Election bannerElection banner
Published:Updated:

`கண்ணை மூடி, நாக்கை நீட்டி, ஆஹான்னு சொன்னா..!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

`கண்ணை மூடி, நாக்கை நீட்டி, ஆஹான்னு சொன்னா..!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்
`கண்ணை மூடி, நாக்கை நீட்டி, ஆஹான்னு சொன்னா..!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

அதன் பெயர் மறந்திருந்தாலும் சுவை மட்டும் மறக்கவில்லை. இப்படி இன்னும் எத்தனை எத்தனை உணவுப் பண்டங்கள்... 90'ஸ் கிட்ஸின் வாழ்க்கையில், அசைபோட்டு பார்ப்போம்..!

வெளியே கறுப்பும் உள்ளே சிவப்புமாக, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில், மிளகு சைஸில் ஒரு பழம் இருக்குமே... அந்தப் பழத்தின் பெயர் உங்களுக்குத் தெரியுமா? நானும் அடிக்கடி ஆழ்மனத்தின் அடிமட்டம் வரை சென்று அலசிப்பார்த்திருக்கிறேன். பதில் கிடைக்கவேயில்லை. அதன் பெயர் மறந்திருந்தாலும் சுவை மட்டும் மறக்கவில்லை. இப்படி, இன்னும் எத்தனை எத்தனை உணவுப்பண்டங்கள் 90'ஸ் கிட்ஸின் வாழ்க்கையில்... அசைபோட்டுப் பார்ப்போம்!

``மசால்வடை மசால்வடைதான்யா... அறுசுவையும் நாக்குல நடனமாடுதே!"

- தோழர் வடிவேலு

90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தின்பண்டங்களில் என்றைக்குமே மாங்காய்க்குத்தான் முதல் இடம். மாங்காயைத் துண்டுத் துண்டாகப் பிளந்து, உப்போடு கொஞ்சம் மிளகாய்ப்பொடியையும் சேர்த்து, ஒரு மாங்காய்த் துண்டை எடுத்து உப்பு, மிளகாய்ப்பொடியில் தொட்டு, கண்களை மூடி நாக்கை நீட்டி... `ஆஹா'ன்னு சொன்னா! செமத்தியாக இருக்கும் இல்லையா? இதே 40 - 50 துண்டுகளை விழுங்கினால் எப்படியிருக்கும்... கேட்கவே பயமாய் இருக்கிறதல்லவா! அப்படி மறக்க முடியாத ஒரு சம்பவத்தை மாங்காய்கள் என் வாழ்க்கையில் நடத்தியிருக்கின்றன.

``அந்த மூணாவது மாங்கா, நீங்கதான் சார்!"

- தோழர் சிங்கப்பெருமாள்

அழகர்கோயில் மலை அடிவாரத்தில் தாத்தாவுக்குச் சொந்தமான மாந்தோப்பு ஒன்று இருந்தது. மரங்களில் பால் வாசம் வீச, மாங்காய்கள் காய்த்துத் தொங்கும். யாராவது என்னிடம் மாங்காயை வரைந்து காட்டினால், அதைப் பார்க்கும்போதே எச்சில் ஊறும்! அப்படியிருக்க மாந்தோப்பு என்றால் சொல்லவா வேண்டும். தாகத்தில் இருப்பவன் மீது தண்ணீர் லாரி ஏறியது மாதிரி (!) அப்படியொரு சந்தோஷம். இந்த உவமை கொஞ்சம் எக்குத்தப்பாக இருக்கலாம். ஆனால், நடந்தது அதுதான்.

காலை உணவாக, மாங்காய் துருவிப் போட்ட தோசையும் மாங்காய் துவையலும். மதியம் மாங்காய் சாம்பார், மாங்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு, மாவடு மற்றும் சில மாம்பழத் துண்டுகள். இரவுக்கும் அதேதான். இடையில் ஆறு வேளையும் மாம்பழ ஜூஸ். எப்படி `முந்தானை முடிச்சு' பாக்யராஜுக்கு முருங்கை மட்டுமே மூன்று வேளை உணவாகக் கிடைத்ததோ, அப்படி எனக்கு மாங்காயும் மாம்பழமும்.

உள்ளே சென்ற மாங்காய் அடுத்த நாள் காட்டிய கலவரத்தில், கண்கள் எல்லாம் கலங்கிப்போக, இனி ஜென்மத்துக்கு மாங்காய் மீது கை வைக்க மாட்டேன் எனக் கள்ளழகரிடம் சத்தியம் செய்யும் அளவுக்குச் சம்பவங்கள் அரங்கேறின. அடுத்த ஒரு வாரத்துக்கு, திடீர் திடீரென உள்ளே சென்ற மாங்காய் நேரம், காலம் தெரியாமல் வேலையைக் காட்டும். இனியும் மாங்காயைத் தொட்டால் என்னைப் போன்ற மாங்காய் மடையன் ஊரிலேயே இருக்க மாட்டான் என வீறாப்பாய் இருந்தேன். அந்த விரதம், பத்தே நாளில் ஒரு மாங்காய் பத்தையைக் கண்டதும் காணாமல்போய்விட்டது. 

``இலந்தைப்பழம் இலந்தைப்பழம் உனக்குத்தான்..."

- தோழர் ரக்‌ஷிதா & தேஜாஸ்ரீ

என் பள்ளியின் வாசலில் பாட்டி ஒருவர் கடை வைத்திருப்பார். மாங்காய், இலந்தைப்பழம், நெல்லிக்காய், பிளாக்காய், இலந்தை வடகம், இலந்தைப்பொடி, பப்பரமிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், சூடம் மிட்டாய், ஒரு ரூபாய் பெப்சி என எல்லாவிதமான அயிட்டங்களும் கலர்ஃபுல்லாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். காண கண் மட்டுமல்ல, உண்ண வாயும் கோடி வேண்டும்.

பல வண்ணங்களில் விற்கும் பேப்பர்தோசையை வாங்கி அதன் நடுப்பரப்பில் இலந்தைப் பொடியைப் பரபரவெனத் தூவி, பொத்தினாற்போல் மடித்து வாயில் போட்டு கடைவாய்ப் பல் பக்கம் ஒதுக்கி மென்றால், ஜிவ்வென இழுக்கும். லிப்ஸ்டிக் மிட்டாய் சாப்பிட்ட கையோடு, நோட்டில் கை வைத்தால் பக்கங்கள் செக்கச்சிவக்கும். பாக்குமிட்டாயின் வாசத்துக்கும் பான்பராக் நாற்றத்துக்கும் வித்தியாசம் தெரியாத அம்மா, பருப்பு மத்தைத் திருப்பிப் பிடித்து நடுமண்டையில் போட்டது இன்னும் நினைவிருக்கிறது. அதைவிட, பாக்குமிட்டாயைத் தின்றுவிட்டு போதை ஏறிவிட்டதாகப் பயந்தது இன்னும் நினைவிருக்கிறது.

`சூடம் மிட்டாயைக் கொளுத்தினால் எரியுமா?' என மொட்டைமாடிக்கு எடுத்துப்போய் எரித்துப் பார்த்ததில் ஒரு பெட்டி தீக்குச்சிகள் தீர்ந்துபோனதுதான் மிச்சம். ``கொடிக்காய் பழத்தின் விதையை, வெள்ளைப் பகுதி தெரியாதவாறு மேற்தோலை மட்டும் பக்குவமாய் உரித்து, வீட்டு ஜன்னலில் வைத்தால் விருந்தாளி வருவார்கள்" என எவனோ கிளப்பிவிட, ஒரு மாதத்துக்கு விதை உரிப்பதுதான் முழுநேர வேலை. ஃப்ரீயாகக் கிடைக்கிறது என்பதற்காகவே 90'ஸ் கிட்ஸ் வாங்கித் தின்ற பண்டங்கள்தான் எத்தனை எத்தனை! பெரும்பட்டியல் போடலாம்...

குடல் அப்பளத்தை, தவில் வித்துவான்களைப்போல் கையில் மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய் இழுத்துக் கடித்ததை நினைக்கும்போது சிரிப்பாய் இருக்கிறது. பன்னீர்சோடாவுக்கும் கோலிசோடாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி வந்து தொண்டைக்குள் கவிழ்த்த, அந்த நாளையே கசப்பாக்கியிருந்தது கோலிசோடா. ஆனால், அதற்கும் உப்பு, எலுமிச்சம்சாறு சேர்த்து அரவணைப்புக் கொடுத்தோமே. வெயில்காலம் வரும்போதெல்லாம் ரஸ்னா பாக்கெட் வாங்க வெறும்காலில் மூச்சிரைக்க ஓடிய நாள்கள் எல்லாம் சில்லென இருக்கின்றன.

ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பக்கத்து வீட்டு அக்காவிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு தூக்குவாளி நிறைய ஐஸ்கட்டி வாங்கி வந்த நாள்கள், வாட்டர் பாக்கெட்டை ஃப்ரீஸருக்குள் வைத்திருந்து ஐஸ்பாக்கெட்டாக உபயோகித்த நாள்களெல்லாம் இனி வரப்போவதில்லை. பிறந்த நாளுக்கு `ஆசை' சாக்லேட், ஜலதோஷத்துக்கு ஹால்ஸ் மிட்டாய், சுதந்திர தினத்துக்கு ஆரஞ்சு மிட்டாய், எல்லா சீஸனுக்கும் தேன்மிட்டாய் என இடம் பொருள் ஏவல் அறிந்து உணவுகளை வகைப்படுத்தியிருந்தோம். ஆயிரம் அயிட்டங்கள் இருந்தாலும், இலந்தை வடகத்தைத் தின்றுவிட்டு, கடைசியாக கவரோடு வாயில் போட்டு மெல்லும் தருணம் இருக்கிறதே... சுஹானுபவம்! 

``நீ பபிள்கம், ஜெல்லி திங்குறதைக் கண்டுபிடிச்சேன்... வீட்ல ஒரு கொலை விழும்" என, தெலுங்குப்பட வில்லன்களைப்போல் பயமுறுத்திவைத்திருந்தார் அம்மா. `பபிள்கமில் பன்றியின் கொழுப்பு கலக்கிறார்கள், ஜெல்லி என்பது ஜெல்லிஃபிஷ்ஷின் ரத்தத்திலிருந்து செய்யப்படுவது' என விதவிதமான புரளிகளையும் அம்மா கிளப்பிவிடுவார். கேட்கும்போதே கிலி கிளம்பும். யோசித்துப்பார்த்தால், 90`ஸ் கிட்ஸ் ரூமர்களில் முக்கால்வாசி ரூமர்களைக் கிளப்பிவிட்டது, இந்த அம்மாக்கள்தான்! 

சோன்பப்டி வண்டி ஞாபகம் இருக்கிறதா? பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் பஞ்சுகணக்காக சோன்பப்டியைக் கொட்டி எடுத்து வருவார்கள். டேப் போட்டு ஒட்டியிருந்தாலும், அவ்வளவு வசீகரமாய் இருக்கும் அந்தக் கண்ணாடிக் குடுவை. அதே வண்டியில் அச்சுமுறுக்கு, ரவா லட்டும் கண்டிப்பாய் இடம்பெற்றிருக்கும். பளீரென்ற டியூப்லைட் வெளிச்சத்தோடு வரும் தேங்காய் பன் வண்டியை எல்லாம் பார்த்தே பல நாள் ஆகின்றன.

ஜவ்வுமிட்டாய் சுற்றப்பட்டிருக்கும் கம்பின் உச்சாணியில் நிற்கும் பொம்மை, ஜால்ரா தட்டும் சத்தத்தையெல்லாம் கேட்டு, எவ்வளவு நாள்கள் ஆகிவிட்டன. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? சேமியா ஐஸ் எல்லாம் இப்போதும் இருக்கிறதா? பானிபூரிக் கடைகள் மட்டும்தான் அப்படியே நிற்கின்றன. என்ன, கடைசியில் கொசுறாகக் கிடைக்கும் பானிபூரி மட்டும் இப்போது கிடைப்பதில்லை. கையில் 50 பைசாகூட இல்லாத நேரத்தில், வாய் `நமநம'வென நச்சரிக்கும்போது... கொஞ்சம் புளியை எடுத்து உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து, பெரிய நெல்லிக்காய் சைஸில் உள்ளங்கைக்குள் வைத்து உருட்டி வாயில் போட்டால், ப்பா... பற்கள் கூசுதுப்பா! 

முதல் வரியில் சொல்லியிருந்த, அந்தப் பழத்தின் பெயரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? எனக்கு பதில் கிடைத்துவிட்டது. ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு போனைப்போட்டு, எனக்கு அதை விற்ற அந்தப் பாட்டியிடமே கேட்டு ஊர்ஜிதமும் செய்தாயிற்று. அந்தப் பழத்தின் பெயர், சூரைப்பழம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு