Published:Updated:

கோடையில், உணவு வழி நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 9 வழிமுறைகள்!

உணவு மூலமாகப் பரவும் தொற்றா நோய்களின் (Non-communicable disease) பட்டியலில் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அடங்கும்.

கோடையில், உணவு வழி நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 9 வழிமுறைகள்!
கோடையில், உணவு வழி நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 9 வழிமுறைகள்!

ம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகள், உண்ணும் உணவும் அருந்தும் நீரும்தான். உணவுதான் நாம் எடுத்துக்கொள்ளும் முதல் மருந்து. பல்வேறு புறக்காரணிகளால் நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உணவு மருந்தாக விளங்குகிறது. ஆரோக்கியமற்ற உணவுகள் நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். அது மாதிரியான நோய்களுக்கு, `உணவு வழி நோய்கள்' (Food borne diseases) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி ஆகியவற்றின் தாக்கங்களாலும், சுகாதாரமில்லாத இடங்களில் உட்கொள்ளும் உணவுகளாலும், அதிக கார்போஹைட்ரேட் உணவுப் பயன்பாட்டினாலும், உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வதாலுமே உணவு வழி நோய்கள் ஏற்படுகின்றன. 

உணவு வழியாக வரும் நோய்கள் என்னென்ன... வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சிவராமக் கண்ணன். 

நாம் உண்ணும் உணவு நஞ்சாக மாறுவதற்கு முதன்மைக் காரணியாக விளங்குவது கேம்பிலோபாக்டர்(campylobacter) என்னும் பாக்டீரியாதான். இது விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் தொற்றும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது. வயிற்றுப்போக்கு, குமட்டல், தாங்க முடியாத வயிற்றுவலி, காய்ச்சல் போன்றவை இந்த பாக்டீரியாவின் தாக்கத்தினால் ஏற்படும் முக்கியப் பிரச்னைகள் ஆகும். எனவே, இரண்டு முதல் ஐந்து நாள்கள் இதுபோன்ற அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
உணவு வழியாக ஏற்படும் பிரச்னைகளைத் தொற்று, தொற்றல்லாதது என்று இரண்டாகப் பிரிக்கலாம். தொற்று நோய்கள் (communicable disease) தண்ணீர் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. அசுத்தமான நீரைப் பருகுவதால் `வைரல் டையேரியா', `பாக்டீரியல் டையேரியா' என்ற இரண்டு வகை வயிற்றுப்போக்குகள் ஏற்படுகின்றன. ஹெப்படைட்டிஸ் வகை நோய்களும் பெரும்பாலும் உணவுகளின் மூலமாகவே ஏற்படக்கூடியவை. சமைத்து ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்ணும்போது டைபாய்டு, ஃபுட் பாய்சன் போன்றவை ஏற்படும்.

உணவு மூலமாகப் பரவும் தொற்றா நோய்களின் (Non-communicable disease) பட்டியலில் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அடங்கும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள்,  உப்பு, துரித உணவுகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதே இந்த நோய்களுக்கான முக்கியக் காரணங்கள். 

வயிற்றுப்புண்(Ulcer) 

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாதவர்களுக்கும் வயிற்றில் புண் ஏற்படும். கார உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது வயிற்றில் இருக்கும் புண்ணில் எரிச்சல் ஏற்பட்டு வயிற்று வலியை உண்டாக்குவதோடு மேற்கொண்டு எதையும் சாப்பிட முடியாத நிலையும் ஏற்படும். புளிப்பு, மசாலா நிறைந்த உணவுகள், வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் வயிற்றில் புண் ஏற்படும்.

வயிற்றுப் போக்கு  

உடலுக்கு ஒவ்வாத உணவை நாம் உண்ணும்போது அவை விஷமாக மாறும். அவற்றைக் குடல் ஏற்காது. அந்த நிலையில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவை வெளியேறும். உணவு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர், தயிர், ஜூஸ்  போன்ற நீராகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சர்க்கரை நோய் 

இனிப்புப் பண்டங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமனாக இருப்பவர்களுக்குக் கணையம், அதிக அளவு இன்சுலினைச் சுரந்து சுரந்து களைத்துப்போகும். ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பது குறைந்து, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம்  

உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பதப்படுத்தப்பட்ட புலால் உணவுகள், அப்பளம், இட்லி மிளகாய்ப் பொடி, ஊறுகாய் போன்ற உணவுகளில் உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். இதுபோன்ற உணவுகளால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுகிறது. 

டைபாய்டு  

சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீரினால் உடலில் நுழையும் `சால்மோனல்லா டைபை' (Salmonella Typhi) என்ற பாக்டீரியா, டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. தீவிரக் காய்ச்சலுடன் வாந்தி, பசியின்மை, வயிற்றுவலி, உடல் சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

உணவு வழி நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:

* நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவவேண்டும்.

* பயணங்களின்போது, நன்கு சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளவேண்டும்.

* நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமான சுற்றுப்புறத்தில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

*  பாலைக் காய்ச்சாமல் அருந்தக்கூடாது.

* பழச்சாறுகளில் பால் சேர்த்துப் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். 

*  பிரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்பதைத் தவிர்க்க வேண்டும்

*  உணவில் உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

*  துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

*  பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவே, நோயில்லா வாழ்விற்கு வழிவகுக்கும். அதைக் கவனத்தில் கொண்டு சமைப்பதும் சாப்பிடுவதும் அவசியம்! அதிலும் கோடைக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.