Published:Updated:

கோபத்தைக் கையாள இந்த வழிகளை பின்பற்றுங்கள்! #MorningMotivation

கோபத்தைக் கையாள இந்த வழிகளை பின்பற்றுங்கள்! #MorningMotivation
கோபத்தைக் கையாள இந்த வழிகளை பின்பற்றுங்கள்! #MorningMotivation

சில சூழல்களும், சிலரின் நடத்தையும் உங்களை கோபப்படுத்தலாம். கோபத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டதற்கு மற்றவர் மீது பழிபோட வேண்டாம். நமது செயல்களுக்கு நாமே எஜமானர்கள். ஆகவே...

`சாபத்தால் கெட்டுப்போனவர்களைவிட கோபத்தால் கெட்டுப்போனவர்களே அதிகம்'. `கோபம் என்கிற குணம், மனிதரைக்கூட மிருகமாக மாற்றும்'. `கோபப்படும்போது, அழகிய முகம்கூட அசிங்கமாய்த் தெரியும்' - இப்படி, கோபம் பற்றி நெகட்டிவாகச் சொல்லிக்கொண்டே போகலாம். பணத்தைக் கையாளத் தெரிந்தால்தான் குறைவில்லாமல் வாழ முடியும் என்பார்கள். அதுபோலத்தான் கோபத்தை யார் கையாள்கிறார்களோ அவர்களின் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையும். 

பேசுவதற்கு முன்பு சிந்திக்கவும் 

கோபம்... அது கொள்பவர், கொள்ளப்படுபவர் இருவரையுமே பாதிக்கும். ஆகவே, கோபப்படக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தலாம். உங்கள் பக்க நியாயத்தை அல்லது அதிருப்தியை உடனடியாக கோபமான வார்த்தைகளில் கொட்டாமல், சற்று நிதானித்து, நீங்கள் தெளிவாகிவிட்டீர்கள் என உணர்ந்த பிறகு மோதல் போக்கில்லாத வகையில் வெளிப்படுத்துவது நல்லது. இதனால் உறவு சீர்கெடாமல் தடுக்க முடியும். விவாதத்தில் வெல்வதைவிட, உறவுகள் காயப்படாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். நிதானமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தும்போது, தவறாகப் புரிந்துகொள்வதால் ஏற்படக்கூடிய கோபம் தவிர்க்கப்படுகிறது. அதேபோல, ஆக்ரோஷமாகப் பேசுவதைத் தவிருங்கள். பிறரின் உணர்வுகள், உரிமைகள், தேவைகளை மதித்துப் பேசுங்கள். அப்போது கோபம் கட்டுப்படுத்தப்படும்.

வெறுப்புக்குப் பதில் மன்னிப்பு  

மன்னித்தல் என்பது, வலுவான ஆற்றல் மிக்கச்செயல். எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் செல்வாக்கு செலுத்த நீங்கள் அனுமதித்தால், அவை உங்களை விழுங்கிவிடுவதுடன் தவறான நிலைக்கு இட்டுச்செல்லும். ஆனால், உங்களைக் கோபத்துக்கு உள்ளாக்கிய நபரை நீங்கள் மன்னிக்கும்போது, இருவருக்குமே அது பயனளிக்கும். மேலும், சூழலை உணர்ந்துகொள்ள இருவருக்குமே உதவும். நாம் நினைப்பது மாதிரியே அனைவரும் செயல்பட வேண்டும் என நினைப்பது நடைமுறை சாத்தியமற்றது. நண்பர்களுடனும் சகபணியாளர்களுடனும் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்கள் மீது வீணாகப் பழிபோடவேண்டிய அவசியம் அல்லது அவர்கள் உங்களைப் பற்றி அவ்வாறு நினைக்கவும் வாய்ப்பிருக்காது. உங்கள் கோபத்துக்கு, பிறர் காரணமாக இருக்கலாம். ஆனால், அவர் மீது கோபப்படுவதைவிட அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். 

ரிலாக்ஸ் செய்யுங்கள்

கோபத்தை உண்டாக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப்பதில், உடற்பயிற்சிகள் உதவும். கோபம் உண்டாகிவருவதை நீங்கள் உணரும் தருணம், கொஞ்சம் சுறுசுறுப்பான நடை அல்லது ஓட்டம் அல்லது உங்களுக்குப் பிடித்த அல்லது அந்தச் சூழலில் இயலக்கூடிய பிற உடலியல் / விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதனால் மனம் விரைவில் சாந்தமாகும். ஒருநாளில் தொடர்ச்சியாக ஓய்வின்றி வேலை செய்யும்போது, அவ்வப்போது சிறிய இடைவேளை விடுங்கள். அமைதியான சிறிய இடைவேளை, உங்களை அமைதிப்படுத்தி கோபத்தை லாகவமாகக் கையாள உதவும். உடலையும் மனதையும் பண்படுத்தி உறுதியாக்கும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைத் தகுந்தவர்களிடம் கற்றுக்கொண்டு தினசரி செய்துவந்தால், மனம் தானாக அமைதியடையும்; உடல்மொழியும் மாற்றமடையும். 

பிராக்டிகலாக இருங்கள்

கோபமுண்டாக்கும் சில மனிதர்களையும் சூழல்களையும் நம்மால் கையாள முடியாமலே போகலாம். அந்நிலையில், அவர்களிடமிருந்து தள்ளி இருப்பதே கோபத்தைத் தவிர்க்க சரியான வழி. அதுபோல, பிரச்னைகளைக் கையாள முடியாது எனத் தோன்றினால், மனநல ஆலோசகர்களை நாடுவது பயனளிக்கும். நண்பர்கள், பெரியவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். நாம் நினைப்பதுபோலவே எல்லோரும் நடந்துகொள்ளவேண்டியதில்லை; நம் விருப்பப்படிதான் சூழல் அமையும் என்பதில்லை; நாம் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ள ஒருசில விஷயங்கள் மட்டுமே நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. பெரும்பாலான விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டுமே நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இவற்றைப் புரிந்துகொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்பாராத நிகழ்வுகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன.

கோணத்தை மாற்றுங்கள்

சில சூழல்களும் சிலரின் நடத்தையும் உங்களைக் கோபப்படுத்தலாம். கோபத்தால் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டதற்கு மற்றவர் மீது பழிபோட வேண்டாம். நமது செயல்களுக்கு நாமே எஜமானர். கோபம் உண்டாகும் சூழலை வழக்கமான கோணத்தில் அணுகாமல், வேறு கோணத்திலிருந்து பாருங்கள்.

உதாரணத்துக்கு, குடும்பச்சூழலால் நீங்கள் கோபமடைபவராக இருந்தால், பிரச்னையை உங்கள் மனைவி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் கோணத்திலிருந்து பாருங்கள். அப்போதுதான், உங்களின் தவறும், அவர்கள் பக்கம் உள்ள நியாயமும் தெரியும். வாழ்க்கை மிகவும் குறுகியது; என்றும் தொடரக்கூடியதல்ல இந்தப் பிறப்பு. ஆகவே, இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அற்பமான காரணங்களுக்காக ஏற்படும் கோபத்தால் பாதிக்கப்பட வேண்டுமா? ஒவ்வொரு நாளும் கோபத்தால் உறவுகளும் மகிழ்ச்சியும் பாதிக்கப்பட்டு இழக்கப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் நினைத்தால் இதைத் தடுக்க முடியும்.

முடிவு உங்கள் கையில். ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக்குங்கள்!

அடுத்த கட்டுரைக்கு