Published:Updated:

``கை வலிப்பதைப் பார்த்தால் வெற்றி பெற முடியாது" நேஷனல் கேரம் சாம்பியன் நாகஜோதி

``கை வலிப்பதைப் பார்த்தால் வெற்றி பெற முடியாது" நேஷனல் கேரம் சாம்பியன் நாகஜோதி
``கை வலிப்பதைப் பார்த்தால் வெற்றி பெற முடியாது" நேஷனல் கேரம் சாம்பியன் நாகஜோதி

``வாரணாசில கடைசியா ஆல் இந்தியா கேரம் ஃபெடரேஷன் போட்டியில் விளையாடினது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. செமி ஃபைனல்ஸ் மகாராஷ்ட்ராவில் விளையாடி, வின் பண்ணேண். ஃபைனல்ஸ் லக்ஷ்மி குமாரின்றவங்ககூட விளையாடினேன். அவங்க பத்துமுறை நேஷனல்ஸ் வின் பண்ணிருக்காங்க. அவங்களை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். இதுக்கு முன்னாடி நேஷனல் அளவு போட்டிகள்ல கலந்துகொண்டபோது, எனக்கு நிறைய அட்வைஸ் குடுத்தாங்க. எதிர்பாராதவிதமா இந்த முறை அவங்ககூடவே எனக்கு நேஷனல்ஸ் ஃபைனல் ஆடும்படி வந்துடுச்சு. அவங்க சொன்ன அட்வைஸ் வெச்சு பிராக்டிஸ் பண்ணி, அவங்களையே ஜெயிச்சேன். போட்டி முடிந்ததும், ``என்ன வின் பண்ணது பெருசு இல்ல. இந்த வெற்றி தொடர்ந்து கிடைக்கணும். நானும் உன்னை விடமாட்டேன். இன்னும் அதிகமாக பிராக்டிஸ் பண்ணி, அடுத்தடுத்த போட்டிகள்ல உன்னை வின் பண்ணுவேன்”னு சொன்னாங்க. அவங்களோட போட்டி போட நானும் தயாராகவே இருக்கேன்" என்று தன்னுடைய சாதனையை ஆர்ப்பாட்டமின்றி சொல்கிறார் நாகஜோதி.

வட சென்னை என்றதுமே இரண்டு விளையாட்டுகள் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஒன்று, கால்பந்தாட்டம் அடுத்தது கேரம். வாய்ப்பு கிடைத்தால், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய வீரர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று பலர் சொல்வது நிச்சயம் உண்மைதான். கேரம் விளையாட்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றுமுறை வாங்கி சாதனை படைத்தவர் இளவழகி. அவரைத் தொடர்ந்து வட சென்னையிலிருந்து இந்திய அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்று அடுத்த உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருப்பவர்தான் நாகஜோதி.

வீடு முழுவதும் மெடல்கள், பரிசுக் கோப்பைகள், பல கேரம் போர்டுகள் என நிறைந்திருக்க, அவற்றிற்கு மத்தியில், ``வாங்க, நான்தான் நாகஜோதி, பி.ஏ – எகனாமிக்ஸ் படிக்கிறேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

``அப்பா கேரம் பிளேயர். நிறைய இடத்துக்கு விளையாடப் போவாங்க. வீட்லேயும் விளையாடுவாங்க. அப்பாவைப் பார்த்து நானும். சின்ன வயசிலேருந்து கேரம் விளையாட ஆரம்பிச்சேன். பத்து வயசாயிருக்கும்போது, நான் விளையாடுவதைப் பார்த்து பாக்யராஜ்னு ஒரு அண்ணா, என்னை மதுரைக்கு நடந்த போட்டிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அந்தப் போட்டியில ஜெயிச்சேன். அது கொடுத்த நம்பிக்கையில தொடர்ந்து விளையாடினேன். ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் அப்பாதான் எனக்குப் பயிற்சி கொடுத்தாங்க. காலேஜ் சேர்ந்ததுக்குப் பிறகுதான், அர்ஜீனா அவார்டு வாங்கின மரிய இருதயம் சாரிடம் பயிற்சி எடுத்துக்கிட்டேன்." என்றவரிடம், வாரணாசியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டது பற்றிக் கேட்டேன்.

``12 வயசா இருக்கும்போது வாரணாசில நேஷனல்ஸ்ல முதல்தடவை கலந்துகிட்டு, மூன்றாவது இடம் பிடிச்சேன். அதற்கப்புறம் சப் ஜீனியர் அண்டர் 14 நேஷனல்ஸ்ல ரன்னர் அப்பரா வந்தேன். ஜீனியர் நேஷனல்ஸ்ல மூன்றாவது இடம் வந்தேன். ஜீனியர்ஸ்ல ஜெயிச்சதால இந்தியன் ஆயில் ஸ்பான்ஸர்ஷிப் பண்ணாங்க. மூன்றாவது வருஷமா இந்தியன் ஆயில்ல இருக்கேன். இந்த ஆண்டு நேஷனல் சாம்பியனாகிட்டேன். மாவட்ட அளவு போட்டிகள்ல நிறைய வின் பண்ணிருக்கேன். மாநில அளவில், சீனியர், யூத், சப் ஜீனியர் அப்டீனு ஒன்பது தடவை ஜெயிச்சிருக்கேன். விளையாடுவதில், எனக்கெனத் தனியான ஸ்டைல் எதுவும் இல்ல. எதிர்காலத்துல அப்படி வரலாம். போட்டி இருக்குற நாள்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயிற்சி எடுப்பேன்." என்றவரிடம், இவ்வளவு நேரம் பயிற்சி எடுக்கும்போது கை வலி அதிகமாக இருக்கும் இல்லையா?" என்றேன்.

``நிச்சயமா வலிக்கும். கை வலிக்கிறதையெல்லாம் பார்த்தால் வெற்றி பெற முடியாது. நிஜமான கஷ்டம் எதுனு கேட்டா, போட்டி எப்போது என்று முன்கூட்டியே சொல்லமாட்டாங்க. திடீர்னு சொல்லுவாங்க. அதனால, ரயில்ல டிக்கெட் எடுப்பது ரொம்ப சிரமம். சில போட்டிகளுக்கு ரயில்ல பாத்ரூம் பக்கத்துலேயே உட்கார்ந்துட்டு டிராவல் பண்ணி போயிருக்கேன்." என்றவரிடம், விளையாட்டில் கலந்துகொள்வதால் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறதா?" என்றேன்.

``விளையாட்டு என்னோட படிப்ப ரொம்ப டிஸ்டர்ப் பண்ணவில்லை. நாளைக்கு எக்ஸாம்னா இன்னிக்கு உட்கார்ந்து படிச்சிருவேன். ஓரளவுக்கு மார்க்ஸூம் ஸ்கோர் பண்ணிருவேன். டென்த் எக்ஸாமில் 400 மேலேயும், ப்ளஸ் டூ வில் 900 மேலேயும் வாங்கினேன். கேரம்ல இல்லனா இன்னும் ஸ்கோர் பண்ணிருக்கலாம். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். 

இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, அரசாங்கத்தோட சப்போர்ட் குறைவாக இருக்கு. குறிப்பாகச் சொல்லணும் என்றால், ஒரு ப்ளேயர் எடுத்துக்கிட்டு அரசு சப்போர்ட் பண்ணணும், ஆனா செய்வதில்லை. செலவுகளில் 30 சதவிகிதம்கூட சப்போர்ட் கிடைப்பதில்ல. செய்யும் உதவிகள்ல சில கண்துடைப்பு மாதிரிதான் இருக்கு. இதை நான் குறையா சொல்லல. அரசு சப்போர்ட் பண்ணினா, ஏழை வீடுகள்ல இருக்கும் திறமைசாலிகளும் ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால சொல்றேன். யுனிவர்சிட்டி விளையாட்டுல கேரம் இல்ல. அதனால, அங்கெல்லாம் அட்மிஷனக்கு, அட்டண்டன்ஸ்க்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யுனிவர்ஸிட்டிலயே இந்த கேம் இல்லயே, நாங்க என்ன பண்றதுனு கேப்பாங்க. இருந்தாலும் முடிஞ்ச அளவு சப்போர்ட் பண்ணுவாங்க.

இப்போதைக்கு என் முழுக் கவனம் எல்லாம் வேல்டு சேம்பியன்ஷிப்ல கலந்துகிட்டு ஜெயிக்கணும் என்பது மட்டும்தான். அதுக்கான பயிற்சி எடுத்திட்டு இருக்கேன். கண்டிப்பா ஜெயிப்பேன்” என்றபடி தம்ஸப் காட்டி நம்பிக்கையாய்ச் சிரிக்கிறார்.

நாகஜோதியின் அப்பா காத்தவராயன், ``நான் சின்னவயசுலேருந்தே பசங்ககூட சேர்ந்து கேரம் விளையாடுவேன். அப்ப பெட் மேட்சஸ்தான் நடக்கும். போர்ட் கிளப்லேருந்து  பல ப்ளேயர்ஸ் உருவானோம். மாவட்ட அளவில் நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசெல்லாம் வாங்கிருக்கேன். குடும்பச் சூழ்நிலை, வறுமை காரணங்களால என்னால தொடர்ந்து விளையாட முடியல. கேரம் பொறுத்தவரை ஒரு வாரம் விளையாடலேனாலும் ஃபார்ம் போய்டும். திரும்ப ஃபார்ம்க்குக் கொண்டுவர ரொம்ப கஷ்டம். நான் பண்ணாத சாதனைகள் எல்லாம் என் பொண்ணு செய்யறா. சந்தோஷமா இருக்கு” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.