Published:Updated:

"என் இசைவாழ்க்கை அடையாளம் பெற அந்தக் குருவாயூரப்பன்தான் காரணம்! - பாடகர் உன்னிகிருஷ்ணன்" #WhatSpiritualityMeansToMe

"என் இசைவாழ்க்கை அடையாளம் பெற அந்தக் குருவாயூரப்பன்தான் காரணம்! - பாடகர் உன்னிகிருஷ்ணன்" #WhatSpiritualityMeansToMe
"என் இசைவாழ்க்கை அடையாளம் பெற அந்தக் குருவாயூரப்பன்தான் காரணம்! - பாடகர் உன்னிகிருஷ்ணன்" #WhatSpiritualityMeansToMe

உன்னிகிருஷ்ணன், தமிழ் மெல்லிசையுலகின் தனித்த அடையாளம். மென்மையும் இனிமையுமான குரலுக்குச் சொந்தக்காரர். இளம் வயதிலேயே, கர்நாடக இசை உலகில் பெரும் வரவேற்புப் பெற்றவரைத் தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டு தன் வசமாக்கிக்கொண்டது. கடந்த 25 ஆண்டுகளில் அவரின் இசை, தமிழ் ரசிகர்களைத் தாலாட்டிவந்திருக்கிறது. தேசிய விருதைப் பெற்ற அவர் பாடிய 'என்னவளே... அடி, என்னவளே' பாடல் இன்னமும்கூடக் காதலர்களின் உலகின் பிரியகீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் பாடகர் உன்னிகிருஷ்ணனிடம், அவரின் ஆன்மிக அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.   

''எனக்கு குருவாயூரப்பன்தான் இஷ்டதெய்வம். சொந்தஊர் பாலக்காடுன்னாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். எங்க தாத்தா, குருவாயூர் கிருஷ்ணனுக்காக ராயப்பேட்டை வீட்டில் வருஷா வருஷம் பெரிய அளவுல விழா எடுப்பார். இதுல நிறைய பேர் கலந்துக்குவாங்க. அதனால சின்னவயசிலிருந்தே குருவாயூரப்பனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டேன்.

மாதத்தில் ஒருமுறையாவது குருவாயூருக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வருவேன். கச்சேரியில் பாடுறதுக்காகவும் குருவாயூர் போயிருக்கேன். ஆனால், எப்போதுமே அங்கு கூட்டம் நிரம்பி வழியும். இங்குள்ள கோயில்கள் மாதிரி சிறப்புக் கட்டண வசதிகள் எல்லாம் கிடையாது. எல்லோருமே க்யூவிலதான் போகணும். ஆனாலும் எப்போ போனாலும், ஏதோ ஒருவகையில சுவாமி தரிசனம் பண்ணிடுவேன். 

சில சமயம் ரொம்பவும் கூட்டமா இருந்தால் வெளியிலே நின்னு கும்பிட்டுக் கிளம்பிடலாம்னு நினைப்பேன். ஆனாலும், ரசிகர்கள் தானாகவே கையைப் பிடிச்சு என்னை அழைச்சிக்கிட்டுப் போய் தரிசனம் பண்ண வைப்பாங்க. 

என் இசைவாழ்க்கை ஓர் அடையாளம் பெற்றிருக்குன்னா அதுக்குக் காரணம் குருவாயூரப்பனுடைய அருள்தான். தகுதி, திறமை, வசதி வாய்ப்பு இதெல்லாம் இருந்தாலும், நமக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரம், புகழ் இவையெல்லாம் கடவுளுடைய அருள் இருந்தால்தான் கிடைக்கும். 

குறிப்பா இயக்குநர் ஷங்கரோட காதலன் படத்தில, 'என்னவளே, அடி என்னவளே' பாடலைப் பாடுற வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம். அந்தப் பாடலின் வெற்றி என் வாழ்க்கையையே மாற்றி, சினிமா உலகில் எனக்கொரு நிரந்தரமான இடத்தைத் தேடித் தந்துச்சு. 

இதைவிடப் பெரிய விஷயம், நான் பாடிய முதல் சினிமாபாடல் அதுதான். என் முதல் பாட்டுக்கே தேசிய விருது கிடைச்சுது. இது, நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விஷயம். பொதுவா ஒரு பாடகருக்கு ஒரு படத்துல பாட்டு பாட வாய்ப்பு கிடைச்சாலும், அந்தப் பாட்டு படத்துல இடம் பெறணும். அந்தப் பாடலைக் காட்சிப்படுத்துன விதம் சரியா இருக்கணும். அதைத்தாண்டி பாட்டு ஹிட்டாகணும்.  இத்தனையும் எனக்கு முதல் பாட்டுலயே நடந்து, 1994-ம் வருஷத்துக்கான சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதும் கிடைச்சது பெரிய விஷயம்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், என் பொண்ணு உத்ரா, டைரக்டர் விஜய் இயக்கத்துல 2014-ல் வெளிவந்த 'சேவல்' படத்துல பாடின 'அழகே அழகே'ங்கிற பாடல்தான் சினிமாவில் அவள் பாடிய முதல்பாடல். அந்தப் பாட்டுக்கு 2015-ல் தேசிய அளவுல சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைச்சுது. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதுக்குக் காரணம் நான் வழிபடுற குருவாயூரப்பன்தான் காரணம்.

 இதுல சுவாரஸ்யமான ஒரு செய்தி இருக்கு. நாங்க குருவாயூரப்பனை வணங்கினாலும் எல்லா தெய்வங்களையும் மகான்களையும் வணங்குவோம். அதிலும் ஷீரடி சாய்பாபா மிகவும் பிடிக்கும். ஒருமுறை, என் பொண்ணு உத்ரா அவளுடைய நோட்புக்குல 'சாய்ராம்', 'சாய்ராம்'னு எழுதிக்கிட்டிருந்தாள்.

'என்னம்மா என்ன விஷயம்? சாய்ராம், சாய்ராம்னு எழுதிக்கிட்டிருக்கேனு கேட்டேன். 

'என் கிளாஸ்மெட் இதை 1,000 முறை எழுதினால் நல்லது நடக்கும்'னு சொன்னாள். அதான் சில நாள்களாக எழுதுறேன்''னு சொன்னாள். சிறு குழந்தையாயிருந்தாலும் ஷீரடி சாய்பாபாவின் மீது வைத்த அவள் நம்பிக்கை வீண்போகலை. அவள் எழுதி முடிச்ச இரண்டொரு நாளில் இந்த விருது அவளுக்குக் கிடைச்சுது'' என்றவரிடம் உங்களுடைய வழிபாட்டு முறை என்னவென்று கேட்டோம்.

  ''வழிபாட்டு முறைனு பெருசா எதுவும் கிடையாது. 'பிபரே  ராம ரசம்' என்னும் சமஸ்கிருத பாடலை அடிக்கடி பாடுவேன். மற்றவர்களுக்கு உதவறதும் ஒருவகையில் ஆன்மிகம்தான். அதனால, நம்மால எவ்வளவு முடியுமோ அந்த அளவு நல்லது செய்யணும். முடிஞ்ச வரைக்கும் எல்லோருக்கும் உதவி பண்ணணும் யாரையும் மனசு புண்படும்படி பேசக்கூடாதுனு நினைப்பேன். நாம செய்யும் சேவை நிச்சயம் நமக்கு திரும்ப வரும்ங்கிறதை உறுதியா நம்புறேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னால என் நண்பன் ஸ்ரீனிவாஸ், 'பார்வையிழந்த ஒரு மாணவருக்கு உன்னால முடிஞ்ச உதவியைச் செய்'ன்னு சொன்னார். நானும் செய்தேன். அந்த உதவியால் நெகிழ்ந்துபோனார் அந்த மாணவர். அதுல எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைச்சுது. அது போன்ற உதவிகளை நான் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். இப்பவும் பார்வையிழந்த மாணவர்களுக்கு உதவி பண்ணிக்கிட்டுதானிருக்கேன். இதுக்கு நான் ஸ்ரீனிவாஸுக்குதான் நன்றிசொல்லணும்’’ என்கிறார் புன்னகை மாறாமல்!