Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : பாஸ்கர் சக்திபடம் : கே.ராஜசேகரன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : பாஸ்கர் சக்திபடம் : கே.ராஜசேகரன்

Published:Updated:

பிரபலங்கள்  விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை,  நெருக்கத்தை,
 விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

 ''என் பிள்ளைப் பிராய நினைவுகளில் விகடனின் அட்டைப் பட கார்ட்டூன்கள் படிந்திருக்கின்றன. அப்போது எல்லாம் விகடன் தாத்தாவின் தலையை ஒரு தேங்காயாக மனதுக்குள் நினைத்துச் சிரித்திருக்கிறேன். கொஞ்சம் விவரம் வந்த பின் பார்த்து வியந்த, இன்னும் மறக்க முடியாத ஓர் அட்டைப் படமாக இருப்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும்பொருட்டு விகடன் பிரசுரித்த கொலாஜ் பாணி அட்டைப் படம். வறண்டுபோன மண்ணில் இருந்து நீட்டிக்கொண்டு இருக்கும் கை ஒன்றில் சிகரெட் புகைந்துகொண்டு இருக்க... சுற்றிலும் சிகரெட் துண்டுகள் குவிந்திருக்கும். மிரட்சியூட்டும் அந்தப் புகைப்படத்துக்காக விகடன் எவ்வளவு மெனக்கெட்டது என்ற தகவல்கள் பின்னாளில் பிரமிப்பூட்டின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணன் பொன்.சந்திரமோகன் என் ஊர்க்காரர். விகடனைப் பற்றிய கனவுகளை எனக்குள் விதைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. நான் கல்லூரியில் சேர்ந்த சமயத்தில், விகடன் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டிருந்தது. அப்போது புதிய ஆத்திசூடிக் கதைகள் பரசுராம் பிஸ்வாஸ் என்ற பெயரில் வெளிவந்துகொண்டு இருந்தன. நானும் நண்பன் ரமேஷ்வைத்யாவும் தேனி ரயில் நிலையத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிய காலங்கள். நான், ரமேஷ்வைத்யா, பாலுசத்யா, பாலசுப்ரமணியம் என்ற மற்றொரு நண்பர் எல்லாரும் லட்சுமி தியேட்டர் முன்பு டீ குடித்துவிட்டு, விகடனுடன் ரயில் நிலையம் போய் அமர்வோம். ரமேஷ் அருமையான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் உரத்த குரலில் கதைகளை வாசிப்பான். அதன் பின்னர், அந்தச் சிறுகதைகள்குறித்து விவாதிப்போம். சிறுகதைகள்பற்றிய ஆவலை, கதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியதில் விகட னின் அந்தக் காலகட்ட சிறுகதைகள் குறிப்பாக, புதிய ஆத்திசூடிக் கதைகள்  முக்கியப் பங்கு வகித்தன.

நானும் விகடனும்!

விகடனில் இன்னுமொரு வசீகரமான விஷயம், பின் அட்டையில் '3டி’ எனும் முப்பரிமாணப் படம் வந்தது. அந்தப் படத்தை எப்படிப் பார்ப்பது என்கிற விளக்கத்தைப் பல முறை படித்துவிட்டு, அதன்படி கண்ணை ஒண்ணரைக் கண் ஆக்கிக்கொண்டு பார்த்த எனக்கு நிகழ்ந்தது  விசித்திரமான அனுபவம். '3 டி’-யில் மான் தெரிய வேண்டும் என்றால், எனக்கு மான் தெரிவதற்குப் பதிலாக மான் வடிவத்தில் ஒரு பள்ளம் தெரிந்தது. சரி, ஏதோ டெக்னிக்கல் பிராப்ளம்போல, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று பார்த் தால், அடுத்த வாரம் யானைப் பள்ளம், அதற்கடுத்த வாரம் பூப் பள்ளம், முயல் பள்ளம் என்று புடைத்துத் தெரிய வேண்டிய உருவங்கள் எல்லாம் குழிந்து தெரிய... எனக்கு என் கண்களின் அமைப்புபற்றி பெருத்த சந்தேகம் தோன்றிவிட்டது. இப்படியான விஷயங்களில் எனக்குக் கற்பனை வளம் ஜாஸ்தி. சின்ன வயசில் இருந்தே கண்ணாடி போட்டதால் பார்வை நரம்புகள் பின்னிக்கொண்டு என்னமோ ஆகிவிட்டது என்று பெரும் மன உளைச்சல் அடைந்தேன். சில வாரங்கள் இப்படியாகக் கழிய... ஒரு நாள் இரவு பொழுது போகாமல் பழைய விகடன் இதழ்களை எடுத்து வைத்துக்கொண்டு, பின் அட்டைகளைக் கண் அருகில் வைத்துத் தியானித்துக்கொண்டு இருந்த என்னை, படுத்திருந்த என் அம்மா திட்டுவது காதில் கேட்டது. பொருட்படுத்தாமல் என் தியானத்தை வலுப்படுத்தினேன். ஒரு பொன்னான நொடியில் அது நிகழ்ந்தது. பள்ளங்கள் எல்லாம் புடைப்புக் காட்சிகளாகி மானும், பூவும், பறவைகளும் தெரிய ஓர் அற்புத அனுபவம் கிட்டியது. கல்லூரி மாணவனான நான் நீண்ட நாட்களுக்குப் பின் குழந்தையின் மகிழ்ச்சியை அன்று அனுபவித்தேன். விகடன் அறிவூட்டுவதில் ஆசான் என்றால், மகிழ்வூட்டுவதில் பாட்டன்.

போடி நாயக்கனூர் கல்லூரியில் படிக் கும்போது விகடன் மாணவ நிருபராகப் பெரிதும் விரும்பி, அதற்காக விண்ணப் பித்தேன். சென்னையில் தி.நகரில் இருக்கும் ஒரு பள்ளியில் அதற்கான தேர்வைஎழுதி விட்டு, ஊருக்குப் போய் ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஒரு நாள் கடிதம் வந்தது. என்னைத் தேர்வுசெய்ய இயலாமைக்கு வருந்துவதாகத் தெரிவித்ததுடன், 'இதனைத் தங்களது திறமைக்கான அளவு கோல் என்று கருத வேண்டாம்’ என்று ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தது விகடன். ஏமாற்றத்தையும் மீறி எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தன அவ்வரிகள். அவையே பின்பு உண்மையாகவும் மாறின. பின்னாளில் நான் விகடன் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியர்களில் ஒருவனாகப் பணிபுரியத் தேர்ந்தெடுக் கப்பட்டேன். என் வாழ்வின் திருப்பு முனை அது.

பி.ஏ. முடித்துவிட்டு சென்னை வந்து சட்டம் படிக்கிறேன் என்று லா காலேஜில் சேர்ந்து மூன்று வருடங்களைக் கடத்திவிட்டு இலக்கியம், சினிமா என்று அலைந்தபடி அரியர்கள் எழுதிக்கொண்டு இருந்த காலம். என் அடையாளம் என்ன? நான் என்னவாகப்போகிறேன் என்கிற குழப்பங்கள் மேலோங்கி இருந்த வருடங்கள். எனது முதல் சிறுகதை இந்தியா டுடே இதழில் வெளியாகி, பரிசு

நானும் விகடனும்!

வாங்கிப் பல மாதங்கள் கழித்து, எனது மூன்றாவது கதையை விகடனுக்கு அனுப்பினேன். பிரசுரமாகிவிட்டது. பெரு மகிழ்ச்சியுடன் அடுத்த கதையை அனுப்பினேன். அந்தச் சமயத்தில்தான் விகடன் புது வடிவு எடுத்தது. 144 பக்கங்களுடன் வித்தியாசமாக வெளிவந்த முதல் இதழில் என்னுடைய 'செண்பகப் பாண்டியனின் காதல்கள்’ எனும் சிறுகதை மருதுவின் ஓவியத்துடன் வெளியானது. நிலைகொள்ளாத மகிழ்ச்சி எனக்கு. தவிர, நிறையப் பாராட்டுகள். இதனிடையே நண்பன் ரமேஷ்வைத்யா, அண்ணன் பொன்ஸீ ஆகியோர் விகடனில் சேர்ந்து பணிபுரிந்துவர... அவர்களைப் பார்க்க விகடன் அலுவலகம் செல்வதும், அருகில் இருக்கும் ஏர் லங்கா கேன்டீனில் டீ குடிப்பதும் வழக்கமானது.  

அப்போது உதவி ஆசிரியராக இருந்த கண்ணன் ஒரு நாள், 'அப்பப்ப இங்க வந்து டீ குடிக்கறதைத் தவிர, வேற என்ன பண்றீங்க பாஸு?’ என்றார். 'லா பேப்பர்ஸ் அரியர்ஸ் எழுதிக்கிட்டு இருக்கேன்!’ என்றேன் பெருமிதத்துடன். 'விகடனுக்கு வேணா அப்ளை பண்ணிப் பாருங்களேன்...’ என்றார். அரியர்கள் எழுதுபவனுக்கு அப்ளிகேஷன் எழுது வதில் தயக்கம் என்ன என்று உடனே எழுதிக் கொடுத்துவிட்டேன். நோ ரெஸ்பான்ஸ்.

மாணவ நிருபராகவே செலக்ட் ஆக வில்லை என்பதால், எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அரியர் எழுதச் சென்னைக்கு வருவதும், பிறகு தேனிக்குச் சென்று லோகபரிபாலனம் செய்வதுமாக ஏழெட்டு மாதங்கள் கடந்த பின்னர், ஒரு போன் வந்தது. திரு. அசோகன் பேசினார். 'ஒரு அசைன்மென்ட் தர்றோம். அதைப் பண்ணி அனுப்புங்க பார்க்கலாம்’ என்று போனில் விஷயத்தை விளக்கினார்.

கிராமப்புறங்களில் செல்லும் பஸ்களில் பயணித்து, அந்த அனுபவத்தை எழுதி அனுப்ப வேண்டும். நானே ஒரு கத்துக் குட்டி போட்டோகிராஃபர் என்பதால், கேமரா இரவல் வாங்க அலைந்தேன். தற்போது சிற்றிதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் எனது நண்பர். அவர் ஈஸ்வரை அறிமுகப்படுத்தினார். கேமரா இரவல் கேட்ட என்னிடம் 'போட்டோவை நானே எடுக்கறேனே?’ என்று முடிவெடுத்த தேனி ஈஸ்வரின் தீர்க்கதரிசனத்தை இன்றும் எண்ணி வியக்கிறேன். ஈஸ்வரின் போட்டோக்களுடன் 'ரூட் பஸ்’ என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகள் அனுப்பினேன். கட்டுரையுடன் உபரியாகச் சிந்தித்து பஸ்ஸை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து, அதற்குப் பொருத்தமாகப் பாட்டும் எழுதி அனுப்பிவைத்தேன். அனுப்பிய மூன்றாம் நாள் சென்னை வரச் சொல்லி அழைப்பு வந்தது.

பரபரப்புடன் விகடன் அலுவலகம் வந்து சேர்ந்த என்னை, இணை ஆசிரியர் பார்க்க விரும்புவதாகச் சொல்ல... அறைக்குள் நுழைந்தேன். திரு. மதன் அவர்கள் சிநேகமாகப் புன்னகைத்து அமரச் சொன்னார். 'ரொம்ப நல்லாயிருந்தது உங்க ரைட்-அப்பும் அந்த போட்டோஸும். நீங்க விகடனுக்கு வேலை செய்யலாம். ஜாய்ன் பண்றீங்களா?’ என்று கேட்டார். மனதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. பள்ளமாகத் தெரிந்த '3டி’ படங்கள் துலக்கமாகத் தெரிந்த அந்த இரவின் மகிழ்ச்சி மனதில் தோன்ற... தலையசைத்தேன்.

அதன் பின் மூன்று வருடங்கள். லா காலேஜ் அரியர்களை மறந்துவிட்டு விகடன் காலேஜில் கற்கத் தொடங்கிவிட்டேன். மிகையில்லை. மிகவும் மகிழ்ச்சியான, உற்சாகமான வருடங்கள். வேலை குறித்த எவ்விதச் சலிப்பும் ஏற்படுத்தாத அலுவலகச் சூழல். அருமையான நண்பர்கள். விகடன் என்னிடம் வேலை வாங்கவில்லை. மாறாக, என்னால் என்னஎல்லாம் பண்ண முடியும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தது. தொடர்கதை, குறுநாவல், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என்று நிறைய எழுதினேன்.

நான் சேர்ந்த மறு வருஷம் - 1998-ல் - 'அவள் விகடன்’ இதழ் தொடங்கப்பட்டது. அதில் இன்னும் ஓர் அருமையான அனுபவம் கிடைத்தது. எம்.டி. திரு. எஸ்.பால சுப்ரமணியம் அவர்கள் ஒரு கதைக் கருவைச் சொல்லி, இதை நீங்கள் எழுதுங்கள் என்று பணித்தார். உள்ளூரப் பதற்றத்துடன் தலையசைத்தேன். கதைபற்றியும் பாத்திரங்கள்பற்றியும் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் விவரிப்பதில் அவரது திறமை அபாரமானது. ஐந்து அத்தியாயங் கள் வரை என்னை அழைத்து, 'இந்த சேப்டர் இப்படி வரலாம். இந்த சேப்டர் இப்படி வெச்சுக்கங்க!’ என்று வழிநடத்திக்கொண்டு இருந்தவர், ஆறாவது அத்தியா யத்தின்போது 'இனி நீங்களே எழுதுங்க’ என்றார். நான் திகைத்து நிற்க, 'இனி நீங்களே நீச்சல் அடிக்கலாம். எழுதுங்க... இனிமேல் இது உங்க கதை’ என்று சொல்லிப் புன்னகைத்து அனுப்பிவிட்டார். 'காற்று வளையம்’ எனும் அந்தத் தொடர் கதையை 'சக்தி’ என்கிற பெயரில் எழுதினேன். எம்.டி. சொன்ன அந்தக் கதையின் கரு மிகவும் சென்ஸிடிவ் ஆனது. திருமணத்துக்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் இருவர், சலிப்பு ஏற்பட்டுப் பிரிவதுதான் கதையின் சாரம். அந்தக் கதை வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தக் கதையில் வரும் விஷ யங்கள் நமது கலாசாரத்தில் கணிசமாக நிகழ்வதைப் படிக் கும்போது,  எப்படி அவரால் இதனை முன்கூட்டிச் சிந்திக்க முடிந்தது எனும் வியப்புதான் மேலிடுகிறது.

நானும் விகடனும்!

1998-ல் வெளிவந்த அந்தக் கதைபற்றி, மூன்று மாதங்களுக்கு முன் சாலையில் சந்தித்த ஒரு பெண் என்னிடம் பேசினார். எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்தப் பெண்ணின் அத்தனை பாராட்டுகளும் எனக்கு உரியதல்ல. எங்கள் எம்.டி. அவர்களுக்கே உரியது.

விகடனில் என்னை எப்போதும் கவலையுடன் கவனிப்பவர் கண்ணன். 'வேலையில ஒரு பதற்றமே இல்லாம இருக்கீங்களே பாஸு?’ என்பார் அடிக்கடி. (நாலு வருடங்களாக லா பேப்பர் அரியர்ஸ் எழுதியவனிடம் பதற்றம் எப்படி இருக்கும்?) விகடனில் நான் எழுதிய இரண்டு ஏழு வாரத் தொடர்களும் கண்ணனின் அக்கறை மிகுந்த தூண்டலில் எழுதியவை. அந்த இரண்டில், 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்’ எனும் தொடர் மூலம் சின்னத்திரையில் நான் பிரவேசித்தேன். 'அழகர்சாமியின் குதிரை’ தொடர், திரைப்படமாகிப் பெயர் வாங்கித் தந்தது.

மூன்று ஆண்டுகள் விகடனில் இருந்த பின்னர் தொலைக்காட்சிக்கும் சினிமா வுக்கும் நான் இடம்பெயர்ந்தாலும் விகடனுடனான எனது பந்தம் விலகவே இல்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் புகழ் பெற்ற தொடரான கோலங்களுக்கு வசனம் எழுத வாய்த்தது. இன்றும் விகடனில் எனது கதைகள் வருகின்றன. விகடன் நான் வேலை பார்த்த இடம் என்று சொல்ல மனம் வரவில்லை.

அது இனிய நண்பர்களைத் தந்த இடம். எனது பள்ளியைப் போல், கல்லூரியைப் போல், விகடனும் எனக்குக் கற்றுக்கொடுத்த இடம். அதன் அத்தனை ஆசிரியர்களுக்கும் என் வணக்கம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism