்ற இடங்களில் நடத்தும் எண்ணம் உண்டா?"

"இது பல இடங்களுக்கும் பயணிக்கும் கண்காட்சிதான். ‘அவர்களை வாயை மூடச் சொல்லுங்கள். ஏனென்றால், குரலற்றவர்கள் பேச வேண்டும்!’ என்று ‘ஷட் அப்’ என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கிறது. பெங்களூர், கோவா, டெல்லியில் நடத்துவோம். இன்னும் சிறுநகரங்களுக்கும் இதை எடுத்து செல்லும் எண்ணம் இருக்கிறது. எந்த மொழி, கலாசாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீ மாற்றுப் பாலினத்தவராக இருந்தால் உன் உடல் பாலியல் வன்கொடுமைக்கு உரியது, உன் உடல் பாலியல் வன்முறைக்கு உரியது, உன் உடல் கேவலம், உன்னை நாங்கள் வன்கொடுமை செய்ய முடியும்! இந்த நிலைதானே இருக்கிறது! எங்கள் ஓவியங்கள் மூலமாக இதை எதிர்த்துப் போராடுகிறோம். எங்கள் கைகளால் வண்ணங்களை எடுத்து, தீட்டி ஓவியங்களை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் குருதியின் மூலமாக அதைச் செய்ய வைக்கக் கூடாது இந்த சமூகம். அதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. இவை தூரிகைகள் கிடையாது, நிச்சயம் ஒரு போர்வாள்!

"இனி இந்த ஷட்அப் கண்காட்சியை வருடந்தோறும் எதிர்பார்க்கலாமா?"

"நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஆனால், வேறு வேறு பெயர்களில்! இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் நிறைய திருநங்கை ஓவியர்கள் வருவார்கள், இன்னும் பிரம்மாண்டமான ஓவியங்களை எதிர்பார்க்கலாம். இந்த வருடம் இந்த ஓவியங்கள் எல்லாம் என்னுடன் இணைந்து திருநங்கைகள் சௌந்தர்யா, ரேவதி, சந்தியா, காஞ்சனா, விஜி, நேஹா, ரீமா வரைந்தவை, மீ டூ ஆவணங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்காற்றியிருக்கிறார்கள். ஒரு வளாகத்துக்குள் மட்டும் என்றில்லாமல் பொதுவழிச் சமூகத்தின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களோடு சேர்ந்து நிறைய கலைப்படைப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பழங்குடியின குழந்தைகளின் பள்ளிச் சுவர்களை வண்ணங்களால் அழகுபடுத்தும் வேலையை நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம்."

இந்தச் சமூகம் தந்த அவலத்தைப் பகிர்ந்துகொண்டு விடைபெற்றார் திருநங்கை கல்கி. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த ஓவியங்கள் பார்வையிட வைக்கப்பட்டிருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு