Published:Updated:

``இந்த பிட்சில் தொடர்ந்து விளையாட விரும்பவில்லைதான்; ஆனாலும் வெற்றி பெறுகிறோமே!” - தோனி ஜாலி பேட்டி

``இந்த பிட்சில் தொடர்ந்து விளையாட விரும்பவில்லைதான்; ஆனாலும் வெற்றி பெறுகிறோமே!” - தோனி ஜாலி பேட்டி
``இந்த பிட்சில் தொடர்ந்து விளையாட விரும்பவில்லைதான்; ஆனாலும் வெற்றி பெறுகிறோமே!” - தோனி ஜாலி பேட்டி


நடப்பு ஐ.பி.எல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கொல்கத்தா அணிக்குத் தோல்வியைப் பரிசாகக் கொடுத்துள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீண்டும் பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார் தோனி. போட்டிக்குப் பின்னர் பேசிய தோனி, ``சென்னையில் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். எனது டெஸ்ட் அறிமுகத்துடன் நிறைய நல்ல விஷயங்கள் இங்கு நடந்துள்ளது. இந்த மக்கள் கூட்டம் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நேசிக்கும். நான் தொடக்கத்திலிருந்து இங்கு விளையாடி வருகிறேன். இவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் பிட்ச் குறித்து புகார் கூறிக்கொண்டே வெற்றிபெற்று விடுகிறோம். பிராவோ இல்லை, அதேபோல் ஆல்-ரவுண்டரான டேவிட் வில்லேயும் இல்லாமல் ப்ளேயிங் லெவனைக் கட்டமைப்பது சற்று கடினமாக உள்ளது. 

தொடர்ந்து இத்தகைய பிட்சுகளில் விளையாட விரும்புகிறோம் எனக் கருதவில்லை. இந்த பிட்ச் பேட் செய்வதற்கு சற்று கடினமாகவே உள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களுக்கு விளையாடுவதற்குக் கடினமாகவே உள்ளது. பனி வந்துவிட்டால் பேட்ஸ்மேன்களுக்கு அது சாதகமாக அமைந்துவிடும். வயது எங்களுக்கு  மிகப்பெரிய பிளஸ். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் திராட்சை ரசம் (Wine) போன்றவர்கள். வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர். ஹர்பஜன் தான் விளையாடும் போட்டிகளில் தன்னால் முடிந்த பங்களிப்பை நிச்சயம் அளிக்கிறார். இம்ரான் தாஹீர் அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது என்ன செய்யவேண்டும் அதைக் கச்சிதமாக செய்துமுடித்துவிடுகிறார். ஒட்டுமொத்தமாக எங்கள் பந்துவீச்சு யூனிட் என்பது சிறப்பாகவே உள்ளது. 

பிராவோ காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவார் என நம்புகிறோம். பிராவோ வந்துவிட்டால் ப்ளேயிங் லெவனை நன்கு சுழற்சி முறையில் மாற்றமுடியும். பிராவோ பல சமயங்களில் பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார். பெரிதாகத் திட்டமிடல் என எதுவும் இல்லை. பந்துவீச்சு பயிற்சியாளர்கள் பாலாஜி மற்றும் எரிக் சிம்மன்ஸ் பந்துவீச்சாளர்களுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சில வியூகங்களை வகுத்துக் கொடுப்பார்கள். அதன்பிறகு அது பந்துவீச்சாளர்களின் பொறுப்பு. களத்தில் சில சமயங்களில் அந்த வியூகங்கள் எடுபடாமல் போனால் நான் சில ஆலோசனைகளைக் கூறுவேன். இப்போது அணிவீரர்களுடன் தனித்தனியே சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அதிலும் என் தலையீடு என்பது இல்லை” என்றார்.