Published:Updated:

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

Published:Updated:
##~##

யிரக்கணக்கில் ஜனங்களை மடியில் ஏந்தி வைகைக் கரையில் கம்பீரமாக நிற்கும் ராமராயர் மண்டபத்தின் புருவங்கள் அத்தனை யும் அன்றைக்கு ஆச்சர்யத்தில் உயர்ந்தன!

மதுரையின் கோலாகலமான சித்திரைத் திருவிழா நேரம், 'தசாவதார வைபவம்’ நிகழும் அந்த மண்டபத்தில் அன்று 'மோகினி அவதாரக் காட்சி’ அரங்கேற இருந்தது. அப்போது, நாகஸ்வரத்தின் உயரம்கூட வளராத 9 வயதுச் சிறுமி பொன்னுத்தாய், சிறு தேர்போல அசைந்து வந்தமர்ந்து, தனது இசைப் பயணத்தைத் தொடங்கினாள். அடடா, இது அசுர வாத்தியமாச்சே! பச்சை மண்ணு இப்படி மூச்சடக்கி, சுருதி சுத்தமா வாசிக்குதே! இது நாக்குல சரஸ்வதி இறங்கியிருக்கா. இல்லாட்டி, இப்படி வாசிக்க முடியாது'' என்று அன்றைய பிரபல மேளக்காரர்கள் வியந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது நடந்து சுமார் 40 வருடங்கள் உருண்டோடிவிட்டன. தென் மாவட்டங்களில் முதன்முதலாக நாகஸ்வரத்தைத் தூக்கிய பொன்னுத்தாய், 12 வயசுக்குள் பெரிய வித்வானாகி தமிழகம் எங்கும் கொடி கட்டிப் பறந்தார். செகந்திராபாத் ராமநவமி கலாசார விழாவும் பம்பாய் சண்முகானந்தா சபையும் இலங்கை, மலேசிய இசைச் சபைகளும் பொன்னுத்தாயை வரவேற்றுக் கௌரவித்தன. பிரதமராக இருந்தபோது, நேருவும் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் பொன்னுத்தாயின் நாகஸ்வர வாசிப்பை மெய்மறந்து ரசித்து தங்கப் பதக்கம் வழங்கினர்.

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

இப்படிச் சுமார் 30 வருடக் காலம் றெக்கை கட்டிப் பறந்து, நாகஸ்வர இசையால் காற்றைக் கௌரவித்த பொன்னுத்தாய், 1972-ம் ஆண்டில் இருந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வராமல் தவிர்த்தார். பின்னர், அவ்வப்போது ரேடியோவில் மட்டும் இவரது நாகஸ்வர இசை கசிந்தது. அப்புறம் அதுவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பொன்னுத்தாய் என்ன ஆனார் என்ற தகவலே இல்லை. ஏறத்தாழ எல்லோரும் மறந்துபோன சமயத்தில், சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராகம்-தாளம்-பல்லவி’ நாடகத் தொடரில், 'மதுரை பொன்னுத்தாய் அம்மாளைப் போல நீ புகழ்பெற வேண்டும்’ என்று வசனம்...

பொன்னுத்தாய் என்ன ஆனார் என்று தேடினோம். விலாசம் கிடைக்கவில்லை. சிலர், 'அந்தம்மா காலமாகிப் பல வருஷங்கள் ஆச்சு’ என்றனர். ஆனால், ஆச்சர்யம்... சென்ற மாதம் தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியலில் மதுரை பொன்னுத் தாய் பெயரும் இருந்தது. மீண்டும் தீவிரமாகத் தேடியபோது, 'ஓஹோ என்று வாழ்ந்த பொன்னுத்தாய், மதுரை புதூரில் பாரதியார் தெருவில் உள்ள உறவினர் வீட்டை ஒட்டிய ஒதுக்குப்புறமான பகுதியில் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார்’ என்ற தகவல் கிடைத்தது.

சுமாரான வீடு. அதையட்டி சீமைக் கருவேல முள் சூழ்ந்த குறுகலான பாதை. அதையடுத்து, மாட்டுக் கொட்டகையுடன் இணைந்த ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் குடிசை. உள்ளே பழைய கம்பீரம் குறையாமல் பொன்னுத்தாய். வீட்டில் ஒரு மூலையில் நாகஸ்வரம் நிற்கவைக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். காணோம். ''அதை இங்கே வெச்சிருந்தா எலி கடிச்சிரும். கரையான் அரிச்சிரும்னு பக்கத்து வீட்ல குடுத்து வெச்சிருக்கேன். பத்திரமா இருக்கு. எடுத்துட்டு வாரேன்'' என்று கிளம்பினார் கலைமாமணி பொன்னுத்தாய். நாகஸ்வரத்துடன் அவர் திரும்பி வரும்போது, அவரது காதில் புதிதாக ஒரு கம்மல் பளிச்சிட்டது. ''நான் இது வேணாம்னுதான் சொன்னேன். போட்டோ

ஒரு கலைமாமணியின் கண்ணீர்...

எடுக்கறப்ப வெறும் காதா இருந்தா நல்லா இருக்காதுனு போட்டுவிட்டாங்க'' என்று சிரித்த பொன்னுத்தாய், சற்று சீரியஸாகி ''நான் 100 பவுனுக்கு மேல் நகை வெச்சிருந்தேன். பரிசா மட்டும் 23 தங்கப் பதக்கம் வாங்கினேன். இப்ப ஒண்ணும் இல்லை'' என்று மீண்டும் சிரித்தார். கண்கள் கடந்த காலத்தைத் தேட, அவர் சொன்னார்.

''நான் ருதுவாவறதுக்கு முன்னால என் ஒன்பதாவது வயசுலயே நாகஸ்வரத்தை எடுத்துட்டேன். அப்போ திருச்சிக்குத் தெற்கே நாகஸ்வரம் வாசிக்க ஒரு பொண்ணுகூடக் கிடையாது. நான் வாசிக்கிறதைப் பார்த்துட்டு எல்லோருக்கும் ஆச்சர்யம். என்னோட முதல் குரு மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் அப்பா நடேசப்பிள்ளைதான். நான், சேதுராமன், பொன்னுசாமி, திருமோகூர் முனியாண்டி, மீனாட்சி கோயில் ஆஸ்தான வித்வான் அழகுசுந்தரம் எல்லோரும் சேர்ந்து நடேசப்பிள்ளைகிட்ட நாயனம் கத்துக்கிட்டோம். நான் 'அடைமழை’ பெய்யற மாதிரி 'அட சாதகம்’ பண்ணுவேன். பொறாமைபிடிச்சவங்க சிலர் என் குருநாதர்கிட்ட, 'நீ ஒரு ஆம்பளையா? ஒரு பொம்பளப் புள்ளைக்குப் போய் நாகஸ்வரம் சொல்லிக் குடுக்கிறேயே’னு கேலி பேசிக் கலைச்சு விட்டுருவாங்க. அப்போ எங்க குடும்பமும் நல்ல வசதியா இருந்துச்சு. அப்படிப் பழகின பழக்கத்தில்தான் ஒம்பது வயசுல நாயனத்தை எடுத்த நான் ஒன்பது மாசக் கர்ப்பிணியா இருக்கறப்பவும் சிரமப்படாம விடிய விடியக் கச்சேரி வாசிப்பேன்.  ஒரு கச்சேரிக்கு மூவாயிரம் ரூபாய்கூடச் சமயத்தில் கிடைக்கும். வருஷத்தில் ஆறு மாதங்கள் (கார்த்திகை துவக்கம் முதல் சித்திரை பத்தாம் தேதி வரை) கொல்லத்தில் நல்ல சீஸன். ஆறு மாசமும் அங்கேயே தங்கி ஊர் ஊராப் போய் வாசிப்பேன்...'' என்ற பொன்னுத்தாய் கடந்த கால அனுபவங்களை மேலும் தொடர்ந்தார்...

''நானும் என் அக்கா தங்கமும் 1953-ல் மதுரை முனிசிபல் சேர்மனா இருந்த சிதம்பர முதலியாருக்கு வாழ்க்கைப்பட்டோம். என் வீட்டுக்காரர் தொடர்ந்து மூணு முறை எம்.எல்.சி-யா இருந்தார். ரொம்ப வசதியான குடும்பம். நான் கச்சேரிக்குப் போவதையோ விடிய விடிய நாகஸ்வரம் வாசிக்கிறதையோ அவர் தடுத்ததே இல்லை. எங்க வீட்டுக்கு 'தங்கம் - பொன் இல்லம்’னு பேர். எந்த நேரமும் இருபது, முப்பது விருந்தாளிகளாவது இருப்பாங்க.''

நாகஸ்வர மேதை பொன்னுத்தாய் சற்று நேரம் அமைதியாக இருந்தார். அவர் விழிகள் கலங்கின.

''என் வீட்டுக்காரர் 1972-ல் இறந்தார். அதோட என் இசை வாழ்க்கையும் முடிஞ்சுபோச்சு'' என்று நிறுத்திக்கொண்டார்.

''ஏன், தொடர்ந்து வாசிக்க வேண்டியதுதானே?'' என்றோம் விவரம் தெரியாமல்.

''நாகஸ்வரமும் மேளமும் மங்கல வாத்தியங்கள்... கல்யாணம், கோயில் விழாக்கள்னு சுபகாரியங்களுக்கு வாசித்துப் பெயர் பெற்ற நான், என் கணவர் மறைவுக்குப் பின் பொது நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் வாசிக்க முடியாமல்போச்சு. அமங்கலப் பெண் மங்கலக் காரியத்துக்கு நாயனம் வாசிக்கிறதை உலகம் ஏத்துக்கலை. பலர் மறைமுகமா முதுகுக்குப் பின்னாடி பேசினாங்க. நாகஸ்வரத்தை எடுப்பதில்லைனு அன்னையோட முடிவு பண்ணிட்டு, பல வருஷங்கள் சும்மா இருந்தேன். எங்க குடும்பத்துக்குள் சொத்துப் பிரிவினை நடந்து, எங்க பங்கை வித்துச் சாப்பிடத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டம் வரத் தொடங்கிச்சு. ரேடியோவில் வாசிக்கக் கூப்பிட்டாங்க. தொடர்ந்து வாசிச்சேன். 1979 வரைக்கும் ஒரு மணி நேரம் கச்சேரி தந்தாங்க. திடீர்னு அதை மாத்தி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளைப் போல 'காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் வாசி’ன்னாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். அப்புறம் அவங்களும் என்னைக் கூப்பிடுறது இல்லை.

வருஷாவருஷம் ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை அன்னைக்கு மட்டும் தூசி துடைச்சு கொஞ்ச நேரம் நாயனம் வாசிப்பேன், அவ்வளவுதான்.

என் தங்க மெடல்கள் இருபத்து மூணையும் அழிச்சு நகை செஞ்சு, ரெண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்தேன். ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான். இன்னொரு பையன் இப்போ ஜோசியம் பார்க்கிறான். தாள முடியாத கஷ்டம்தான்.

மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழா. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு எல்லாம் நான்தான் நாகஸ்வரம். எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணத்துக்குக்கூட என் கச்சேரிதான். நான் நாகஸ்வரக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரா மூணு வருஷம் இருந்தப்போ, பல கலைஞர்களுக்கு அரசாங்கத்தோட வீட்டுமனை கிடைக்கச் செய்தேன். எனக்கும் குடுத்தாங்க. அப்போ நான் வசதியா வாழ்ந்ததால, வேண்டாம்னு திருப்பிக் கொடுத்துட்டேன். இப்போ 10 வருஷமாக் கஷ்டம் தாங்காம, அரசாங்கத்திடம் உதவி கேட்டு, மனு மேல் மனு போட்டேன். ஒண்ணுமே நடக்கலை. தனி மனிதர்கள் யார்கிட்டயும் உதவி கேட்க என்னால் முடியாது. பணம், வசதி எது போனாலும், என்னோட இருக்கும் இசையும் தன்மானமும்தான் முக்கியம். அதனால்தான் யார் கண்ணிலும் படாம இப்பிடி ஒதுங்கி இருக்கேன். எனக்குச் சிபாரிசு பண்ண ஆள் இல்லை. அரசியல் பின்னணியும் இல்லை.

போன வருஷம் மதுரை சோமு என் நிலையைக் கேள்விப்பட்டுப் பதறிப்போனாராம். 'கவலைப்படாதீங்க... இந்த வருஷம் 'கலைமாமணி’ விருது உங்களுக்குத்தான்... தைரியமா இருங்க’னு கடுதாசி எழுதியிருந்தார். நான் நம்பலை. காலம் போன காலத்தில் யார் தருவாங்கனு இருந்தேன். திடீர்னு பேப்பர்ல அறிவிப்பு வந்திருக்குனு சொன்னாங்க. எனக்கு விருது கிடைக்கச் சிபாரிசு பண்ணிட்டு, அது கிடைக்கும்போது அதுக்குக் காரணமான சோமு அண்ணன் உயிரோடு இல்லை'' என்று கண் கலங்கிச் சொல்லிவிட்டு, தூசி துடைத்து நாகஸ்வரத்தை எடுத்து உதட்டருகே வைத்தார்.

அதே கம்பீரம்... அதே மிடுக்கு... அவரது 10 விரல்களும் மாறி மாறி ஸ்வர வாய்களை ஆறுதலாகப் பொத்த, பிசிறு இல்லாமல் பொங்கிப் பொங்கி இசையாய் நெகிழ்ந்தது நாகஸ்வரம்!

- சௌபா
படங்கள்: கி.ஆனந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism