Published:Updated:

`ஏ.பி.சி.டி. தெரியல...' எல்.கே.ஜியில் ஃபெயிலாக்கிய சென்னைத் தனியார் பள்ளி!

`ஏ.பி.சி.டி. தெரியல...' எல்.கே.ஜியில் ஃபெயிலாக்கிய சென்னைத் தனியார் பள்ளி!
`ஏ.பி.சி.டி. தெரியல...' எல்.கே.ஜியில் ஃபெயிலாக்கிய சென்னைத் தனியார் பள்ளி!

`ஏ.பி.சி.டி. தெரியல...' எல்.கே.ஜியில் ஃபெயிலாக்கிய சென்னைத் தனியார் பள்ளி!

முன்பெல்லாம் ஒரு குழந்தைக்கு, ஐந்து வயது நிரம்பியதும்தான் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ப்பார்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன், 3 வயதுக் குழந்தையை எல்.கே.ஜியில் சேர்க்கும் பழக்கம் சமூகத்தில் இயல்பாகி விட்டது. இன்னும் சிலர் 2 வயது முடிந்ததுமே ப்ரி கேஜி வகுப்புக்கு அனுப்பத் தொடங்கிவிட்டனர். விளையாடும் பருவத்தில் அறைக்குள் அமர்ந்து படிக்கும் சூழல் வந்துவிட்டது. அப்படித்தான், 3 வயதில் எல்.கே.ஜி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கு, அவள் படித்த பள்ளி பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோர் சொல்வதையே கேட்போம். 

சிறுமியின் அம்மா, ``எங்க பொண்ணு அடையாரிலுள்ள பாரத் சீனியர் ஹையர் செகண்ட்ரி தனியார்  பள்ளியில் எல்.கே.ஜி படிச்சா. இந்த வருஷத்தோட கடைசி நாளில், பொண்ணை அழைச்சிட்டு வர பள்ளிக்குப் போனேன். `ஒரு நிமிஷம் இருங்க'னு மிஸ் சொன்னாங்க. `பிரின்ஸிபலைப் பார்க்கணும்'னு சொன்னதும் `சரி'னு சொன்னோம். ஆனா, பிரின்ஸிபலைப் பார்க்க முடியல. அதுக்குள்ள, மிஸ் எம் பொண்ணை ஒரு நோட்டுல எழுதச் சொன்னாங்க. அவளும் எழுதினா. எழுதினதைப் பார்த்த மிஸ், `இவ ஏபிசிடி ஆர்டர்படிதான் எழுதறா. நாங்க S, R ன்னு சொன்னா, அதை எழுத மாட்டேங்கிறா. அதனால, இவள யூ.கே.ஜிக்கு அனுப்ப முடியாது' எனக் கறாரா சொல்லிட்டாங்க. `அவதான் நல்லா எழுதுறாங்களே மிஸ்'னு சொன்னேன். அதுக்கு, `அதெல்லாம் முடியாது. எங்க ஸ்கூல் பேர்தான் கெட்டுடும். அதனால, அடுத்த வருஷமும் இவ எல்.கே.ஜியிலேயே படிக்கட்டும். அதுக்கு உண்டான பணத்தைக் கட்டுங்க'னு சொன்னாங்க. நான் மறுத்துப் பேசினேன். அதுக்கு `அடுத்த வருஷமும் எல்.கே.ஜியிலேயே படிக்கறதுக்குச் சம்மதம்னு ஒரு லெட்டர் எழுதிக்கொடுங்க'னு கேட்டாங்க. அப்பதான் அந்த சீட்டை வெச்சிக்க முடியும்னு சொல்றது மாதிரி இருந்துச்சு. அப்பறம் ஒரு தம்பி மூலமா, கல்வி ஆணைபடி எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டோம்" என்கிறார். 

சிறுமியின் அப்பா போக்குவரத்துத் துறையிலும் அம்மா இல்லத்தரசியாகவும் இருக்கும் எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். இதில் 60,000 ரூபாய்க்கு மேல், சிரமப்பட்டுக் கட்டிய எல்.கே.ஜி பணத்தை மீண்டும் அதே வகுப்புக்குக் கட்டுவது என்பது எவ்வளவு சிரமம் என்று நினைத்தே அஞ்சினர். இந்தப் பிரச்னையை கையில் எடுத்துப் போராடிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினேன். 

``கல்வி உரிமைச் சட்டப்படி இப்போது வரை எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் ஃபெயிலாக்கக்கூடாது. ஆனால், ஒரு நண்பர் மூலம், எல்.கே.ஜி வகுப்பில் ஒரு மாணவியை, ஃபெயிலாக்கி விட்டார்கள் என்ற தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால், இது அப்பட்டமான சட்ட மீறல். சின்னக் குழந்தையின் கல்விக் கனவில் தீயை வைப்பதற்குச் சமமானது. பிறகு, விசாரித்ததில் அடையாரிலுள்ள தனியார் பள்ளி என்று தெரிந்ததும், அங்குச் சென்றோம். `இது சரியானது இல்லையே' என்று கேள்விகள் கேட்டோம். பிரின்ஸிபலைச் சந்திக்க விடவில்லை. மற்றவர்கள்தான் பேசினர். `பெற்றோரே சம்மதம் சொல்லி லெட்டர் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். பெற்றோர்களே சொன்னாலும் இது சட்டப்படி தவறு என்று சொல்லியும் பயனில்லை. பிறகுதான், பெற்றோருடன் பிரஸ் மீட் வைத்தோம். அதன் பிறகுதான், பள்ளி நிர்வாகம் இறங்கி வந்து, கட்டிய கட்டணத்தைத் திரும்பத் தந்து, மாற்றுச்சான்றிதழில் பாஸ் என எழுதித்தந்தனர். பெற்றோருக்கு, இதுபோன்ற பள்ளிகள் நெருக்கடி தருவதற்கு இரண்டு காரணங்கள். நாங்கள் பள்ளியை ரொம்ப ஸ்ட்ரிக்காக நடத்துகிறோம் என்பதைக் காட்டுவது, இரண்டாவது அந்தக் குழந்தை மீண்டும் படிக்கும்போது ஓராண்டுக் கட்டணம் அந்தப் பள்ளிக்குக் கிடைக்கும். அதனால்தான் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்." என்றவரிடம், `அப்படியென்றால், இதுபோல ஃபெயிலாக்குவது பல பள்ளிகளிலும் நடக்கிறதா?" என்றேன். 

``நிச்சயமா, இந்தப் பிரச்னை வந்த இரண்டாவது நாளே, ஒரு பெற்றோர் மூன்றாவது படிக்கும் மகனை ஃபெயிலாகி விட்டதாகக் கூறினார். சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இதை அவசரப் பணியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது அவசியம்" என்றார். எல்.கே.ஜியில் ஃபெயிலாக்கப்பட்ட சிறுமி, மாற்றுச்சான்றிதழ் வாங்கிக்கொண்டு, வேறு பள்ளியில் சேரவிருக்கிறார். 

இது குறித்து அறிய, அந்தப் பள்ளியைத் தொடர்புகொண்டபோது பேசியவர், ``பெற்றோரின் விருப்பத்தாலே அம்மாணவியை மீண்டும் அதே வகுப்பில் படிக்கச் சொன்னோம். இது முழுக்க அந்தப் பெற்றோரின் விருப்பம்தான். இதற்கு சிபிஎஸ்ஐ யில் விதியும் இருக்கிறது. அவங்க இதில் மாறுபட்டதால், அந்த மாணவி செலுத்திய அனைத்துத் தொகையும் திருப்பிக் கொடுத்துவிட்டோம்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். 

அடுத்த கட்டுரைக்கு