Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

சின்னப்பாண்டியின் உள்ளங்கையில் தன் ரோஜா விரல்களை அழுத்திச் சொன்னாள் எமிலி.

 ''சின்னப்பாண்டி! நீரில் இறங்க அஞ்சுகிறவன் நீச்சல் பழக முடியாது, களத்தில் இறங்குங்கள்; உங்களால் முடியும். மாதிரிக் கிராமமாக மாற்றுங்கள் உங்கள் ஊரை. மாதிரி மனிதனாய் மாறுங்கள் நீங்கள். தள்ளிப்போடும் மனிதனைக் காலம் தள்ளிவிட்டுப் போய்விடும். நாங்கள் கொடைக்கானல் செல்கிறோம். மீண்டும் வரும் போது இங்கே மாற்றத்தின் சில ரேகைகளையாவது பார்க்க விரும்புகிறோம். எங்கள் பயணம் வெறும் சுற்றுலாவாக முடிந்துபோவதை நாங்கள் விரும்பவில்லை. வலசை போகும் பறவைகளுக்குத்தான் வந்த சுவடும் போன சுவடும் இல்லை. எங்கள் வருகையின் அடையாளத்தை இந்த மண்ணில் எழுத விரும்புகிறோம். நாங்கள் விருந்தாளிகள்; போர் புரியக் கூடாது. ஆனால், எங்கள் வழிகாட்டுதல் உண்டு. கல்விப் புலமையும் உடல் வலிமையும் நெஞ்சில் நேர்மையும் உள்ளவர்களுக்காக உங்கள் பூமி காத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இஷி, சின்னப்பாண்டியின் தோளில் கைவைத்தான் தோழமையோடு.

''உயர்ந்த பூமி உங்கள் பூமி. பூகம்பத்தால் நொறுங்காத, எரிமலையில் வெந்துபோகாத,  சுனாமியில் சூறையாடப்படாத பூமி இது. மக்கள் நல்லவர்கள். எருதுகளைப் போல் உழைக்கிறவர்கள். உங்கள் புளிய மரங்களைப் போல் பஞ்சம் பொறுக்கிறவர்கள். அவர்களைப் படித்த இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும். இந்த மண்ணே கோயில்; மக்களே கடவுள்கள்.''

இஷி சொன்னதை எமிலி வழிமொழிந்தாள்.

மூன்றாம் உலகப் போர்

''நான் கவனித்தவரையில் கூர்த்த மதி மிக்கவர்கள் இந்த மண்ணின் மக்கள்; வேட்டைக் கலாசாரத்தின் எச்சங்கள். வேட்டையாடுகிறவன் வீரன்; வேட்டை ஆடப்படாமல் தன்னைக் காத்துக்கொள்கிறவன் விவேகி. வீரமும் விவேகமும் இவர்களின் உதிரத்தின் வழியே ஓடிக்கொண்டிருக்கின்றன. கல்வி மறுக்கப்பட்டதால் மரபுவழி பெற்ற அறிவைத் தவிர, இந்த தேசம் சேமித்துவைத்த ஞானத்தில் இவர்களுக்குப் பங்கு இல்லை. என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய என் கண்டுபிடிப்பு இதுதான். உடல் மட்டும்தான் இவர்களின் ஒரே மூலதனம். உடலையே விற்கிறவள் பாவம் விபசாரி ஆகிறாள்; உடலை விற் கிறவன் விவசாயி ஆகிறான். ஊரும் வீடும் இருண்டேகிடக்கின்றன. உங்கள் தேசம் நிலாவுக்கு விண்கலம் அனுப்புவது மகிழ்ச்சிதான். அதற்கு முன் இவர்கள் வீட்டுக்கு வெளிச்சம் அனுப்ப வேண்டும்'' - வார்த்தைகளைத் தேர்ந்து சொல்லும் அவர்களின் வாக்கியமும் அதில் இருந்த சத்தியமும் சின்னப்பாண்டியின் மனசை என்னவோ செய்தன.

''முதல் எச்சரிக்கை. உனக்கு அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ, காயமோ, வெற்றிடமோதான் லட்சியத்துக்குக் கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது'' என்றான் இஷி.

''உங்கள் தொன்மங்களிலேயே என்னை ஈர்த்தது எது தெரியுமா சின்னப்பாண்டி?'' என்றாள் எமிலி.

''எது?''

''சிபியின் தொன்மம். தியாகத்தின் கதை - வேட்டையாடப்பட்ட புறாவுக்கு ஈடாகத் தொடைச் சதை அரிந்து கொடுத்த ஓர் ஆட்சியாளன் கதை. அது அன்று'' என்றாள் எமிலி.

''இன்று...?'' என்றான் இஷி.

''வேடுவன் வெட்டப்படுகிறான்; புறா சமைக்கப்படுகிறது'' என்று சொல்லி, வாய் விட்டுச் சிரித்த சின்னப்பாண்டியைப் புன்னகையால் ஆமோதித்தார்கள் இருவரும்.

மூன்றாம் உலகப் போர்

''உண்மைதான். சிபியின் காலத்தில் பொது வாழ்க்கை தியாகத்தில் கட்டப்பட்டு இருந்தது. கொடைகாரன்தான் ஆட்சியாளன் என்ற விழுமியம் நிலவியது. காலம் மாறியது. ஆட்சியாளன் தன் சேவைக்கு ஊதியம் எதிர்பார்த்தான். பொன்னாகவோ புகழாகவோ பெற்றுக்கொண்டான். அதாவது, கொடைகாரன் கூலிக்காரனானான். காலம் மறுபடி மாறியது. கூலி போதாது என்று அவன் பேராசை சொல்லியது. அவனே அள்ளிக்கொள்ள ஆரம்பித்தான். கூலிக் காரன் பிறகு கொள்ளைக்காரன் ஆனான். உலகின் பெரும் பகுதிகளில் இதுதான் கதை. போதிக்காதே; செய். உங்கள் நாட்டில் குவித்துவைத்த போதனைகளின் குப்பையில் சிக்கி மூச்சுத் திணறிச் செத்துவிட்டது செயல். இனி, போதனை மொழியில் செயல் பேசப்பட வேண்டாம்; செயலின் மொழியில் போதனை பேசட் டும்.''

தன் வாய்மொழியில் உடல் மொழியும் கலந்து படபடவென்று பேசி முடித்தாள் எமிலி.

''எமிலி சொல்வது சரி... சொல் பித்தளை; செயல் தங்கம் என்பார்கள்'' என்றான் இஷி.

''என்ன செய்ய வேண்டும் நான்?''- தற்கொலைப் படையின் சிப்பாய் ஒருவன் தலைவனைக் கேட்பதுபோல் கேட்டான் சின்னப்பாண்டி.

''உன் தாய் கிராமத்தைப் புதிதாய்ப் பெற்றெடு. புதிய அச்சில் மக்களை வார்த்தெடு. கார்பன் இல்லாத ஊர் உண்டாக்கு. மண்ணின் குப்பைகளை எரிக்காதே; உரமாக்கு. மனிதக் குப்பைகளை எரிக்க அவர்களின் மூளைக்குள் மூட்டு தீயை. பாமர மக்களுக்குக் கற்பிப்பதற்குப் பிள்ளைகளை ஆசான்களாக்கு. காற்றும் தண்ணீரும் மக்களும்மாசு படுவதைத் தடு.

நிலத்தடியில் நீரும் மனத்தடியில் கருணையும் பாதுக்காக்கப்படட்டும். பறவைகள் தங்குவதற்கு மரங்களும், மரங்களில் தங்குவதற்குப் பறவைகளும் உயிரோடு இருக்கட்டும். ஓசோன் கூரை தைக்கும் ஊசிகள் உலகெங்கும் தயாரிக்கப்படட்டும். ஏன் இருக்கக் கூடாது முதல் ஊசியாய் நீ?''

ஒரு தேவதையின் அசரீரிபோல் பேசினாள் எமிலி.

காட்சியைவிட்டு மறைந்துவிட்டார்கள் அவர்கள். காதுகளைவிட்டு மறையவில்லை.

சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதும் இல்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதில் இருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல்.

சத்தியத்தில் தோய்ந்து வந்த சொற்கள் இயக்கத் தொடங்கிவிட்டன சின்னப்பாண்டி என்ற ஜீவ சக்தியை.

ளத்துல வைராக்கியமா எறங்கிட்டான் சின்னப்பாண்டி.

கூடப் படிச்ச பழைய பள்ளிக்கூடத்துப் பயலுகளையும் இளவட்டங்களையும் குப்பைமேட்டுல ஒண்ணு கூட்டிக் கூட்டம் போட்டுச் சொல்றான்:

''யப்பா... அப்பன் ஆத்தாளுக்குச் சேவகம் பண்ற மாதிரி, சாமிக்குப் பூமால சாத்துற மாதிரி இப்ப நாம பண்ணப் போற வேல. இதுல கூலி கெடையாது; கொடுப்பின மட்டும்தான். ஊருக்கு நல்லது பண்ற ஒரு சந்தோஷம் போதும்னு நெனைக்கிறவன் மட்டும் என்கூட வா. மத்தவன் போயிரு.''

ஒரு நிமிசம் ஒரு பயலும் ஒண்ணும் பேசல.

''இது உங்க வீட்டு வேலயோ எங்க வீட்டு வேலயோ இல்ல. ஊரு வேல. செய்யிறோம் சின்னப்பாண்டி. நீ கெணத்துல விழுன்னா விழுகுறோம்''- ஒரே ஒருத்தன் சத்தம்போட்டுச் சொல்லவும் ''ஆகட்டும்''னு தலையாட்டுச்சு எளந்தாரிக் கூட்டம்.

ஆளுக்கு அம்பது ரூவா வரி போட்டு, குப்பை லாரியப் புடிச்சு நிறுத்திக்கிட்டு குப்பைமேட்டைக் கரைச்சு வெட்டி எறியிறாங்க வெடலப் பயலுக.

நாத்தம்னா நாத்தம் பொண நாத்தம். மூக்கை இறுக்கிப் பொத்திக்கிட்டுப் போகுது அந்தப் பக்கம் போற காத்து. இடுப்புத் துண்ட எடுத்து மூஞ்சியில கட்டச் சொன்னான் சின்னப்பாண்டி.

வெட்ட வெட்ட என்னன்னமோ வருது;

ஒரு சமூகமே கெடக்கு குப்பையில.

மக்கவே மக்காத பாலீத்தீன் பையிக, உடைஞ்ச பிளாஸ்டிக் குடங்க, மருந்துப் பாட்டிலுக, மாதவிலக்குத் துணிக, சீக்கு வந்து செத்த கோழிக, அங்கங்க ஆணுறைக, உரிச்ச கோழி இறகுக, செத்த நாயிக, மக்கிப்போன கூரைக் கிடுகுக, பொணஞ்சாத்திவச்ச தலகாணிக, துருப்பிடிச்ச தகரங்க, ஏகப்பட்ட எருப்புழுவுக, செருப்புல அடிப்பட்டை இல்லாத வாருக, வாருக இல்லாத அடிப்பட்டைக, குறை மாசத்துல செத்துப் பெறந்த இல்ல... பெறந்து செத்த கன்னுக்குட்டிக, மூஞ்சி அழுகிப்போன பொணங்க மாதிரி அடையாளம் காண முடியாத பொருளுக...

'வெட்டவெட்டத் தொலையாது வெக்காலிக் கட்டை’ன்னு பழமொழி இருக்கு ஊருல. அந்தக் கணக்குல அள்ள அள்ளக் குறையல அட்டணம்பட்டிக் குப்பை.

அள்ளியாச்சு குப்பைய. எங்கே கொட்ட றது? ஊருக்கு எதிர்க்க ஒன்றரை கிலோ மீட்டர்ல இருக்கு சாத்தாகோவில்பட்டி. அந்த ஊரு மேட்டுல இருக்கு ஒரு பெருங்கெடங்கு. அதுதான் சகல குப்பைகளுக்கும் ஜமாபந்தி. அங்க போயிக் கொட்டிட்டாக குப்பைகள. அஞ்சாறு நடையிலயே கரைஞ்சு காணாமப்போயிருச்சு குப்பைமேடு.

மூன்றாம் உலகப் போர்

எச்சி இலை விழுந்த எடத்துல இப்ப இலை போட்டுச் சாப்புடலாம்... அப்படிஇருக்கு. எல்லாரும் சந்தோஷப்பட்டு, சின்னப்பாண்டிக்குக் கை கொடுத்தாக; கட்டிப்புடிச்சாக; பொழுது சாயப் போயிட்டாக.

விடிஞ்சு எந்திரிச்சுப் பார்த்தா -

தொடச்சுவச்ச அதே எடத்துல குப்பை கொட்டிக்கிட்டிருக்கான் ஒரு லாரிக்காரன்.

எல்லாரும் கோவத்துல போயி என்னா ஏதுன்னு விசாரிச்சா, சாராய வாடை போக பீடா போட்டு மென்னுக்கிட்டே லாரிக்காரன் சொல்றான்:

''அட்டணம்பட்டிக் குப்பைய சாத்தாகோவில்பட்டியில கொட்டிட்டீகல்ல; சாத்தாகோவில்பட்டிக் குப்பைய அட்ட ணம்பட்டியில் கொட்டச் சொல்லிப் பஞ்சாயத்து உத்தரவு.''

ஒரே தவ்வாத் தவ்வி லாரிக்காரன் சங்கைப் புடிச்சுப்புட் டான் ஒரு சண்டிப் பய.

''வேணாம். விவகாரமாயிரும்; யோசிப்போம்''- அவன வெலக்கி வெளியேத்திட்டான் சின்னப்பாண்டி.

பெருசுக பேச்சுக் கேக்காதுகன்னு நல்லாத் தெரியும் சின்னப்பாண்டிக்கு.

ஒரு ஞாயித்துக் கெழமை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள ஒண்ணு சேத்தான்.

''இந்தா பாருங்க பிள்ளைகளா... நம்ம உடம்பை நம்மதான் சுத்தமா வச்சிக்கிர்றோம். அதே மாதிரி நம்ம ஊரையும் நம்மதான் சுத்தமா வச்சுக்கணும். ஆரம்பிங்க பாப்போம். பெருக்கி முடிக்கிற பிள்ளைகளுக்குப் பேனா பரிசு.''

வலது கையில் விளக்குமாறு எடுத்து, தூர்ப் பக்கத்தத் தரையில ஒரு தட்டுத் தட்டி நுனி வெளக்குமாறுல குப்பை பெருக்கி, அடி விளக்குமாறுல அதை ஒண்ணு சேத்து அள்ளி, தங்கத்தச் சிதறவிடாத தட்டார் மாதிரி, குப்பைகளச் சிந்தாம அள்ளிக் கூடையில கொட்டிக் காமிச்சான் சின்னப்பாண்டி.

அதைப் பாத்துட்டுச் சந்தோஷமாத் தெருக் கூட்டுதுக பிள்ளைக.

படபடன்னு படை எடுத்துப் பறக்குது பட்டாம்பூச்சிக.

கவுண்டமாரு வீட்டு வாசலத் தேவமாரு வீட்டுப் பிள்ள பெருக்குது;

தேவமாரு வீட்டு வாசலப் பிள்ளைமாரு வீட்டுப் பிள்ள பெருக்குது.

தாழ்த்தப்பட்டவக வீட்டு வாசல நாயக்கமாரு பய பெருக்குறான்.

நாயக்கமாரு வீட்டு வாசல ராவுத்தர் வீட்டுப் பய பெருக்குறான்.

ராவுத்தமாரு வீட்டு வாசல செட்டியார் வீட்டுப் பிள்ள பெருக்குது.

இப்படி மாறி மாறிப் பெருக்குதுக வேற வேற வீட்டுப் பிள்ளைக.

பாக்கப் பாக்கச் சந்தோசமா இருக்கு.

'இந்த நாடே இப்படி மாறிப்போனா நல்லாயிருக்குமில்ல’ சின்னப்பாண்டி நெனச்சு நெனச்சு நெஞ்சு குளுந்து நிக்கையில, பிள்ளைக மேல மளார்னு வந்து விழுகுது ஒரு தேஞ்ச விளக்குமாத்துக் கட்டை.

''ஏண்டி, வெத்தலைக்குச் சுண்ணாம்பு கேட்டா வாங்கித் தராத சிறுக்கி, விளக்குமாறு புடிச்சு நிக்கிறியா விளக்குமாறு? வா வீட்டுக்கு - வச்சிருக்கேன் ஒனக்கு''- தன் மகளைக் காது செவக்கத் திருகிக் கூட்டிக்கிட்டுப் போனா ராங்கியான ஒருத்தி.

''ஏ சின்னப்பாண்டி... இது நல்லாயிருக்காப்பா? நான் கரட்டுல கல்லு ஒடைக்கிற ஆளு. நான்தான் காஞ்சு கருவாடாப்போனேன். எம் மகன நான் வெறகு பெறக்கவிட்டதில்ல; வெயில்ல விட்டதில்ல. பொத்திப் பொத்தி வளக்கிறேன். பேனா புடிக்கிற பய கையில இப்படி விளக்குமாத்தக் கொடுத்து அசிங்கப்படுத்திட்டியேப்பா. வேணாமப்பா... இன்னைக்கோட போகட்டும் இந்தக் கூத்து.''

அவன் மகனைக் கூட்டிக்கிட்டு அவன் போயிட்டான்.

இப்பிடி ரெண்டு பேரு கழண்டுபோனதுல அவுகவுக அப்பன் ஆத்தாளுக்குப் பொத்துக்கிட்டு வந்திருச்சு புது ரோசம்.

கொஞ்ச நேரத்துல தெருவே காலியாப்போயிருச்சு.

''எங்களச் சிங்காரிச்சு மூக்கறுத்து இப்படி அநாதைகளா விட்டுட்டீகளே''ன்னு காத்துல பறந்து அலையுதுக குப்பைக.

''சரி! வீதி பெருக்கக் கூடாதுன்னு பிள்ளைகளத் தடுத்துட்டீங்க. இனி ஒண்ணு செய்வோம். விடியக் கருக்கல்ல உங்க குப்பைகள வீட்டு வாசல்ல துண்டா வச்சிருங்க. நாங்க எடுத்துக்கிர்றோம்''- சொல்லிட்டுப் போயிட்டான் சின்னப்பாண்டி.

விடிய்ய... குப்பை வண்டிய முன்னுக்கவிட்டுப் பின்னுக்கப் போறான் வயசுப் பயகளோட. நேத்து எப்பிடிக் கெடந்துச்சோ, குப்பை அப்பிடியே கெடக்கு எல்லா வீட்டு வாசல்லயும்.

என்னா... ஏதுன்னு கேட்டா, எல்லாப் பொம்பளைகளும் சொல்றாக:

''குப்பையக் கொட்டிவைக்கச் சொன் னாப் போதுமா? வாளிக்கு எங்க போறது வாளிக்கு?''

பஞ்சாயத்துல போயிக் கெஞ்சிக் கூத்தாடி, வீட்டு வீட்டுக்கு ஒரு குப்பை வாளி கொடுக் கச் சொன்னான் சின்னப்பாண்டி.

மறுநாள் குப்பை வண்டியோட போயிப் பாத்தா, எந்த வீட்டு வாசல்லயும் புது வாளி இல்ல. சில வீட்டு வாசல்ல மட்டும் ஒட்டை வாளி, ஒடைஞ்ச வாளி, பிஞ்ச வாளி, நஞ்ச வாளியில் குப்பை கொட்டிவச்சிருக்காங்க. புது வாளியெல்லாம் அவுக புழக் கத்துக்குப் போயிருச்சு புழக்கடைக்கு. சரி கழுதை! கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியா இருந்தாப் பத்தாதா? இருந்த குப்பைய எடுத்துட்டுப் போயிட்டான் சின்னப்பாண்டி.

ருக்குள்ள நுழையிற ரோடு ரெண்டு பக்கமும் நாறுது. அந்த ரெண்டு பக்க ரோட்டுப் பள்ளம்தான் ராத்திரியில ஊருக்குக் கக்கூசு. 'இது என் எடம்; அது உன் எடம்’னு அவன் அவன் எல்லை காத்துவைக்க ஆரம்பிச்சுட்டான். அப்பப்ப வரப்புத் தகராறு வேற நடக்கும் அவுக பொழங்கற எடத்துல.

இத ஒழிக்க என்னடா வழின்னு யோசிச்ச சின்னப்பாண்டி, அதுவரைக்கும் அங்க எரியாமக் கெடந்த டியூப்லைட்டுகள எரியவச்சுட்டான். ராத்திரி பகலாகிப்போச்சு. வந்து பாத்தாக அங்க 'இருக்க’ வந்தவக; 'வந்தது’ நின்னுபோச்சு அவுகளுக்கு. லைட்டு அவுக உரிமையப் பறிக்குது. ''இது எங்க எடம். அப்பன் பாட்டன் காலத்துலஇருந்து அனுபவப் பாத்தியதை எங்களுக்கு. இன்னைக்கு இல்லேன்னு போயிருமா? விடுறா கல்ல...''

அடிச்ச அடியில பொலபொலன்னு உதுந்து குருடாப்போச்சு வாழத்தண்டு விளக்கு.

திருப்பியும் இருட்டு எழுதிவச்சிருச்சு அவுக சொத்தை அவுகளுக்கு. அடுத்த நிமிசமே அவுக உரிமைய 'அனுபவிக்க’ ஆரம்பிச்சுட்டாக.

மூணாம் தெருவுல ஒரே வீச்சம். தெருவே நாறுது. வெளியேற வழியில்லாத சாக்கடைத் தண்ணி, ஒரு கறுப்புத் தாரு பூசிக்கிட்டே நடந்து வருது தெரு வழியா. ஆளுகளோட போயி என்னான்னு பாக்குறான் சின்னப்பாண்டி. வீட்டு வாசல்ல சாக்கடைய மறிச்சுத் திண்ணையக் கட்டிப்புட்டான் காட்டுக் கருப்பன். அந்தத் திண்ணையில முட்டி நிக்குது தெருச் சாக்கடை. என்னா சொன்னாலும் திண்ணைய எடுக்க மாட்டேங்கிறான் காட்டுக் கருப்பன்.

மொதல்ல மிரட்டுனான்; அப்புறம் அழுக ஆரம்பிச்சுட் டான். ''எங்காத்தா பொணத்தக் கடைசியாச் சாத்திவச்சிருந்த திண்ணைப்பா. இடிச்சா மனசு கேக்காது; விட்டுருங்க''- கை யெடுத்துக் கும்புடறான்காட்டுக் கருப்பன்.

''செத்துப்போன கெழவிக்காக இருக்கிற ஊரு சாகிறதா பெரியப்பா? வீடுதான் ஆத்தாளுக்கு ஞாபகச் சின்னம். திண்ணை இல்ல; இடி.''

இடிச்சு எறிஞ்சதும் சாக்கடை ஓடிச் சரியாப்போயிருச்சு. ஆனா, ஒரு திண்ணையப் பறிகொடுத்த காட்டுக் கருப்பன், ஊர்த் திண்ணைய எல்லாம் தன் திண்ணையாக் கிட்டான். வீட்டு வீட்டுக்குப் போயி உக்காந்துக்கிட்டு, சின்னப்பாண்டியப் பத்திக் கண்டமேனிக்குப் பொறணி பேச ஆரம்பிச்சுட்டான்.

நல்லத எப்பவும் சட்டுன்னு நம்பாதுக சனங்க; கெட்டத உடனே நம்பும். மழை வருதுன்னு சொன்னா பயப்படாத சனம், தீப்புடிச்சிருச்சுன்னு சொன்னாத் திடுக்குன்னு எந்திருச்சு ஒக்காரும் பாருங்க... அந்தக் கததான் அது.

''கருத்தமாயி மகனுக்குப் புத்தி மாறிப்போச்சப்பா. படிக்கப்போன இடத்துல கிறுக்குப் புடிச்சிருச்சு.''

''காரியத்தனம் பண்ண ஆளு இருக்கு ஊருக்குள்ள. இடையில நரிக்கு எதுக்கு இந்த நாட்டாம?''

''படிச்சுப் பெரியாளா வருவான்னு பாத்தா, குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுறானே வெறும் பய.''

''படிச்சவனத் தேடி நாமதான போகணும். அவன் நம்மளத் தேடி எதுக்கு வாரான் 'வாரன்ட்’டு இல்லாம?''

''இந்தப் பெறவிக்கு இந்த ஊரு இப்பிடித்தானப்பா இருக்கும். தவிட்டுல தங்கம் கலந்துவச்சாலும் பவுனாவா பால் பீச்சும் பசு மாடு?''

''ஊருக்குன்னு ஒரு சுதந்திரம் இருக்கு. அதுல கருத்தமாயி மகன் ஏன் கையி வைக்கறான்?''

''எதுக்கு எல்லாரும் வாய் வலிக்க வள வளன்னு பேசிக்கிட்டு? இதுல எதோ ஒரு சூட்சமம் இருக்கப்பா. இல்லாட்டி பய இந்த ஆட்டம் ஆடுவானா?''

''காத்து வழியா வந்துச்சு ஒரு சேதி. நெசமா, பொய்யான்னுதான் தெரியல.''

''சும்மா சொல்லப்பா. நாஞ் சொல்றேன்.''

''அவுக வீட்டுல வந்து தங்குன வெள்ளைக் காரி காசு இதுல விளையாடுதுன்னு பேசிக் கிறாக.''

''இருந்தாலும் இருக்கும்.''

''என் காதுக்கு இன்னொண்ணும் வந்துச்சு.''

''அது என்னா அது?''

''அந்த வெள்ளைக்காரிக்கும் சின்னப்பாண்டிக்கும் ஒரு 'தொடுப்பு’ இருக்குன்னு அரசபுரசலாப் பேசிக்கிறாங்க.''

''சரிதான். தாலியில்லாத முண்டச்சியக் கூப்பிட்டு வந்தான் அண்ணன். தாலியே கட்டாத வெள்ளைக்காரியக் கூட்டிட்டு அலையிறான் தம்பி. நல்ல கதையா இருக்கே கருத்தமாயி மகன்ங்க கதை!''

காட்டுக் கருப்பன் கொளுத்திப் போட்ட ஒத்தத் தீக்குச்சி, ஊரு பூரா எரியுது காட்டுத் தீயா.

- மூளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism